Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
திலீப் - நினைத்துப் பார்க்கிறேன்

Dileep திலீப் என்கிற வீரராகவன் மறைந்து ஏறக்குறைய இரண்டு மாதங்கள் ஆகின்றன. இன்றும் அவர் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிந்த சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தைக் கடந்து செல்லும்போது மனம் கனக்கிறது. புத்தகங்கள் நிறைந்த விசாலமான அவருடைய அறைக்குள் நுழையும்போதே ஏறக்குறைய நாம் யார் என்பதை அனுமானித்து அதிர்வேற்படுத்தும் குரலில் “என்னப்பா, பார்த்து ரொம்ப நாளாச்சு!’’ என்பார். “நீதான் பார்க்க முடியாதே,’’ என்று நான் கூறினாலும் அவருடைய குறைபாட்டை நான் சுட்டிக்காட்டிப் பேசுவதை சற்றும் பொருட்படுத்தாமல் அடுத்த சேமநல விசாரிப்புகளுக்கு சாதாரணமாகச் சென்று விடுவார். அப்படிப் பேச எனக்கு உரிமை வழங்கியிருந்த தோழமை உறவுக்கு அவர் மீண்டும் அளித்த அங்கீகாரம் மட்டுமல்ல; இளவயதில் நோய்தாக்கியதால் பார்வை இழந்ததை அவர் ஒரு பொருட்டாக மதித்ததில்லை, தடையாக கருதவில்லை என்பதற்கும் ஒரு சான்று. தடையாகக் கருதியிருந்தால் படித்து, ஆராய்ச்சி செய்து, பி.எச்.டி., பட்டம் பெற்று மதிப்புமிக்க ஐ.ஐ.டி.யில் மானுடவியல் மற்றும் சமூக அறிவியல் துறையில் ஒரு துணைப்பேராசிரியராக அவர் உயர்ந்திருக்க முடியாது. வரலாறு, அரசியல், சுற்றுச் சூழலியல் என்று எந்த அறிவுசார் பிரிவானாலும் ஆழமாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும், அப்பிரிவின் மிகச்சமீபத்தில் நடக்கும் விவாதங்களையும் உள்ளடக்கி நம்மிடம் பேசும் போதும், மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் போதும் அவருடைய அறிவுக் கண்ணிலிருந்து வரும் ஒளி கேட்பவர்களைத் தாக்கும். பின் நவீனத்துவத்தின் பிரச்சனைகளை ஒரு சில நிமிடங்களில் எனக்குப் புரிய வைத்தவர்.

வகுப்பறையில் பொதுவாக நிலவும் ஆசிரிய,மாணவ இடைவெளிகளை எளிதாக உடைத்தெறிவதற்கு அவருடைய அறிவும், கற்பிப்பதில் இருந்த ஈடுபாடும், இதையெல்லாம் மீறிய அன்பும் உதவியதால்தான் என்றுமே திலீப்பை தனியாகப் பார்க்க முடியாது.

அறிவுசார்ந்த விவாதங்களிலும், ஆராய்ச்சிகளிலும் மூழ்கி தம் சமூகத்திலிருந்து விலகி தனித் தீவுகளாக அறிவுஜீவிகள் வாழத்துவங்கிய ஒரு காலகட்டத்தில், ஆராய்ச்சிப் படிப்புக்காக அவர் சென்னையில் ஆரம்பகாலத் தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் திரும்பியதால் முற்போக்கு இயக்கத்திற்கு ஒரு வரலாற்றுப் பெட்டகம் கிட்டியது. 1987ஆம் ஆண்டில் “The Rise and Growth of the Labour Movement in the City of Madras and its Environments” (191839) என்ற தலைப்பில் அவர் செய்த ஆராய்ச்சிக்கு பி.எச்.டி. பட்டம் வழங்கப்பட்டது. இதுவே பின்னர் “சென்னைப் பெருநகர தொழிற்சங்க வரலாறு’’ என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்டது. இந்த மாபெரும் ஆராய்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் காரல்மார்க்ஸ் நூலகம் நடத்தி வரும் தோழர். கண்ணன். தொழிற்சங்க வரலாற்று ஆராய்ச்சி அவரை பி. ராமமூர்த்தி, வி.பி. சிந்தன், பி.ஆர். பரமேஸ்வரன், பி. ராமச்சந்திரன் போன்ற மார்க்சிஸ்ட் தலைவர்களிடம் அழைத்துச் சென்றது. இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றிய திலீப், பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராகவும் ஆனார். மாணவர் இயக்கத்தில் அவர் இருந்த காலத்தில் அவரது கண் பார்வை சரியாக்குவதற்காக சோவியத் யூனியனுக்கு அனுப்புவதற்கான முயற்சியை பி.ஆர்.சி. போன்ற தலைவர்கள் மேற்கொண்டனர். அவரது குறைபாட்டிற்கு அங்கும் சிகிச்சை இல்லை என்பதால் அம்முயற்சி கைவிடப்பட்டது.

