Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam

திராவிடர்-தமிழர் பிரச்சினை: கழகத்தின் நிலைப்பாடு என்ன?

கொளத்தூர் மணி

(‘உழைக்கும் மக்கள் தமிழகம்’ (அக்-நவ.) இதழுக்கு - கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அளித்துள்ள நேர்காணல் இது. பெரியார் வலியுறுத்திய – தனித் தமிழ்நாடு லட்சியம், தமிழ்ப் பெயர் சூட்டல், பார்ப்பனர்களை இயக்கத்தில் சேர்க்காதிருத்தல் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு - தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு இதில் விளக்கப்பட்டுள்ளது)

கேள்வி : தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகத்திலிருந்து என்ன அளவில் - கோட்பாட்டளவில் வேறுபட்டிருக்கிறது? வேறுபாடு கொண்ட அளவில் த.பெ.தி.க. அந்த இலக்கு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதா?

பதில் : பெரியார் சாதிய, பாலின, பொருளிய பேதமற்ற, சுரண்டலற்ற பொது உரிமை கொண்ட பொதுவுடைமைச் சமுதாயத்தை இலக்காகக் கொண்டிருந்தார். கடவுள் மறுப்பு - பார்ப்பன எதிர்ப்பை உள்ளடக்கிய கடவுள் மறுப்பு - சாதியொழிப்பை இலக்காகக் கொண்ட பார்ப்பன எதிர்ப்பு - அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கும் சுரண்டலற்ற விடுதலை - தனித்தமிழ் நாடு - ஆகியவற்றை நோக்கியே தன் பணிகளை ஆற்றினார். பெரியாரது எல்லா கொள்கைகளையும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்றுக் கொள்கிறது. இவற்றில் தனித்தமிழ்நாடு என்பதைத் தவிர பிறவற்றை திராவிடர் கழகம் ஏற்றுக் கொள்கிறது. திராவிடர் கழகம் அதன் தலைவர் வீரமணி அவர்களது ‘வாழ்வியல் சிந்தனைகள்’ என்ற நூலுக்கு இரண்டாம் பாகமும், அவற்றுக்கு பல பதிப்புகளும், அறிமுக விழாக்களும் நடத்தி வருகிறது.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் பெரியார் இறந்து 30 ஆண்டுகள் கழிந்தும் அவரது முழு படைப்புகளும் மக்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில், திராவிடர் கழகத் தலைமையால் 20 ஆண்டுகளுக்கு முன்னரே பல பெரியாரியல் பற்றாளர்களாலும் தொகுக்கப்பட்டிருந்தும் வெளியிடப்படாத ‘குடி அரசு’ இதழ்களின் இரண்டு தொகுப்புகளைத் தனக்குள்ள முழு சக்திகளையும் திரட்டி வெளிக் கொண்டு வந்திருக்கிறது. தொடர்ந்தும் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. சமுதாயம் சாதிகளாலும், பொருளியல் ஏற்றத் தாழ்வுகளாலும் மூடநம்பிக்கைகளாலும் குறுக்கும் நெடுக்குமாகப் பிளவுபட்டும், சிதைக்கப்பட்டும் கிடக்கும் நிலையில் ஒற்றை இலக்கு நோக்கிச் செல்வது என்பது இயலுமா என்பது கேள்விக்குரியதே. மேலும் இடஒதுக்கீடு பற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு போன்ற அவ்வப்போது எழும் சிக்கல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. எனினும், தந்தை பெரியார் திராவிடர் கழகம் எல்லா செயல் தளங்களிலும் இறுதி இலக்கைக் கருத்தில் கொண்டே இயங்கி வருகிறது.

கேள்வி: இயக்கங்களில் பார்ப்பனர்கள் இணைப்பு குறித்துத் தங்கள் அமைப்பின் நிலைப்பாடு என்ன?

