 |
கவிதை
இ. இசாக் கவிதைகள்
வீடென்றவொன்று
சொந்தமாக
நவீன வசதிகளோடு
வீடொன்று
கட்டிவிட வேண்டுமென்பதே இலட்சியமானது
பிழைப்புக்கென்று
கடல் கடந்துவிட்டயெனக்கு
வாயக்கட்டி. வவுத்தக்கட்டி
அங்குமிங்கும் புரட்டி
கட்டி முடிந்தது
அழகிய வீடு நினைத்தபடி.
‘தாராளமான சொந்த வீடெனக்குண்டு’
பெருமை பேசியும்
வீட்டின்
அமைப்பையும் அழகையும்
புகைப்படங்களில் இரசித்தும்
வழக்கம் போல
இரண்டரைக்கு ஆறு அடி படுக்கைக்குள்
காலத்தைக் கடத்துகிறேன்.
பொருளிழந்து
வெளிநாடு தான்
வேலை நேரத்திற்கொன்றும் குறைவில்லை
விடிவதற்குள் தொடங்கி
எல்லோரும் ஓய்ந்த பின்னும் தொடரும்
நம்ம அம்மாக்களைப் போல.
பிறந்த குழந்தையிலிருந்து
வருகிற விருந்தினர் வரையிலும்
கவனிக்க வேண்டியிருக்கிறது
எக்குறையுமின்றி.
வேலையில் பிழையெதையும்
கண்டதில்லை.
இன்று வரையிலும்
ஏனோ
ஓராண்டு ஆகியும்
எனக்கும் குடும்பமிருக்கிறது.
எனக்கும் தேவைகளிருக்கிறதென்பது
நினைவுக்கு வருவேதேயில்லை
முதலாளிக்கு.
வளைகுடாவெங்கும்
காற்றில் கலந்து
வான்வெளியில் மிதந்துக்
கொண்டிருக்கின்றன
மானுட செவியேற்காத
அண்ணல் நபிகளாரின் சொல்
‘உழைத்தவர்
வியர்வை காயுமுன்
ஊதியம் கொடுக்க வேண்டும். ’
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|