Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
கட்டுரை

இளையராஜா சிம்பொனி சமூகப் பார்வை
நா. மம்மது


ஒரு பொன் மாலைப் பொழுதில், செந்தூரப் பூவில், செந்தாழம் பூவில், இசைப் பூங்கதவைத் தாழ் திறந்து விட்டு, ஒரு நாளும் உனை மறவாத இசையை வழங்கிய இளையராஜாவின் திருவாசகம்; சிம்பொனி வடிவம் தாங்கி நம் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிற பின்னணியில் இந்த கட்டுரை இளையராஜாவின் இசையை, இசை குறித்த அவரது பதிவுகளை மதிப்பிடுகிறது.

‘தகுதி, திறமை’ என்ற வைதீக மாயைகளை உடைத்து வெற்றி கண்டவர்கள் சமூகத் துறையில் இரட்டைமலை சீனிவாசனும், அயோத்தி தாசரும் என்றால் கலைத்துறையில் இளையராஜா. திருவாசக ஒலிப்பேழை வெளியீட்டைத் தொடர்ந்து செய்தி தாள் ஒன்றிற்கு அவர் கொடுத்த செய்திப் பதிவிலிருந்து நாம் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கலாம். ‘இனியும் ஓதுவார்களை நம்பிப் பயன் இல்லை’ என்று அந்தச் செய்தித் தாள் குறிப்பில் இளையராஜாவின் கருத்து பதிவாகி இருக்கிறது.

இளையராஜா அவர்களே,

ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் பண்களையும் பாடல்களையும் மறைந்து விடாது தம் வறுமையிலும் வயிற்றில் ஈரத் துணியைச் சுற்றிக் கொண்டு வேசி, தாசி என்ற சமூக, பாலியல், பண்பாட்டு இழிவுகளையும் தாங்கிக் கொண்டு நம் இசை மரபு அறுந்து விடாது காத்து வந்த தேவதாசியர், இசை வேளாளர், ஓதுவார் மரபை மிக எளிதாகப் புறந்தள்ளி இருக்கிறீர்கள். அவர்கள் காத்து வந்த பண்களைத் தான் நீங்கள் குழைந்து குழைந்து பாராட்டும் தியாகராசர் முதல் ஏனைய இருவரும் பின்னால் வந்த யாவரும் பயன்படுத்திக் கொண்டார்கள். நாம் எல்லோரும் ஓதுவார்கள் காத்து வந்த வீதி வழி பாடி வந்த பண்களைத் தான் நமது திரைப்பட இசையமைப்பு முதல் யாவற்றுக்கும் பயன்படுத்தி பகுமானமாகப் பணம் பண்ணிக் கொண்டு வருகிறோம்.

‘கோயில் மணி ஓசை’ (கிழக்கே போகும் ரயில்), "ராதா, ராதா நீ எங்கே' என்ற பாடல்கள் ஓதுவார்கள் காத்து வந்த "பழந்தக்க ராகம்' என்ற சுத்த சாவேரியில் அமைத்துள்ளீர்கள். "வானுயர்ந்த சோலையிலே', "நின்னுக் கோரி வர்ணம்' (அக்னி நட்சத்திரம்) என்ற பாடல்கள் முல்லைப்பாணி (இளங்கோ அடிகள் - ஆய்ச்சியர் குரவையில் காட்டியது) சாதாரி (திருவிளையாடற் புராணம் -விறகு விற்ற படலம்) என்ற மோகனப் பண்ணில் அமைந்தது.

"நல்லையினில் நன்றாக்கிச் சாதாரிக் கொன்பதாய்'' - உமாபதி சிவம் - திருமுறைகண்ட புராணம் (பாடல் 38). என்று சாதாரிப் பண் (மோகனம்) பற்றிக் குறிப்பிடுகிறார். நமது தலையாய பெரும் பண் (PRIMORDIAL SCALE) முல்லை யாழ் (செம்பாலை). இன்று அது அரிகாம்போதி. தொல்காப்பிய உரைகளும், சிலப்பதிகார உரையாசிரியர்களும் தெளிவு படுத்திய தமிழ் இசையின் முதற் பெரும் பண் (மேளகர்த்தா) அப்பரின் தண்டகத்தை ஓதுவார் மூர்த்திகள் இந்தப் பண்ணில் பாடி வருவதால் "திருத்தாண்டகப் பண்' என்று ஒரு பெயரும் இந்தப் பண்ணிற்கு உண்டு.

