Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
மார்ச் 2009
புத்தகம் திறக்கும் வாசல்
ஒவ்வொரு வரியிலும் உண்மையான நாட்குறிப்புகள்
கிருஷ்ணா டாவின்ஸி

சிறு வயது ஞாபகங்கள் உங்களுக்கு சுமார் எத்தனை வயதிலிருந்து இருக்கும்? எனக்கு எல்கேஜியில் பெற்றோர்கள் சேர்த்து விட்டதிலிருந்து பிம்பங்கள் “பிளர் எஃபக்டில்’ ஆங்காங்கே ஞாபகம் இருக்கிறது. வீட்டுக்கு வர வழி தெரியாமல் ஒரு சின்னத் தோழியின் தோளில் கை போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்ததும் அதை வீட்டிலுள்ளவர்கள் கிண்டலடித்ததும் அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களும் ஞாபகம் இருக்கின்றன. எழுத்தாளர் ஜெயமோகன் அவர் ஆறு மாதக் குழந்தையாக இருந்தததில் இருந்து ஞாபகம் இருப்பதாகச் சொல்கிறார்.

நினைவுகள் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு வகையில் ஞாபகம் இருப்பது இயற்கையான ஒன்று. ஆனால் அந்த நினைவுகள் சிறு சிறு விவரங்களாக குறிப்பெடுத்து சுவாரஸ்யமாக எழுதுவது என்பது அசாத்தியமான திறமை. எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அதில் பெரிய ஆள். அவருடைய சமீபத்திய நாவல் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்’ (உயிர்மை வெளியீடு) படிக்க படிக்க ஆச்சர்யத்தைத் தந்தது. பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்களுக்கு உலகளாவிய பயணம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் அதிகம் வாய்ப்பதில்லை. அ. முத்துலிங்கம் ஈழத்தின் சிறிய கொக்குவில் கிராமத்தில் பிறந்து, கொழும்புவில் வேலை பார்த்து, பின் அங்கேயிருந்து ஆப்பிரிக்காவுக்குப் போய் பதினெட்டு வருடங்கள் வெவ்வேறு ஆப்பிரிக்க தேசங்களில் பணிபுரிந்து அங்கிருந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா என்று பல நாடுகளில் வசித்தவர். இப்போது ஓய்வில் கனடாவில் இருக்கிறார். இந்த நீண்ட வாழ்க்கை ஓட்டத்தில் அவர் கண்ட சித்திரங்கள்தான் எத்தனை வகை!

மிகச்சிறு வயதில் இருந்தே தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அவர் சின்னச் சின்ன விவரக் குறிப்புகளுடன் விவரிக்கும் அழகே தனி. போகிற போக்கில் உலக இலக்கியங்களிலிருந்தும், வரலாற்றிலிருந்தும் அவர் அள்ளித் தெளிக்கும் விவரங்கள் அற்புதமானவை. சிறு வயதில் கொக்குவில் கிராமத்திலிருந்து ஒரு திருவிழாவிற்கு அவர் குடும்பத்துடன் செல்கிறார். திருவிழாவில் பொதுவாகக் குழந்தைகள்தான் தொலைவார்கள். ஆனால் இங்கே இவருடைய அம்மா தொலைந்து விடுகிறார். உணர்ச்சிகரமான தேடல்களுக்குப் பிறகு அம்மா ஓடி வந்து கட்டியணைத்துக் கொள்கிறார். வீடு திரும்பும் வழியெங்கும் தாயின் தேகம் நடுங்கிக் கொண்டே இருந்ததாக முதல் அத்தியாயத்தைத் தொடங்குகிறார். அந்தப் பயணத்தைப் பற்றிய விவரிப்புகளில் உள்ள நுண்ணியமான தகவல்கள் படிக்க அத்தனை சுவராஸ்யம்! அப்போது அந்தக் கிராமத்து மக்களுக்கு கடிகார நேரம் தெரியாது. கொழும்பு செல்லும் ரயிலின் சத்தம்தான் நேரக் குறிப்பு. (இப்போது அந்த ரயிலும் இல்லை, ரயில்வே ஸ்டேஷனும் இல்லை)

பள்ளியில் வித்தியாசமாக உடையணிந்து எல்லோரின் கவனத்தையும் ஈர்த்த சந்திரமதி டீச்சர், அவருக்கு எதிராக அரசியல் செய்த தங்கம்மா டீச்சர், சங்கீதம், படித்த அக்காவுக்கு சிதம்பரநாதன் பாடல் வரிகளால் வந்த எதிர்பாராத பிரச்சனைகள், அப்பா பரிசாகக் கொடுத்து பிறகு பெற்றுக் கொண்டு திருப்பித் தராத ஒரு ரூபாய், பள்ளிப் பேச்சுப் போட்டியில் மகன் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைந்த தாய் மகன் ஜெயிக்காததைப் பற்றிச் சற்றும் கண்டு கொள்ளாமல் இரவு விருந்து சாப்பாட்டைப் பரிமாறிய பாசம், முதல் கொழும்புப் பயணம், வானொலி மூலம் வசப்பட்ட காதல் என்றெல்லாம் இளம் பிராயத்தில் பயணிக்கும் நாவல் அவர் வேலைக்குச் செல்லும் பருவத்திலிருந்து வேறொரு தளத்திற்கு மாறுகிறது. கொழும்பில் ஒரு பெரிய பன்னாட்டுக் கம்பெனியில் தொடங்கும் அவரது அலுவல் பணிகள் பிற்பாடு ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, கனடா என்றெல்லாம் நாடு விட்டு நாடு செல்லச் செல்ல எத்தனை எத்தனை அனுபவங்கள். அதனூடாக அவர் மனதில் நிரந்தரமாகத் தங்கிவிட்ட சொந்த ஊர் குறித்த ஏக்கங்கள்... ஒரு விமர்சனக் கட்டுரையில் இந்தப் புத்தகம் பற்றிய சிறப்புகளை நிச்சயம் விவரிக்க இயலாது. நிதானமாகப் படித்து இன்புற வேண்டிய நாவல்.

