Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
ஒரு பழுத்த பழத்துடன் குழந்தைகள்
எஸ்.வி.வேணுகோபாலன்

பட்டுக்கோட்டை _ குறிச்சியில் இயங்கும் இந்தியன் வங்கி ஊழியர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், சென்ற ஆண்டு குழந்தைகள் தினத்தையட்டி கலைநிகழ்ச்சி நடத்த பாண்டிக்கு வரவிருக்கின்றனர் என்று தூண்டில் போட்டார் பாண்டிச்சேரி நண்பர். அதோடு, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மூத்த எழுத்தாளர் கலந்து கொள்ள இருக்கிறார் என்று மேலும் ஆசை காட்டினார். முடிந்தால் போவது என்று இலேசாக நெஞ்சில் ஒரு முடிச்சு போட்டு வைத்துக் கொண்டேன். மீண்டும் நினைவுபடுத்திய அந்த நண்பர், புதுவை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இலாசுபேட்டை கிளை செயலர் நா.சீ. ராம்கோபால்.

நவம்பர் 14 அதிகாலை பாண்டிக்குப் புறப்பட்ட சில்லென்ற நேரத்தில் வித்தியாசமான சமிக்ஞைகள் ஏதும் தென்படவில்லை. ‘குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ நூலின் ஆசிரியர் ஷ. அமனமஷ்வீலி புத்தகத்தின் வழியே என்னோடு பேசிக் கொண்டிருக்க நூலின் பக்கங்கள் வேகமாகவும், பேருந்து அதைவிட வேகமாகவும் கடந்த ஒரு பயணம் அது.

இலாசுபேட்டை விவேகானந்தர் பள்ளியில் காலடி வைத்த போதும் தெரிந்திருக்கவில்லை, பிரத்தியேகமாக ஒரு ஐம்பது நிமிட அற்புத அனுபவ அறிவு ஒன்று எனக்கு வாய்க்க நேர இருப்பது.

ஆட்டோவிலிருந்து இறங்கிய அவரை அப்போதே அரவணைக்கும் நோக்கில் அருகில் சென்று கைகளைப் பற்றிக் கொண்டேன். கரிசல் காட்டு இலக்கிய மனிதர் கி. ராஜநாராயணன் மெல்ல எனது தோள்களைப் பற்றி நடக்கத் தொடங்கினார், தனது வாழ்க்கைப் பயணத்தின் பழைய பதிவுகளை நோக்கி.

கட்டத்தின் மேல் தளத்திற்கு 86 வயதில் அவரை பேச்சு கொடுத்துக் கொண்டே அழைத்துச் சென்றதும், நிகழ்வு தொடங்க இன்னும் நேரம் எடுக்கும் என்ற நிலையில் பள்ளி மாணவர்கள் அமரும் ‘பெஞ்ச்’ ஒன்றில் அமர்ந்து கொண்டேன், நாற்காலியில் அமர்ந்து கொண்டேன், நாற்காலியில் எதிரே அவர் அமர்ந்த நிலையில்...

Ki.Rajanarayanan ‘எங்கள் சங்கம் நடத்தும் பள்ளி குறிச்சியில் இருக்கிறது. அங்கிருந்துதான் மாணவர்கள் வந்திருக்கின்றனர்....’ என்று அவரிடம் சொல்லியபோது, பள்ளியின் தாளாளர் தனபால் தன்னை அறிமுகப்படுத்தக் கொண்டார்.

“தமிழ்நாட்டில் நிறைய குறிச்சி உண்டு...’ என்று தொடங்கினார் கி.ரா.

“காருகுறிச்சி, கல்லிடைக்குறிச்சி, கள்ளக்குறிச்சின்னு... நிறைய! ஒரு நம்பிக்கை உண்டு அந்தக் காலத்தில். விடாத வறட்டு இருமல் இருமிக்கிட்டே இருக்கறவன் உடம்புல குறிச்சி, குறிச்சினு எழுதி வச்சா இருமல் நிற்கும்னு.

“குழந்தைகள் உலகம் தனி. ஹாரிபாட்டர்னு புத்தகம் போட்டு இத்தனை பேசுறாங்களே, நம்மகிட்டேயே அதைவிட நூதனமாக கற்பனைக் கதைகள் அபாரமா இருந்தது. பலது பதிவாகல்ல.’’

“கற்பனைக்கு எல்லை உண்டா. டால்ஸ்டாய் இந்தச் சுளகு இருக்கே சுளகு, (அதுதான் முறம்) அதைக் கட்டிக்கிட்டு விமானம் மாதிரி பறக்கணும்னு பாத்திருக்கார்.’’

