Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
ஆகஸ்ட் 2005
கட்டுரை

அணிலும் மண் சுமந்திருக்கிறது...
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்


‘உலகின் பொருளாதார மற்றும் கலாச்சார தலைநகர்’ என்று வர்ணிக்கப்படும் லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் பேற்றையும் பெற்றிருக்கிறது. சிங்கப்பூரில் நடந்த தேர்வில் பூர்வாங்கச் சுற்றுகளில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோ, ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட், அமெரிக்க தலைநகர் நியூயார்க் ஆகிய நகரங்களை பின்னுக்குத் தள்ளிய லண்டன் இறுதிச் சுற்றில் 54க்கு 50 என்கிற வாக்கு அடிப்படையில் பிரெஞ்ச் தலைநகர் பாரிசை முந்திக் கொண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உரிமையை பெற்றுக் கொண்டுள்ளது.

லண்டனின் மையப் பகுதியான ட்ரஃபல்கார் சதுக்கத்திலும் லண்டனின் கிழக்குப் பகுதியிலும் வைக்கப்பட்டிருந்த ராட்சச திரைகளில் முடிவை குறிக்கும் படம் காட்சியளித்த போது மகிழ்ச்சி மிகுதியால் மக்கள் துள்ளிக் குதித்தனர். 1908லும் 1948லும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியுள்ள லண்டன் மூன்றாவது முறையாக இந்த சந்தர்ப்பத்தைப் பெற்று ‘மூன்று முறை சந்தர்ப்பம் பெறும் முதல் நகரம்’ என்கிற பெருமையும் பெற்றுள்ளது.

இதற்கு முன்பு 1992ல் பர்மிங்ஹாமில் நடத்தவும் 1996, 2000ஆம் ஆண்டுகளில் மாஞ்செஸ்டரில் நடத்தவும் பிரிட்டன் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. விளையாட்டைப் பொறுத்தவரை லண்டன் மிகப் பெரிய வசதிகள் நிறைந்த நகரம். வெம்ப்ளி, விம்பிள்டன், லார்ட்ஸ், ரீஜர்ட் பூங்கா என்கிற உலகப் பிரசித்தி பெற்ற அரங்குகள் போக சிறிதும், பெரிதுமாக பல அரங்குகள் உள்ளன.

இவை போக, மிக நவீனமானதும் மிகப் பெரிய வசதிகள் நிறைந்ததும் லட்சக்கணக்கானவர்கள் உட்கார்ந்து பார்ப்பதற்கு சௌகரியமுள்ளதுமான ஒரு மாபெரும் விளையாட்டரங்கை நிர்மாணிக்கும் திட்டமும் பிரிட்டன் கைவசம் உள்ளது. இதுவும் போக, 9000 புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன. இவற்றில் பாதி ஒலிம்பிக் கிராமம் எனப்படும் நியுஹாமில் அமையும். நியூஹம், ஸ்ட்ராட்ஃபோட் ஆகிய பகுதிகள், லண்டனின் தரத்துக்கு, பின் தங்கிய பகுதிகளாக கருதப்படுகின்றன. ஒலிம்பிக்கின் வருகையால் இவை உலக தரத்துக்கு மேம்படும்.

லண்டனில் 200 அருங்காட்சியகங்கள், 500 திரை அரங்குகள், 5 பாரம்பரிய இசை மண்டபங்கள் இருப்பது ஒரு சிறப்பு என்று கருதப்படுகிறது. இவை போக, வேறு எந்த நகரங்களையும் போல் இல்லாமல் லண்டன் மாநகரின் 39 சதவிகித இடங்களில் பூங்காக்களும், புல் தரைகளும் காணப்படுகின்றன. புதிதாக நிர்மாணிக்கப் படவுள்ள ஒலிம்பிக் விளையாட்டடு அரங்கு, நீச்சல் தடாக வளாகம், சைக்கிள் போட்டிகளுக்கான வெலோட்ரோம், ஹாக்கி மைதானம், உள் விளையாட்டரங்கு ஆகியவை லண்டனில் புதிதாகவும் - நிரந்தரமாகவும் கட்டப்படும்.