‘பழமுதிர்ச் சோலை எனக்காகத்தான்(வருஷம் 16)’, ‘கண்ணுபடப் போகுதையா சின்னக் கவுண்டரே (சின்னக் கவுண்டர்)’ போன்ற பாடல்களை இந்த அரிகாம்போதியில் தான் சிறப்பாக இசை அமைத்துள்ளீர்கள். இலண்டன் பி.பி.சி 116 நாடுகளின் நூற்றாண்டுப் பாடல்களை(Song of the planet) வரிசைப்படுத்திய போது அதில் உங்களின் ‘ராக்கம்மா கையைத் தட்டு (தளபதி)’ பாடலும் இடம் பெற்றது சிறப்பிற்குரியது, மகிழ்ச்சிக்குரியது. நாட்டார் இசையையும் (folk form), அப்பரின் தேவாரத்திலுள்ள "குனித்த புருவமும்' என்ற திருவிருத்தத்தையும் அற்புதமாகக் கலந்திருப்பீர்கள்.

சைவத் திருமுறைகளில், ஒன்பதாம் திருமுறையில் (திருஇசைப்பா) பூந்துருத்தி நம்பி காட நம்பி பாடியது "கோயில் - முத்து வயிரமணி’; ‘முத்து வயிர மணி’ என்று தொடங்கி, ‘பாடும் இசை வல்லார் பற்று நிலை பற்றுவரே’ என்ற ஈற்றடியுடன் முடியும் பத்துப் பாடல் இருக்கும் ‘சாளரபாணி’ என்று பண் வகுத்திருக்கின்றனர். (சாளர பாணியின் இன்றையப் பெயர் ஆனந்த பைரவி.) ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாடலில் வரும் ‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்’ (அப்பர்-5 ஆம் திருமுறை-கோயில் திருவிருத்தம் பாடல்.4) என்ற பகுதிக்கு ஓதுவார்கள் காத்து வந்த சாளர பாணி என்ற ஆனந்த பைரவியில் சிறப்பாக இசையமைத்திருக்கிறீர்கள்.

இன்றையக் கால கட்டத்தில் ‘இந்தோளம்’ என்று ஒரு பண் பெருவழக்கில் உள்ளது. நெய்தல் பாணி, கானல் பாணி (பாணி என்பதற்கு இனிய பாடல், அய்ந்து சுர ஒளடவ ராகம் என்று பொருள்) என்பது இந்தோளத்திற்கான பழைய பெயர்கள். நெய்தல் நிலப் பெரும் பண் விளரிப் பாலை (தோடி)யில் பிறந்தது இந்தோளம். ‘இந்தளம்’ என்ற இந்த இந்தோளத்தை வழிவழியாக மறையாது பாடிக் காத்து வந்திருக்கின்றனர். ‘‘பித்தா பிறை சூடி’’ என்று சுந்தரர் இந்தப் பண்ணில் தான் தமது 7ஆம் திருமுறையைத் தொடங்குகிறார்.

‘ஓம் நமச்சிவாய’ (சலங்கை ஒலி), ‘நான் தேடும் செவ்வந்திப் பூவிது’ என்ற இந்தப் பாடல்களை இந்தளப் பண்ணில் அமைத்திருக்கிறீர்கள். இது ஓதுவார்கள் நமக்கு போட்டப் பிச்சை. ‘ஓதுவார்களை நம்பிப் பயனில்லை’ என்கிறீர்களே, ஆயிரம் ஆண்டாக தமிழிசை மரபை, தம் துன்பத் துயரங்களுக்கும் மத்தியில் காத்து வந்த பெரும் மரபை அறுத்து விட வேண்டும் என்கிறீர்களா? அல்லது... நமது தேவார, திருவாசகத்தை எல்லாம் ‘சிம்பொனி’ பண்ணி விடப் போகிறீர்களா?

அன்னக்கிளிக்குப் பின்பு சிறிய ஓர் இடைவெளி ஏற்பட்டதும் மேட்டுக்குடி மேதமைக்குத் தன்னைப் பிரதிநிதியாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட தமிழ்வாணன் உங்களை ‘தகரடப்பா’ என்று ஒரு கேள்விக்குப் பதிலளித்தது நினைவிருக்கிறதா?

