Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
கட்டுரை

சிறுகதை உரையாடல் அரங்கு


தமிழ்ச் சிறுகதை எழுத்துலகின் வெவ்வேறு தளங்களில் இயங்கிவரும் படைப்பாளிகள் சந்திக்கும் உரையாடல் அரங்கு புதியகாற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

09.07.05 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்ற உரையாடல் அரங்கில் தமிழ் படைப்புலகில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் ஆதவன் தீட்சண்யா, பிரேம்: ரமேஷ், ஜே.பி. சாணக்யா, சிவக்குமார் முத்தையா, நட. சிவகுமார், ஜே.ஆர்.வி. எட்வர்ட், குமார செல்வா, களந்தைபீர் முஹம்மது, முஜீப் ரகுமான், உமா மகேஸ்வரி, தேவேந்திரபூபதி, யவனிகா ஸ்ரீராம், ஹெச்.ஜி. ரசூல் மற்றும் வாசகர்கள் பார்வையாளர்கள் உட்பட 70 பேர் பங்கேற்றனர்.

உரையாடல் அரங்கை கவிஞர் தேவேந்திரபூபதி தலைமை ஏற்று நடத்த கவிஞர். ரசூல் சமகால சிறுகதை குறித்த சில பதிவுகளை முன்னுரையாக வைத்து உரையாடலுக்கான வாசல்களைத் திறந்து விட்டார். படைப்பாக்க அனுபவம் சார்ந்த தளத்தில் அல்லாமல் படைப்புக் கோட்பாடு சார்ந்த தளத்தில் உரையாடலின் பொதுவான ஓட்டம் இருந்தது.

வெவ்வேறு தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் படைப்பாளிகள் படைப்பு சார்ந்த செய்திகளை, கோட்பாடுகளை, நுட்பங்களை பகிர்ந்து கொண்டதும் விவாதித்துக் கொண்டதும் சமகால சிறுகதை இயங்கிக் கொண்டிருக்கும் தளத்தைப் புரிந்து கொள்ள துணை நின்றது. வரையறுக்கப்படாத உரையாடலாக இருந்தாலும் திட்டமிடப்படாத வெற்றியையும் கணிக்கப்படாத உற்சாகத்தையும் பங்கேற்றவர்களுக்கு அரங்கம் தந்தது.

புதியகாற்று 4வது ஆண்டு ஆரம்ப விழா-பரிசளிப்பு விழா


புதியகாற்று இதழின் 4வது ஆண்டு ஆரம்ப விழாவும் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழாவும் புதியகாற்று கூட்ட அரங்கில் நடைபெற்றது.

9.07.05-மாலையில் நடைபெற்ற விழாவிற்கு கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் தலைமை ஏற்றார். சிறுபான்மை, தலித் இணைவு அரசியலில் புதியகாற்று வகிக்கின்ற இடம் குறித்த மதிப்பீடாய் அவரது தலைமை உரை அமைந்திருந்தது.

புதிய காற்று இதழ் குறித்த மதிப்புரையை கவிஞர்கள் மூரா, செல்லா சிறுகதை படைப்பாளிகள் களந்தை பீர்முகம்மது, ஆதவன் தீட்சண்யா மற்றும் மதுரை சலீம் ஆகியோர் முன்வைத்தனர். இந்துத்துவ அரசியல் சூழலில் தமிழகத்தில் சிறுபத்திரிகைத் தளத்தில் புதியகாற்று வகிக்கும் காத்திரமான பங்களிப்பை மதிப்புரைகள் முன்வைத்தன. சிறப்புரையை நாவலாசிரியர் பொன்னீலன் வழங்கினார். ஜனநாயக முற்போக்கு மதசார்பற்ற தளத்தில் புதியகாற்று இதழ் ஏற்படுத்திவரும் தாக்கம் வலுவானதாக இருக்கிறது என்றார்.

புதியகாற்று சார்பில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டுரையை கவிஞர் தேவேந்திர பூபதி வழங்கினார். ‘தமிழ் சிற்றிதழ் சூழலில் 4 ஆண்டுகளாக ஒரு பத்திரிகை தொடர்ச்சியாக வெளிவருவது அதன் இருப்பின் முக்கியத்துவத்தைத் காட்டுகிறது’ என்றார்.