கடந்த கால வரலாற்றுக் குறிப்புகள் பார்ப்பனர்களிடம் நம்மை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்துகின்றன. இது இனவாத அடிப்படையில் அல்ல. இயக்கம் நாம் விரும்புகிற திசை வழியில் செல்ல, தொய்வில்லாமல் செல்ல அது தேவையாயுள்ளது. மேலும், முற்போக்குச் சிந்தனையுடன் சில பார்ப்பனர்கள் நமது கருத்துகளை ஏற்றுக் கொண்டிருப்பார்களேயானாலும் அவர்களை நாம் அமைப்பில் சேர்த்துக் கொண்டால் தான் நம்மோடு இணைந்து பணியாற்றுவார்கள் எனில் அவர்களது பார்ப்பன எதிர்ப்பு உண்மையாகுமா? மேலும் பார்ப்பனர்கள் பிறர் நடத்தும் அமைப்புகளில் போய் இணைகிறார்கள் அல்லது இணைய முயற்சிக்கிறார்களேயன்றி தங்கள் இனத்தவர் இழைத்த அநீதிகளை எதிர்த்து, அவர்களுக்குள்ளாகவே ஓர் அணியைத் திரட்டி தங்கள் இனத்தவரிடம் போராடும் நோக்கோடு வரலாறு நெடுகிலும், எந்த முயற்சியிலும் எந்த ஒரு பார்ப்பனரும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. விழிப்புணர்வு பெற்றுள்ள இன்றைய நிலையில்கூட, அம்மாதிரி முயற்சிக்கான சுவட்டைக்கூட நம்மால் காண முடியவில்லையே!

பெரியார் கூறுகிறார்: “........ தன்னையும் திராவிடன் என்று கூறிக் கொண்டு ஒரு பார்ப்பான் முன் வருவானானால், உடனே, ‘நீ திராவிடனா? திராவிடனுக்கு ஏது பூணூல்? அதை முதலில் கத்தரித்துக் கொள்!’ என்போம். அதற்கும் துணிவானானால், ‘திராவிடரில் ஏது நாலு சாதி? நீ பிராமணன் அல்ல; இந்துவல்ல என்பதை ஒப்புக் கொள்’ என்று கூறுவோம். அதற்கு எந்தப் பார்ப்பானும் உடன்படமாட்டான். அதற்கும் உடன்பட்டு அவன் திராவிடனாக ஒப்புக் கொண்டால், பிறகு நமக்கு அவனைப் பற்றிக் கவலை ஏது? சாதி வேறுபாடுகள், உயர்வு தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பது தானே நமது ஆசை. சாதியைக் கைவிட்டு, சாதி ஆசாரத்தைக் கைவிட்டு, ‘அனைவரும் ஒன்றே’ என்ற கொள்கையை ஏற்க முன்வரும் பார்ப்பானை - நாம் ஏன் ஒதுக்கப் போகிறோம். தமிழர் என்று கூறுபவர்கள் இவ்வித நிபந்தனையின் மீது பார்ப்பனர்களைத் தம் கழகத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்களா? இல்லையே! சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற தமிழர் மாநாட்டிற்குத் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் தானே வரவேற்புக் கமிட்டித் தலைவர் மற்றும் இரண்டு மூன்று அய்யர்கள் தம் பூணூல் - பூச்சுகளுடனேயே தமிழர் கூட்டத்தில் ‘தாமும் தமிழர்கள்’ என்று கலந்து கொண்டார்களே? அப்படித் தானே நடக்கும்?

... வேற்றுமையில்லாத மனித சமுதாயம் வேண்டுமென்பதுதான் நமது குறிக்கோளே ஒழிய, வேற்றுமை பாராட்டி யாரையேனும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதல்ல நமது குறிக்கோள். இதை நீங்கள் பெரிதும் மாணவ மாணவிகளான நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.

(சிதம்பரத்தில், 29.9.1948-ல் சொற்பொழிவு ‘விடுதலை’ 5.10.1948)

என்ற பெரியாரின் கருத்துகளையும் இவ்வேளையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கேள்வி : பார்ப்பனர் இணைப்பு மறுப்புக் குறித்து பெரியார் முன்வைத்த காரணங்களின் அடிப்படையிலேயே கருத்து இருக்கிறதா? விரிவுபட்டுள்ளதா? மாற்றமடைந்துள்ளதா?

அப்படியே தொடர்கிறது.

கேள்வி : பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதமயமாக்கலையும் எதிர்க்கிற தங்களின் அமைப்பினர் சமஸ்கிருத புராண பெயர்களை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறீர்களே?

