Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
சிறுகதை

ஒரு மரவட்டையும் கவிதையும் நானும்
ஐ. சிவசுப்ரமணிய ஜெயசேகர்


காலையிலிருந்து மாலை வரை இடைவிடாத பணியில் சற்று களைப்படைந்து ஓய்வெடுக்க விசிறிக்கு கீழே உள்ள மேசையைச் சுற்றி அமர ஆரம்பித்தோம். கோடையின் ஆரம்பக் காலம் தான் ஆனால் அது மருத்துவ மனையின் புதிய கட்டிடம் வெப்பத்தை உள்ளிழுத்து அலையலையாக வெளித் தள்ளுகிறது. மேல் மாடி பகுதி வேறு இல்லையாதலால் வெப்பம் இடியென தலையில் இறங்கிக் கொண்டிருந்தது.

செவிலியர்கள் பாடு பரவாயில்லை காலை முதல் ஒரு மணி வரை சுழற்சிப் பணி முடித்தவர்கள் ஆயாசமாகவும் அவசர அவசரமாகவும் உடை மாற்றிக் கிளம்பிப் போய்விட்டனர். மதியப் பணிக்கு வந்தவர்களுக்கு வேலைப்பளு அதிகம் இல்லையெனினும் கோடைப்பளு அதிகமாக இருந்தது. இப்போதெல்லாம் இருபத்தி நான்கு மணி நேரப் பணி எனக்கு வயது ஏறிக் கொண்டிருப்பதைக் காட்ட ஆரம்பித்துள்ளது. ஓரளவு சொகுசு வாழ்க்கை அனுபவிக்க ஆரம்பித்த பின்னர் இந்த வெயிலும், வியர்வையும், கசகசப்பும், ஒய்வற்ற வேலையும் உடலையும் மனதையும் மிகவும் பலவீனப்படுத்திற்று. எனினும் மருத்துவப் பணியாயிற்றே என பொறுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

என் தளர்வைப் பார்த்து இரக்கமுறும் செவிலியர்கள் கூறுவதுண்டு. “நீங்க தான் சும்மா எல்லாத்தையும் இழுத்துப் போட்டுக் கிட்டு, சும்மா போய் ரெஸ்ட் ரூம்ல படுங்க மத்தவங்க எல்லாரும் உங்கள மாதிரியா இருக்காங்க போங்க சார் கொஞ்ச நேரம் நாங்க பாத்துக்கிறோம்”. ஆனால் பத்து நிமிடம் கூட தொடர்ந்து ஓய்வெடுக்க முடிந்ததில்லை என்னால். இப்போதும் அப்படித்தான் வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோதே மின்சாரம் நின்று போனது.

“ஐய்யய்யோ கரண்ட் வேற போச்சா சார். இப்பதான் உங்கள கொஞ்சம் உள்ள தள்ளிட்டு நாங்க ரெஸ்ட் எடுக்கலாம்னு பார்த்தோம். போச்சு அதுவும் போச்சு” என்றவாறு விசிறிக்கொள்ள எதாவது அட்டையைத் தேட ஆரம்பித்தனர். இனி அறைக்குள் செல்வதும் இயலாத காரியம் கிடைத்த பேப்பரைக் கொண்டு விசிறிக் கொள்ள ஆரம்பித்தேன். அதற்குள் ‘கட்’‘டப்’‘பட்ட’ என்ற ஒலியுடன் வாசலில் ஆட்டோ ஒன்று வந்து நின்றது.

“போச்சுடா அடுத்த கேஸ் வந்தாச்சு, சார் உங்க ராசி ரொம்ப நல்ல ராசி” என்றவாறு ஒரு செவிலியர் எழுந்து அது என்ன ‘கேஸ்’ என நோட்டமிட சென்றார். நான் இருக்கையில் இருந்தவாறே சன்னல் வழியாக நோக்கினேன். ஆட்டோவிலிருந்து நான்கைந்து இளைஞர்கள் இறங்கினர். அவர்கள் கசங்கி வெளுத்த புடவைப் பொதிக்குள் இருந்த ஒரு பெண் (?) நேபாளியை குப்பை போல் தூக்கிக் கொண்டு வந்து பரிசோதனை மேசையில் படுக்கவைத்தனர். படுக்க வைத்த பின்னர் தான் அது ஒரு வயதான பெண் என தெரிந்தது. பாட்டி புடவை கட்டியிருக்கவில்லை. பாட்டியின் மீது புடவை சுற்றப்பட்டிருந்தது. ஒரு இளைஞன் வெளித் தெரிந்த பாட்டியின் சுருங்கி சரிந்த மார்பகங்களை சற்று முகத்தை சுளித்தவாறே அதே புடவை(?)யால் மூட முயற்சித்தான்.

