Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஏப்ரல் 2009
அனிதா தேசாய்: இருமுறை புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்ட எழுத்தாளர்

இந்தியாவில் ஆங்கிலத்தில் எழுதும் பெண் எழுத்தாளர்களுள் உலக அளவில் கணிசமான வாசகர் வட்டம் கொண்டவர் அனிதா தேசாய். 26ஆம் வயதிலேயே நாவலாசிரியர் ஆன ஒரு பெண்மணி. தற்போது இவர் அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் படைப்பாற்றல் துறையில் பேராசிரியாகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய இலக்கியச் சேவைக்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

இவர் 1937ஆம் ஆண்டு முசௌரியில் பிறந்து தில்லியில் வளர்ந்து, திருமணமான பின் மும்பையில் வாழ்ந்தவர். இவருடைய தாய் ஜெர்மனியைச் சேர்ந்தவர். தந்தை வங்காளி. இரண்டாம் உலகப்போரின் போது பெர்லினில் இருந்த இவரது தந்தை, இவருடைய தாயை காதல் மணம் புரிந்து இந்தியாவிற்கு அழைத்து வந்துவிட்டார். அதன் பின் இந்தியக் குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டார் இவருடைய தாய்.

இவர் சில சிறுகதைகளையும், பல நாவல்களையும் எழுதியுள்ளார். க்ரை, தி பீகாக் (Cry, The Peacock) (1963), வாய்சஸ் இன் தி சிட்டி (Voices in the City) (1965), பை பை பிளாக்பேர்ட் (ByeBye Blackbird) (1968), வேர் ஷல் வீ கோ திஸ் சம்மர் (Where Shall We Go This Summer?) (1975), பைர் ஆன் தி மௌன்டன் (Fire On The Mountain) (1977), கேம்ஸ் அட் டிவிலைட் (Games At Twilight)(1978), கிளியர் லைட் ஆஃப் டே (Clear Light of Day) (1980), இன் கஸ்டடி (In Custody) (1984), பாம்கர்ட்னர்ஸ் பாம்பே (Baumgartner’s Bombay) (1988), ஜர்னி டூ இதாகா (Journey to Ithaca) (1995), ஃபாஸ்டிங் ஃபீஸ்டிங் (Fasting, Feasting) (1999), ஆகியவை இவர் எழுதிய நாவல்களாகும்.

இவருடைய நாவல்களைப் பற்றி தனித்தனியே கதைசொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இரண்டு நாவல்களைத் தவிர, மற்ற எல்லா நாவல்களுமே பெண்களைப் பற்றிய நாவல்கள்தான். சிக்கலான, இரக்கமற்ற உலகத்தில் தன்னுடைய தனிப்பட்ட கனவுகளை நிறைவேற்றுவதற்காகப் போராடும் பெண்களின் உலகம்தான் இவருடைய கதைக்கரு. அதிகக் கட்டுப்பாடுள்ள இந்தியச் சமூகத்தில், தன்னுடைய உரிமையை நிலைநாட்ட பெண்கள் எவ்வாறெல்லாம் போராடவேண்டியுள்ளது என்பதை உற்றுநோக்கி, அவர்களின் வலிகளையும் வேதனைகளையும் ஆராய்ந்து, அவர்களின் மனக்குமுறல்களின் வெளிப்பாடாக எழுதப்பட்டவையே இவரின் நூல்கள்.

இந்தியாவில், குடும்பம் என்னும் சமூக நிறுவனத்தில் ஒரு பெண் செய்ய வேண்டிய தியாகங்கள், அவளுடைய தியாகங்களுக்கு எப்போதும் யாரிடத்திலும் கிடைக்காத அங்கீகாரங்கள், இந்தியப் பெண்ணின் முன்பு வழிகாட்டியாக வைக்கப்பட்டுள்ள பாவப்பட்ட, காயப்பட்ட அக்னிப் பரிட்சையில் பலம் பார்க்கப்படும் பத்தினித் தெய்வங்கள் இந்த முன்னுதாரணங்களைப் போலவே நிஜவாழ்வில் கொளுத்தப்படும் சராசரி இந்தியப் பெண்மணிகள், அவர்களைத் தீக்கிரையாக்கிக் கலாசாரபெருமை பேசும் பாரம்பரியக் கதாநாயகர்கள், அந்தக் கதாநாயகர்களை எந்தவிதமான அருவருப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் இந்தியச்சமூகம் இப்படியாக இந்தியச்சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் பெண்கள், அவர்களின் வேதனைகள் ஆகியவற்றைத்தான் இவருடைய புதினங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கி வைக்கின்றன.

