Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Punnagai
Punnagai Logo
மே 2009

சுகந்தி : தாழற்றுத் திண்டாடிய மனக்கதவு
பாவண்ணன்

என் நண்பரும் எழுத்தாளருமான சுப்ரபாரதிமணியன் எண்பதுகளில் ஐதராபாத்தில் வசித்துவந்த சமயம். நான் கர்நாடகத்தில் வசித்துவந்தேன். அவருடைய திருமணத்துக்கு என்னால் செல்ல இயலவில்லை. துணைவியாரை அழைத்துக்கொண்டு அவர் ஐதராபாத்துக்குத் திரும்பிய பிறகு ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். தன் மனைவியை தொலைபேசியிலேயே அறிமுகப்படுத்திவைத்தார் சுப்ரபாரதிமணியன். "சுகந்தி கவிதையெல்லாம் எழுதுவாங்க..." என்றார். ஒரு சில நிமிடங்கள்மட்டுமே அவரோடு நான் பேசினேன். சற்றே கீச்சுக்குரல். பத்துப் பதினைந்து வாக்கியம் பேசியதும் கரகரத்து உடைந்து இயல்பாக வெளிப்பட்டது. அடுத்து ஒன்றிரண்டு ஆண்டுகளிலேயே அவருடைய கவிதைகள் "புதையுண்ட வாழ்க்கை" என்னும் தலைப்பில் தொகுப்பாக வெளிவந்தன. தலைப்பின் படிமத்தன்மை என்னை ஆழமாகப் பாதித்தது. வாழ்க்கையை நாம் ஒரு கொண்டாட்டம் என்கிறோம். மனிதப்பிறவிக்கே கிடைத்த அபூர்வமான வரம் என்கிறோம். அன்பை வழங்குவதற்கும் அன்பில் திளைப்பதற்குமான மாபெரும் வாய்ப்பாக வாழ்க்கையை நினைக்கிறோம். அந்த நிலையில் வாழ்க்கையை ஒருவர் புதையுண்ட நகரத்தைப்போல, புதையுண்ட தெய்வச்சிலையைப்போல புதைந்துபோனதாக முன்வைப்பதை நினைத்து ஒருகணம் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனாலும் அந்தத் தலைப்பின் வசீகரம் என் மனத்தைவிட்டு அகலவே இல்லை. மீண்டும்மீண்டும் அசைபோட்டுக்கொண்டே இருந்தேன். இயற்கையின் சீற்றத்தால் சூறாவளியோ ஆழிப்பேரலையோ நிலநடுக்கமோ உருவாகி வாழ்கிற ஒரு நகரத்தையே விழுங்கி உள்ளிழுத்துக்கொள்வதைத்தான் புதையுண்டதாகச் சொல்கிறோம். மாமல்லபுரத்தின் கடற்கரைக் கோயில்கள் கடலுக்கடியில் புதைந்துகிடக்கின்றன. வாழ்க்கையும் துயரம், கவலை, தனிமை, கண்ணீர் என்ற உணர்வுகளுக்கடியில் புதைந்துகிடக்கிறது.

புராண காலத்திலிருந்து நவீன காலம் வரையிலான முக்கால் பகுதிக்கும் மேலான இந்தியப் பெண்களின் பொதுப்படிமமாகவே அத்தலைப்பை நான் உணர்ந்தேன். அக்கணம் சுகந்தியின்மீது நான் கொண்டிருந்த மதிப்பு இன்னும் அதிகமானது. பெண்கவிஞர்கள் அவ்வளவாக உருவாகி வராத காலம் அது. கவிதைகளைப் படித்தபிறகு என் வாழ்த்துகளைச் சொன்னேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு சந்திப்பை உதகை பகுதியில் ஈரோடு ஜீவா ஏற்பாடு செய்திருந்தார். அந்தச் சந்திப்புக்கு சுகந்தியும் சுப்ரபாரதிமணியனும் குழந்தைகளும் வந்திருந்தார்கள். அப்போதுதான் சுகந்தியை நேரிடையாகச் சந்தித்தேன். சங்கச் செய்யுள்களை வாசிப்பது தொடர்பாக அன்று அவருக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன. அவற்றைப்பற்றி என்னிடமும் சந்திப்புக்கு வந்திருந்த பல கவிஞர்களிடமும் நிறைய கேள்விகள் கேட்டார். எளிய தோற்றத்துடன் கண்களில் ஆவல் மின்ன அவர் உரையாடிய காட்சி என் மனத்தில் அப்படியே பதிந்துவிட்டது.

