Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
மார்ச் 2009

அன்று இந்திராவின் ‘மிசா’ இன்று கலைஞரின் ‘தேசிய பாதுகாப்பு சட்டம்’

ம.தி.மு.க.விலிருந்து விலகி மு.கண்ணப்பன் தி.மு.க.வில் சேர்ந்தபோதுதான் கலைஞருக்கு 1976 ஆம் ஆண்டின் நெருக்கடி காலக் கொடுமைகள் எல்லாம் நினைவுக்கு வந்திருக்கிறது. “நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தபோது இந்தியாவிலே முதன்முதலாகச் செயற்குழுவைக் கூட்டி நெருக்கடி நிலையைக் கண்டித்து அதைத் திரும்பப் பெறவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய ஒரே அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்... நாம் ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த நெருக்கடிக்காலச் சட்டத்தை மிசா கொடுமையை எதிர்க்கிறோம் என்று பிரகடனப்படுத்திய காலக் கட்டம் அது” (‘முரசொலி’ மார்ச் 24) - என்று கலைஞர் மலரும் நினைவுகளை அசை போட்டிருக்கிறார்.

மு.க. ஸ்டாலின் தனது பேரன் பேத்தி குடும்ப சகிதமாக இடிக்கப்பட இருக்கும் சென்னை சிறையைப் பார்வையிட்டு, தாம் அடைக்கப்பட்டிருந்த சிறைப்பகுதிக்குள் சென்று, பேரனை புகைப்படம் எடுக்கச் சொல்லி கண்களில் நீர் மல்க, அந்தக் கால நினைவுகளை அசை போட்டிருக்கிறார். கலைஞருக்கு அவை மலரும் நினைவுகளாகவே முடிந்து போயிருந்தால் - நாமும் கூட மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால், அந்த அடக்குமுறைகளை மலரும் நினைவுகளாக அல்ல, நிகழும் நடப்புகளாக மாற்றிக் கொண்டிருக்கிறோமே என்ற உணர்வுகளோ, உறுத்தலோ, அதற்கான சலனமோகூட கலைஞரிடம் இல்லாமல் போய்விட்டதே! அன்று - விசாரணை ஏதுமின்றி ஓராண்டு சிறையில் அடைக்கும் ‘மிசா’வை காங்கிரஸ் தலைவர் இந்திராகாந்தி கைகளில் எடுத்தார் என்றால், இன்று - அதற்கு மாற்றாக கலைஞர் விசாரணை ஏதுமின்றி ஓராண்டு சிறையில் அடைக்கும் “தேசிய பாதுகாப்பு சட்டத்தை” தனது கைகளில் தூக்கியிருக்கிறார்; அவ்வளவுதான் வேறுபாடு!

அன்று - இந்திராகாந்தியின் அவசர நிலையை எதிர்த்து தி.மு.க. வெடிகுண்டு தூக்கவில்லை. கடற்கரையிலே மக்களை கூட்டி வைத்துக் கண்டனக் குரல் எழுப்பி பேசியது; அவ்வளவு தான். அதற்கு ஓராண்டு ‘மிசா’. இன்று - கொளத்தூர் மணியும், இயக்குனர் சீமானும், நாஞ்சில் சம்பத்தும் வெடிகுண்டு தூக்கவில்லை. எந்த காங்கிரஸ் ‘மிசா’வின் கீழ் தி.மு.க.வை ஒடுக்கியதோ, அதே காங்கிரஸ், ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு துணை போவதை மக்களைக் கூட்டி வைத்து அன்று தி.மு.க. கடற்கரையில் பேசியதுபோல் இன்றும் மேடையில்தான் பேசினார்கள்.

ஆனால், அன்று - ‘அவசர நிலை எதிர்ப்புக் களத்தின் போர் வீரனாக’ நின்ற கலைஞர், இன்று - தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக மாறியிருக்கிறார். அன்று - இந்திரா அவசர நிலை பிரகடனம் செய்தபோது - கலைஞரின் ‘முரசொலி’ இந்திராவின் படத்தை ஹிட்லராக மாற்றி கேலிச் சித்திரம் போட்டது. இன்று - நாஞ்சில் சம்பத், எந்த அரசுப் பதவியிலும் இல்லாத சோனியாவை முசோலினி என்று குறிப்பிட்டதற்காக கலைஞர் ஆட்சி ஓராண்டுக்கு சிறையில் வைக்கும் ஆள் தூக்கி சட்டத்தை ஏவுகிறது.

எந்த இந்திராகாந்தி ‘மிசா’வின் கீழ் தி.மு.க.வினரை சிறைப்படுத்தி சர்க்காரியா விசாரணை ஆணையத்தை நிறுவி அலைக் கழித்தாரோ, அவமதித்தாரோ அதே இந்திராவை - ‘நேருவின் மகளே வருக; நிலையான ஆட்சி தருக’ என்று பட்டுக் கம்பளம் விரித்து கைகொடுத்தவரும் இதே கலைஞர் தான்! அன்றும் - கலைஞரின் பச்சை அரசியல் சந்தர்ப்பவாதம் தான் அரங்கேறியது. கடற்கரைக் கூட்டத்திலே இந்த ‘தமிழினத் துரோக நாடகத்தில்’ கதாபாத்திரமேற்றிருந்த கலைஞர், இந்திராவுடன் கைகுலுக்கியபோது, அன்று - கலைஞரை திராவிடர் கழகம் ஆதரித்த நிலையிலும் - பொறுக்க முடியாத கோவை இராமகிருட்டிணன் தலைமையில் செயல்பட்ட திராவிடர் கழக இளைஞரணி - இந்த கூட்டணியைக் கண்டித்து சென்னை நகரிலே சுவரொட்டிகளை ஒட்டி, தனது எதிர்ப்பைப் பதிப்பு செய்தது.

