Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
அக்டோபர் 2008

ஈழத் தமிழர்களின் அவலங்களுக்கு அரசியல் முலாம் பூசாதீர்! இந்தியாவின் பச்சைத் துரோகம்!

தமிழ் ஈழத்தில் - சிங்கள ராணுவம் - தமிழர்களை இனப்படுகொலை செய்வது நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தையே சூறையாடி, தமிழர்களைக் கொன்று குவித்த இராணுவம், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள், அய்.நா. பார்வையாளர்கள், தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் வெளியேற்றிவிட்டது. விடுதலைப் புலிகளின் முழுமையான நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்து கொண்டிருந்த வன்னிப் பிரதேச மக்கள் மீதும் குண்டு வீசத் தொடங்கிவிட்டது. யாழ்ப்பாணத்தில் 5 மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். சொந்த மண்ணிலேயே "புலம் பெயர்ந்த உள்நாட்டு அகதிகளாக" வெட்ட வெளியில் கொட்டும் மழையில் முகாம்களில் வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய ஆட்சி வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டுமல்ல; இலங்கை ராணுவத்துக்கு ஆயுதங்களையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் முதல் தேதியன்று அரியானாவில் இந்தியாவின் ராணுவப் பயிற்சியை முடித்துக் கொண்டு, 100 சிங்கள ராணு வத்தினர் கொழும்பு திரும்பியுள்ளனர். அக்டோபர் ஒன்றாம் தேதி தங்களுக்கு இந்திய அரசு அளித்துள்ள பயிற்சி, புதிய பலத்தை உருவாக்கியுள்ளதாக இந்திய தொலைக்காட்சிகளுக்கு சிங்கள ராணுவக் குழுவின் தலைவர் பேட்டி அளித்துள்ளார்.

இந்தியாவின் பார்ப்பனியம் - தமிழர் படுகொலைக்கு துணைப் போகும் நிலையில் தமிழர்களின் நிலை மிக மோசமடைந்து வரும் ஆபத்தை உணர்ந்த அய்.நா.வின் மனித உரிமைக் குழு, உடனடியாக தமிழர்களுக்கு உதவிடும் மனிதாபிமான நட வடிக்கைகளை மேற்கொள்ள ராஜபக்சேயிடம் அனுமதி கேட்டுப் போராடி, உணவு, மருந்துப் பொருள்களுடன், யாழ்ப்பாணப் பகுதிக்கு விரைந்துள்ளது. யாழ்ப்பாணத்தை பிறப் பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரை வழிப் பாதையான ஏ-9 நெடுஞ்சாலைப் பாதையைக் கடந்த ஆகஸ்டு 2006 இல் மூடிய சிங்களப் பேரினவாத அரசு, அதற்குப் பிறகு திறக்கவே இல்லை. இப்போதுதான் முதல் முறையாக அய்.நா.வின் நிவாரண உதவிக் குழுக்களுக்காக 'மனமிறங்கி' திறந்துவிட்டுள்ளது. 51 லாரிகளில் 800 மெட்ரிக் டன் எடையிலான உணவு மருந்துப் பொருள்கள் அதன் வழியாக கடந்த 2 ஆம் தேதி சென்றுள்ளன. இந்த நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரிகள் அனைத்துமே இலங்கை அரசு ஏற்பாடு செய்தவையாகும். இதில் 9 லாரிகளில் வெடிப் பொருள்களும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதை அய்.நா.வின் குழு கண்டறிந்து அதிர்ச்சியடைந்து, தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

சமாதானப் பேச்சுக்கு வழி வகுத்த நார்வே நாடு, தனது அரசு செலவிலேயே கிளிநொச்சியில் 'சமாதான தூதரகம்' ஒன்றை பெரிய அளவில் கட்டித் தந்தது. அந்த சமாதான தூதரகத்தையே இப்போது சிங்கள ராணுவம் குண்டு வீசி தரைமட்டமாக்கிவிட்டது. சமாதான தூதரகத்துக்கு நேர் எதிரே அமைந்திருந்த, விடுதலைப் புலிகன் அரசியல் தலைமையகமும், அதே நாளில் சிங்களக் குண்டுவீச்சுக்கு பலியாகி தரை மட்டமாக்கப்பட்டுவிட்டது. சமாதானத் தூதரகத்தை தகர்த்து - இனி சமரசப் பேச்சே கிடையாது என்பதை சிங்கள அரசு உணர்த்திவிட்டது. இந்தியாவின் ஆயுதங்களோடும், இந்திய ராணுவத்தைச் சார்ந்த பொறியாளர்களின் நேரடி ஆலோசனைகளோடும் இந்த இனப் படுகொலைகள் ஒவ்வொரு நாளும் தொடருகின்றன.