பார்ப்பனியத்தையும், சமஸ்கிருத மயமாக்கலையும் எதிர்ப்பது என்பது வாழ்வியல், பண்பாட்டுத் தளங்கள் அனைத்திலும் நடக்க வேண்டும் என்று மனமார விரும்புகிறோம். தமிழ்ப் பெயர் சூட்டல் மட்டுமே பார்ப்பனிய, சமஸ்கிருத மயமாக்கத்தை நிறைவேற்றிவிடும் என்று நாம் கருதவில்லை. தமிழாக இல்லாவிட்டாலும்கூட, இராவணன், இந்திரஜித், மண்டோதரி, கவுதமன், சித்தார்த்தன், இரணியன் ஆகிய பெயர்கள் அத்தளத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. வடமொழிப் பெயர்களேயானாலும் பிரபாகரன், திலீபன் என்ற பெயர்கள் தமிழின உணர்ச்சியை உண்டாக்குகின்றன. பெயரில் புராண, சமஸ்கிருத பெயரோடிருந்ததால் பெரியார் ஈ.வெ.இராமசாமியும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும், குத்தூசி குருசாமியும், பட்டுக்கோட்டை அழகிரியும் பார்ப்பனியத்தையும் சமஸ்கிருதமாக்கலையும் எதிர்க்காதவர்கள் என்று கூறிவிட முடியுமா? தொடர்ந்து புழக்கத்தில் சமுதாயத்தில் தங்களை அடையாளப்படுத்திவரும் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளாத தோழர்கள் தோழியர்கள்கூட தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப் பெயர்களையே சூட்டி வருகின்றனர் என்பதே உள்ள நிலை.

கேள்வி : திராவிடம் என்ற கருத்தியல் தமிழ்த் தேச அரசிலுக்கு முரணானது என்கிற கருத்து நிலவுகிறதே! அது குறித்துத் தங்களின் நிலைப்பாடு என்ன?

தவறு. பெரியாரும் அவரைத் தொடர்ந்து நாங்களும் ‘திராவிடர்’ என்ற அடையாளத்தை சமுதாய விடுதலைத் தளங்களிலும் ‘தமிழர்’ என்ற அடையாளத்தை அரசியல் விடுதலை தளங்களிலும் பயன்படுத்தி வருகிறோம் என்பதே உண்மை.

கேள்வி : பெரியார் முன்வைத்து முதன்மைப்படுத்தி முழங்கிய ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ எனும் முழக்கம் தங்கள் அமைப்பின் செயல் திட்டத்தில் இடம் பெற்றுள்ளதா?

‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பது மட்டுமல்ல. பெரியார் கூறிய எல்லா கொள்கைகளையும் நாங்கள் ஏற்றுள்ளோம். எங்கள் எல்லா நகர்வுகளும் அவற்றை உள்ளடக்கியும், அவற்றை நோக்கியுமே உள்ளன. தொடர்ந்தும் இருக்கும்.

கேள்வி : வடநாட்டான் கடை மறியல், தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபடம் எரிப்பு போன்ற வலுவான இந்தியப் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்கள் இந்தக் காலத்திற்கும் தேவைக் குரியனவாக இருக்கின்றனவே!

ஒன்றுபட்ட இந்தியா என்பது தங்களுக்கென நாடற்ற பார்ப்பனர்களுக்கும், தங்கள் நாடு போதாமல் பரந்த சந்தையை வளைத்து சுரண்டலையும் பனியாக்களுக்கும் ஆன தேவைகளை நிறைவேற்றுவதுதான். அதை அம்பலப்படுத்துவதும், தகர்ப்பதும் தேவை என்று கருதுகிற அதே வேளை அந்த ‘இந்திய’ முதலாளிகளுடன் பன்னாட்டு முதலாளிகளும் கூட்டுச் சேர்ந்து சுரண்டும் பொறியமைவுகளான உலக வங்கி, உலக மயமாக்கம் ஆகியவற்றையும் அம்பலப்படுத்துவதையும், எதிர்ப்பதுமான தளங்களிலும் எங்களால் முடிந்த அளவு செயலாற்றியே வருகிறோம்.

கேள்வி : திராவிட இயக்கங்கள் தமிழ்த் தேசிய அரசியல் குறித்து அக்கறையில்லாமல் இருப்பதாகக் கூறப்படுகிறதே.