சென்னை சிறையிலே மிசாவில் கைதானவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டிபாபுவும், சாத்தூர் பாலகிருட்டிணனும் சிறையில் பட்ட அடியால் மரணத்தையே தழுவினர். சிட்டிபாபு சிறையில் எழுதிய ‘டைரி’ சிறைக் கொடுமைகளை பதிவு செய்தது. முரசொலி மாறன் முதுகுத் தண்டும் பாதிக்கப்பட்டது. அதே ‘மிசா’வின் கொடுமையினால் தான். அன்று - இந்திராவின் காங்கிரஸ் தமிழ்நாட்டில் தமிழின உணர்வை நசுக்கி, ஆளுநர் ஆட்சியை அறிவித்து, ஆர்.வி.சுப்ரமணியம், தவே என்று இரண்டு பார்ப்பன ஆலோசகர்களை அனுப்பி, தமிழின உணர்வுக்கு எதிராக திட்டமிட்ட ‘அழிப்பையே’ நடத்தி முடித்தார்கள்; தமிழகம் பார்ப்பன அதிகார நாடாக மாற்றப்பட்டது. இன்று - இந்திராவின் மருமகள் சோனியாவின் ஆட்சியில் என்ன நடக்கிறது?

ஈழத் தமிழர்களையும், அவர்களின் விடுதலைப்படையான விடுதலைப் புலிகளையும் பூண்டோடு ஒழிக்க சபதமேற்று செயல்படுகிறது. பணத்தையும், ஆயுதங்களையும் வாரி வழங்கி, உளவு நிறுவனங்களின் சேவைகளைப் பகிர்ந்து, ராடார்களையும், கப்பல்களையும் தூக்கிக் கொடுத்து தமிழர்களை நன்றாகக் கொன்று குவிக்க வைத்து வேடிக்கைப் பார்த்து மகிழ்கிறது. அன்று - இந்திரா ஆட்சியில் தமிழகத்தில் ‘தமிழின’ அழிப்புக்கான ஒடுக்குமுறைகள்; இன்று - சோனியா ஆட்சியில் ஈழத்தில் திட்டமிட்ட தமிழின அழிப்புக்கு பேராதரவு.

அன்று - இந்திரா ஆட்சியின் அடக்குமுறையை எதிர்த்துப் பேசியதால் - தீர்மானம் போட்டதால் - விசாரணையின்றி ஓராண்டுக்கு மேல் சிறை; இன்று - தி.மு.க. ஆட்சியில் சோனியாவை எதிர்த்தால், காங்கிரசின் துரோகத்தைக் கண்டித்துப் பேசினால், ராஜீவ் மரணத்தை விமர்சித்தால் - விசாரணையின்றி ஓராண்டு சிறை. இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றுதான். அன்று காங்கிரசின் ஆணையில் அடக்கு முறை; இன்று காங்கிரசே கேட்க வேண்டாம்; ‘நான் எதற்கு இருக்கிறேன் தாயே’ என்று கலைஞரே - காங்கிரசின் ‘பாத்திரத்தை’ ஏற்றுக் கொண்டு விட்டார். அவ்வளவுதான் வேறுபாடு. கரம் என்றாலே இப்போது கலைஞருக்கு உடனடியாக நினைவுக்கு வருவது காங்கிரஸ்தான் என்றாகிவிட்டது. தி.மு.க.வில் இணைந்த கண்ணப்பன், ‘உங்கள் கரத்தைப் பலப்படுத்துவோம்’ என்று கலைஞரிடம் கூறியவுடன், ‘தோழமைக் கட்சியின் சின்னம் கரம்; காங்கிரஸ் கட்சியின் சின்னம் கரம்; அதைப் பலப்படுத்துவோம் என்று கண்ணப்பன் சொல்லியிருக்கிறார்” என்று கலைஞர் அதற்கு விளக்கம் தரும் எல்லைக்குப் போய் விட்டார்.

• அந்தக் ‘கரம்’ தான் - மிசாவின் கரம்;
• அந்தக் ‘கரம்’ தான் - சிட்டிபாபுகளையும், பாலகிருஷ்ணன்களையும் பிணமாக்கிய ‘கரம்’.
• அந்தக் ‘கரம்’ தான் - ஸ்டாலினையும், முரசொலிமாறனையும் - சிறைக்குள் அடித்து உதைத்த ‘கரம்’.
• அந்தக் ‘கரம்’ தான் - இன்றும் ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைகளுக்கு நீண்டிடும் கரம்.

இன்னமும் தமிழின உணர்வை இழந்திடாமல், அந்த உணர்வுக்காக - எந்தப் பலனையும் எதிர்பாராமல் தி.மு.க.வில் உழைத்துக் கொண்டிருக்கும் உண்மை தமிழின உணர்வாளர்களே; தமிழின இளைஞர்களே!

உங்கள் குருதியோட்டத்தோடு கலந்து நிற்கும் - அந்த இன உணர்வோடு சிந்தியுங்கள்! கலைஞரின் இந்த நிலைப்பாடுகள் சரி தானா? துரோக காங்கிரசைத் தூக்கி நிறுத்தி - அவர்கள் நடத்தும் இனப் படுகொலையின் கோர முகத்தை மறைக்கத் துடிப்பது - நேர்மை தானா? காங்கிரசை மகிழ்விக்க - தேசிய பாதுகாப்புச் சட்டத்தை கையில் எடுப்பது நேர்மைதானா? உள்ளத்தைத் தொட்டு சிந்தியுங்கள்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com