தனக்கென்று ஓர் அடையாளத்தைத் தேடும் பெண்களுக்கான தேடல், அவர்கள் சந்திக்கும் அடக்குமுறைகள், அவர்களைக் குடும்பங்கள் படுத்தும் பாடு, வீடு என்ற பெயரில் அவர்களுக்கு கிடைக்கும் சிறை, திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்குத் தொலைந்துபோகும் வாழ்க்கை ஆகியவைதான் இவர் கதைகளின் கருப்பொருள்.

“உங்களுடைய மகள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்று இந்தியாவில் எந்தப் பெற்றோரையாவது கேட்டால், ‘பள்ளி சென்றுகொண்டிருக்கிறாள்’, ‘கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள்’, ‘ஓர் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்திருக்கிறாள்’ என்ற பதில்கள் ஒரு பெண் திருமணமாவதற்கு முன்பு வரும். அதே பெண்ணிற்குத் திருமணமான பின் அப் பெண்ணைப் பற்றி அவள் பெற்றோரிடம் கேட்டாள், ‘அவளுக்குத் திருமணமாகவிட்டது’ என்ற பதில்தான் வரும். அவள் என்ன படிக்கிறாள், எங்கு பணி புரிகிறாள், அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் இதைப் பற்றியெல்லாம் யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. திருமணமான பின் இந்தியாவில் உள்ள பல்வேறு புத்திசாலிப் பெண்களின் சுயம் தொலைந்துபோகிறது என்கிறார் அனிதா தேசாய்.

இவருடைய நாவல்களில் வலுவான ஆளுமை கொண்ட கதாநாயகனோ, கதாநாயகியோ கிடையாது. இவருடைய புத்தகங்கள் முழுவதும் சோகமான, அழுதுகொண்டிருக்கும், விரக்தியுற்ற கதாபாத்திரங்களால் நிரம்பியவை. பெரும்பாலும் இவருடைய கதையின் மையக் கதாபாத்திரங்கள் சோகமான முடிவுகளையே தழுவுகின்றன. தனிமையில் இருக்கும் சந்தோஷத்தை இவருடைய கதாபாத்திரங்களால் மனித உறவுகளில் அடையமுடியவில்லை. இவருடைய முதல் நாவலான க்ரை தி பீகாக் நாவலில், கணவனால் கொடுமைப்படுத்தப்பட்ட ஒரு பெண், கணவனை மாடியிலிருந்து தள்ளிக் கொலைசெய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக முடிக்கிறார். இவருடைய கதையில் வரும் பல நாயகிகள், தனக்கென்று வீட்டில் தனி அறை இல்லையே, தனக்குத் தனிமையின் இனிமை கிடைக்கவில்லையே என்று வருந்துபவர்களாகவும், நிறைய பேர் வசிக்கும் கூட்டுக்குடும்ப சூழலில் மனதளவில் தனித்துபோய் எந்தவிதமான பந்தபாசமும் இல்லாமல் ஓரங்கட்டப்படும் மருமகள்களாகவும் இருக்கிறார்கள்.

இந்தியாவின் குடும்ப அமைப்பு. பெண் முன்னேற்றத்திற்கும் பெண் கல்விக்கும் தடையாக இருக்கிறது என்ற எண்ணம் இவரின் புதினங்களைப் படித்தால் உருவாகும். கல்வி, வேலைவாய்ப்பு, சொத்து, செல்வம், அன்பு, பாசம் அனைத்திலும் ஆண்குழந்தைக்குத்தான் இந்தியச் சமூகம் முன்னுரிமை அளிக்கிறது என்பதை தன் கதைகளின் மூலம் உணர்த்துகிறார் அனிதா தேசாய். இந்தியாவிலுள்ள பெண்கள் வாயை மூடிக்கொண்டு, கையையும் காலையும் கட்டிக்கொண்டிருந்தால்தான் நல்ல பெண்கள் என்று பெயெரடுக்கமுடியும். ஏனென்றால் அவர்கள் முன் வைக்கப்பட்ட புராணக் கதாநாயகிகள் எல்லாம் அப்பாவிகளாக அக்னியில் எரிந்தார்களே தவிர, வீராங்கனைகளாக வலம் வரவில்லை. எனவே இந்தியச்சமூகத்தின் கட்டுப்பாடுகளை மீறி முன்னேறத்துடிக்கும் பெண்கள் குடும்பமா, கல்வியா என்று ஏதாவது ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உள்ளது என்கிறார் அனிதா தேசாய்.

இவையெல்லாம் அனிதா தேசாய் 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய புதினங்களின் முக்கியக் கருத்துகள். தற்போது இந்தியப் பெண்கள் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்துள்ளனர். சாஸ்திரத்தின் பெயராலும் பாரம்பரியத்தின் பெயராலும் விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து எவ்வளவோ இந்தியப்பெண்கள் கல்வி கற்று, முன்னேறி, உயர் பதவிகளை வகிப்பது மாபெரும் சாதனை. ஆனால் அவர்கள் சென்றடைய வேண்டிய தூரம் இன்னும் நிறைய இருக்கிறது என்கிறார் அனிதா தேசாய்.