அதற்குள் அறை முழுக்க ஒரு கெட்டவாடை பரவியது. பணியில் இருந்த செவிலியர்கள் மூவரும் முகம் சுளித்தனர். ஒருவருக்கு குமட்டிக் கொண்டே வந்தது. எனக்கும் வாடை தாங்க முடியவில்லை. பாட்டியைக் கொண்டு வந்து இருந்த தெரு குழாயடிக்கு சென்று கை, கால் கழுவ ஆரம்பித்தனர். ஆட்டோ ஓட்டுனர் ஒரு வாளியில் நீர் எடுத்து ஆட்டோவுக்குள் அடித்து ஊற்றிக் கழுவினார்.

பாட்டிக்கு அருகில் நின்ற ஒருவன் மட்டும் எங்களை நோக்கி நகர்ந்தவாறே. “பாட்டிக்கு உடம்பு சரியில்லே.”

“என்னப்பா இது இந்த நாத்தம் அடிக்குது. என்ன வயித்தால போகுதா?”

“இருக்கும் போல இருக்குங்க”

“என்னது இருக்கும் போல இருக்கா. ஏம்பா உன்னோட பாட்டிதானே?”

“இல்லிங்க இந்த பாட்டிக்கு யாருங் கிடையாது. எங்க தெருவாண்ட ஒரு குடிசையில இருக்குது. ரெண்டு நாளா உடம்பு சரியில்லன்னு கேள்விப்பட்டோம். அதான் தெருக்கார பசங்களா சேர்ந்து தூக்கியாந்தோம்.”

“சரிதான் சார். கேட்டீங்களா அநாத பாட்டியாம். நல்ல காரியம் செய்றோம்னு தூக்கிட்டு வந்து இங்க போட்டுட்டு போயிருவாங்க? அப்புறம் யாரு பாட்டிய கவனிக்கிறது. இப்பவே பாரு வயித்தால போயி ஒரே நாத்தம் தாங்க முடியல. கிட்ட போக முடியல. வார்டுல கொண்டு போய் போட்டா அப்படியே கெடக்கும். ரெண்டு நாள்ல வார்டே நாரிடும். யாருப்பா தொடச்சி சுத்தம் பண்ணுவா?” அழைத்து வந்த பையன் செவிலியரின் சராமாரியான பேச்சால் தடுமாறினான்.

“நாங்க என்னங்க பண்றது. ஏதோ தெருக்காரங்க உதவி செய்யலாம்னு தூக்கிட்டு வந்துட்டோம்.”

“பாவம் ஸ்டாப் விடுங்க. உதவி செய்றதுன்னு தூக்கிகிட்டு வந்தவங்கள போயி ரொம்ப கேள்வி கேக்கக் கூடாது. பாட்டி பாவம் வார்டுல பத்தோட பதினைஞ்சா கெடக்கப் போவுது. நீ போய் கை காலெல்லாம் நல்லா சோப்பு போட்டு கழுவுப்பா. வயித்தால போறது ஒட்டுவாரொட்டி அதனால் உனக்கு வந்தாலும் வந்துடும்” என்றேன் அந்தப் பையனிடம். அப்பையன் புறநோயாளிச் சீட்டை என்னிடம் தந்துவிட்டு விட்டால் போதும் என்பது போல தன் நண்பர்கள் இருக்கும் இடம் நோக்கி நகர ஆரம்பித்தான். அவன் தலை மறைந்தது. செவிலியர்கள் என்னை பிலுபிலு வென பிடித்துக் கொண்டனர்.

