Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2009

ஒரு சார்பு சுதந்திர பிரகடனம்: சில வரலாற்று தகவல்கள் (2)

ஒரு சார்பாக - தமிழ் ஈழ விடுதலை அரசு பிரகடனம் செய்வதற்கு சட்ட அறிஞர் விசுவநாதன் உருத்திரகுமார் தலைமையில் செயல்திட்டக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக - அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாபா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்து - விடுதலைப் புலிகள் அமைப்பின் அதிகார பூர்வமானதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை என்றாலும் இத்தகைய ஒரு சார்பு சுதந்திரப் பிரகடனங்கள் வரலாற்றில் விடுதலைக்கு முன் நிகழ்ந் துள்ளன. அது பற்றிய சில வரலாற்றுத் தகவல்கள்:

கொரியா

ஜப்பானிய காலனி ஆதிக்கத்தின் கீழ் கொரியா இருந்த காலத்தில் கொரிய தேசியம் ஒடுக்குமுறைக்குள்ளானது. கொரிய மொழி, கலாச்சாரம் சிதைக்கப்பட்டன. கொரியாவின் கலாச்சார சொத்துகள் ஜப்பானால் சூறை யாடப்பட்டன. 1900களின் தொடக்கத்தில் கொரிய விடுதலை இயக்கங்கள் வீச்சோடு எழுந்தன. 1919 ஆம் ஆண்டு அமெரிக்காவின் உட்ரோ உல்சன், பாரிஸ்அமைதி மாநாட்டில் சுய நிர்ணய உரிமை தொடர்பாக ஆற்றிய உரையானது கொரிய மாணவர்கள் மத்தியில் விடுதலைக் கிளர்ச்சியைத் தீவிரமாக்கியது. அத்தகைய எழுச்சிகளுடன் மார்ச் 1 இயக்கம் என்ற இயக்கமும் தீவிரமாக களத்தில் இறங்கியது. மார்ச் 1919 ஆம் நாளன்று கொரி யாவின் 33 தேசியவாதிகள் “ஒருதலைபட்ச சுதந்திரப் பிரகடனத்தை” வெளியிட்டனர். 12 மாதங்களில் இந்தப் போராட்டத்தை ஜப்பானிய ஆதிக்க அரசு ஒடுக்கியது. இந்தப் பிரகடனத்தை நடைமுறைப்படுத்த வலி யுறுத்தி 1500 ஆர்ப்பாட்டங்கள் நடத்தப் பட்டன. 20 இலட்சம் கொரியர்கள் இவற்றில் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் ஏறத்தாழ 7500 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 45 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சுதந்திரப் பிரகடனமே கொரியாவின் விடுதலைக்கும் வித்திட்டது என்று வரலாற்றா சிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

லிதுவேனியா

ஜெர்மனிய துருப்புகள் தனது நாட்டில் நிலை கொண்டிருந்தபோதும் 1918 ஆம் ஆண்டு லிதுவேனியா சுதந்திர நாடாக பிரகடனம் வெளியிட்டு ஜனநாயக கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. அதன் பின்னர் லிதுவேனியா சோவியத் ஒன்றியத்தில் இணைக்கப்பட்டது. 1990களில் சோவியத் ஒன்றியம் வீழ்ந்தபோது சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேறி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்ட முதலாவது நாடு லிதுவேனியாவாகும்.

பிரகடனத்துக்குப் பின்னர் கொரில்லா யுத்தம் நடத்திய பிலிப்பைன்ஸ்

1898 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாளன்று ஸ்பெயினின் காலனி ஆதிக்கத்துக்கு எதிராக பிலிப்பைன்ஸ் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது. ஆனால், பிலிப்பைன்சின் ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்காவும் ஸ்பெயினும் இதனை ஏற்க மறுத்தன.