எனக்குப் பிடித்த வாத்தியம் தம்புரா என்று நீங்கள் ஒரு முறை கூறினீர்கள். ஆனால் நீங்கள் இசையமைத்த இடத்தில் மருந்துக்கும் தம்புரா இல்லை என்று உங்களைச் சாடினார் சுப்புடு. (ஆர்மோனியச் சுருதிக்குத் தான் திரைப்பாடல்கள் இசை அமைக்கப்படுகின்றன என்ற சாதாரண உண்மை அந்த மாபெரும் இசை விமர்சகருக்குத் தெரியாது போலும்). ‘செந்தூரப்பூவே’ பாடலுக்குத் தேசிய விருது கிடைத்த போது அந்தப் பாட்டில் அய்ரோப்பிய இசை ஒலிப்பதாகக் கூறி (அது உண்மைதான்) அதனால் அது விருது பெறத் தகுதியற்றது போல் காட்ட முனைந்த திருவாளர் சுப்புடுவை நினைவிருக்கிறதா?

சிந்து பைரவி இசையமைப்பின் போது, இசையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், பரிசு பெறுவதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பாலசந்தர் கூறியது நினைவிருக்கிறதா? உங்களை வீழ்த்த ரோஜா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானை அழைத்து வந்த பாலச்சந்தரையும் மணிரத்தினத்தையும் நினைவிருக்கிறதா? ‘கர்நாடக இசைக் கச்சேரி செய்யப் போகிறேன்’ என்று ஒரு தடவை நீங்கள் கூறியதும், இளையராசா குரல் சுருதிக்கு நிற்காது, என்ற விமர்சனம் எழுந்தது நினைவிருக்கிறதா? இதெல்லாம் உங்கள் பயணத்தில் ஆதிக்க சமூகம் உருவாக்க நினைத்த தடைக்கற்கள். நீங்கள் இந்தக் கோட்டையை உடைத்தீர்கள். தடையைத் தாண்டி வந்தீர்கள். ஆனால் உங்கள் பயணத்தில் எங்கு நோக்கி நகர்ந்தீர்கள்?

கர்நாடகச் சங்கீதக் கச்சேரி செய்ய நினைத்தது, ஜனனி பாடியது, எங்கு சென்றாலும் காஞ்சி காமகோடி படத்தைத் தூக்கிச் செல்வது, வேதகானம் பாடியது உங்கள் நகர்வுப் புள்ளியைக் காட்டியது. நான் வணங்கும் ஆதி சங்கரர்- (சங்கீதக் கனவுகள் - இளையராஜா. பக்86) என்கிறீர்கள். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் எந்தச் சோப்பு போட்டுக் குளித்தாலும் சுத்தமாகமாட்டார்கள் என்று ஒரு ‘பெரியவர்’ அருள்வாக்கு கூறினார். ‘‘நன்றாகக் குளித்துவிட்டு வந்தால் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை நுழைய விடுவோம்’’ என்கிறார் ஜெயேந்திரர். நீங்களோ இவர்கள் படத்தை வெளிநாட்டுக்கும் தூக்கிக் கொண்டு போய் நித்திய பூஜை செய்து வருகிறீர்கள். இப்பொழுது வெள்ளைக்காரப் பேரனின் அங்கீகாரத்திற்காக சிம்பொனி. முள்ளும் மலரும், முதல் மரியாதை, புன்னகை மன்னன் என எத்தனையோ திரைப்படங்களின் பின்னணி இசையிலும் உச்சத்தை அடைந்த உங்களுக்கு வேறு யாரின் அங்கீகாரம் தேவை. எதற்கெடுத்தாலும் வெள்ளையின் அங்கீகாரம். விளையாட்டில் அங்கீகாரத்திற்கு விம்பிள்டன், கலைக்கு ஆஸ்கர், அறிவுக்கு நோபல் பரிசு, இப்பொழுது இசையில் சிம்பொனி அங்கீகாரம். நாம் நாமாக எப்பொழுது இருக்கப் போகிறோம்.