1980களில் கண் பார்வையற்ற மாணவர்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக அமைப்பு ரீதியாக போராடியபோது இந்திய மாணவர் சங்கத்தின் உறுப்பினராக இருந்த திலீப், அவர்களுடைய போராட்டத்தை வழி நடத்துவதில் முன்னணியில் நின்றார். பின்னர் கண்பார்வையற்றவர்கள் கரும்பலகைக்கு முன் நின்றும் கற்பிக்கும் பணியில் ஈடுபடமுடியுமா? என்று சந்தேகங்கள் எழுந்தபோது அவற்றை பொய்பித்து ஐஐடி மாணவர்களிடையே பிரபலமான ஆசிரியராக உயர்ந்தார். கட்சியின் கிளைக்கூட்டங்களில் அவருடன் அமர்ந்து சர்வதேச அரசியல், தத்துவார்த்தப் பிரச்சனைகள் என்று தோழர்கள் விவரிக்கும் காட்சி இன்றும் கண்முன் நிற்கிறது.

ஒரு காலகட்டத்தில் சுற்றுப்புறச்சூழல் மீது அவருக்கு ஈடுபாடு அதிகமானது. ஐ.ஐ.டி.யில் சமூகவியல் துறைக்குச் செல்லும் வழியாகவும், படிக்கட்டுகளிலும் குரங்குகளின் தொல்லை அதிகமாகி விட்டது என்று புகார் செய்தபோது, “நாம்தான் குரங்குகளின் வாழ்விடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறோம்’’ என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

சுற்றுப்புறச்சூழல் சார்ந்த பிரச்சனைகளைக் கட்சி நிலைப்பாட்டிலிருந்துதான் வேறுபடுவதாகவும், தன்னால் இயக்கத்தில் தொடர முடியாது என்றும் கூறியபோது பாலாஜி (சென்னை புக்ஸ்) போன்ற தோழர்கள் “இயக்கத்திற்குள் எல்லாப் பிரச்சனைகளிலும் ஒத்த கருத்து இருக்க முடியாது. பொதுவான அரசியல், தத்துவார்த்த நிலைபாடுகளோடு ஒத்துப்போகும் போது, மற்ற பிரச்சனைகளின் விமர்சனங்களுடனும், விவாதங்களுடனும், உறுப்பினர்களை தொடர முடியும்’’ என்று வாதிட்டனர். ஆனால் திலீப் நான் வழக்கமாகக் கூறுவதைப் போல “நான் ஒரு ஸ்டாலினிஸ்ட். என்னால் வேறுபாடுகளுடன் தொடர முடியாது’’ என்று விலகிக் கொண்டார். அவருடைய நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், தனது வேறுபாட்டை தெளிவாக எடுத்துரைத்து, மௌனமாகப் பொறுமிக் கொண்டும், சிறுவட்டங்களுக்குள் அறிவை அடைத்து வைத்துக் கொண்டும் வாழும் அறிவுஜீவிக் காலாசாரத்திலிருந்து மாறுபட்டு நின்றார் திலீப்!

இயக்கத்திலிருந்து விடுபட்டபோதும் அரசியல் விவாதங்கள் கடுமையான கருத்து வேறுபாடுகள் எங்களுக்குள் நடந்துகொண்டே இருந்தது. இயக்கத்தில் இல்லாத போதும், தன் சமூக உணர்வை பல விதங்களில் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தார் திலீப். தன் சம்பளத்தின் கணிசமான பகுதியை சமூகசேவை நிறுவனங்களுக்குக் கொடுத்து வந்தார்.

திலீப்பிற்கு கண்பார்வையாகவும், கைத்தடியாகவும் இருந்து, மின்மயானத்தின் தகிப்பிற்குள் அவருடைய சடலம் செல்லும் வரை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்த பேராசிரியர் வி.ஆர். முரளிதரன் நட்பு என்ற சொல்லுக்கு மறு உலகம்!

திலீப்பை பற்றி எழுதிக்கொண்டே போகலாம்! அவரைப் பற்றி பலமுறை பத்திரிகைகளில் எழுதுவதற்கு நான் எடுத்த முயற்சிகளுக்கு அவர் ஒத்துழைக்கவே இல்லை. உடல் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்கும் போதெல்லாம் “பரவாயில்லை. ஆனால் உடல்நிலையைப் பற்றி அதிகம் பேசுவது சிறு முதலாளித்துவ சிந்தனையின் ஆக்கிரமிப்பு’’ என்று கூறிவந்த திலீப், கான்சர் நோய் தாக்கிய ஆறு மாதங்களுக்குள்ளாகவே 50 வயதிலேயே அநியாயமாக போய்விட்டதால்தான் இதைக் கூட எழுத முடிகிறது.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com