நினைவிலிருந்து பிசகிவிட்ட பல முகங்களைப்பற்றிய குறிப்புகளை முன்வைத்தபடி தன் ஞாபகமறதியை நினைத்து மனவேதனைக்கு ஆளாகும் ஒரு கவிதை சுகந்தி எழுதிய கவிதைகளில் மிக முக்கியமானது. ஒரு பெண்ணுக்கு தன் பிரசவத்தின்போது தன் குழந்தையின் தொப்புள்கொடியை அறுத்த முகம் மறந்துபோகிறது. முதன்முதலாக தான் கருவுற்ற செய்தியை யாரிடம் சொல்லிப் பகிர்ந்துகொண்டோம் என்பதும் மறந்துபோகிறது. பள்ளியில் எழுத்தறிவித்த ஆசிரியரின் முகமும் மறந்துபோகிறது. விளையாடச் சென்ற இடத்தில் தற்செயலாக ருதுவான கணத்தில் அச்சத்துடன் கண்ணீர் பெருகிய சமயத்தில் ஆறுதலாக கையைப்பற்றி அழைத்துவந்து கனிவான சொற்களைச் சொன்ன முகம்கூட நினைவிலிருந்து விலகிவிட்டது. கவிதையில் சுகந்தி விவரிக்கிற வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு முக்கியமான தருணங்கள். விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தாமாகவே நினைவில் அழுத்தமாகப் பதிந்துவிடத்தக்க தருணங்கள். இருந்தபோதிலும் எதுவுமே நினைவில்லாதபடி எப்படி நிகழ்ந்தது? கவிதையைப் படித்துமுடித்ததும் மனம் கனத்துவிட்டது.

நினைவின்மையின் தொகுதியாக ஒரு வெள்ளைத்திரைபோல பெண்ணின் மனம் அமைந்துபோயிருக்கும் விதம் அதிர்ச்சியாக இருந்தது. "எங்களூர் நதி எங்கே போய்க்கொண்டிருக்கிறது..." என்று தொடங்கும் கவிதையும் எனக்கு மிகவும் பிடித்த கவிதை. ஓர் இளம்பெண் இக்கவிதையில் இடம்பெறுகிறாள். வழக்கமாக தாழிடப்பட்ட குளியலறைக்குள் குளியலை முடித்துக்கொள்கிறவள் அவள். எதிர்பாராத விதமாக பால்யகாலத்தில் பூப்பறிப்பு நோன்புக்காக தோழிகளுடன் சென்ற ஆற்றை நினைத்துக்கொள்கிறாள். நதி எங்கே போகிறது என்னும் கேள்வி அப்போதுதான் அவள் மனத்தில் எழுகிறது. ஆனால் விடை தெரியவில்லை. மறுபடியும் அவள் ஆற்றைப் பார்ப்பது திருமணத்துக்குப் பிறகுதான். அப்போதும் அவள் மனத்தில் அதே கேள்வி தோன்றுகிறது. அத்தருணத்திலும் அவளுக்கு விடை தெரியவில்லை. அழைத்துச் செல்கிற கணவனுக்கும் விடை தெரியவில்லை. ஐம்பது மைல் தள்ளிப்போய் ஆறு செல்லுமிடத்தில் ஓர் அணையைக் காட்டி அதுவரைக்கும்தான் தனக்கும் தெரியும் என்கிறான் கணவன். விடைதெரியாத கேள்வி அவள் மனத்தில் அப்படியே எஞ்சிவிடுகிறது. ஆறும் தொடர்ந்து ஓடியபடி இருக்கிறது. இக்கவிதையின் தொடக்கத்தில் இக்கேள்வியை இளம்பெண் யாரிடமும் கேட்டதாக குறிப்பில்லை.
திருமணத்துக்குப் பிறகு தன் கணவனிடம்தான் முதன்முதலில் வாய்திறந்து கேட்கிறாள். ஒரு விடைக்கான நீண்டகாலக் காத்திருப்பு அவலமும் துயரமும் மிகுந்தது.