“அவரோட குழந்தைகளுக்கான கதைகள் படிச்சிருக்கீங்களோ... படிக்கணும். ஒரு கதையில வாடல் நிலையில் கைகளைப் பரப்பி வழி மறிச்சிக் கிட்டு நிப்பான் ஒரு சிறுவன். வரிவசூல் பண்ண தலையாரி வருவார். அப்பா இருக்காரான்னு கேள்வி. இல்லங்கிறான் பையன். அம்மாவைக் கூப்பிடு. என்ன விஷயம்? வரி வசூலுக்கு. வரின்னா என்னன்னு சிறுவன் கேப்பான். உனக்கெதுக்கு சொல்லணும்? அப்படின்னா நான் உள்ளே தகவல் சொல்ல முடியாது. தலையாரி யோசிப்பாரு எப்படி புரிய வைக்கிறது. சரி, ஜார் மன்னர் இருக்காருல்ல, அவருக்கு நன்கொடை கொடுக்கறது, அதான் வரிம்பாரு. நல்லாருக்கே, அவருகிட்டதான் கொள்ளை கொள்ளையா பணம் இருக்கே நாம எதுக்குக் கொடுக்கணும் _ இது சிறுவன். இடையில ஒண்ணு சொல்லி இருக்கணும் மறந்துட்டேன், தலையாரி சொல்லியிருப்பாரு, உங்களுக்கு நல்லது செய்யறதுக்காக வரின்னு. இப்ப தலையாரி சொல்லுதாரு, வரி கட்டலன்னா உங்க மாடுகளைப் பத்திட்டுப் போயிருவம்னு. பையன் கேக்குதான், இதுதான் எங்களுக்கு நல்லது செய்யறதான்னு. எத்தனை அற்புதம் பாருங்க.

“படைப்பாளிகள் சமகால விவகாரங்களைக் குழந்தை படைப்புகள் மூலம் பேசத்தான் செய்யறாங்க. ஈரானிய படங்கள் பற்றியும் அப்படிச் சொல்லலாம். அப்படி சிலது இங்கே காட்டறத பார்க்கத்தான் நான் ஒப்புக்கிட்டது. (உங்க பேச்சை எந்தக் குழந்தை கேட்டுக்கிட்டிருக்கும்) கூட்டம், பேச்செல்லாம் நிறைய அனுபவத்தைச் சொல்லிருக்கு. அப்ப நான் (சி.பி.ஐ) பார்ட்டி மெம்பர். தேர்தல் பிரசாரக் கூட்டம். வில்லடி பிச்சுக்குட்டி கேள்விப்பட்டிருக்கீங்களா? வில்லுப்பாட்டு. அவரோட ஒரு ஊருக்குப் போறோம். கிராமத்தலைவர் தலைமை. ஆரம்பிக்கறப்ப சொல்லுதாரு, யாரும் சத்தம், பேச்சு, மூச்சு காட்டப்படாது... அப்படின்னு. அப்புறம் என்னத்த ரசிக்கும் கூட்டம்!

“நாங்க பூர்விகமாக ஆந்திராவிலிருந்து வந்ததால தெலுங்குதான் பேசுறது. கொச்சை தெலுங்கோன்னு நெனச்சது உண்டு. ஆனா அதுதான் மக்கள் தெலுங்கு. பின்ன, மொழின்னு ஏன் சொல்றோம். பேச்சு வழக்கில் உள்ளதுதான் மொழி.

“பாண்டிச்சேரிக்கு வந்தது 1980களின் இறுதியில். பல்கலைக் கழகத்தில் நாட்டுப்புறவியல் டாக்டரேட் வழங்கணும்னா துறைத்தலைவர் வேணுமா இல்லியா, வேறு எங்கியும் இதுக்கு துறை கிடையாது. சரின்னு வந்தாச்சு. முதல் நாள் அட்டென்டன்ஸ் ரிஜிஸ்தர்ல ஒரு அம்மா முதல்வரியில் என் பெயரை எழுதி, டாக்டர்னு முன்னாடி போட்டுது. ஏம்மா, நான் டாக்டர் இல்லன்னதும் பயந்துருச்சி. நம்பவும் முடியல. எப்படி டாக்டரேட் இல்லாதவங்க பல்கலையில் துறைத் தலைவரா... ன்னு. அப்புறம் Dr. ன்னு உள்ளதை Mr. ன்னு மாத்திருச்சி.

ஒருநாள் துணைவேந்தர் அழைத்து வகுப்பு எடுங்கன்னார். அப்படி ‘அக்ரிமென்ட்’ இல்லன்னு தப்பிக்கப் பார்த்தேன். வாழ்க்கைக்கல்வி அனுபவத்தைப் பேசுங்க போதும்னார். உலகக்கல்வி புரியாம பட்டதாரியாகிடுறாங்க. பெரிய படிப்பு படிச்சவனத் தூக்கி தண்ணியில போட்டா, செத்தான். அவ்வளவுதான், நீச்சல்தெரியாது. மாணவர்களை மரத்தடிக்கு அழைத்துப் போய் நடத்தலாமா என்றேன். தங்கமாச் செய்ங்கன்னாங்க. ஒரு ரெண்டு வருஷம் ஓடிச்சு. அதோட முடிஞ்சது.’’

... இப்படியாக கி.ரா. பேசிக் கொண்டிருக்க, கூட்டம் தொடங்கவே எங்கள் உரையாடல் நின்றது. மேடையில் நின்றவர் எதிரே நூற்றுக்கணக்கில் சளசளவென்று பேசிக் கொண்டிருந்த மாணவ, மாணவியரைப் பார்த்து, ‘சைலன்ஸ்’ என்றார். பேரமைதி நிலவியது. உடனே கி.ரா. குறும்புச் சிரிப்போடு என்பக்கம் திரும்பி ‘வில்லடி பிச்சுக்குட்டி கூட்டம் நினைவிருக்கா அதேதான் இது’ என்றார்!. அதுதான் கி.ரா.!



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com