சமூகத் தளத்தில் தடம் மாறியது போல் சிம்பொனியில் இசைத் தளத்திலும் தடம் மாறியது எப்படி? ‘நீக்ரோ’ என்ற சொல்லைக் கண்டுபிடித்த நாளிலிருந்தே நாங்கள் அடிமையாகி விட்டோம் என்று அழுதான் ஒரு நீக்ரோ. ‘புலையன்’ என்ற சொல் உங்கள் இதயத்தைக் கசக்கிப் பிழிய வில்லையா? மென்மையான உள்ளம் கொண்ட துறவி என்றெல்லாம் பாராட்டப் பெறும் அப்பர் கூட, ‘‘ஆ உரித்துத் தின்று உழலும் புலையரேனும்’’ (தனித் திருதண்டகம்-10) என்று தானே நம்மை இழிவு படுத்துகிறார்.

நாம் வாழும் இடங்களுக்கு என்ன பேர் தெரியுமா? ‘‘பற்றிய பைங்கொடிச் சுரை மேல் படர்ந்த பழங் கூரையுடைய புற்குரம்பைச் சிற்றில் பல நிறைந்துள்ள தோர் புலைப்பாடி’’ - (பெ.பு. திருநாளைப். பாடல் 6) மிருகங்கள் கூட வசிக்கத் தகுதியற்ற புலைப் பாடியில் - சேரியில் தான் இன்னும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாடகைக்குக் கூட வீடு கிடைக்காத மைலாப்பூர் செவத்தியானிடம் கேட்டுப் பாருங்கள். இவ்வளவுக்கும் கர்நாடக சங்கீத உலகுக்கே அவர் தான் மிருதங்கம் செய்து தருகிறார்.

உங்கள் திருவாசகச் சிம்பொனியில் வரும் பாடல்களில், ‘புன் புலால்’ - பாடல் 4. தாழிசை 6. வரி.1
‘புழுத் தலை புலையனேன்’ - பாடல் 4. தாழிசை 2. வரி.2
‘வன்புலால்’ - பாடல் 6. தாழிசை 1. வரி.1
‘புலையன்’ என்று வரும் இந்த இடங்களெல்லாம், உங்கள் இதயத்தைக் கசக்கிப் பிழிய வில்லையா?
‘‘வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு’’ - பாடல் 5. தாழிசை 6. வரி1.
‘‘வல்லசுரராகி, முனிவராய்த் தேவராய்’’ - பாடல் 2.
‘‘வேதங்கள் ஐயா என ஓங்கி’’- மேற்படி.

இந்த இடங்கள் எல்லாம் உங்கள் உள்ளத்தை நெருடவில்லையா? இதற்குப் பதில் வேறு தாழிசைகள் (சரணங்கள்) உங்களுக்கு கிடைக்கவில்லையா? அல்லது பாடல் தேர்விலும் ஏதாவது சதி, அரசியல் இருந்ததா? ஆனாலும் சில ஆறுதல்கள்.

திருக்கோத்தும்பி, திருப்பொற் சுண்ணம் என்ற நாட்டார் வடிவத்தையும், சிம்பொனியில் சேர்த்திருக்கிறீர்கள். நாட்டார் பாட்டை (folk songs- lyrics) பண்டைப் பாணர் பாட்டை, புலைப் பாட்டை இழிசினர் பாட்டு என்றே தொல்காப்பிய உரையில் பேராசிரியர் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர் கூட வரிப்பாடல் என்ற இசைப் பாடல்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. பட்டும் படாமலும், பண்ணத்தி என்று கூறி நகர்ந்து விடுவார். தாளத்தில் அமைந்த சந்தப் பாடல்களைப் புலவர் மரபுப் படுத்தி இருபது வண்ணங்களாகக் கூறிச் செல்கிறார்.

அந்த இழிசினர் பாடல்களை, அம்மானையாகவும், ஊசலாகவும், வள்ளைப்பாட்டாகவும், கந்துக வரியாகவும், ஆற்றுவரியாகவும் முதல் முதலில் தம் காப்பியத்தில் பதித்தவர் பெறுமனம் கொண்ட இளங்கோ அடிகள். அவருக்குப் பின்பு மாணிக்கவாசகர். இந்த இருவரும் இழிசினரின் பாராட்டுக்குரியவர்கள். திருஅம்மானை, திருந்தெள்ளேணம், திருச்சாழல், திருஉந்தியார், திருப்பெண்ணூசல் என்றெல்லாம் இழிசினர் இசை வடிவங்களை மாணிக்க வாசகர் பதித்துள்ளார். பிற சமயப்பகை, சாடல் மாணிக்க வாசகரிடம் குறைவு. இல்லை என்றே கூறலாம். மற்ற சமயவாதிகளை விட ஓர் தனி இடத்தில் வைக்கப்பட வேண்டியவர் மாணிக்க வாசகர். சிம்பொனிக்கான திருவாசகத் தேர்வு இந்த வகையில் நியாயமானதே.