லண்டனின் இன்னொரு சிறப்பம்சம் இங்கே பல்வேறு மத-இன-மொழி-தேச மக்கள் வாழ்கிறார்கள். 200 வகை சிறுபான்மை இனத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தமக்குள் முன்னூறு வகையான மொழிகளில் பேசுகிறார்கள். ஏறக்குறை அறுபது வருடங்களுக்குப் பிறகு லண்டன் ஒலிம்பிக்கை நடத்தப்போவது அதன் எல்லா வகையான இயல்பு வாழ்க்கையிலும் பெரும் அழுத்தத்தை எற்படுத்தி இதை ஒரு பகீரதப்பிரயத்தனம் என்கிற நிலைக்கு கொண்டு போய்விடும் என்று சொல்லும் பொருளாதார வல்லுநர்கள், இதனால் பெருகப் போகும் சுற்றுலாப் பயணிகள் வருகை, இன்னபிற இனங்களில் வந்து குவியப்போகும் பொருளாதார வரவுகள், ஆகியவை எல்லாக் குறைகளையும் குறைகளே இல்லை என்றாக்கி விடும் என்று நம்புகிறார்கள்.

கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு மட்டும் 70,000 ஊழியர்கள் தேவைப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இன்னும் ஏழு ஆண்டுகளில் இவை பூர்த்தியாக வேண்டும். ஆனால் அதன் பிறகும் இன்னும் 7-8 ஆண்டுகளுக்கு இந்தப் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த வெற்றியில் முஸ்லிம்களின் பங்கும் கணிசமானது என்று பிரிடடிஷ் முஸ்லிம் பேரமைப்பின் தலைமைச் செயலர் சர் இக்பால் சக்ராணி கூறியுள்ளார். பிரிட்டனுக்கு ஒலிம்பிக்கை பெற்றுத் தர அமைக்கப்பட்ட நல்லெண்ணத் தூதுக்குழுவில் இவர் மட்டுமல்ல ஆயிஷா குரேஷி, தன்சிம் வஸ்தி என்கிற முஸ்லிம் பெண்களும் பங்குபெற்று அரும்பணி ஆற்றியதாகச் சொல்லப்படுகிறது. அதே சமயம் லண்டனின் வர்த்தக சமூகம் ஒட்டு மொத்தமாக இதை வரவேற்றாலும் ஒலிம்பிக் நிர்மாணப் பணிகளுக்கு வகை செய்வதற்காக தங்கள் கடை கண்ணிகளை இழக்கப் போகும் வியாபாரிகள் தங்களுக்கு செய்யப்படவிருப்பதாக சொல்லும் மாற்று ஏற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று கூறி இருக்கிறார்கள். ஒலிம்பிக்கில் வாக்குரிமையுள்ள 116 நாடுகளில் ஆறு நாடுகள் முஸ்லிம் நாடுகள். அவர்களுக்கும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் தலைமைச் செயலர் அக்மலுத்தின் இஹ்சானுவுக்கும் தான் கடிதம் எழுதியதாக சக்ராணி தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயர், இரண்டு முறை 1500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஸ்டீபன் கோ, உயரம் தாண்டுதலில் சாதனை படைத்துள்ள டால்டன் கிரான்ட், ஏதன்சில் இரண்டு தங்கம் வென்ற செல்லி ஹோல்ம்ஸ், ஒலிம்பிக்கில் ஐந்து முறை வெற்றிவாகை சூடிய சர் ஸ்டீவ் ரெட்சிரேவ், முப்பாய்ச்சலில் முடி சூடா மன்னன் ஜொனத்தன் எட்வர்ட்ஸ், பிரிட்டிஷ் கால்பந்தாட்ட சூப்பர் ஸ்டார் டேவிட் பெக்காம் கால் பந்து அணியின் மேலாளர் ஸ்வென் கோரன் எரிக்சன் ஆகியோர் லண்டனுக்கு ஒலிம்பிக்கை கொண்டு வருவதில் கடும் முயற்சி எடுத்துக் கொண்டார்கள். அதிலும் குறிப்பாக பிரிட்டிஷ் தூதுக் குழுவுக்கு தலைமை ஏற்றிருந்த அமெரிக்க பெண்மணி பார்பரா கஸ்ஸானியை வெளியெற்றிவிட்டு ஸ்டீவன் கோ தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு தான் சம்பவங்கள் உண்மையில் சூடு பிடிக்கத் துவங்கின.

கோலாகலங்களுக்கு எள்ளளவும் குறைவில்லாத பிரிட்டனில் குறிப்பாக லண்டனில் 2012ல் நடைபெறப் போகும் இந்த ஒலிம்பிக் கோலாகலம், இந்த நூற்றாண்டுக்கே ஓர் முன் மாதிரியானதாக அமைந்தால் ஆச்சரியம் இல்லை.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com