1898 ஆம் ஆண்டு ஜூன் 23 முதல் செப்டம்பர் 10 வரை முதலாவது தேர்தல்கள் நடத்தப்பட்டன. பிலிப்பைன்சின் அரச தலைவராக அகுனல்டோ தெரிவு செய்யப் பட்டார். முதலாவது பிலிப்பைன்ஸ் குடியர சானது 1899ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனிடையே அமெரிக்காவுக்கும் ஸ்பெ யினுக்கும் இடையேயான ஒப்பந்தம் ஒன்றின் மூலம் ஸ்பெயின் வெளியேறிவிட பிலிப்பைன்சில் அமெரிக்கா நின்றது.

1899 ஆம்ஆண்டு அமெரிக்காவும் பிலிப் பைன்ஸ்குடியரசுக்கும் இடையே யுத்தம் வெடித்தது.

இந்த யுத்தத்தின்போது இடைக்கால உத்தியாக பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, கொரில்லா போர் முறையை கடைபிடிக்க தெரிவு செய்தார். அமெரிக்க இராணுவத்துக்கு பெரும் சேதம் ஏற்படுத்தப் பட்டது. 1901 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரச தலைவர் அகுனல்டோ, சில துரோகி களால் காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் 1901 ம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் நாள் அமெரிக்காவின் அரசாட்சியை ஏற்பதாகவும் தனது படையினரின் ஆயுதங்களை ஒப்படைப்ப தாகவும் அகுனல்டோ அறிவித்தார். அதன் பின்னரும் பிலிப்பைன்ஸ் விடுதலைக்கான யுத்தம் நடைபெற்றது.

1935 ஆம் ஆண்டு பிலிப்பைன்சுக்கு அரைவாசி சுயாட்சி உரிமை அளித்த அமெரிக்கா, 1946 ஆம் ஆண்டு முழு சுதந்திரம் அளித்தது.

1898 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுதந்திரப் பிரகடனம் ஏற்கப்பட்டது. பிலிப்பைன்ஸ் மக்கள் இன்றளவும் சுதந்திரப் பிரகடன நாளை “கொடி நாளாக” கடைபிடித்து வருகின்றனர்.

ஐ.நா. உருவான பின்னர்: வியட்நாம்

1887 இல் தென் கிழக்கு ஆசியாவில் வியட் நாம், கம்போடியா, லாவோஸ்உள்ளிட்ட பகுதிகளை இணைத்து பிரெஞ்ச் இந்தோ சீனா என்கிற ஒன்றியம் உருவாக்கப் பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது இந்தோ சீனத்தில் இருந்த டொன்கின் பகுதியை ஜப்பான் பயன்படுத்த பிரான்சு அனுமதித்தது. இதனைத் தொடர்ந்து ஒட்டு மொத்த இந்தோ சீனா ஒன்றிய ஆளுகையை ஜப்பான் கைப்பற்றியது. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்படும் நாள் வரை இந்த ஆதிக்கம் நீடித்தது.

இந்நிலையில் 1945 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் நாளன்று வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை ஹோசிமின் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து பிரெஞ்சு படையினருக்கும் வியட்நாமியர் களுக்கும் இடையே மோதல் உருவானது.

1946 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் நாளன்று பிரெஞ்சு ஒன்றியம் மற்றும் இந்தோ-சீன கூட்டமைப்பில் வியட்நாம் ஒரு சுயாட்சி பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டது. வட வியட்நாமில் நிலை கொண்டிருந்த சீன இராணுவத்தை வெளியேற்றும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சீனப் படை வெளியேறிய உடன் மோதல் மூண்டது. ஹோசிமின் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் தப்பினார்.

1950 ஆம் ஆண்டு மீண்டும் வியட்நாமிய விடுதலைப் பிரகடனத்தை வெளியிட்டார்.

அதே ஆண்டுகளில் ருசியாவின் ஸ்டாலின் மற்றும் சீனாவின் மாவோவை ஹோசிமின் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் சோவியத் ருசியா மற்றும் சீனாவினால் வியட்நாம் அங்கீகரிக்கப்பட்டது.