நீங்கள் கிடாரில், லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரி தேர்வில் எட்டு கிரேடு பெற்றவர். அய்ரோப்பிய இசைக் கருவிகளை இயக்குவதில் நீங்கள் வல்லவர் தான். உங்கள் ஆதர்ச புருசர்களே பீதோவனும் மொஸார்ட்டும் ஷிபர்ட்டும் பாஹும் ஸ்ட்ராவ்ஸýம் ஹைடினும் பிராம்ஸும்தான். இருந்து விட்டுப் போகட்டும். தியாகராசரை உருகி, உருகிப் பாராட்டி விட்டுப் போங்கள். (சங்கீதக் கனவுகள் - இளையராசா பக்.50,54,77)

உங்களுக்குச் சோறு போட்ட, இந்த மண், வேர் உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்த தமிழ் மண்ணில் நாட்டார் இசையில் தடம் பதித்தவர்கள் இல்லையா? தமிழிசை மும்மூர்த்தி, முத்துத் தாண்டவர், மாரிமுத்தாபிள்ளை, அருணாச்சலக் கவிராயர் இவர்களின் பெயர்களையாவது தாங்கள் எங்கும் கூறியதாகத் தெரியவில்லையே. தமிழ் இசை வளர்த்த பெரியோர்கள், பாணர்கள், தேவதாசியர், இசைவேளாளர், ஓதுவார்கள் இவர்களை எப்படி மறந்தீர்கள். ஆபிரகாம் பண்டிதர் -ஜோதிப் பாண்டியன் --தன்ராஜ் மாஸ்டர் -இளையராசா என்ற கண்ணிகளை உங்களுக்குத் தெரியுமா?

ஏழு எழுத்துக் கொண்டது இசை. அது உலகப் பொது மொழி. அய்ரோப்பிய இசை, தமிழிசை, இந்துஸ்தானி இசை, சீன இசை, அரபிய இசை எல்லாம் ஒன்றுதான். அனைத்து இசையும் கேட்க நன்றாகவே இருக்கும். அதில் அய்ரோப்பிய இசை மட்டும் உயர்ந்தது என்கிறீர்கள். எப்படி?

‘‘மேற்கத்திய இசைக் கருவிகளே இல்லாமல் பாட்டு எடுத்துக் கேட்டால் (நாம் பேண்டையும், சர்ட்டையும் கழற்றியது போல் தான் இருக்கும். அதுவும் மேற்கிலிருந்து வந்தது) வீணை, நாதஸ்வரம் புல்லாங்குழல், மிருதங்கம், தவில் இவைகளில் தான் பாடல் எடுக்க வேண்டும்’’ - சங்கீதக் கனவுகள் - இளையராஜா. பக். 76) அப்படி என்றால் உங்களுக்கு முன் இந்த மண்ணில் இசை ஒன்று இருந்ததில்லையா?

கடந்த இரண்டாயிரம் ஆண்டு காலமாக (பேண்டையும் சர்ட்டையும் கழற்றி என்று தாங்கள் கூறியது போல்) அம்மணமாகவா தமிழன் இசை கேட்டான். நம் பாரம்பரிய இசையிலும், இசைக் கருவிகளிலும் எவ்வளவு இளக்காரம் உங்களுக்கு. நாக சங்கீதத்தை இந்திய இசையில் அமைக்கப் போகிறேன் என்று எந்த மேல் நாட்டானுக்கும் இங்கு வரும் அடிமைபுத்தி இல்லை.

கிடாரையும், கீ போர்டையும் கொண்டு நம் முன்னோர் 2000 ஆண்டுகளாக இசைபாடவில்லை. யாழும், குழலும், மத்தளமும், பேரிசையும், சல்லரியும், உடுக்கையும் நம் பாரம்பரிய இசைக்கருவிகள். முழவுக் கருவி (தோல் கருவி) களுக்கெல்லாம் தலையாயது பறை. தொல்காப்பியர் நிலத்திற்கோர் பறை கூறுகிறார். பறைக் கருவிக்கே முதன்மை தருகிறார். அது நம் அடையாளச் சின்னம். உங்களுக்கு அவமானச் சின்னமாகப் படுகிறது.

