Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூலை 2009
நூல் அறிமுகம்


எம்.ஜி.ஆர். கொலைவழக்கு (சிறுகதைகள்)
ஷோபா சக்தி, வெளியீடு: கருப்புப் பிரதிகள். பக். 152, ரூ.110

பத்து சிறுகதைகளை கொண்ட இந்நூலில் கால்நூற்றாண்டுக்குமேல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஈழ இனப்படுகொலைகள், அதனால் உண்டான உள்மனக் காயங்களை, கதைகள் மூலம் ஆசிரியர் வாசகனுக்கு புரிய முயற்சி செய்கிறார். ஒவ்வொரு கதைக்குள்ளும் ஆழமான கருத்தை சொல்ல விழைகிறார். ‘விலங்குப் பண்ணை’ என்ற தலைப்பில் பசியின் கொடுமையை பள்ளி மாணவன் மூலம் விளக்குகிறார். ரம்ழான், தமிழ், வெள்ளிக்கிழமை போன்ற தலைப்புகளில் உள்ள கதைகள் முக்கியமானவை. இந்நூல் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் வாசகனின் உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

கோமாளிகள் சர்க்கஸில் மட்டுமல்ல, இரா. கதைப்பித்தன்
வெளியீடு: அறிவுபதிப்பகம், சென்னை 14
பக். 113, ரூ.55.

இந்நூலில் 13 சிறுகதைகள் உள்ளன. பத்திரிகைகளில் பிரசுரமான கதைகளின் தொகுப்பு இது. விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் அமைந்த கதைகள் சில கருத்துகளையும் சொல்லுகின்றன. ‘காரியபட்டிக்கு ஒரு டிக்கெட்’ கதையில் கிராமவாசி எப்படி நடத்துனரால் அலைக்கழிக்கப்படுவதையும் கிராமவாசி கோபத்தில் நடத்துனரை அடிப்பதையும் பார்க்கிறோம். “மசால் தோசை’’ கதையில் பிச்சைக்காரி தோசைக்கு ஏங்குவதையும், விஷத்தால் அவள் இறக்கும் அவலத்தையும் கூறுகிறார். எல்லாக் கதைகளும் வாசகனின் உள்ளத்தை ஈர்க்கும்.

பேச நிறைய இருக்கிறது, நிறைமதி
வெளியீடு: ஆழ்வார் பதிப்பகம், சேலம், பக். 62, ரூ.40

பல இதழ்களில் வெளியான கவிதைகளின் தொகுப்புதான் இந்நூல். கவிதைகள் உணர்ச்சியின் வெளிப்பாடு. நாம் கண்ட பல விஷயங்களை, எண்ணங்களை, எளிய நடையில் மற்றவர்களுக்கு புரியும் வகையில் எழுத்தால் சில வரிகளில் தெரிவிப்பது கவிதை. இந்நூலாசிரியரின் கவிதை இதோ “சாம்பல் பறவை போன்றது தமிழ், செய்திவாசிப்பாளர்களின் தொடர் தாக்குதலிலும் மீண்டும் மீண்டும் உயிர்த்த படி’’ என்கிறார். இந்நூலில் உள்ள கவிதைகள் படிக்கும் ஆர்வத்தை தூண்டும்.

கோவை மாவட்ட பள்ளிக்கல்வித் துறை ஆண்டு மலர்
(2007- 2008) வெளியீடு: பள்ளிக்கல்வித் துறை
கோவை மாவட்டம், பக்: 196

ஆண்டு மலரின் 79 தலைப்புகளில் கட்டுரைகள், கவிதைகள், கருத்துகள் இடம் பெற்றுள்ளன. கோவை மாவட்டத்திலிருந்து வந்து புகழ்பெற்ற கோவைஞானி, சிற்பி, முப்பால்மணி, புவியரசு, நடிகர் சிவக்குமார் போன்ற பலருடைய கருத்துகள் இடம்பெற்றிருக்கின்றன. பள்ளி மாணவ, மாணவகளின் கவிதை, கட்டுரைகளும் மலரில் இடம் பெற்றிருப்பது சிறப்பு. தமிழாசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதன்மை கல்வி அலுவலர் (பொன்னீலன்) போன்றவர்களின் எண்ணங்களும் எழுத்துக்களாக இம்மலரில் இடம்பெற்றுள்ளன. ஆண்டு மலருக்கு வேண்டிய எல்லா விஷயங்களும் இந்த மலரில் இடம்பெற்றுள்ளன.

திருக்குறள் புதிர்கள்,
தமிழ்நாடன்,
வெளியீடு : லவ் ஒ. ஏகே. நாகராஜன் அறக்கட்டளை,
சேலம் 6, பக். 120, ரூ.60

இந்நூலில் திருக்குறள் பற்றிய அரிய செய்திகள் 11 தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளது. வீரமாமுனிவர் திருக்குறளில் முதல் இருபால்களை மட்டும் மொழி பெயர்த்துள்ளார். காமத்துப்பாலை மொழிபெயர்க்காததற்கு காரணத்தை ஆராய்கிறது. சேலம் இராசிபுரத்தில் காணப்பட்ட திருக்குறள் கல்வெட்டுகளை பற்றியும் இந்நூல் பதிவு செய்கிறது. ஜெர்மன், லத்தீன், பிரஞ்சு, ஆங்கிலம் ஆகிய அயல்மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை பற்றியும் பதிவு செய்கிறது. திருக்குறள் பற்றிய பல தெளிவுரைகள், மொழிபெயர்ப்புகள் வந்திருந்தாலும் இந்நூலாசிரியர் தமிழ்நாடன் புதிய கோணத்தில் ஆராய்ந்து புதிர்களாக பதிவு செய்துள்ளார்.

