Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
ஆய்வுகளுடன் ஓர் உரையாடல்

‘திருவாரூர் மாவட்ட இடப்பெயர்கள்’
அ. ஜான் பீட்டர்
வெளியீடு : முக்கடல், சென்னை91
விலை ரூ.150 பக். 304

Thiruvarur 1939இல் வெளிவந்த சி.எப். இராமச்சந்திரச் செட்டியாரின் ‘தமிழ்நாட்டின் இடப்பெயர்கள்’ என்னும் ஆய்வுக் கட்டுரை, இடப்பெயர் ஆய்வினைத் தொடங்கி வைத்தாலும் இரா. பி. சேதுப்பிள்ளையின் ‘தமிழகம் ஊரும் பேரும் (1946)’ என்னும் நூலே இடப்பெயர் ஆய்வுக்கு முறையாக தளம் அமைத்த நூல் எனலாம். (முன்னுரையில் எஸ். ஆரோக்கியநாதன்)

‘இடப்பெயரில் என்ன இருக்கிறது? என்று வினவுவோரிடம் இடப்பெயரில் என்ன இல்லை? என எதிர் வினா தொடுக்கும் அளவிற்கு நிலவியல், மானிடவியல், மொழியியல், உளவியல், வரலாறு, ஆன்மிகம், இலக்கியம் போன்ற எல்லாத்துறைச் செய்திகளையும் தன்னுள் தாங்கி அத்துறை ஆய்வுக்கு அவை இடம் கொடுத்து நிற்கின்றன’ என்று இந்நூலாசிரியர் கூறுகிறார்.

இந்த வகை ஆய்வு நூல்களை ஒட்டி வெளிவந்துள்ள சிலவற்றுள் இந்த நூல் குறிப்பிடத்தகுந்தது என்று சொல்ல வேண்டும்.

இன்றைய திருவாரூர் மாவட்டம், ஒருங்கிணைந்து இருந்த தஞ்சை மாவட்டத்தின் அல்லது சோழ மண்டலத்தின் நடுவாந்திரப் பகுதியே, பெரும்பான்மையாக மருதநிலம் _ வண்டல் நிலம். மிகச்சிறுபான்மையாக நெய்தல் நிலப்பரப்பை உள்ளடக்கியதே என்ற வரையறையை நாம் செய்து கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த வரையறைக்குள் ஆய்வுகள் வெளிவந்தால் ஆக்கபூர்வமாக இருக்கும்.

இந்த நூலின் ஆய்வாளர் மிகவும் கவனமாக நிறுவனங்கள் கிழித்துள்ள கோடுகளைத் தாண்ட விரும்பாமல் ஆய்வினை செய்திருக்கிறார் என்பதை வாசிக்கும் போது தெளிவாகிறது. நிறுவனங்கள் எத்தகைய கருத்தியலை உடையதாக இருக்கின்றன என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு ஆய்வுக்கான ஆதாரங்களை சுட்டிச் சென்றுள்ளார்.

இதுபோன்ற ஆய்வுகள் மனிதகுலவரலாற்றை திசைத் திருப்பி விடுவதைத் தடுக்க வேண்டுமானால் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுக் கூறுகளை ஆய்வினுள் மைய இழையாகக் கொண்டு செலுத்த வேண்டும். இத்தகைய மையத்தை இந்த ஆய்வாளர் தவறவிட்டு இருக்கிறார். நுகர்பண்பாட்டு அடையாளங்கள் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு இருக்கும் இன்றைய நாளிலும் வலங்கைமானில் பித்தளை உலோகப் பொருள்கள் உற்பத்தி தடைபடாமல் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த உலோக உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சமூகம் அந்த உலோகப் பொருட்களை சந்தைப்படுத்தும் சமூகமாக எளிதில் மாற்றிக் கொள்ள முடிகிறது. அச்சமூக உழைப்பாளிகளை சுரண்டி கொழுத்துக் கொண்டு இருந்தது. அக்கால சமூக அரசியல் ‘நிலஉடமை’ சமூகத்தின் கையில் இருந்தது. அதனால் இவர்களும் பெரும் வருவாயைக் கொண்டு நிலஉடமைச் சமூகமாக பரிணமித்துக் கொள்ள முடிந்தது. ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்ற முடிந்தது. அதாவது வலங்கையர்களாக தங்களை ஆக்கிக் கொண்டார்கள். அந்த வகையில் தான் வலங்கையர்மானாக அவ்வூர் திகழ்ந்திருக்கிறது.