‘‘பரிதரு செங்கையில் படுபறை ஆர்ப்பவும்’’ - சிலம்பு. நடுகல் 28-65 என்று சிவனின் கையில் இருக்கும் பறைக் கருவியை இளங்கோ பாடுகிறார்.

நாதப் பறையினர் அன்னே என்றும்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் - அன்னைப் பத்து 1 - என்று மாணிக்கவாசகர் சும்மாவா பாடினார்.
‘‘ஞானவான் ஏந்துமையர் நாதப்பறை அறைமின்’’ - மாணிக்கவாசகர் - திருவெண்பா 1.

இவ்வாறு பறையை முதன்மைப்படுத்தித் தானே வான் கலந்த மாணிக்க வாசகரும் பாடுகிறார்.

100 கிடார், 100 வயலின் வைத்து இசை அமைத்து சிம்பொனி பண்ணுவது போல் 100 பறை வைத்து சிம்பொனி பண்ணுங்கள். அப்பொழுது தான் நீங்கள் பண்ணைப்புரத்து இளையராசா. 25 தப்புகளை வைத்து என் சகோதரர்கள் தாளம் தப்பாமல் தப்பாட்டம் ஆடுகிற நேர்த்தி இங்கு உண்டு. 25 தப்பாட்டக் கலைஞர்கள் பண்டைய நம் இலக்கியங்கள் குறிப்பிடும் சிறு பறையே இன்றைய தமுக்கு. நெல்லை மாவட்டங்களில் ஆடப்படும் கணியான் மேளம் (கூத்து) ‘மகுடாட்டம்’ என்றழைக்கப்படுகிறது. தாளக் கருவிகளில் ஆதியான, பறை, தாளக் கருவிகளில் மகுடமானது. இது இன்று முரசுக் கட்டை, இடு கட்டி சட்டி, பறை என்றெல்லாம் பெயர் பெற்றிருக்கிறது. பறையின் வாய்ப்பாட்டுக் கூட இப்படி உள்ளது.

கண்டுறுப்பது கயிறுறுப்பது
கயிறு கட்டுற தும்புறுப்பது
எல்லாம் றுப்பது எருதுறுப்பது
எருது கட்டுகிற தும்புறுப்பது.
- நாட்டுப்புற இசைக்கலை. கே.ஏ. குணசேகரன். பக். 22.

‘‘ஓர்த்தது இசைக்கும் பறை’’ - கலித்தொகை 92-21 (ஓர்த்தது - நினைத்தது)

பறை வாசிப்பவன் நினைத்ததையெல்லாம் இசைக்கும் உயர்வுடையது பறை. பக்தவச்சல பாரதி நினைத்ததையெல்லாம் இசைக்கும் அவருடைய மிருதங்கம். இஞ்சிக்குடி சுப்பிரமணியன் நினைத்ததை எல்லாம் அவருடைய நாகசுரம் பேசும். ரமணியின் புல்லாங்குழல் அவர் நினைத்ததை எல்லாம் பாடும். 101 நாகசுரமும், 101 தவிலும் மீனாட்சி அம்மன் கோவிலில் இசைத்த வரலாறு தொடர்ந்து வருகிறது. பூரத் திருவிழாவில் நூற்றுக்கு மேற்பட்ட ஜண்டை வாத்தியத்தை ஒன்று போல் முழக்குகிறார்கள்.

நீங்கள் நனிச் சொட்ட சொட்ட விதந்து போற்றும் தியாகராசரின் உற்சவத்தில் பஞ்ச ரத்தினக் கீர்த்தனை எல்லோரும் சேர்ந்து பாடுகிறார்களே அது என்ன. அது CHOIR இல்லையா? ஆரட்டோரியா இல்லையா? 100 பறையும், 100 நாகசுரமும், 100 யாழும் கொண்டு நாட்டார் பாடல்களுக்கு சேர்ந்திசை செய்யுங்கள். அதுவே உங்களுக்குப் பெருமை. ‘மரபு’ (தொடர்ந்து வருவது) என்பது தமிழர் பண்பாடு; ‘சுயம்பு’ என்பது ஆரியப்பண்பாடு. நீங்கள் ‘சுயம்பு’ என்ற வட்டத்திற்குள் சென்று விட்டதால், உங்களைக் கூட சுத்த சுயம்புவாக எண்ணிக் கொள்கிறீர்கள்.

