Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
ஓலைச்சுவடியும் குறுந்தகடும்

உயிர்பெறும் கவியரங்கக் கவிதைகள்
ஈரோடு தமிழன்பன்,
விடிவெள்ளி வெளியீடு,
சென்னை 15
பக் : 88
விலை : ரூ 65

தமிழ்ச் சூழலில் கவிதை நூல்கள் விற்பனையாவதில்லை’ என்கிற பொதுவான குரல்களையும் தாண்டி, அரசு நூலக அனுமதியை (!) எதிர்பார்க்காமலேயே நல்ல கவிதை நூல்கள் தமிழில் வந்த வண்ணமிருக்கின்றன.

இப்படியான, ஆரோக்கியமான கவிதை போக்கினூடே, ‘முன் போல் கவியரங்கங்கள் ஏன் அதிகமாக நடைபெறுவதில்லை’ என்கிற கேள்வியன்றும் இயல்பாகவே எழுகின்றது.

புத்தகங்களில் எழுதுகிற கவிதைகளை மௌன வாசிப்பிற்கான கவிதைகள் என்றும், கவியரங்க மேடைகளில் வாசிக்கின்ற கவிதைகளை உரத்த வாசிப்பிற்கான கவிதைகள் என்றும் வகைப்படுத்தினாலும், நல்ல கவிதைகள் எந்த இடத்திலும் வாசிக்கிற கேட்கிற வாசகனை எளிதில் தன்வயப்படுத்தி விடும்.

கவியரங்கங்கள் ஏன் செல்வாக்கை இழந்ததற்கு பார்வையாளர்களை விட, கவிஞர்களே முதற்காரணம். நேர வரையறையின்றி பல கவிஞர்கள், பல மணி நேரம் கவிதை வாசிக்க எதிர் இருக்கைகள் மௌனமாய் வெளிநடப்பு செய்தன. மேலும், ‘கவியரங்கக் கவிதைகள்’ தலைப்புக்காய் ‘செய்கிற’ கவிதைகளாக வெளிறிப் போனதும் ஒரு காரணம்.

இவையெல்லாம் தாண்டி இன்னும் கவியரங்க மேடையை மிகச் சரியாய் ஆளுமை செய்கிற கவிஞர்களும் இருக்கிறார்கள்.

கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்க் கவிதையில் தொடர்ந்து தன் படைப்புகளால் உயிர்ப்போடு இயங்கி வரும் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் சமீபத்திய புது வரவு ‘ஓலைச்சுவடியும் குறுந்தகடும்’

எழுதுவதை நிறுத்திவிட்டு, அடுத்தவர் எழுத்து பற்றி விமர்சனங்களை மட்டுமே சொல்லத் தொடங்கி விடும் மூத்த படைப்பாளர்களுக்கிடையே கவிஞர் ஈரோடு தமிழன்பன், தொடர்ந்து எழுதிக் கொண்டும், புதியவர்களின் நூல்களைப் படித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டும், புதுப்புது கவிதை வடிவங்களை அறிமுகம் செய்து கொண்டும் இருப்பவர்.

எப்போதும் கவிதை மனசோடு இருக்கிற கவிஞரால் கவியரங்க மேடைகள் இன்னும் பொலிவு பெறும் என்கிற நம்பிக்கையை நம் நெஞ்சில் விதைக்கிற விதையாக இக்குறுநூல் வெளிவந்திருக்கிறது.

கடந்த ஆண்டில் அமெரிக்காவில் உள்ள பிட்சுபர்க் நகரில் ‘தமிழ்நாடு அறக்கட்டளை’ சார்பில் அமெரிக்கவாழ் தமிழர்கள் அமைப்பு நடத்திய கவியரங்கில் கவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையேற்று பாடிய கவியரங்கப் பதிவே இந்நூல்.

நூலுக்கான முன்னுரை போல், கவியரங்க நிகழ்வு பற்றி கவிஞர் எழுதியுள்ள பத்துப் பக்கப் பகிர்வும் ரசிக்கும்படி உள்ளது.

கவியரங்கில் கவிதை வாசித்து முடித்ததும், அரங்கத் தலைவர் சொல்லும் சிறுசிறு வரிகளும் எவ்வளவு தெறிப்பானவை, பார்வையாளரை அவை எவ்விதம் சலனப்படுத்தும் என்பதற்கு உதாரணமாய் பல வரிகள் இந்தப் பகிர்வில் கிடைக்கின்றன.

ஒரே தலைப்பில் கவிதை பாடும் அரங்கமாக அல்லாமல், ஐந்து தலைப்புகளில் குறுங்கவிதைகளாக கவிதைபாடும் சுழலும் கவியரங்கமாக இந்தக்= கவியரங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காதலியின் தலைவகிடு, சந்திரனுக்கு ஒரு சவால் என்பதான தலைப்புகளோடு, ‘ஓர் ஓலைச்சுவடி குறுந்தகடாகிறது’ என்கிற ரசனைமிக்க தலைப்புகளால் இந்நூல் நம்மை சட்டென வாசிக்க உள்ளிழுத்துச் செல்கிறது.

‘இருட்டில் / ஒற்றையடிப்பாதை’

‘கூந்தல் எழுதிய / குறுந்தொகை விமர்சனம்’

‘கவிதையாகத் / துடிக்கும் _ ஒரு கறுப்புச் சிந்தனை’

என காதலியின் தலைவகிடு பற்றிய கவிஞரின் புதிய கற்பனையும்,

‘தேய்ந்து / பார்க்கிறாய் / ஒரு குழந்தையின்/

நெற்றியாக முடியவில்லை

வளர்ந்து பார்க்கிறாய் / ஒரு குழந்தையின்

முகமாக முடியவில்லை’... _ என சந்திரனுக்கு

சவால் விடும் வரிகள் என நம் ரசனையைத் தூண்டும் நல்ல கவிதை வரிகளால் நூல் புது அர்த்தம் பெறுகின்றது.

நூலின் பின்னிணைப்பாக உள்ள இருகவிதைகளோடு, சிறு கட்டுரைகள் இரண்டும் நம்மை கவிஞரின் வாசிப்போடு சேர்த்தணைத்துப் போகின்றன.

‘கவியரங்கங்கள் உயிர்பெறும்’ என்பற்கான காலப்பதிவாய் இக்கவிதை நூல். வாசியுங்கள், உண்மையென உணர்வீர்கள்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com