கொரில்லா போர் முறை மூலம் பிரெஞ்சுப் படைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. வட வியட்நாமிலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற வியட்நாமிய குடியரசுப் பிரக டனம் செய்யப்பட்டது. தென் வியட்நாமில் பிரெஞ்சு, பிரித்தானியா மற்றும் அமெரிக்கப் படைகள் நிலை கொண்டிருந்தன. 1954 ஆம் ஆண்டு அப்பிராந்தியத்திலிருந்து பிரெஞ்சுப் படைகள் வெளியேற அமெரிக்காவின் தலையீடு தொடங்கியது. அதுவே வியட்நாம் போருக்கும் வழி வகுத்தது.

இஸ்ரேல்

1947 ஆம் ஆண்டு பாலஸ்தீனை இரண்டாகப் பிரித்து இஸ்ரேலை உருவாக்க அனைத்துலக நாடுகள் தீவிரம் காட்டின. இதனை அரபு லீக் எதிர்த்த நிலையில் 1948 ஆம் ஆண்டு மே 14 ஆம் நாள் இஸ்ரேல், ஒரு தலைபட்ச பிரகடனத்தை அறிவித்தது. இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்ட 11 ஆவது நிமிடத்தில் அமெரிக்கா இப் பிரகடனத்தை அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து கௌதமாலா, நிக்கரகுவா, ஊருகுவே ஆகிய நாடுகள் அங்கீகரித்தது. மே 17 ஆம் நாள் சோவியத் ருசியா, இஸ்ரேலை அங்கீகரித்தது. அதன் பின்னர் பல நாடுகள் இஸ்ரேலை அங்கீகரித்தன.

பாலஸ்தீன்

1988 ஆம் ஆண்டு பாலஸ்தீன் விடுதலை இயக்கத்தின் சட்டவாக்க அமைப்பான பாலஸ்தீன தேசிய சபையானது பாலஸ்தீன சுதந்திரப் பிரகடனத்தை ஒருதலைபட்சமாக “அல்ஜைரில்” வெளியிட்டது. மேலும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் எந்த ஒரு பாலஸ்தீன பிரதேசமும் இருக்க வில்லை. பாலஸ்தீனப் பகுதிகளில் “ஒரு நடைமுறை அரசாங்கத்தை” அது கொண்டிருக்கவில்லை. தொடக்கத் தில் பாலஸ்தீனத்தை ஐ.நா. அங்கீகரிக்க வில்லை. ஆனால் அரபு நாடுகள் அங்கீ கரித்தன. பாலஸ்தீன அரசாங்கத்தை அங்கீகரிக்காத போதும் ஓஸ்லோ ஒப்பந்தங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்தீன நிர்வாக சபையுடன் இராஜதந்திர உறவுகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் ஹமாஸ் இயக்கம், ஜனநாயக முறைப்படியான தேர்தலில் பாலஸ்தீனத்தில் வெற்றி பெற்ற போதும் பல்வேறு நாடுகள் அதனை அங்கீகரிக்க மறுத்தன. நிதி உதவிக நிறுத்தப்பட்டன. ஹமாசின் ஆட்சி யும் கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

சோமாலிலாந்த்

அனைத்துலகத்தினால் அங்கிகரிக் கப்பட்ட சோமாலியாவின் தெற்குப் பகுதியில் ஏடன் கடற்பரப்பை யொட்டி சோமாலிலாந்த் என்ற பெயரில் “நிழல் அல்லது நடைமுறை சுதந்திரக் குடியரசு” பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு மே 18 ஆம் நாளன்று சோமாலியாவிலிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்ததாக அந்நாட்டு மக்கள் பிரகடனம் செய்தனர். இதனை அனைத்துலக சமூகமோ பிறநாடுகளோ இதுவரை அங்கீகரிக்கவில்லை.