ஒரு வார்த்தை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ கூடப் பேசியிராத நட்பு எனக்கு முத்துலிங்கம் சாரிடம் உண்டு. எல்லாமே மின்னஞ்சல்தான். ஆனால் அந்த மின்னஞ்சலின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவருடைய அன்பு வெளிப்படும். மானசீகமான ஒரு நெருக்கத்தை நான் உணர்வேன். மனிதர் உலகெங்கும் சுற்றி விட்டார். பல்வேறு அரசியல்களை, மனிதர்களை, சமூகங்களை, கலாசாரங்களைப் பார்த்து விட்டார். இப்போது ஓய்வில் இருந்தபடி இலக்கியப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஒரு பேட்டிக்காக அவரிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறேன். “உங்கள் பால்ய காலங்கள் நிகழ்ந்த இடங்களுக்கு மறுபடி சென்றீகளா? அந்த நினைவுகளை மீட்டெடுக்க முடிந்ததா?’

இந்தக் கேள்விக்கு அவர் அளித்த பதில்:

“போர் தொடங்கிய பிறகு என்னுடைய பிறந்த ஊருக்கு போய்வரும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. சமீபத்தில் எங்கள் அண்ணன் இறந்துபோனார். எங்களுக்கு இரு சகோதரிகள், நாலு சகோதரர்கள். நான் இன்றைக்கு இந்நிலையில் இருப்பதற்கு அவரே காரணம். அவருடைய மரணச் சடங்கில் ஒரு சகோதரரும் கலந்து கொள்ளவில்லை. அப்போது அங்கே ஊரடங்குச் சட்டம் இருந்தது. மருந்துகள் இல்லாத, கூரையில் ஓட்டை விழுந்த ஒரு சின்ன ஆஸ்பத்திரியில் அவர் தனியாகக் கிடந்து உயிர் நீத்தார்.

என் மீதி வாழ்நாளில் நான் பிறந்த பூமியை திரும்பவும் பார்க்கக் கிடைக்காது என்றே நினைக்கிறேன். அப்படி கிடைத்தால் நான் பார்க்க விரும்புவது மரங்களை. எங்கள் வீட்டு வளைவில் தென்னை, பனை, வேம்பு, இலுப்பை, பலா, மா, நாவல், கொய்யா, இலந்தை, மாதுளை, எலுமிச்சை என்று நிறைய மரங்கள் இருந்தன. 20 வகையான மாம்பழங்கள். மிகச் சின்ன வயதிலேயே ஒரு பழத்தை சாப்பிடும்போது அது எந்த மரத்திலிருந்து வந்தது என்று சொல்லிவிடுவேன். கிணறுகளைப் பார்க்க விருப்பம். யாழ்ப்பாணத்தில் ஆறே இல்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கிணறு இருக்கும். எங்கள் வீட்டுக்கு கிட்ட நடு வீதியில் ஒரு கிணறு இருந்தது. அதை பொதுவாக ஐந்து, ஆறு குடும்பங்கள் பாவித்தன. அடிக்கடி யாராவது தவறி விழுந்து சாவார்கள். மாடு, நாய் விழுந்து செத்துப்போகும். நாங்கள் சிறுவர்கள் எங்கே தவறி அதற்குள் விழுந்துவிடுவோமோ என்று அம்மா பயந்தபடியே இருப்பார்.

இன்னொன்று கொக்குவில் ரயில் ஸ்டேசன். என்னுடைய ஐயா சிறுவனாக இருந்தபோது ரயில் நிலையம் அங்கே வந்தது. என்னுடைய சிறு வயதில் ரயில் நிலையம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.

எங்கள் கிராமத்து மணிக்கூடு அதுதான். விருந்தினர்கள் ரயிலில் வந்து இறங்குவார்கள். நாங்கள் போய் அழைத்து வருவோம். பரிசுகள் கிடைக்கும். ரயில் கூவும் சத்தத்துக்காக காத்திருப்போம். இன்று ஸ்டேசன், தண்டவாளம் சிலிப்பர் கட்டைகள் எல்லாமே அழிந்துவிட்டன. அது இருந்த இடமே இல்லை...’
இந்த நாவலுக்குப் பெயர் “உண்மை கலந்த நாட்குறிப்புகள்’. என்னைப் பொறுத்தவரை தலைப்பு இப்படி இருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வரியிலும் உண்மை உள்ள நாட்குறிப்புகள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com