திராவிட இயக்கங்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது தேர்தல் அரசியல் நடத்தும் கட்சிகளை என்றே நாங்கள் புரிந்து கொள்கிறோம். அரசியல் அதிகாரம் பெற முயல்வது கொள்கை நடைமுறைப்படுத்தவே என்றவர்கள் கொள்கை என்பது அதிகார நாற்காலியில் அமர்வது, தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது என்பதாக மாறிப் போயுள்ள நிலையில் நாம் அவர்களிடம் தமிழ்த் தேசிய அரசியல் அக்கறையை எதிர்பார்ப்பதே சரியல்ல.

கேள்வி : பெரியாரின் தாய்மொழி கன்னடம் என்பதால் அவர் தமிழ்த் தேசத்திற்காக ஆற்றிய சமூகப் புரட்சிக்கான சிந்தனைகள், செயல்கள், அனைத்தும் எதிர்மைப் படுத்தப்பட்டும், திரித்தும் கூறப்படுகிறதே!

பெரியாரின் எழுத்துகளையும், பேச்சுகளையும் திரித்தும், தங்கள் வசதிக்கு வெட்டியும், இடம் பொருள் ஏவலைக் கருத்தில் கொள்ளாமலும், தங்களுக்குள் சில மறைமுக ஆசைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சில தன்னல சக்திகள் செய்யும் இப்புரட்டுகளை எல்லோருமாக சேர்ந்து முறியடிப்போம்.

தாழ்த்தப்பட்டோருக்கெனப் ‘பெரியார் போராடவில்லை’ என சிலர் பெரியாரை மறுத்து இழித்தும், சிலர் அதை ஆதரித்தும் வருகின்றனரே?

“தீண்டாமையை ஒழிக்க வேண்டிய கடன் பிராமணரல்லாதாருக்கு மிகவும் முக்கியமானதொரு கடனாகும். ஏனெனில், தீண்டாதார்களின் முன்னேற்றந்தான் பிராமணரல்லாதார்களின் முன்னேற்றமாகும். தீண்டாதார்களின் துன்பந்தான் பிராமணரல்லாதாரின் துன்பமாகும்.” (‘குடிஅரசு’ 15.11.1925)

“பறையன் பட்டம் போகாமல், உங்களுடைய சூத்திரப் பட்டம் போய்விடும் என்று கருதுகிறீர்களேயானால், நீங்கள் வடிகட்டின முட்டாள்களே ஆவீர்கள்.”
(‘குடிஅரசு’ 11.10.1931)

பார்ப்பனரல்லாதாரை நோக்கிப் பெரியார் பேசிய இவையே அவர் சிந்தனைப் போக்கை வெளிப்படுத்தும்.

தாங்கள் தமிழ்த் தேசிய அரசியலை முன்னிறுத்திய கூட்டியக்கச் செயல்பாடுகளில் முனைப்புக் காட்டுவதில்லையே?

ஒவ்வொரு தனிமனிதனும், தான் வளர்ந்த சூழல், தான் சந்தித்த அவலங்கள், தன்னைப் பாதித்த நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே தாங்கள் பணியாற்ற வேண்டிய துறையை முடிவு செய்கின்றனர். அவ்வகையில் தாம் சாதியொழிப்பு, பகுத்தறிவு, பெண்ணுரிமை துறைகளில் பணியாற்றுகிறோம்.
சாதியொழிப்பு போலவே பொதுவுடைமை, பெண்ணுரிமை, சுற்றுச்சூழல், மனித உரிமை, தமிழ்த் தேசியம், மொழிக் காப்பு என பல துறைகளைப் பலர் ஏற்கின்றனர். ஒன்றில் முனைப்பாக நிற்கும்போது மற்றவற்றை எதிர்ப்பதாக அல்லது ஏற்றுக் கொள்ளாததாக பொருள் கொள்ள முடியாது. புத்துலகைப் படைக்க அனைத்து தளங்களிலும் நாம் வென்றாக வேண்டும். எங்கள் கொள்கை பரப்பல்களிலும், செயல்பாடுகளிலும், போராட்டங்களிலும் தமிழ்த் தேசிய உணர்வு கலந்தே உள்ளதை நீங்கள் எளிதில் அறியலாம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com