Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
இருண்ட காலத்தில் பிறந்த ‘சூரியன் தனித்தலையும் பகல்’

Thamizhnathi தற்காலிக வாழிடமாக சென்னையை நான் தேர்ந்தது எவ்வளவு தற்செயலானதோ அவ்வளவு தற்செயலானதே எனது கவிதைத் தொகுப்பு வெளிவந்ததும் என்று சொல்லலாம். இங்கு வரும்போது தொகுப்பொன்றைக் கொண்டு வருவது குறித்த எண்ணமே எனக்கு இருக்கவில்லை. கையில் சில கவிதைகள் இருந்தன. ஆனால், அவை கவிதைகள்தானா என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்தது. எனக்கான வடிவத்தைக் கண்டடையும் தேடலில் அதையும் இதையும் அப்படியும் இப்படியுமாக எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது கையிலிருந்த அநேகக் கவிதைகள் தனிமையின் குரலாகவே இருந்தன. புலம்பெயர் வாழ்வின் (கனடா) சிறப்புப்பண்பாகிய தனிமை என்னை எழுத்தை நோக்கிச் செலுத்தியது. அங்கே வாழ்ந்த காலத்தில் வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் தொடர்ச்சியாக எனது ஆக்கங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. நான் ஒரு எழுத்தாளராக ஏனையோரால் அடையாளப்பட்டிருந்த போதிலும், எனது எழுத்தின் போதாமை எனக்குத் தெரிந்தே இருந்தது. நிறைய வாசிக்கவும் எழுதவும் விரும்பினேன். ஆனால் வேலை அங்கிங்கு அசையவிடாமல் என்னை நாற்காலியோடு கட்டிவைத்திருந்தது. படைப்பு மனத்திற்கும் அன்றாட வாழ்வின் இருப்புச் சிக்கலுக்கும் இடையில் சிக்கித் திணறிக் கொண்டிருந்தேன்.

இந்நிலையில்தான் எனது தாய்மண்ணுக்குச் சென்று வாழவேண்டுமென்ற ஆசை ஏற்பட்டது. அப்போது (2003) இலங்கையில் யுத்த நிறுத்தம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. பெயரளவிலேனும் சமாதானம் போல ஒன்று நிலவியது. 2003ஆம் ஆண்டு நவம்பரில் எண்ணற்ற கனவுகளோடு இலங்கைக்குத் திரும்பிச் சென்றேன். ஆனால், மீண்டும் தொடங்கிய போரினால் சென்னை எனது இடைத்தங்கல் முகாமாயிற்று. ஒரே மொழி, இனம், காலநிலை இவற்றோடு வாசிக்க நிறையப் புத்தகங்கள் கிடைக்கும் என்ற எண்ணமே என்னை உள்நின்று இயக்கியிருக்க வேண்டும்.

ஓராண்டு காலம் வாசிப்பில் கழிந்தபின், இணையத்தில் வலைப்பூவொன்றை ஆரம்பித்து அதில் எழுதவாரம்பித்தேன். இணையவெளி எல்லையற்றதாக விரிந்துகிடந்தது. நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். ‘நீங்கள் ஏன் கவிதைத் தொகுப்பொன்றைப் போடக்கூடாது?’ என்ற நண்பர்களின் கேள்வியைக் குறித்து சிந்திக்க வாரம்பித்தேன். எனது பெயரைத் தாங்கிய ஒரு புத்தகம் என்பது இனிய கனவாகத்தான் இருந்தது. இயல்பிலேயே நிறைய மனக்கூச்சங்களை உடைய எனக்கு யாரை முதலில் அணுகுவதென்று தெரியவில்லை. நண்பர்கள் காலச்சுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்களின் பெயர்களைப் பரிந்துரைத்தார்கள்.

உயிர்மை அலுவலகத்திற்குப் போய், கவிஞர் மனுஷ்யபுத்திரனிடம் சில கவிதைகளைக் கையளித்துவிட்டு ஊருக்குக் கிளம்பிப் போய்விட்டேன். சில மாதங்களில் திரும்பி வந்து அதைப்பற்றிக் கேட்டேன். அவர் நிறைய வேலைகளோடிருந்தார். நேரில் சென்று பேசவும் மனம் வரவில்லை. பிறகு சென்னையிலுள்ள காலச்சுவடு அலுவலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கும் பாவனையில் போனேன். அன்றைக்கென்று அதன் ஆசிரியர் அரவிந்தன் அலுவலகத்தில் இல்லை. ‘சரி... நண்பர்கள் கூறியதற்காக முயற்சி செய்துப் பார்த்தாயிற்று...’ எனது பணி முடிந்ததென்று வழமையான எனது வேலைகளுக்குத் திரும்பிவிட்டேன்.

