Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூன் 2009
நூல் அறிமுகம்
குறுந்தொகைக்கு அகல்விளக்காய் ஓர் எளிய அறிமுகம்
எஸ்.வி.வேணுகோபாலன்


குறுந்தொகைக்கு அகல்விளக்காய் ஓர் எளிய அறிமுகம்
மயிலைபாலு
அறிமுக அகல் விளக்கு குறுந்தொகை, மயிலை பாலு,
பாரதி புத்தகாலயம், பக். 70 ரூ. 25

வேறு வேறு பாஷைகள் கற்பாய் நீ,
வீட்டு வார்த்தை கற்கிலாய் போ போ போ
-மகாகவி சுப்பிரமணிய பாரதி

Book கோடை விடுமுறையின்போது சந்தித்த குடும்ப நண்பர் சொன்னார், தமிழ் இலக்கணம் தாம் படிக்கும்போது கடினமாகத் தோன்றியது பின்னர் தமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க உட்காரும்போது இலகுவாக இருக்கிறதென்று. அந்தப் பெண்மணி சொன்னதில் வியப்பேதுமில்லை. கெடுபிடிகளுக்கிடையில், பாடதிட்டத்தின் நிபந்தனைகளின் பேரில் படிப்பது ஒன்று, விருப்பத்-தோடு கையில் எடுத்துக் கொண்டு வாசிப்பது வேறு. அவ்வளவு ஏன், பாரதியாரைப் பற்றியே இப்படி ஒரு செய்தி உண்டே... ஒரு நாள் தமிழாசிரியர் கேட்ட கேள்விக்கு அவர் விடையளிக்கவில்லையாம், உடன் ஆசிரியர் ஏளனமாகச் சொன்னாராம்: "ஊரில் எல்லாம் உம்மை கவி காளமேகம் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள், காளமேகம் பொழியாமல் இருப்பதன் காரணம் என்னவோ?". அதற்கு மகாகவி, "காளமேகம் தனது விருப்பத்திற்குத் தான் பெய்யுமே-யன்றி, அற்பப் பண்டிதர்களின் உத்தரவுகளுக்கெல்லாம் பணிந்து அல்ல" என்று பதிலிறுத்தாராம்.

தமிழுக்கோ, தமிழ் ஆசிரியப் பெருமக்களுக்கோ, கற்பவர்களுக்கோ விருப்பமான சூழலை இன்றைய பள்ளிகள் உருவாக்கி உள்ளனவா என்பது பதில் தெரிந்த கேள்வி. பொதுவாகவே தமிழ் ஆசிரியர்கள் அல்லது ஆசிரியைகளு௧கு வகுப்பு ஆசிரியராகப் பொறுப்பு வழங்கப்படுகிற போக்கு பள்ளிகளில் தென்படுவதில்லை. ஆங்கிலம் அல்லது வேறு பாடங்-களைக் கற்பிப்பவர்களே அந்தப் பணிக்குப் பொருத்தமென்று ஏன் கருதுகிறார்கœ என்று தெரியவில்லை. வழக்கமாக, பெற்றோர்-வகுப்பு ஆசிரியர் சந்திப்பு நிகழும் நேரங்களில், தமிழ் கற்பிப்பவர் வராந்தாவில் எங்காவது நின்று கொண்டு அறிந்தவர், தெரிந்தவர் அணுகிக் கேட்டால் மட்டும் தமது பாடத்தில் குழந்தைகளின் முன்னேற்றம் பற்றி செய்தி பரிமாறுபவராகவே இருப்பார்.

மொழி ஆசிரியர் நிற்கும் வராந்தாவில் தான் மொழியும் காத்திருக்கிறது. வகுப்பறைக்குள் உட்காரும் கம்பீரம் அதற்கு எப்படி கிடைக்கும்? நகர்ப்புற மாணவர்கள் பலரும் பத்தாவது முடித்த மாத்திரத்தில் பிளஸ் 2 சேரும்போது, மதிப்பெண்களைக் குவிக்க தமிழ் உதவாது என்று வேறு சுலபமான மொழி-களைத் தேர்வு செய்கின்றனர். பெற்றோரும், "கால-காலமா இதே வினைத்தொகை, பண்புத் தொகை, ஆகுபெயர்னு-கிட்டு, இத வச்சி எதிர்-காலத்துக்கு ஏதாச்சும் பயனுண்டா என்ன.." என்று அலுத்துக் கொள்கின்றனர். மொழியின் வளம், இனிமை, அதன் இலக்கிய நுகர்வு, அற்புதக் கொடையான அதன் வாசிப்பு அனுபவம், சமூக வெளிச்சம்...... எல்லாம் தலைமுறை தலைமுறையாக இழக்கப்பட்டு வருகிறது. யார் குற்றவாளிகள் என்று கேட்பதைவிட, ஏன் இழக்கவேண்டும் என்பது பொருத்தமான அணுகுமுறையாக இருக்கக் கூடும்.