இவருடைய புதினங்களுக்கு மேலை நாட்டு வாசகர்கள் அதிகம். இவருடைய வாசகர்கள், இந்தியாவில் பெண்கள் சொல்ல முடியாத அளவிற்குத் துயரப்படுகின்றர் என்று நினைத்துக்கொள்வார்கள். பல இந்திய விமர்சகர்கள், பணத்திற்காக இந்தியாவின் பாரம்பரியத்தை அனிதா தேசாய் கொச்சைப்படுத்துகிறார், இந்தியா பெண்களுக்கு அளித்துவரும் புனிதமான இடத்தை உலக வாசகர்களுக்கு அனிதா தேசாய் உணர்த்தவில்லை என்றெல்லாம் கலாசார வழக்கறிஞர்கள் இவரைக் கண்டித்துள்ளனர். தன்னுடைய இதயம் இந்தியப் பெண்மணியைப் போல் மென்மையாக இருந்தாலும், அறிவு வெளிநாட்டவர் நிலையில் இருந்து இந்தியாவை உற்றுப் பார்க்கிறது. அதனால் எழுதும்போது நான் ஒரு நடுநிலை எழுத்தாளராகத்தான் எழுதுகிறேனே தவிர இந்தியர் என்ற உணர்வுடன் எழுதுவதில்லை. இந்தியப் பெண்கள் சந்திக்கும் அடக்குமுறை, பாரம்பரியத்தின் பெயராலும் கலாசாரத்தின் பெயராலும் போற்றப்பட வேண்டியதில்லை என்கிறார் அனிதா தேசாய்.

இந்தியப் பெண்களைப் பற்றி எழுதித் தள்ளிய பிறகு, மேலை நாட்டுப் பெண்களின் வாழ்க்கையை எழுதும் அவாவுடன் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் சென்றார் அனிதா தேசாய். அதற்கு முன், மேற்கத்திய சமூகம் பெண்களுக்கு அதிக உரிமை வழங்குகிறது, இந்தியச் சமூகம்தான் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்ற நினைப்பில் இருந்தார் அனிதா தேசாய். ஆனால் அவர் தற்போது வெளியிட்டிருக்கும் ஃபாஸ்டிங் ஃபீஸ்டிங் என்ற புதினத்தில், அமெரிக்கக் குடும்ப வாழ்வையும் இந்தியக் குடும்ப வாழ்வையும் ஒப்பிடுகிறார்.

மேற்கத்திய சமூகமும் இந்தியச் சமூகமும் இணையானவைதான், எதிரானவை அல்ல என்று உணர்ந்திருக்கிறார் அனிதா தேசாய். அங்கிருக்கும் பெண்கள் தங்கள் விருப்பப்படி ஆடை அணிகிறார்கள், கடைத்தெரு செல்கிறார்கள், கல்வி கற்கிறார்கள். உண்மைதான். ஆயினும் அவர்களுக்கு உண்டான கடமைகள், சுமைகள், தாய் என்ற பெயரில் அவர்களுக்குள்ள பொறுப்புகள் இவையனைத்தும் உலகம் முழுவதும் பொதுதான் என்கிறார் அனிதா தேசாய்.

அமெரிக்கக் குடும்பத்திற்கும் இந்தியக் குடும்பத்திற்கும் என்ன வேறுபாட்டைக் கண்டிர்கள் என்று அவரைக் கேட்டால், இந்தியாவில் மனம் விட்டு தன் விருப்பு வெறுப்புகளை குடும்ப உறுப்பினர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் இங்கு தொலைந்து போகின்றன. சமைப்பதிலேயே பல பெண்களின் வாழ்க்கை தொலைந்துவிடுகிறது. பெரும்பாலும் உணவருந்தும் வேளையில்தான் இந்தியக் குடும்பங்கள் கூடுகின்றன. மனிதனைச் சந்தோசமாக வைத்திருக்கும் கதகதப்பு இந்தியக் குடும்பத்தில் உண்டு என்றாலும், பலருடைய சுயத்தை குடும்பம் என்கிற அந்த நெருப்பு பொசுக்கி விடுகிறது என்பதும் உண்மை.

ஆனால் அமெரிக்காவில் தொலைக்காட்சியின் முன்தான் குடும்பத்தினர் எல்லோரும் கூடுகிறார்கள். தங்களுடைய மன உணர்வுகளை அவர்கள் தம் குடும்பத்தினரிடையே பகிர்ந்து கொள்வதில்லை. அதனால் வாடியமனதிற்குக் குடும்பம் எந்தவிதமான மருந்தையும் இடுவதில்லை. ஒருவனுடைய முன்னேற்றத்தையோ, பொது வாழ்க்கையையோ தடுப்பதுமில்லை. இதுதான் அமெரிக்கக் குடும்பத்திற்கும் இந்தியக் குடும்பத்திற்கும் உள்ள வேறுபாடு என்கிறார்.