இலங்கையை மையமாகக் கொண்டியங்கும் ‘வீரகேசரி’ பத்திரிகைக்காரர்கள் கவிஞர் குட்டி ரேவதியை நேர்காணல் செய்து தரும்படி கேட்டிருந்தார்கள். அதற்கிணங்க அவரைச் சந்தித்தபோது, ‘பனிக்குடம்’ என்ற பதிப்பகம் வாயிலாக பெண்ணிய சஞ்சிகையன்றை வெளியிடுவதாகவும் புத்தகங்கள் பிரசுரிப்பதாகவும் கூறினார். நான் எனது கவிதைகளைப் பற்றிச் சொன்னேன். ‘அதற்கென்ன... வெளியிடலாமே...’ என்றார். உடனே ஆர்வத்தோடு கவிதைகளைக் காட்டியபோது தனக்குப் பிடித்திருப்பதாகச் சொன்னார். பதிப்பாசிரியராக இருந்த திரு. வேணுகோபாலுடன் பேசினார். எனது இயல்பான சோம்பேறித்தனத்தினாலும், முன்செல்லும் பயத்தினாலும் அதைத் தள்ளிப் போடவே நினைத்தேன். ஆனால், அந்தத் தொகுப்பை வெளிக்கொண்டு வருவதற்கு கவிஞர் குட்டி ரேவதி மிகுந்த உற்சாகமும் உந்துதலும் தந்தார். புத்தகத்தில் இடம்பெற வேண்டிய எனது புகைப்படத்தையும் (அவர் சிறந்ததொரு புகைப்பட கலைஞர்) அவரே எடுத்தார். ஓவியர் கிருஷ்ணப்பிரியாவைத் தொடர்புகொண்டு அட்டைப்படத்தை வரைந்து வாங்கினார். எனக்குப் பிடித்த நீலநிறத்தில் அழகாக அமைந்திருந்தது அட்டைப்படம்.

பனிக்குடத்தின் இணையாசிரியர்களான கவிஞர் நந்தமிழ்நங்கை, மிதிலா, குட்டி ரேவதி, நான் ஆகிய நால்வரும் மீண்டும் மீண்டும் பல தடவைகள் சந்தித்து கவிதைகளை முன்பின்னாக ஒழுங்கமைத்தோம். மாற்ற வேண்டிய இடங்களில் ஒரு சில சொற்களை மாற்றினோம். என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தபோது முதலில் ஒன்றும் தோன்றவில்லை. ‘இருப்பற்று அலையும் துயர்’ என்ற கவிதையில் வரும் ‘சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்’ என்ற வரி தலைப்பாகப் பொருந்தி வருவதாக குட்டி ரேவதி சொன்னார். போர் நடக்கும் ஈழப்புலத்தில், இராணுவப் பிரசன்னத்திற்கு அஞ்சி, மக்கள் வீட்டுக்குள் முடங்கிய சூனியப் பகலில் சூரியன் மட்டும் தனித்து அலையும் காட்சி கண்முன் விரிந்தது. ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற தலைப்போடு தொகுப்பு என் கையில் கிடைத்த நாளை மறக்க முடியாது. அதையரு குழந்தையைப்போல நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். அதைத் தொடுவதானது குளிர்காலத்தில் கம்பளியின் கதகதப்பை ஒத்திருந்தது. கவிஞர் குட்டி ரேவதி வழங்கிய உற்சாகமேயன்றி அத்தொகுப்பு வெளிவர வேறெந்தச் சாத்தியங்களும் இருக்கவில்லை.

உதிரியாக கவிதைகள் பிரசுரமாகியபோது கிடைக்காத அறிமுகமும் அடையாளமும் அங்கீகாரமும் தொகுப்பாக வந்தபோது கிடைத்திருப்பதாக உணர்கிறேன். ‘சூரியன் தனித்தலையும் பகல் படித்தேன்’ என்று யாராவது சொல்லக் கேட்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த நெகிழ்ச்சி தரும் உந்துதலோடு தொடர்ந்து எழுதுகிறேன். உலகமெல்லாம் சிதறி வாழும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் போல, தாய்மண்ணுக்குத் திரும்பிச் செல்லும் நாளுக்கான அயலகத்தில் காத்திருக்கிறேன். எழுத்து என்னை உயிர்ப்போடிருக்கச் செய்கிறது. எழுத்து என்னை இயக்குகிறது. இப்போதைக்கு எழுத்தே என் தாய்மடி!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com