Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூலை 2009
நூல் அறிமுகம்
ஈழம் : யுத்தப் பாதையில் ஒரு மீள்பயணம்
- இல.சி.மீனா


ஈழம்: இன்றெமக்கு வேண்டியது சமாதானமே : ஷோபாசக்தி, அ. மார்க்ஸ்,
பயணி வெளியீட்டகம்,
சென்னை 86. பக். 47 ரூ.25

ராஜபக்சேவின் கொடூரத்தாக்குதலும், விடுதலைப்புலிகளின் எதிர்தாக்குதலும் உக்ரத்துடன் இருந்த சமீபகாலத்தில் வெளிவந்த இந்நூல், ‘தனிஈழம்’ என்பதையே போராட்டத்தின் தீர்வாக வலியுறுத்தப்பட்டதை மறுத்து, ‘ஒன்றுபட்ட இலங்கையில் சனநாயக அரசியல் தீர்வு’ என்பதற்காக குரலை உயர்த்தியது. ஈழத்தமிழர்கள் சனநாயககாற்றைச் சுவாசிக்க வகைசெய்யும் இந்தத் தீர்வைக் கூட ராஜபக்சேவின் பாசிச அரசு தனக்குச் சாதகமாக்கவே இன்று எத்தனிக்கிறது.

தமிழினத்தைக் கொன்று குவித்த வன்மக்களிப்பில் மிதக்கும் ராஜபக்சே, தமிழர்களைக் காப்பது தமது கடமை என்றும், தமிழர்களுக்கு அரசியல் ரீதியான தீர்வு அளிக்கப்படும் என்றும் ஜால வித்தைகளை வார்த்தைகளாய் உமிழ்கிறார். ராஜபக்சேவின் இந்தத் தந்திரங்களை எல்லாம் அப்பட்டமாய் அம்பலப்படுத்தியுள்ளது. இலங்கையிலிருந்து ஒலித்த இக்குரல்: ‘இந்த நாட்டின் சட்டத்தில் நீதி கிடைக்கும் என்று அவர்கள் (தமிழர்கள்) எதிர்பார்க்க முடியாது. அந்த மக்களின் துன்பங்கள் இந்த நாட்டின் நீதிமன்றங்களுக்குக் கொண்டு வரப்படவில்லை’. இவ்வாறு சொல்வதற்காக தான் தண்டிக்கப்படலாம் என்கிற ‘நம்பிக்கையுடனேயே’ இதைச் சொல்லியிருக்கிறார். இலங்கைத் தலைமை நீதிபதி சரத் என். சில்வா

இத்தகைய நிலையில் ராஜபக்சேவின் அரசியல் தீர்வு என்கிற பித்தலாட்டத்தை நாம் எப்படி எதிர்கொள்வது? 80களைப் போல தங்களின் இனவாதப்பற்றை, தமிழர்களின் மீதான இனவெறியை சிங்களஅரசு இனி பட்டவர்த்தனமாக்க இயலாது. பெரிதாய் எதையும் தட்டிக் கேட்டு கிழிக்காத ஐ.நா.வின் பார்வை மட்டுமின்றி உலகநாடுகளின் கண்காணிப்புப் பார்வையும் இன்று இலங்கையை சூழ்ந்திருக்கிறது. இதனை ராஜபக்சேவும் உணர்ந்து ‘அரசியல் தீர்வு’ என்கிற பலம்வாய்ந்த ஆயுதத்தைத் தான் இனி தமிழரின் மீது சாதுரியமாய் பிரயோகிக்கும் அவரின் இனவாத மூளை சிங்கள இராணுவத்தின் இறுதித்தாக்குதல்களை முறியடிக்க இயலாத விடுதலைப்புலிகள் முற்றிலுமாய் வீழ்த்தப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில், யுத்தங்களால் பாழ்பட்டுப் போயிருக்கிற அப்பாவி மக்களிடம் இருந்து ராஜபக்சேவுக்கு எதிரான முழக்கங்கள் ஒலிக்குமா? அது சாத்தியமில்லையெனில் புலிகளின் மறுஎழுச்சிதான் மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தருமா? ஆம் எனில் தமிழ் முஸ்லிம்களை கட்டிய துணியோடு விரட்டியடித்த, சாதிய மேலாதிக்கங்களுக்கு முடிவுகட்டாத இவர்களின் மறுஎழுச்சி சகல தமிழர்களுக்குமான நேர்மையான தீர்வைக் கொடுக்குமா?