அன்போடு பரிமாறப்படுகிற உணவுக்குச் சுவை கூடிவிடுகிறதல்லவா... அறிமுகமாகிக் கொள்கிற விதம் நட்பின் தன்மையை ஒருபடி மேம்படுத்தி-விடுமல்லவா.... இலக்கியமும் அப்படித்தான்! சங்க இலக்கியம், பதினெண் கீழ்க்கணக்கு, மேல் கணக்கு, அது இது என்று உருப்போட்டு ஒப்புவித்துத் தலையில் குட்டு வாங்கி வெறுத்து நோக்குகிற விதங்களிலிருந்து விடுபட்டு நமது மடியில் இலக்கியங்கள் தவழ அல்லது இலக்கியக் கடலில் நாம் மிதக்க ஒரு வாய்ப்பு அமையுமானால் அப்போது கசக்குமா மொழிப்பாடங்கள்.

தமிழ் ஆர்வலர் -எழுத்தாளர் மயிலை பாலு சின்னஞ்சிறிய அகல்விளக்கை ஏற்றி, குறுந்தொகை-யை நமக்கு அறிமுகப்படுத்தி இருக்கிற எளிய நூல் நிறைய சிந்தனைகளைத் தூண்டுகிறது.

சங்க இலக்கியங்களில் எட்டுத் தொகை என்று வகைப்படுத்தப்பட்டவற்றில் வருகிற குறுந்தொகை பற்றிய குறுஞ்சித்திரமாக வரையப்பட்டிருக்கிற இந்த நூல் அருமையான அந்த இலக்கியத்தை நோக்கி வாசகர்களின் கவனத்தையும், நேரத்தையும், ரசனை உணர்ச்சியையும் ஈர்க்கிறது. பாடல்களை அறிமுகம் செய்யாமல், பாடலின் சுவையை நேர்த்தியாக அறிமுகப்படுத்துகிறது. காதல் உள்ளங்களின் அலைமோதல்களை, தத்தளிப்புகளை, பரிதவிப்பு-களை, கிறுகிறுப்புகளை இளமையின் வாசம் பொங்கப் பதிவு செய்திருக்கும் ஓர் இலக்கிய பிரதியை தமிழ் வாத்தியார் போல பிரம்பை வைத்துக் கொண்டு "ஹ¨ம்..., படி" என்று மிரட்டாமல், தோழமையோடு தோளில் கை போட்டு, "என்ன ராசா எம்புட்டுப் பிரியமாச் செஞ்சு வச்சிருக்குது, ஏறெடுத்துப் பார்க்காம இருந்தா என்ன அர்த்தம், கையைக் கழுவிட்டு வந்து உக்காந்து திம்பியா" என்கிற மாதிரி அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் மயிலை பாலு.

குறுந்தொகையின் அமைப்பு என்கிற நுழைவாயில் குறிப்பில், குறைந்தபட்சம் 4 வரிகளும், அதிகபட்சமாக ஒன்பதே வரிகளுமாக உடைய பாடல்கள் என்று பாலு பயன்படுத்துகிற வசமான சொற்றொடர், அலுப்பு தட்டும் நீண்ட வாசிப்பெல்லாம் இல்லை என்று வாசகரை நயமாகக் கரைக்கிறது. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியைப் பிரித்துப் போட்டு பாகங்கள், துணை பாகங்களாக அடையாளப்-படுத்துகிற மாதிரி, இந்த முதல் கட்டுரை குறுந்தொகையின் பாடல்கள் மொத்தம் எத்தனை (கடவுள் வாழ்த்தோடு சேர்த்து 402), எழுதியவர்கள் எத்தனை பேர், எழுதியவர் பெயர் குறிப்பிடப்படாத பாடல்கள் எத்தனை என்றெல்லாம் உள் செய்திகளை உள்வாங்கிக் கொள்ளும்படி சிக்கல் சிடுக்கில்லாமல் எடுத்துரைக்கிறது.

பெயர் வழங்காத புலவருக்கும் அவரது பாடல் வரிகளிலிருந்து பெயர் வழங்கப்பட்ட விதங்களையும் சுவாரசியமாக பட்டியலிடுகிறது. செம்புலப் பெயநீரார் பெயர் தெரியாத தமிழ் மாணவர் இருக்க முடியாது, மயிலை பாலு ரசமாக மீனெறி தூண்டிலார், குப்பைக் கோழியார், விட்ட குதிரையார் என்கிற பலரை நமக்கு அந்தந்தப் பெயர்க் காரணமாக அமைந்த பாடலின் எண்ணையும் அடைப்புக் குறிக்குள் வழங்கி அறிமுகப்படுத்துகிறார். யார், யாரின் கூற்றாக அமைந்த பாடல்கள் என்பதன் பின்னணியையும் விளம்புகிற இந்தப் பகுதியில் ஒரு குறை, பெண்பாற் புலவர்கள் எத்தனை பேர் குறுந்தொகை பாடல்கள் தந்துள்ளனர் என்பது சொல்லப் படாததுதான்.