இந்த நிலையில் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முன் வந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாடுகள் தமிழர்களின் உணர்வுகளுக்கு மருந்து போடுவதாக இருக்கிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மத்தியிலே அமைச்சர்களாக இருந்தும், தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியவில்லை. சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்குக்கூட தமிழக அமைச்சர்கள் வாய் திறக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தோழர் ராஜாவின் ஒரே குரல் தான் ஒலித்தது. ஈழத் தமிழர்களைக் காக்கும் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தது. மத்திய மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சிகளுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை. தமிழர்களைக் காப்பாற்றாத, குற்றத்தை செய்யும் ஆட்சிகளுக்கு அறிவுறுத்தவும், நடவடிக்கை எடுக்கக் கோரி நிர்ப்பந்திக்கவும் நடத்தப்படும் போராட்டத்தில் அவர்களை அழைப்பது எப்படி சாத்தியமாகும்? அப்படியே அழைத்தால், ஆட்சிகள் இதில் 'கேளாக் காதினராக' செயல்படுவதை சுட்டிக் காட்டிக் கண்டித்தால், அதை சகித்துக் கொள்வார்களா?

ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடியாக எதிர்ப்புக் கருத்துகளைக் கொண்டவர்தான். பார்ப்பன உணர்வாளர்கள்தான்! ஆனால் கச்சத் தீவு பிரச்சினைக்கும், மீனவர் பிரச்சனைக்கும் குரல் கொடுத்து வருகிறார். ஜெயலலிதா கட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுக்கலாமா என்ற கேள்விகளுக்கு முன்னுரிமையும், அழுத்தமும் தந்து, 'லாவணி' நடத்துவது அவர்களின் அரசியல் துடிப்பைக் காட்டுகிறதே தவிர, ஈழத் தமிழர்கள் மீதான கவலையை அல்ல. ஒரு காலத்தில் ஈழத் தமிழர் பிரச்சினையில் உறுதி காட்டி வந்த தி.மு.க.வும் தனது நிலைப்பாட்டில் ஊசலாட்ட அணுகுமுறைகளையே மேற்கொண்டு வருகிறது. அடையாளத்துக்காகவும், சடங்குக்காகவும், ஆதரவு காட்டிப் பேசுவது என்ற நிலைப்பாட்டோடு தி.மு.க. தனது கடமையை முடித்துக் கொண்டு விடுகிறது.

செஞ்சோலைப் படுகொலையைக் கண்டித்து, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, மத்திய அரசு கடுகளவும் மதிக்கவில்லை. தி.மு.க.வும் அதைத் தட்டிக் கேட்கவில்லை. இனி தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடக்காது என்று எம்.கே.நாராயணன் இப்போது மட்டுமல்ல, கடந்த ஆண்டே கலைஞரிடம் உறுதிமொழி தந்தார். அதற்குப் பிறகு 25 துப்பாக்கி சூடுகள் நடந்துவிட்டன. சுப. தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் கவிதை எழுதினார் முதல்வர். காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தவுடன், தமிழ்ச் செல்வனுக்கு இரங்கல் கூட்டம் நடத்தக்கூட அனுமதி மறுக்கப்பட்டு விட்டன. ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து கலைஞர் முரசொலியில் என்ன எழுதினார்?

"இந்திய நாட்டு நலனையும் பாதுகாப்பையும் அதற்காக இந்திய நாட்டு மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைப் பிரச்சனையில் தமிழகம் தலையிடுமென்று யாரும் கனவு காண வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது." ('முரசொலி' 24.2.2007)

இந்திய அரசு தமிழர்களைக் கொன்று குவிக்க, ஆயுதம் வழங்குவதும், இந்திய அரசு தமிழர்களைக் கொன்று குவிக்க ராணுவப் பயிற்சி தருவதும் இந்தியாவின் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளே என்று 'துக்ளக்' சோ, சுப்ரமணிய சாமிகளின் கருத்துகளையே எதிரொலித்து கலைஞரும் ஒப்புதல் வாக்குமூலமும் தந்து விட்டார்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும், கூட்டணி அரசியல் சாயம் பூசி, ஈழத்தில் அன்றாடம் தொடரும் தமிழினப் படுகொலைகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பது தமிழின உணர்வாளர்களைக் காயப்படுத்துவதோடு, அன்றாடம் செத்து மடியும் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கும் துரோகமாகி விடாதா?

சம்பிரதாய கடிதங்களும் தீர்மானங்களும் சடங்குகளாகிவிட்டன. தமிழர்கள் மீது சிங்களம் நடத்தும் படுகொலைகளை மத்திய அரசு கண்டிக்க மறுக்கிறது. ஆயுத உதவிகளை நிறுத்த மறுக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசு தனது 'மவுன'த்தின் வழியாக ஏற்பு வழங்குகிறதா? கொதிக்கும் தமிழ் நெஞ்சங்கள் கேட்கின்றன!

தமிழர்களே! செத்து மடியும் சொந்த சகோதர சகோதரிகள் கதறுகிறார்கள். பட்டினியால் பரிதவிக்கிறார்கள். குண்டு மழைக்கும் துப்பாக்கிச் சூட்டுக்குமிடையே அலைக்கழிந்து கொண்டிருக்கிறார்கள். நாம் - தமிழன் என்று மார்தட்டி என்ன பயன்? என்ன செய்யப் போகிறோம்? இந்தியாவின் பார்ப்பன நயவஞ்சகம் - ஆட்சிகள் மாறினாலும் தொடருகிறதே; இந்த இந்தியாவை எப்படி எனது தேசம் என்று அழைக்க முடியும்? இதில் எப்படி நான் குடிமகனாக இருக்க முடியும்? இந்தக் கேள்விகளை நோக்கி - தமிழகம் உந்தப்படுகிறது. ஆம்; வேகமாக உந்தப்படுகிறது.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com