சுகந்தியின் கற்பனைவளம் உற்சாகத்தை ஊட்டுவது. முதல் வரி கவிதையில் இறங்கியதுமே வேகவேகமாக சொற்கள் கூடிப் பெருகுகின்றன. தரையில் தண்ணீர் பரவி ஈரத்தடம் படர்வதுபோல அச்சொற்களில் அபூர்வமான ஓர் ஓவியத்தை வரைந்துகாட்டுகிறார் சுகந்தி. காற்று என்னும் கவிதை அப்படி வரையப்பட்ட ஓர் அபூர்வ ஓவியம். காற்றை சிறகிலாப் பறவை என்று அடையாளப்படுத்துகிறார். அக்கவிதையில் சந்தனமும் குங்குமமும் துலங்க தாம்பூலம் சிவக்க சந்தோஷமாக பூவைத்துக் காத்திருக்கிறாள் ஒரு பெண். கொலுசொலிக்க நடந்துவருகிற ஒரு தோழிபோல அருகில் வருகிறது காற்று. இருவரும் விளையாடிக்கொள்கிறார்கள். பெண்ணின் கன்னத்தைச் செல்லமாகத் தட்டி சின்னக்குழந்தை என்று கொஞ்சிவிட்டு நகர்கிறது காற்று. கண்கள் சிவக்க அழும்போது உறங்கவைக்க முயற்சி செய்கிறது. கண்களை மூடிவிட்டால் காற்று நகர்ந்துவிடுமோ என வாட்டமுறுகிறாள் அவள். ஆனாலும் காற்றின் தாலாட்டில் உறங்காமல் இருக்கவும் இயலவில்லை. கவலையில் தோய்ந்த சிரிப்பையே காவலுக்கு நிறுத்திவிட்டு கண்களை மூடுகிறாள். தன்னிலை மறந்த உறக்கத்தில் அவள் ஆழ்ந்த பிறகு, செல்லச் சிரிப்போடு காவலுக்கு நின்ற கவலையில் தோய்ந்த சிரிப்பை அழைத்துச் சென்றுவிடுகிறது. ஒரு நாடகக்காட்சியைப்போலத் தோற்றம் தரும் இக்கவிதை துணையற்ற பெண்ணின் தனிமையையும் துணையாக நிற்கும் காற்றின் ஆதரவையும் ஒருங்கே முன்வைக்கின்து.

புதையுண்ட வாழ்க்கை தொகுப்பைத் தொடர்ந்து 2003ல் தமிழினியின் முயற்சியால் அவருடைய விரிவான தொகுப்பொன்று வெளிவந்தது. நான் விரும்பிப் படித்த தொகுதிகளில் அதுவும் ஒன்று. தற்செயலாக ஒரு கவிதையில் படிக்க நேர்ந்த "தாழற்றுத் திண்டாடுகிறது மனக்கதவு" என்னும் வரி என்னை உலுக்கியெடுத்தது. மனம் என்பது ஓர் அறையல்ல, வீடுமல்ல. கதவு பொருத்தி தாழிட்டும் பூட்டியும் வைக்க. அது ஒரு நதிபோல, கடல்போல, வானம்போல விரிவானது. எல்லையில்லாதது. எல்லாருக்கும் தெரிந்த உண்மைதான் இது. ஆனாலும் மனம் முரண்விழைவு உந்தித்தள்ள தனக்கென ஒரு கதவை நாடுகிறது. கதவு பொருத்தியபிறகு தாழும் தேவையாகிறது. தாழிட முடியாதபோது தவிப்பை தானே ஏற்படுத்திக்கொள்கிறது. ஆற்றாமையையும் இயலாமையையும் முன்வைக்கும் சுகந்தியின் கவிதைகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவை. இருபத்தைந்து ஆண்டுகளில் மிகச்சில ஆண்டுகளில் மட்டுமே அவருடைய கவிதைகள் வெளிவந்தன.