திணைகளையும், துறைகளையும் தெரியப்-படுத்துகிறது அடுத்த௧ கட்டுரை. படிக்கும்போது வேகத் தடை போல் வந்து தட்டும் சொற்களைக் குறித்து அஞ்சவேண்டாம் என்று வாசிப்பின் பயணத்தைத் தொடர உதவும் குறிப்புகள் ஏந்தி வருகிறது அடுத்த கட்டுரை. கவினுறு காட்சிகள் என்ற அடுத்த கட்டுரை, வனப்பு மிகுந்த காட்சிகளின் பின்புலத்தில் இழைந்து குழையும் காதல் உருக்கங்களை இயம்பும் பாடல்கள் சிலவற்றை எளிய உரையோடு வழங்குகிறது. உவமை நயங்களையும், குறுந்தொகை சொல்லும் சமூகத் தகவல்களையும் எடுத்துக் காட்டிற்காகச் சில பாடல்களோடு விவாதிக்கும் இறுதிக் கட்டுரை அற்புதமான பதிவு. அதில் வரும்,

ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்
சேரிவரினும் ஆரமுயங்கார்
ஏதிலாளர் சுடலை போலக்
காணாக் கழிப மன்னே.......
(குறுந்தொகை பாடல் 231)

என்கிற பாடலைச் சொல்லுமிடத்து, சேரி என்ற சொல்லாட்சியையும், ஏதிலாளர் சுடலை (அயலா-ருடைய சுடுகாடு) என்ற சொல்லாட்சியையும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டுமென்றும் பாலு சொல்லியிருப்பது முக்கியமானது. அடிமை-களாக இருந்தவர்கœ, குற்றேவல் செய்தவர்கள் ஐந்து திணைக்குரிய பாடல்களில் இடம்பெற மாட்டார்கள் என்கிற தொல்காப்பிய இலக்கணத்தை நூலாசிரியர் வேறிடத்தில் சொல்லியிருப்பதையும் கருத்தில் கொண்டு குறுந்தொகைக்குள் நுழைந்தால், அக்கால சமூக பாகுபாடுகள், பாலின வேறுபாடுகள் குறித்தும் நிறைய செய்திகள் தட்டுப்படக் கூடும்.

36 பக்க அறிமுகத்தைத் தொடர்ந்து 24 பக்கங்கள் பின்னிணைப்பாக வந்திருப்பது விநோதமாகத் தோன்றினாலும், அவை குறுந்தொகையின் அறிமுகத்-தைப் பாடலின் வரிகளை வைத்துப் பகுத்தும், புலவர்கள்தம் பெயர் வழி தொகுத்தும், திணை, துறை, கூற்று வழியாக அமைத்தும் வழங்கப்பட்டிருப்பதால் அறிமுகத்தின் பகுதியாகவே பின்னிணைப்பையும் கருதலாம்.

சங்க நூல்களைக் கற்க வேண்டியதன் அவசியம் என்ன என்ற துவக்கக் கட்டுரையில், மரபின் வேர்களை இழக்கும் மனித நாகgகம் அல்லலுறும் என்று நூலாசிரியர் சொல்வதும் சரி, தூண்டில் என்ற தலைப்பில் சு.பொ. அகத்தியலிங்கம் நல்கியுள்ள அணிந்துரையும் சரி குறுந்தொகைக்கு மட்டுமல்ல, பழந்தமிழ் இலக்கியங்கள் அனைத்தின் வாசிப்புக்கு-மான நியாயத்தைச் சொல்லி விடுகின்றன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 11வது மாநில மாநாட்டு நேரத்தில் இந்த நூல் வெளியிடப்பட்டது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

எவையேனும் மூன்றனுக்கு விடையளி என்றும், யாங்ஙனம் நிறுவுவீர் என்றும் வழியில் நிறுத்திக் கேட்கப்படும்போது பிடிபடாமல் போன அல்லது விலகிப் போன இலக்கிய இழைகள் ஆர்வத்தோடு அழைக்கிற தொலைவில் வசப்படும் என்றே கைப்-பிடித்துச் சொல்கிறது குறுந்தொகை அறிமுக அகல் விளக்கு. மயிலை பாலுவிற்கு இன்னும் நிரம்ப வேலை இருக்கிறது. அவ்வளவு இலக்கியங்கள் இருக்கின்றன.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com