‘இளையராஜா - இசையின் தத்துவமும் அழகியலும்’ என்ற நூலுக்காக பிரேம் - ரமேஷ் உடன் நடத்திய உரையாடலில் (பக்கம் 64 மற்றும் 65)ல் ‘‘இந்த மண்ணில் தோற்றுவிக்கப்பட்ட போது இங்கு இசையின் அடிப்படை எப்படி இருக்கிறதென்றால் அது பக்திப் பூர்வமானதாக இருக்கிறது. பக்திப் பூர்வமானதாகத்தான் முதன் முதலாக பாடல்கள் உண்டாக்கப்பட்டன ’’ என்று கூறி இருக்கிறீர்கள். தொடர்ந்து, ‘‘இந்தியாவில் எல்லாமே பக்தியின் அடிப்படையில் தோன்றியவை தான். மொகலாயர்களின் வருகைக்குப் பிறகே இசை என்பது கேளிக்கைக்கான ஒன்றாகவும் அரண்மனைக்கானதாகவும் ‘கஸல்’ போன்ற வடிவங்களில் உருவானது’’ என்றும் கூறி இருக்கிறீர்கள்.

பக்தி இயக்கம் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அப்பொழுது முதல் தியாகராசர் காலம் வரை நம் இசை பக்தி இசையாக ஆக்கப்பட்டு விட்டது. அதற்கும் முன்பே வரிப்பாடல்கள், ஊசல்பாட்டு, அம்மானைப் பாட்டு, வள்ளைப் பாட்டு, உழைப்பாளர் பாடல்களான ஓடப்பாட்டு, ஏற்றப்பாட்டு, வண்டிக்காரன் பாட்டு, இன்றைய நையாண்டி மேளம், தலித் மக்கள் ஆடும் போலி வகை ஆட்டங்கள், இவைகள் பக்தி இலக்கியங்கள் பாடல் வகை அல்ல. இவைகளில் பல கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடங்கிய பக்தி காலத்திற்கு முற்பட்டவை.

‘‘இசையின் அடிப்படை பக்தி; அது தோற்றுவிக்கப்பட்ட போது பக்தி பூர்வமானதாக இருந்தது’’ என்று நீங்கள் கூறியது எப்படி சரியாக இருக்க முடியும். நம் இசையை ‘பக்தி இசை’ என்ற ஒற்றைத் தளத்தில் அடக்கும் முயற்சி இது. ‘ஒற்றை’ என்ற அடையாளம் யாருடையது என்பதை நீங்கள் அறிவீர்களா? அது பன்மியத்தை அழித்தொழிக்கும் ஆதிக்க சக்திகளின் கருவி. ஆனால் நம் இசையின் தளங்கள் பன்மியமானது. மக்கள் இசை என்ற நாட்டார் இசை (Popular music- Folk Music) நாட்டிய இசை, நாடக இசை (Theatre Music), வெளி அரங்கு இசை (Open Air Music), உள்அரங்கு இசை (Concert Music), மெல்லிசை, திரை இசை, பக்தி இசை என்று விரிந்து பரந்த, நாளும் புதுப் புது வடிவமும் வளர்ச்சியும் கொண்டது நம் இசை.

‘வேள்வி’ ஆரியமார்க்கம். ‘பக்தி’ இழிசினர் மார்க்கம். கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம், இந்த பக்தி மார்க்கத்தை ஆரியம் கைக் கொண்டு நம்மை அடிமையாக்கியது. இன்று வரை நம்மைப் போதையூட்டி மயக்கி வைக்க இந்த பக்தி இசையையே அவர்கள் கைக் கொண்டு வருகின்றனர். நம் இசையின் ஏனைய வடிவங்களெல்லாம் புறந்தள்ளப்படுகின்றன. சங்கப்பாடல்களில் உள்ள அகப் பாடல்கள் பக்தி வடிவங்கள் அல்ல.