பிப்ரவரி மாத இரண்டாவது வாரத்தில் ஒரு பயிற்சிக்காக சென்னை சென்றிருந்தேன். என் வருகையைப் பதிந்துவிட்டு எனக்காக ஒதுக்கப்பட்ட அறையின் திறவுகோலோடு திரும்பியபோது தற்செயலாக சுப்ரபாரதிமணியனைப் பார்த்தேன். அதே நிலையத்தில் அதே பயிற்சிக்கு அவரும் வந்திருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரைப் பார்த்ததில் மகிழ்ச்சியடைந்தேன். பயிற்சி நேரம் போக மற்ற நேரங்களில் பேசிக்கொண்டிருந்தோம். குடும்ப நலன்களைப்பற்றி ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொண்டோம். பயிற்சி வகுப்பில் அவர் மூன்றாம் வரிசையிலும் நான் ஐந்தாம் வரிசையிலும் உட்கார்ந்திருந்தோம். மூன்றாவது நாள் பயிற்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே அவர் வேகமாக இருக்கையைவிட்டு எழுந்து ஒரு நொடி ஆசிரியரிடம் மெதுவாக ஏதோ சொல்லிவிட்டுச் செல்வதைக் கவனித்தேன். அவசரமாக கழிப்பறைக்குச் சென்றிருக்கக்கூடும் என்றுதான் முதலில் நினைத்தேன். அரைமணிநேரத்துக்குப் பிறகும் வராதபோது எங்காவது தொலைபேசி செய்யச் சென்றிருப்பாரோ என்று தோன்றியது. உணவு இடைவேளை வரைக்கும் வராதபோது அதிர்ச்சியாக இருந்தது. அவர் இல்லாமலேயே அறைக்குத் திரும்பினேன். அறையில் மேசைமீது அவர் கையெழுத்தில் ஒரு சீட்டு எழுதி வைக்கப்பட்டிருந்தது. பதறும் மனத்துடன் எடுத்துப் படித்தேன். ஒரே வரிதான். சுகந்திக்கு உடல்நலம் சரியில்லை. ஊருக்குச் சென்று சேர்ந்த பிறகு பேசுகிறேன் என்று மட்டுமே எழுதியிருந்தது.

எனக்கு மனம் தாங்கவில்லை. உடனே கைப்பேசியில் அவரை அழைத்துக் கேட்டேன். பேருந்து இரைச்சலில் பேச்சு சரியாக காதில் விழவில்லை. காகிதக் குறிப்பில் இருந்ததையே மற்றொரு முறை சொன்னதுமட்டுமே புரிந்தது. அடுத்த நாள் கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த நாள் காலைவரை அழைப்பு வரவில்லை. வகுப்புக்குச் செல்வதற்கு முன்னால் ஒருமுறை பேசிவிடலாம் என்று கைப்பேசியை எடுத்த அதே கணத்தில் மறுமுனையிலிருந்து சுகந்தியின் மரணச் செய்தியைத் தாங்கிக்கொண்டு அவர் அனுப்பிய குறுஞ்செய்தி வந்துவிட்டது. ஆழ்ந்த மௌனத்தில் சில நிமிடங்கள் அப்படியே உட்கார்ந்துவிட்டேன். என்ன என்ன என்று கேட்ட அறை நண்பருக்கு விவரத்தைச் சுருக்கமாகச் சொல்லிக்கொண்டே பெருமூச்சோடு எழுந்த தருணத்தில் "தாழற்றுத் திண்டாடுகிறது மனக்கதவு" என்னும் வரியை என்னையறியாமல் இரண்டுமூன்று முறைகள் மீண்டும்மீண்டும் சொல்லிக்கொண்டேன். மனம் கனத்தது.

[email protected]

நன்றி : rpsubrabharathimanian.blogspot.com


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com