இப்படி அடுக்கடுக்காய் விரிகிற கேள்விகளுக்கெல்லாம் வாய்ப்பளிக்காமல் விமர்சனத்திற்கே இடமளிக்காமல் புலிகளின் மறுஎழுச்சிக்காக மீண்டும் கோஷமிடத் தொடங்கிவிட்டனர் புலி ஆதரவாளர்கள். இவர்களோடு இணைந்து நாமும் புலிகளை ஏகப்பிரதிநிதிகளாய் ஏற்பதற்கு முன், புலிகளின் வரலாற்றுத் தடங்களை மீளவும் நினைத்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் சிங்களம் x தமிழ் என்கிற முரண்களுக்கிடையே மனிதம் பிளவுபட்டுப் போயிருக்கிற அந்த பூமியில் சிறுபான்மையினருக்கான பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பது என்பது நம்மூர் சனநாயகத் தேர்தலில் ஓட்டுப்பெட்டியில் இருக்கிற ஏதோ ஒரு பொத்தானை அழுத்திவிட்டு வருவதைப் போல அவ்வளவு எளிதானதல்ல. இதற்காக வரலாற்றைப் புரட்டிப் பார்ப்பதற்கு முன் நாம் அறிந்துகொள்ள வேண்டியது ‘ஈழம்: இன்றெமக்கு வேண்டியது சமாதானமே’.

ஒரு நீண்ட நெடிய உரையாடல் தமிழருக்கும், சிங்களவர்க்கும் மட்டும் அல்ல. தமிழர்களுக்கிடையேயும் தேவையாயிருக்கிறது என்பதை உணர்த்துகிற இந்த நூல், புலிகளின் வரலாற்றுச் செயற்பாடுகளை ஒளிவுமறைவின்றி நமக்கு எடுத்துக் கூறுகிறது. இலக்கியப் பிரதிகளின் மூலம் ஈழச்சமூகத்தில் மறைக்கப்படும் அவலத்தை அம்பலத்தப்படுத்தும் புனைவு எழுத்தாளர் ‘ஷோபா சக்தியின் அரசியல் பார்வையும், வழமைகளை மீறிய பார்வையில் சமூகத்தில் கிளைபரப்பும் விஷமங்களை வேரறுக்கிற காத்திரமான அரசியல் விமர்சகர் அ. மார்க்ஸின் பார்வையும் ஒரே தடத்தில் பயணிக்கிற இந்நூலில், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் அறைகூவல்கள், ஆதாய நோக்கு புத்திஜீவிகளின் எழுத்துக்கள், கலைச்சேவையை கிடப்பில் போட்டு சமூகசேவை செய்ய ஓடோடி வந்த திரைத்துறையினரின் உணர்ச்சிப் பிரவாகங்கள் என அத்தனை அபத்தங்களும் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.

புலிகளின் வீரத்தையும், தியாகத்தையும் மட்டுமே அறிந்திருந்தவர்க்கு புலிகளின் மீதான மாற்று வரலாற்றை முன்வைக்கும் இந்நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. மனிதநேயத்தைப் பணயம் வைத்து தோட்டாக்களை வாங்குகிற புலிகளின் மனிதஉரிமை மீறல்களை தொடர்ந்து கண்டித்து வருகிற அ. மார்க்ஸ் இந்நூலிலும் புலிகளின் தவறுகளை வட்டமிட்டுக் காட்டுகிறார்.