கருப்பி கொலைக்குப் பின்தான் நீதியா?
வெளியீடு : மக்கள் கண்காணிப்பகம், மதுரை 2, ரூ10.

கருப்பி என்ற பெண் ஒடுக்கப்பட்ட அருந்ததியர் சாதி ஏழைப்பெண். அவள் வேலை செய்த வீட்டில் திருட்டுப் பட்டம் கட்டப்பட்டு காவல் துறையினரால், அலைக்கழிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு காவல் நிலையத்திலேயே கொலை செய்யப்பட்டாள். அவள் குடும்பமே அவமானத்துக்குள்ளானது. பல வருடங்களுக்குப் பிறகு நீதிமன்றத்தின் மூலம் இழப்பீடு கிடைத்தது. உண்மையான குற்றவாளிகளான காவலர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பது கேள்விக்குறியே? கருப்பி திருடியதாக சொல்லப்பட்ட நகைகள் எங்கே? திருடியது யார்? என்று கேள்விக்குறியுடன் இந்நூல் முடிகிறது.

அற்புத விடுகதைகள் 1001,
ச. குமார், வெளியீடு : அறிவுப் பதிப்பகம், சென்னை 14 பக். 185, ரூ. 60.

சிந்தனையாற்றலை வளர்க்கும் வழிமுறைகள் பல உண்டு. அவற்றுள் ஒன்று விடுகதைகள் அறிவாற்றலை மேம்படுத்துவதோடு நேரத்தை பயனுள்ள வழியில் செலவழிக்க உதவும். இந்நூலில் உள்ள விடுகதைகள் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் மீண்டும் மீண்டும் படிக்கும் விவாதிக்கும் ஆர்வத்தை தூண்டும்..

மனித குலத்தின் மலர்கள் ஒருபோதும் அழியாது
(பி.சி. ஜோஷியின் அரிய கட்டுரைகள்),
வெளியீடு : ழிசிஙிபி, சென்னை 98 பக். 475, ரூ. 200

புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவரான தோழர் பி.சி. ஜோஷியின் மிகச் சிறந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். ‘பகத்சிங் _ சில நினைவுகள்’ ‘காந்தி _ ஜோஷி கடிதங்கள்’ போன்ற தலைப்புகளில் உள்ள கட்டுரைகளில் பகத்சிங், காந்தி ஆகியோர் பற்றி பல அரிய விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்நூலில் உள்ள 12 கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அவருடைய எண்ணங்களை கருத்துகளை படிக்கும் வாசர்களுக்கு உணர்த்தும் வகையில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நூலைப் படிக்கும்போது கம்யூனிஸ்ட் இயக்கம், இந்திய தேச விடுதலை இயக்கம், அரசியல் பொருளாதாரம் பற்றி அரிய புதிய விஷயங்களை தெரிந்துக் கொள்ளலாம்.

சிதைந்த கூடு,
திலகவதி, வெளியீடு: அம்ருதா, சென்னை 16, பக். 104, ரூ.60.

ரவீந்திரநாத் தாகூரின் படைப்பான இப்புதினம் குடும்பம் கணவன், மனைவி உறவு பற்றி விளக்குகிறது. அந்நியக் கலாசாரம், இலக்கியம் ஆகியவற்றின் தாக்கத்தினால் ஒரு குடும்பம் அழிவதை இந்நாவலில் படைத்துக் காட்டியுள்ளார். இந்த நாவல் சத்யஜித்ரேவால் ‘சாருலதா’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு பல பாராட்டுகளைப் பெற்று வெற்றிப் பெற்றது. இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற தாகூரின் படைப்பு தமிழ் வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டும்.

ஆண் குழந்தை யார்? பெண் குழந்தை யார்?,
கமலாபாசின், கே.கே.கிருஷ்ணகுமார், தமிழில் : யூமாவாசுகி,
வெளியீடு : பாரதி புத்தகாலயம், பக். 24, ரூ. 15

கருவிலே ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்து பார்த்து பெண்ணாக இருந்தால் கருவிலே கொல்லும் இச்சமுதாயத்தில் ஆண் குறி, பெண் குறி, என்ற வேறுபாடே தவிர வேறு வித்தியாசம் இல்லை. ஆண் என்றால் இப்படி இருக்க வேண்டும், பெண் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று வரையறுப்பது இந்தச் சமூகம்தான். இந்த வேறுபாடுகளை கலைந்து சாதி, மத, நிற வர்க்க பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று இந்நூல் கோரிக்கை விடுக்கிறது.

கம்போடியா (இந்திய தொன்மங்களை நோக்கி),
கானா பிரபா, வெளியீடு: வடலி, சென்னை 78, பக். 126, ரூ. 150
இந்நூல் ஆசிரியர் கானா பிரபா கம்போடியா நாட்டிற்கு சென்ற அனுபவங்களை பயணக் கட்டுரைகளாக தந்துள்ளார். கம்போடியா நாட்டின் மக்கள், கலாசாரம் போன்ற பல விஷயங் களை சுவைபட (கரப்பான்பூச்சி துவையல் உள்பட) வாசகர்களை ஈர்க்கும் வகையில் விவரித் துள்ளார். கம்போடியாவுடன் தென்னிந்தியத் தொடர்புகள், மதங்கள், ஆட்சி போன்றவற்றை ஆராய்ந்து எழுதியிருக்கிறார். கம்போடியாவில் எடுக்கப்பட்ட பல வண்ணப் படங்களுடன் இந்நூல் இருப்பது சிறப்பாகும். படிப்பவர்களுக்கு நாம் கம்போடியாவுக்கு சென்று வரலாமா? என்று எண்ணத் தோன்றும் வகையில் எழுதியுள்ளார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com