புதியகாற்று நிறுவனரும் ஆசிரியருமான ஏ.இ.எஸ். ராஜா ஹஸனபர்அலி சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஏ.சி. பாண்டியன் பாடல்கள் பாட, செல்வி. நஸ்ரீன் பானு உரையாற்ற , தமிழ்ப்பிரியன் வரவேற்புரை நிகழ்த்த ராஜசேகரன் நன்றி கூற ஹாஜா நஜிமுதீன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். ஹாமீம் முஸ்தபா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார்.

தஞ்சை ப்ராஷ் விருது

தஞ்சாவூர் மண்ணை மையப்படுத்தி தீவிர இலக்கிய வாதியாக செயல் பட்டவர் தஞ்சை ப்ரகாஷ் அவரின் நினைவாக ‘தஞ்சை ப்ரகாஷ் இலக்கிய சிந்தனை வட்ட விருது’ ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்குரிய விருது பேரா. அ. சிவக்கண்ணன் எழுதிய ‘சக்கரவியூகம்’ நாவலுக்குக் கிடைத்திருக்கிறது. பேரா. அ. சிவக்கண்ணன் பழனி, அருள்மிகு பழனி தாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரி தமிழ்த்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். நாவல், நாடகம், கவிதை, ஆய்வுக்கட்டுரை தொகுப்பு என பதினெட்டுக்கும் மேற்பட்ட நூல்களைத் தந்திருக்கிறார். பல கல்லூரிகளில் இவரின் நூல் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. தஞ்சையில் நடைபெற்ற விழாவில் இலக்கிய ஆர்வலரும், சட்டமன்ற உறுப்பினருமான உபையதுல்லா பேரா. அ. சிவக்கண்ணனுக்கு பரிசளித்து கௌரவப் படுத்தினார்.

நெய்தலின் நெய்த்தல் கருத்தரங்கு

சுனாமி பேரழிவிற்குப் பிறகு கடல் சார் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் முயற்சிகள் வேகம் பெற்றிருக்கின்றன. பொருளாதார அரசியல் தளங்களில் நடைபெறும் இந்த முயற்சிகளைளப் போல் பண்பாட்டுத் தளத்திலும் இது வேகம் பெற்றிருக்கிறது. அதன் ஓர் அடையாளக் குறியீடாக ஜுலை 23, 24 தினங்களில் நாகர்கோவில் கார்மல் மேநிலைப்பள்ளியில் ‘நெய்தலின் நெய்த்தல்’ என்ற தலைப்பின் கீழ் இருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இயேசு சபையின் சுனாமிப் பணிப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்த இலக்கியம், வரலாறு, கல்வெட்டு, இலக்கணம், நிகழ்வுகள், ஓவியம், நாட்டாரியல் இசை என பல்வேறு துறைகளில் நெய்தல் சார்ந்த பதிவுகளும் புனைவுகளும் எவ்வாறு இடம் பெற்றிருக்கின்றதென்பது குறித்த தகவல்களை ஒன்று திரட்டி ஆவணப்படுத்தும் நிகழ்வாக இருநாள் கருத்தரங்கம் அமைந்திருந்தது. பேரா. தே.லூர்து, ஆ. சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவம், அ.கா.பெருமாள் தனஞ்செயன், பா.ஆனந்த குமார், நா. ராமச்சந்திரன், கவிஞர் செந்தீ நடராஜன், நாவலாசிரியர் பொன்னீலன். ந. மம்மது உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஆய்வுகளை முன்வைத்தனர்.

நெய்தலை குறித்த பதிவுகள் குறைவாகவும் புனைவுகள் அதிகமாகவும் இருக்கிறது. புனைவுகளும் கடல்சார் வாழ்க்கைப்பற்றிய எதிர் புனைவுகளாகவே இருக்கின்றன என்கிறார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த திட்ட அலுவலர் பிரான்சிஸ் ஜெயபதி. நெய்தல் வாழ்வை தேடும் முயற்சியில் இது ஒரு நல்ல ஆரம்பம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com