“புலிகளால் கட்டாயமாக இழுத்துச் செல்லப்படும் பெண்குழந்தைப் போராளிகள் போரின் வெம்மையையும், குண்டுகளின் இரைசலையும் தாள இயலாமல் யாரையும் கொல்வதைக் காட்டிலும் தாங்கள் மரிப்பது மேல் என ‘சயனைட்’ குப்பிகளைக் கடித்துச் சாகிற கொடுமையை எப்படித் தாங்குவது? “மற்றவர்களைக் கொல்லும் வலியிலிருந்து இந்தக் குழந்தைகளை சர்வேசுவரனின் பெருங்கருணை கரை சேர்த்திருக்கிறது’’ எனக்கூறி அவர்களது சவப்பெட்டிகளின் மேல் சிலுவைக் குறியிடும் பாதிரிமார்களைப் பற்றியும் அந்த அறிக்கை பேசுகிறது.’’

“மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் _ ஜாப்னா’’ (ஹிஜிபிஸியி) என்கிற அமைப்பின் மேற்கூறிய அறிக்கையை நம் கவனத்துக்கு கொண்டு வருகிற அ. மார்க்ஸ், சிங்கள இராணுவத்தின் வெறித்தாக்குதலுக்கும், விடுதலைப் புலிகளின் ஆயுதகலாசாரத்திற்கும் இடையே மரண ஊசலில் ஆடிக்கொண்டிருந்த ஈழத்தமிழர்களின் பரிதாப நிலையை உணர்த்தி நம் இதயங்களை கனக்கச் செய்கிறார்.

“இன்றைய தேவை ஒரு நீண்ட உரையாடல். ஆயுதங்களைச் சற்றே ஓய்வெடுக்க வைத்துவிட்டுத் தமிழ்பேசும் சகலபிரிவினரை உள்ளடக்கிய ஒரு நீண்ட உரையாடல் இன்று தேவை. வெற்றிக் களிப்புடன் கூடிய இலங்கை அரசு அல்லது விரிவாக்க நோக்கம் கொண்ட இந்திய அரசு அல்லது எள்ளளவும் பிறருக்கு இடம் கொடுத்து பழக்கப்பட்டிராத புலிகளின் மேலாண்மையின் கீழ் நடக்கும் உரையாடலாக அமையாமல் இதைச் சாத்தியமாக்கும் வழிமுறைகள் என்ன என நாம் யோசிக்க வேண்டும்.’’

ராஜபக்சே அறிவித்திருக்கிற ‘அரசியல் தீர்வு’ அப்பாவி தமிழர்களுக்கான நிரந்தர தீர்வாக அமையவேண்டுமெனில், பீரங்கி முழக்கங்களையும், மரண ஓலங்களையும் கேட்டு பேச்சிழந்து நிற்கிற அந்த மக்களிடம் சற்றேனும் உரையாட வேண்டியது எத்தனை அவசியம் என்பதை விளக்க வேண்டியதில்லை. ‘எள்ளளவும் பிறருக்கு இடம் கொடுத்திராத புலிகள்’ என்று அ. மார்க்ஸ் கூறுவதன் அர்த்ததத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் சி. புஷ்பராஜா எழுதிய ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்ற நூலை சொல்லலாம்.

விடுதலைப் புலிகளைக் குறித்து சாதுரியமாகக் கட்டமைப்பட்டுள்ள பிம்பங்களை கூர்ந்த அரசியல் பார்வையால் அ. மார்க்ஸ் உடைத்தெறிய இன்னொருபுறம் தன்னுடைய அனுபவப் பார்வையினூடாக சிதறடிக்கிறார் ஷோபாசக்தி. மக்களின் விடுதலைக்காக துவங்கப்பட்ட போராட்டம் தன்னுடைய வளர்ச்சிக்காக போராடுவதாகவே இற்றுப்போனதை விரிவாக விளக்குகின்றார் ஷோபாசக்தி.