“என்ன சார் நீங்க. அனாத பாட்டிதானே ஏதோ ஊசி கீசி போட்டு இந்த பையனை தாஜா பண்ணி பாட்டிய பேக்கப் பண்ணலாம்னு பாத்தா, நீ போப்பா நா பாத்துக்கிறேன்னு அனுப்பிச் சீட்டிங்களே. ஆமா சார் எப்பவுமே இப்படித் தான் உங்களுக்கு. சரி பேச்சு கெடக்கட்டும் அடுத்த கேசு வர்றதுக்குள்ள எதாவது பண்ணி கேச வார்டுக்கு மாத்துங்க” என்றார். ஆண் செவிலிய உதவியாளர் தங்கப்பன்.

“ஆமா இப்பவே நாத்தம் கொடல பெறட்டுது” என்றவாறு ஒரு செவிலியர் பாட்டியை நோக்கி நகர்ந்தார். எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. மாற்றுப் புடவை கூட இல்லாமல், மாற்றித்துடைக்க ஆள் கூட இல்லாமல் பாட்டியை எப்படி கவனிப்பது. செவிலியர்கள் பாவம். எப்படிப் பேசினாலும், பாட்டிக்கு கையில் கேனுலா போட்டு, ஊசிகள் போட்டு, சலைன் போட்டு, வார்டுக்கு அனுப்பிவிட்டு கை கழுவியவாறே மீண்டும் வந்து “போதுமா சார்” திருப்திதானே, நீங்கதான எஃப்.எம்.வார்டு (பெண்கள் மருத்துவப்பகுதி) பாக்குறீங்க. நீங்க நல்லா மாட்டப்போறீங்க. இன்னும் ரெண்டு நாள்ல வார்டு என்ன ஆகப் போகுது பாருங்க” அதற்குள் பாட்டியை வார்டில் விட்டுத் திரும்பிய தங்கப்பன் “பாட்டிய அந்த கக்கூஸ் பக்கம் ஒரு பாயில படுக்க வைச்சிட்டு வந்துட்டோம்” “வார்டுல இருக்கிற பொம்பளைங்கெல்லாம் திட்டுதுங்க ஒரே நாத்தம்னு” என்றவாறு கடந்து போனார் அவர்.

“கேட்டீங்களா சார், பேஷண்டுகளே தாங்க முடியாம திட்டியிருக்குதுங்க. இந்த பாட்டிக்கு வைத்தியம் பண்ணி என்ன பண்ணப்போறோம். மறுநாள் பணி ஓய்வு. அதற்கு அடுத்த நாள் வழக்கமான பணிக்கு திரும்பி உள் நோயாளிகள் பிரிவிற்கு சென்ற போது கழிப்பறைக்கு அருகில் ஒரு அழுக்கடைந்த பாயில் பாட்டி குப்பையாகவே காட்சியளித்தார். மனதிற்கு கஷ்டமாக இருந்தது. அருகில் சென்றேன்.. என்னைச் சுற்றி உள் நோயாளிகளில் சிலர் சூழ்ந்தனர். பாட்டியிடமிருந்து அதே நாற்றம் கிளம்பியதால் பலர் மூக்கை மூடிக்கொண்டனர். பாட்டியின் உடலில் அசைவுகள் இருந்தன. நான் மற்ற நோயாளிகளிடம் “என்ன பாட்டிக்கு இப்ப எப்படி இருக்கு?” என்றேன்.

“நீங்க வேற சார். பாட்டிய கொண்டு வந்து போட்டதுல இருந்து அப்படியே கெடக்குது. நர்சம்மா மட்டும் காலையிலயும், சாயங்காலமும் ஊசி குத்திட்டு ஓடிப்போயிடுறாங்க” நாங்க தான் பாவம். இந்த நாத்தத்தோடயே இங்க கெடக்கோம்” என குறைபட்டுக் கொண்டார்கள். பாட்டியும் பாவம்தான். மக்களும் பாவம் தான் என்ன செய்வது?

என்ன செய்யலாம் என செவிலியரை வினவிய போது “நீங்க பாட்டுக்கு கேச பாத்தமா, கேஸ் ஸீட்ல எழுதினமான்னு போய்க்கிட்டே இருங்க சார்” அவர்களின் வேலைப் பளு இப்படிப் பேச வைத்தது.

இரண்டொரு நாட்கள் கழிந்திருக்கும். பாட்டியின் நிலையில் முன்னேற்றமும் இல்லை மாற்றமும் இல்லை. ஏதோ இயலாமையின் மீது பாரத்தைப் போட்டு நானும் இயங்கிக் கொண்டிருந்தேன். அன்றைக்கு வீட்டை அடைந்த போது நண்பர் சந்திரன் எனக்காக காத்திருந்தார்.