அப்பகுதியில் ‘காணி இல்லாதவன் மாணி இல்லாதவன் போல’ என்ற வாய்மொழி வழங்கப்பட்டு வருகிறது என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

வலங்கை, இடங்கைப்பற்றி கே.கே. பிள்ளை, நா.வானமாமலை போன்றவர்கள் கல்வெட்டு ஆதாரங்களைக் கொண்டும் நாட்டுப்புற ஆய்வுகள் முலமும் சான்றுகளைத் திரட்டி விரிவாக எழுதியுள்ளார்.

வரலாறு இப்படி இருக்க, ஆய்வாளர் புராணக்கதையைச் சுட்டி அதுவாகவே ஊர்பெயராக ஆய்வு செய்திருக்கிறார். ஆய்வாளரின் பார்வையிலும் அச்செய்தி தட்டுப்பட்டு இருக்கிறது. அது ஆய்வுக்கு உரியது என்று மொழுங்கையாக விட்டுச் செல்கிறார். இப்படியான சமூகம் சார்ந்த ஆய்வுகளை நிறுவனம் சார்ந்த பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. காரணம் அப்படியானவர்கள் தீவிரமான மதநம்பிக்கை உடையவர்களாகவும், சமூகவரலாற்றையும், பொருளாதார வரலாற்றையும் புறம் தள்ளுபவர்களாகவும் இருப்பதுதான். நிறுவனம் சார்ந்த ஆய்வாளர்கள் பொதுவாய் மொழுங்கையாக சான்றாதாரங்களை காட்டுவதால் ஆய்வுகள் நம்பகத்தன்மையை இழந்து விடுகிறது.

ஓர் ஊரைப்பற்றி தகவலைத் தரும் தகவலாளர் தரும் செய்திகளை அப்படியே ஆவணமாக ஆக்குவதும் ஆய்வுக்கு உகந்ததாகப் படவில்லை. காரணம், அந்தத் தகவலாளி சார்புத்தன்மைக் கொண்டவராக இருக்கலாம். அல்லது கற்பனையாகக் கூட அமைத்துக் கொண்டு இருக்கலாம். இந்தத் தகவல் பற்றி இன்னும் சிலரிடமாவது அறிந்தால் உண்மை வெளிப்பட வாய்ப்பு உள்ளது. அதுபோல அமையும் தேடுதல்களையும் பதிவு செய்ய வேண்டும்.

‘புலிவலத்தில் கோயில் கொண்டுள்ள அப்பன் வெங்கடாஜலப்பெருமாள் ஆகிய ‘அரி’, வலம் வந்து அருள்பாலிக்கும் ஊர் ஆகையால் அரிவலம். பின்னாளில் அது மருவி அலிவலமாக அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாக பெருமாள் வலம்வரும் நாளில் பெருமாளை வைத்து வழிபடும் இடம் ‘அப்பன் தோப்பு’ என்று இன்னும் அழைக்கப்படுகிறது என்று தி. நடராசன் என்பவரின் நேர்காணலில் பதிவாகியிருக்கிறது. (பக்கம் 196)

புலிவலம் பெருமாளுக்கு தலப்புராணம் உண்டு. இந்த நூல் கிடைக்கப்பெறாவிட்டாலும் அக்கோவிலில் உள்ள பட்டாச்சாரியாரிடமாவது நேர்காணல் செய்திருக்கலாம். அப்பன்தோப்பு என்ற குறிப்பு மேலும் சில ஊர்களில் இடம் பெற்று இருப்பதை நாட்டுப்புறகதைகளில் காணக் கிடைக்கிறது. இந்த, ‘அப்பன் தோப்பு’ வேட்டைச் சமூக வாழ்வியலோடு தொடர்புபட்டு இருக்கிறது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தப் பொதுத் தன்மைகளையும் மறி இந்த ஆய்வாளர் எழுதியுள்ள 1. நிலவியலும், இடப்பெயர்களும் 2. இடப்பெயர்களின் வரலாற்றுச் சுவடுகள் போன்றத் துணைக் கட்டுரைகள் மிகவும் குறிப்பிடத்தகுந்தன என்றே சொல்ல வேண்டும்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com