இவருடைய புதினங்களில் ‘இன் கஸ்டடி’ என்ற ஒரே ஒரு புதினம்தான் ஓர் ஆணை, கதாநாயகனாக வைத்து எழுதப்பட்டது. ஒரு காலத்தில் அரசவை மொழியாக இந்திய அரண்மனையை அலங்கரித்த உருது மொழியின் பண்டிதர்கள் இன்று எப்படி முக்கியத்துவம் இழந்து வாழ்கிறார்கள் என்று இந்தக் கதை கூறுகிறது. ‘பாக்மர்டனர்ஸ் பாம்பே’ என்ற புதினத்தில் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியில் இருந்து தப்பி வந்த ஒரு யூதர், இந்தியாவில் ஓர் அந்நியனாக எப்படி வாழ்ந்தார் என்று கூறுகிறார்.

பெண்களைப் பற்றி இவ்வளவு பேசும் அனிதா தேசாயின் குடும்ப வாழ்க்கை எப்படி இருந்தது? திருப்திகரமான, நிறைவான மனவாழ்க்கை இவருடையது. இவருடன் கல்லூரியில் படித்த அஸ்வின் தேசாய் என்ற வங்காளியைக் காதல் மணம் புரிந்து 4 குழந்தைகளைப் பெற்று, ஒரு நல்ல குடும்பத் தலைவியாக வாழ்ந்துள்ளார். ஐம்பது வயது நிரம்பிய பிறகு உலகைச் சுற்றிப் பார்த்து, தற்போது அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் பணி புரிகிறார் அனிதா தேசாய். திருமணத்திற்குப் பின்புதான் இவர் எழுத்தாளராகப் பரிணமித்திருக்கிறார்.

இவருக்கு அன்பும் ஆதரவும் அளித்து வெற்றிகரமான எழுத்தாளராக மாற்றியதற்காக இவருடைய கணவரை யாராவது பாராட்டினால்,அந்தப் பாராட்டை அனிதா தேசாய் நிராகரிக்கிறார். “எத்தனை ஆண் எழுத்தாளர்களின் மனைவிக்கு இந்தப் பாராட்டு கிடைக்கிறது. ஒரு எழுத்தாளராக மாறியதால் ஒரு குடும்பத்தலைவி என்ற முறையில் என் கணவருக்கோ, தாய் என்கிற முறையில் என் குழந்தைகளுக்கோ நான் எந்தக் குறையும் வைத்ததில்லை. என் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில்தான் நான் எழுதியிருக்கிறேன். எந்த விதத்திலும் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையிலிருந்து நான் தவறியதில்லை.” என்கிறார்.

சர்வதேச அளவில் அனிதா தேசாய்க்கு வாசகர்கள் அதிகம். இவருடைய ‘பைர் ஆன் தி மௌன்டன்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதுவதின் நோக்கம் என்ன என்று இவரைக் கேட்டால்,”எனக்கென்று எந்தக் கொள்கையும் கிடையாது. நான் எழுத ஆரம்பித்தால் என்னுடைய பேனாவையும் தாள்களையும் மட்டும்தான் நான் உபயோகிப்பேன். என் எண்ணங்களைக் கொட்டவேண்டும் என்பதுதான் என் இலட்சியம். என்னுடைய வாசகர்கள் யார், எப்படிப்பட்டவர்கள், அவர்கள் என்ன விரும்புகிறார்கள், என்னிடமிருந்து அவர்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் நான் சிந்திப்பதில்லை’ என்கிறார். எனவேதான் இவருடைய புத்தகங்கள் பிரச்சனையைப் பற்றி விவரிக்கின்றனவே தவிர, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு வழி சொல்வதில்லை.

இவருடைய மகள் கிரண் தேசாயும் அம்மாவைப் போலவே ஆங்கில எழுத்தாளராகியுள்ளார். 46 ஆண்டுகாலமாக எழுதிவரும் அனிதா தேசாயின் புத்தகங்கள் இரு முறை புக்கர் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டனவே தவிர பரிசு பெறவில்லை. ஆனால் கிரண் தேசாயோ, தன்னுடைய இரண்டாவது நாவலான ‘தி இன்ஹெரிட்டன்ஸ் ஆஃப் லாஸ்’ என்ற புதினத்திற்கு புக்கர் பரிசு பெற்றது நமக்கு நினைவிருக்கும். தாய் எட்டடி பாய்ந்தால் மகள் பதினாறடி பாயவேண்டுமல்லவா?



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com