“வாங்க சந்திரன் வாங்க” என வரவேற்றேன். சந்திரன் வெறும் நண்பர் மட்டுமல்ல. இந்தச் சிறு நகரத்தில் எங்களின் இலக்கியதாகம் தனிப்பவரும் கூட. பல இலக்கிய இதழ்கள் கிடைக்கப் பெறாத நிலையில் இவர் தானே முன் வந்து பல இலக்கிய இதழ்களை வரவழைத்து விநியோகித்து எங்களுக்கு உதவுபவரும் கூட.

“சார் படித்துறையில உங்க கத வந்திருக்கு. அதோட நீங்க அடிக்கடி சொல்லுவீங்கள்ல உங்க நண்பர் ஹரிணி அவரோட கவிதையும் வந்திருக்கு” என்றவாறு ‘படித்துறை’ உள்ளிட்ட பல இதழ்களை என் முன் நீட்டினார். இதழ்களுக்கான பணத்தை பெற்றுக் கொண்டதும் “இருங்க சந்திரன் கொஞ்ச நேரம் பேசிட்டுப் போவலாம்”. வேண்டாம் சார் நீங்க வேற ரொம்ப டயர்டா இருப்பீங்க. சாப்டுட்டு கொஞ்சம் ரெஸ்டெடுங்க. நான் அப்புறமா வர்றேன்.

“அதெல்லாம் அப்பவே ஆயிடுச்சு சார். நான் வந்தவுடனேயே உங்க வீட்டுல காபில்லாம் கொடுத்து உபசரிச்சுட்டாங்க” என்றவாறு ஜோல்னாப்பையை மாட்டியவாறு கிளம்பினார். ஒரு வகையில் அவர் சொன்னது போல எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. சாப்பிட்டுவிட்டு கண்ணயர்ந்து விட்டேன். மாலை மருத்துவ ஆலோசனை கூறும் நேரம் முடிந்து இரவு பத்து மணிக்கு வீடு திரும்பியதும் இரவு படுக்கையில் படுத்து காலையில் நண்பர் கொடுத்துச் சென்ற “படித்துறையை” எடுத்துப் பிரித்தேன். படித்துப் புரட்டிக் கொண்டே வந்தேன். சட்டென்று ஹரிணியின் கவிதை ஞாபத்திற்கு வந்தது. பக்கத்தைத் தேடிப் புரட்டினேன். ஹரிணியின் கவிதை ‘நம்பிக்கை’ என்ற தலைப்பில் நாற்பத்தி ஆறாம் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது.

கருப்புப் பட்டை மேனி
நகர்ந்து கொண்டே யிருக்கிறது.
தொட்டால் சுருங்குகிறது
அடித்துப் போட்டால் நாறுகிறது
அதனை நோக்கி
வீசும் எந்தக் கேள்விக்கும்
இல்லை பதில் அதனிடம்
பின் ஏன் வாழ்கிறது மரவட்டை
பின் அதன் வாழ்வை
யார் வாழ்வது?

பின் அதன் வாழ்வை யார் வாழ்வது? என பொட்டிலடித்தது போன்ற கேள்வியுடன் கவிதை முடிந்திருந்தது கவிதையின் வரிகளும், மரவட்டைகளும் மீண்டும் மீண்டும் சுற்றி வந்து கேள்வி எழுப்பியது.

காலை ஏழரை மணிக்கு மருத்துவமனைக்குள் நுழையும் போது மருத்துவமனையில் பெரிய கூட்டமில்லை. மருத்துவர்கள் எட்டு மணிக்குப் பிறகுதான் வருவார்கள் என மக்கள் தெரிந்து வைத்திருந்தனர். ஆனால் செவிலியர்கள் சரியான நேரத்தில் வந்து பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் மருத்துவப் பகுதி உள் நோயாளிகள் பிரிவை நோக்கி நடந்தேன். அவ்வளவு சீக்கிரமா என்னை அப்பிரிவில் எதிர்பார்க்காத செவிலியரும், செவிலிய உதவியாளர்களும் “என்ன சார்! என்ன விஷயம்” என்னை நோக்கி ஆவலுடன் ஓடி வந்தனர். நான் மெதுவாக புன் முறுவலுடன் ‘குப்பை” பாட்டி கிடந்த பாயை நோக்கி நடந்தேன். “ஸ்டாப் ஒரு 71/2 கிளொவ்ஸ்(கையுறை) எடுத்துட்டு பாட்டியின் அருகில் அமர்ந்தேன்.