“தமிழ் சிங்கள, முஸ்லிம் பொதுமக்கள் மீதான அவர்களின் கூட்டுப் படுகொலைகள், இலங்கையிலும் சர்வதேசப் பரப்புகளிலும் அவர்கள் செய்த அரசியற்படுகொலைகள், புகலிட நாடுகளில் வாழும் அகதித் தமிழர்கள் மீது மேற்கு அரசுகளின் சட்டங்களையும் மீறிப் புலிகள் கொடுத்த தொல்லைகள் போன்ற எண்ணற்ற காரணிகளால் ஒரு விடுதலை இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாகப் பரிணமிக்க வைத்தவர்கள் அவர்கள்.’’ என்று புலிகளிடம் உறைந்து போயிருந்த பாசிசத்தை வெட்டவெளிச்சமாக்குகிறார்.

ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்விற்காக போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய இந்நிலையில், ஷோபாசக்தி வலியுறுத்துகிற மூன்று முக்கியப் புள்ளிகளை கவனத்திலெடுக்க வேண்டியது அவசியமானதொன்று.

1. கருத்துச் சுதந்திர மறுப்புக்கு எதிரான போராட்டம். 2. சிங்கள இடதுசாரிகளுடன் உரையாடலை வலுப்படுத்துதல், 3. சிறுபான்மையினர்களின் தலித்துகளின் அரசியல் உரிமைகளை உறுதி செய்யும் வண்ணம் இலங்கையின் அரசியல் சாசனத்தை மாற்றியமைத்தல்.

இந்தத் தீர்வை இலங்கை அரசு முன்வைத்தால் புலிகள் ஏற்கிறார்களோ இல்லையோ மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிறார் ஷோபாசக்தி. கால் நூற்றாண்டாக மரணக்காற்றை சுவாசித்துக் கொண்டிருந்த அந்த மக்களுக்காக, அவர்கள் விரும்புகின்ற தீர்வையே வலியுறுத்துவதைத் தவிர வேறு ஏதைச் செய்து நம்முடைய மனித நேயத்தை வெளிக்காட்டுவது?

ஈழப்போராட்டத்தில் துவக்கம் முதல் சமீபத்திய நிலை வரையிலான உண்மைகளை ஷோபாசக்தியின் வாயிலாக அறியவைத்துள்ள அ. மார்க்ஸின் நேர்காணலும், ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லாடலின் மூலம் சனநாயகத் தீர்வை சாத்தியமற்றதாக்கும் ‘அரச தந்திரங்களை’ உரித்துக்காட்டுவதோடு, பயங்கரவாத இயக்கங்களாக கருதப்பட்ட ‘நேபாள மாவோயிஸ்ட் இயக்கம்’ ‘பாலஸ்தின ஹமாஸ் இயக்கம்’ ஆகியவற்றிடமிருந்து அறிந்துகொள்ள வேண்டிய படிப்பினைகளை எடுத்துக்கூறுகிற அ. மார்க்ஸ் பிரான்ஸில் ஆற்றிய உரையும் நூலின் குறிப்பிடத்தக்க பிற அம்சங்கள்.

புலிகள் விமர்சனமின்றி உயர்த்திப் பிடிக்கப்படும் நிலையில், புலிகளின் தவறுகளை கண்டித்து மக்களுக்காக குரலை உயர்த்தியிருக்கிற ஷோபாசக்தி _ அ. மார்க்ஸின் நடுநிலைமை பாராட்டத்தக்கது.

ஈழப்போராட்டத்தில் கோஷங்களை முழங்குவதற்கும், பதாகைகளை ஏந்துவதற்கும் முன் ஒவ்வொரு உண்மைப்போராளியும் வாசித்துப் பார்க்க வேண்டிய இந்நூலை வெளியிட்டமைக்காக பயணி வெளியீட்டகத்தையும் பாராட்டியாக வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com