இதனது எல்லைகளாக மேற்குப் பகுதியில் டிஜிபௌட்டி, தென் பகுதியில் எத்தியோப்பியா, கிழக்கில் சோமாலியா என பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மொத்த மக்கள் தொகை 3.5 மில்லியனாகும்.

1884 ஆம் ஆண்டில் சோமாலி லாந்த், பிரித்தானியாவின் ஆக்கிரமிப் புக்குள்ளானது. 1898 ஆம் ஆண்டு வரை பிரித்தானிய இந்தியாவில் சோமலிலாந்த் நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் 1905 ஆம் ஆண்டு காலனி அலுவலகம் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது.

1960 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் பிரித்தானியாவிடமிருந்து சோமாலிலாந்த் சுதந்திரமடைந்தது. ஆனால் 5 நாட்களுக்குப் பின்னர் 1960 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் நாள் இத்தாலி ஆக்கிரமித்தது. பிறகு சோமாலிலாந்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதுவும் பிரித்தானிய சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு இன்றைய சோமா லியா நாடு உருவாக்கப்பட்டது.

இப்புதிய சோமாலியாவில் தமது இன மக்களது அபிலாசைகள் நிறை வேற்றப்படவில்லை என்று முன்னைய பிரித்தானிய சோமாலிலாந்த் மக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதனால் 1980களில் சோமாலியாவில் உள்நாட்டு யுத்தம் வெடித்தது. 1991 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் காங்கிரஸ், சோமாலியாவிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டது.

1994 ஆம் ஆண்டு சோமாலிலாந்த் மத்திய வங்கி உருவாக்கப்பட்டது. சோமாலிலாந்தின் தேசியக் கொடி 1997 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

2001 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாளில் சோமாலிலாந்த் அரசியல் சட்டம் மக்களின் வாக்கெடுப்பின் மூலம் ஏற்கப்பட்டது.

சோமாலிலாந்த் அரசியல் சட்டப் படி, சோமாலிய மொழி ஆட்சி மொழியாகும். பாடசாலைகளிலும், மசூதிகளிலும் அரபி மொழி பயன் படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் ஆங்கில மொழி கற்பிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா, இத்தாலி மற்றும் எத்தியோப்பியாவில் அறிவிக்கப்படாத தூதரகங்களையும் சோமாலிலாந்த் உருவாக்கியுள்ளது. 20-க்கும் மேறபட்ட அமைச்சுப் பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்படாத நடைமுறை அரசாங்கம் இயங்கி வருகிறது.

பெல்ஜியம், கானா, தென்னாப் பிரிக்கா, சுவீடன், ருவாண்டா, நார்வே, கென்யா, அயர்லாந்து ஆகிய நாடுகளிடனும் சோமாலிலாந்த் அரசி யல் உறவுகளைப் பேணி வருகிறது.

2007 ஆம் ஆண்டு சனவரி 17 ஆம் நாளன்று சோமாலிலாந்துடன் இணைந்து செயற்படுவது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினர் சோமாலிலாந்த் சென்றனர்.

அதேபோல் ஆப்பிரிக்க ஒன்றியத் தின் பிரதிநிதிகளும் 2007 ஆம் ஆண்டு சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாள்களில் சோமாலிலாந்துக்கு பயணம் மேற் கொண்டனர்.

எத்தியோப்பியாவின் பிரதமர், 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சோமா லிலாந்த் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அரசு தலைவர் ககினைச் சந்தித்து உரையாடினார்.

சோமாலிலாந்த்தை ஆப்பிரிக்க ஒன்றியம் அங்கீகரிக்க மறுக்கும் நிலையில் எத்தியோப்பியா, சோமாலி லாந்துக்கான அங்கீகாரத்துக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அரசியல் நோக்கர்கள் கருது கின்றனர்.

(தொடரும்)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com