பதட்டத்துடன் கையுறையுடன் என் அருகில் வந்த செவிலியரும் செவிலிய உதவியாளர்களும் “என்ன சார் செய்யனும் சொல்லுங்க நாங்க செய்யறோம்” என்றனர்.

நான் அவர்களிடமிருந்து கையுறையைப் பெற்றுக் கொண்ட வண்ணம் “பரவாயில்ல நீங்க கொஞ்சம் ஹாட் வாட்டரும் டவலும் எடுத்துட்டு வாங்க, ஸ்டாப் நீங்க பேஷண்ட்ஸ்க்கு சிவப்பு புடவ இருக்குல்ல அத ஸ்டாக்ல இருந்து எடுத்துட்டு வாங்க”.

இவருக்கு என்ன ஆயிற்று என்று பார்த்தவாறே செவிலியர் புடவை எடுத்து வர அகன்றார். செவிலியர் உதவியாளர் வசந்தா வெந்நீருடன் வந்து என்னருகே அமர்ந்து பாட்டிக்கு உடைமாற்றி, வெந்நீர் துண்டுக்குளியலுக்கு உதவினார். அருகில் வேடிக்கை பார்த்த நோயாளிகளிடமிருந்து தலைக்கு எண்ணெய் தேய்த்து தலைக்கு கொண்டை போட்டார் வசந்தா. குட்டியான ‘பாண்ட்ஸ்’ பவுடர் டப்பா ஏதோ ஒரு நோயாளியிடமிருந்து உதவிக்கு வந்தது. பாட்டிக்கு பவுடர் போடப்பட்டது. ஓரளவு சுத்தமான வார்டு பகுதிக்கு வேறு பாயில் மாற்றப்பட்டார் ‘குப்பை பாட்டி’. இப்போது சிவப்பு புடவையில் பாட்டி நாத்தம் நீக்கி காட்சியளித்தார்.

“பாட்டி அப்ப எப்படி இருக்கு” என்றேன். பேச முடியாவிட்டாலும் பாட்டி வாயைத் திறந்து புன் முறுவல் பூப்பது போல இருந்தது. சுற்றி நின்றவர்கள் “இதோ பாருடா பாட்டி சிரிக்கிறத” என்றனர்.

வசந்தாவிற்கு சங்கடம் மறைந்து சந்தோஷம் ஏற்பட்டது. “சார் பாட்டிய அப்படியே தலைகீழா மாத்திட்டீங்களே” என்றார் கண்கள் நிறைய மகிழ்ச்சியுடன். செவிலியருக்கு தன் கண்களையே நம்ப இயலாநிலை. “என்ன சார் இதெல்லாம்” என்றார்.

“ஸ்டாப் செவிலியர் படிப்பில இதெல்லாம் செய்யறதுதானே அததாம் இப்போ செஞ்சோம். பாட்டி குப்பை பாட்டியாக இருந்தாலும் நம்ம ஆஸ்பத்திரிக்கு ஒரு நோயாளிதானே” என்றேன். ‘ஆம்’ என்பது போல அவர் மௌனமாக இருந்தார். “ஐயோ அந்தா பாருங்க பாட்டி பாய்கிட்ட ஒரு மரவட்டை” அருகிலிருந்த நோயாளியின் ஏழு வயது மகள் ஆச்சரியத்தில் கூவினாள்.

“விளக்கமாத்த எடுத்து அத அடிச்ச தூக்கி போடுங்க” என்றார், வசந்தா. விளக்கு மாற்றிலிருந்து ஒரு குச்சியை உருவி மரவட்டையின் முன் நீட்டித்தொட்டேன். மரவட்டை குச்சியின் மீது சுருட்டிக் கொண்டது. அதை லாவகமாக அப்படியே தூக்கி ஜன்னல் வழியாக தோட்டத்தில் விட்டேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com