அருட்திரு செகத்கஸ்பார் அடிகளாரைக் கேட்டுப் பாருங்கள். பைபிளின், ‘தாவீது சங்கீதப் பாடல்கள்’ அனைத்தும் அகப் பாடல்களே; காதற் சுவைப் பாடல்களே. ஆனால் ‘பக்தி’ என்ற வல்லரக்கன் அகப் பாடல் களையும் விட்டு வைக்க வில்லை. இறைக் காதல் - நாயக நாயகி பாவம் (Bridal Mysticism) என்ற புதிய வாசிப்பை எல்லாம் அதற்குத் தருகிறார்கள். எளிதான சான்றுகளுக்கு வருவோம்.

‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே’ என்ற அகப்பாட்டில் (காதல் பாட்டில்) எங்கே அய்யா பக்தி வருகிறது? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காதலும் காதற் பாடல்களும் இருந்திருக்கிறதா? இல்லை என்றால் நாம் எப்படி இங்கு வந்தோம். "இது ஒரு பொன் மாலைப் பொழுது', "பூங்கதவே தாழ் திறவாய்' என்ற இயற்கை வர்ணனைப் பாடல்களில் எங்கு பக்திச் சுவை நனி சொட்டிச் சொட்டி வழிகிறது? நம் மரபுகளை - வேர்களை அறியாதவரா நீங்கள்? மறந்து விட்டீர்களா? அல்லது மறைக்க நினைக்கிறீர்களா? அல்லது நீங்கள் சென்று சேர்ந்த இடத்தின் அங்கீகாரத்திற்கா? இசுலாமியர்களின் வருகைக்கு பின்பே உருவானதாகக் கூறுகிறீர்கள் இளையராசா.

‘‘வேத்தியல், பொது இயல் என்றிருத்திறத்தின்’’ (வேத்தியல்=வேத்து இயல்) - சிலம்பு. (அரங்கேற்று காதை. 3-39) என்று அரண்மனை இசையை இளங்கோ அடிகளாரே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறி இருக்கிறார். இன்றைய காலத்தில் ஒரு தெளிவிற்காக இவ்வகைப்பாட்டை, ROYAL MUSIC மற்றும் POPULAR MUSIC என்று கூறலாம்.

மொகலாயர்கள் தந்ததே ‘கேளிக்கை இசை’ என்கிறீர்கள். கும்மியும், கோலாட்டமும், கரகமும் காவடியும் இசுலாமியர்கள் தந்ததா? இசை மண் சார்ந்தது. இயற்கையிலிருந்து உருவாகி வளர்வது. எந்த நாட்டானும் இசையை பிற நாட்டானுக்கு கொடையாகவோ பிச்சைப் பொருளாகவோ தர வேண்டியதில்லை. இசை அந்தந்த நாட்டின் பண்பாட்டுக் கூறு. மரபு வழிச் சொத்து. மாறான இரு மரபுகள் சந்திக்கும் போது, கொடுக்கல் வாங்கல் நிகழும். அது உண்மைதான். ஆனால் அரண்மனை இசையும் கேளிக்கை இசையும் எவனும் நமக்குப் போட்ட பிச்சை இல்லை. ஏனென்றால் மொகலாயர் வருகைக்கு முன்பே இங்கு அரண்மனைகளும் இருந்தன; கேளிக்கைகளும் இருந்தன.

நிறைவாக,
நமது மண்ணும், குடி பிறப்பும், வேரும் அருவருக்கத்தக்கதல்ல. பெருமைப் பட வேண்டியது.
‘‘நிற்பார் நிற்க, நில்லா உலகில்
நில்லோம் இனி நாம் செல்வோமே’’ - சிம்பொனி பாடல் 1. தாழிசை 5.
‘‘போவோர் காலம் வந்தது காண்
பொய் விட்டுடையான் கழல் புகவே’’ - சிம்பொனி. பாடல் 1. தாழிசை .1

என் அருமை நண்பர் தொ.பரமசிவனும் நானும், நண்பர்களும் மேற்கண்ட சிம்பொனி வரிகளைக் கேட்ட போது நெகிழ்ந்து போய் விட்டோம். இந்த எண்ணத்தை அகற்றி விடுங்கள். நீங்கள் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத் தாண்டு வாழ வேண்டும். இந்த மண்ணின் மணத்துடன், வேர்களுடன், வேர்களைத் தேடி...


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com