Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2006

இடஒதுக்கீடு: தேவை சமூகப் பார்வை

சென்னையில் செயல்படும் ‘எம்.அய்.டி.எ.’ நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் வி.கே.நடராஜ் ‘இந்து’ ஏட்டில் (மே 27) இட ஒதுக்கீடு பற்றி ஆழமான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இட ஒதுக்கீட்டினால் - தனி மனிதருக்குக் கிடைக்கும் பயனாகத்தான் விவாதங்கள் நடக்கின்றன. இது சரியான கண்ணோட்டமாகாது. சமுதாயத்துக்குக் கிடைக்கக் கூடிய பயன்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இதுதான் சரியான கண்ணோட்டம் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களும், பெண்களும், நாட்டின் கல்வி, வேலை வாய்ப்பு உட்பட, பல துறைகளிலும், பங்கேற்கும் போதுதான், சமூகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியும். அமெரிக்காவில் - கறுப்பர்கள் உட்பட, மைனாரிட்டிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு களை அந்நாட்டு உச்சநீதிமன்றங்கள், ஒட்டுமொத்த சமூகக் கண்ணோட்டத்தில் அணுகியே தீர்ப்பு வழங்கியுள்ளன என்று கூறுகிறது இக்கட்டுரை.

Rice அமெரிக்காவில் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் கறுப்பர் ஒருவர் இடஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப் பட்டதை எதிர்த்து, வெள்ளை மாணவர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் பல்வேறு இனங்களின் பங்கேற்போடு கல்வி நிறுவனங்கள் இயங்கும் போது தான், கல்வியின் தரமும், சிறப்பும் அதிகமாகிறது என்று கூறி கறுப்பர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தியது. பல்வேறு இனப் பிரிவினரிடமிருந்து தகுதியான தலைமைப் பண்புள்ளவர்கள் உருவாவதற்கு - இந்த இட ஒதுக்கீடு அவசியமாகிறது என்றும், அமெரிக்க உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக் காட்டியது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்பது, அவர்களுக்கான உரிமை. சமூகத்தின் கட்டாயத் தேவை என்று கருதாமல், ஏதோ சலுகைத் தருவது போல் இந்தியாவில் தவறான பார்வை நிலவுகிறது. இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட காரணத்தால் தான், பின்தங்கிய சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் – உயர் கல்விக்குப் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

தகுதி திறமை பேசுகிறவர்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். இடஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்டதால் தான், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த மாணவர்கள் - திறந்த போட்டியில் இடம் பெறத் துவங்கியுள்ளனர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே இட ஒதுக்கீடு தகுதி திறமையை பாழடித்துவிடும் என்ற வாதம், இங்கே அடிபட்டுப் போகிறது. அதோடு, தனியார் தொழிற் கல்லூரிகளில், பணம் கொடுத்து, இடங்கள் வாங்கப்படுவதை - ‘தகுதி திறமை’ பேசுகிறவர்கள், எதிர்ப்பதில்லையே என்று சுட்டிக் காட்டி யிருக்கிறார், கட்டுரையாளர் வி.கே. நடராஜ்.

‘தகுதி-திறமை’ இல்லையா?

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் சேர்க்கைக்கான மதிப்பெண்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உதாரணமாக 2005 ஆம் ஆண்டு, தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கைக்கான மதிப் பெண்களைப் பாருங்கள். திறந்த போட்டியில் சேர்ந்தவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 294.83; பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண் - 294.59; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பெற்ற மதிப் பெண் - 292.50. ஒவ்வொரு பிரிவினருக்கும் இடையில் உள்ள மார்க் இடைவெளி, மிகமிகக் குறைவாக இருப்பதைப் பார்க்க முடியும்! தமிழ்நாட்டில் மொத்தமுள்ள மருத்துவப் பட்டப்படிப்புக்கான இடங்கள் 1398.

இதில் எல்லா சாதியினரும் ‘மதிப்பெண்’ அடிப்படையில் போட்டியிட்டுப் பெறக்கூடிய இடங்கள் 433. இதில் பார்ப்பன முன்னேறிய சாதியைச் சார்ந்தவர்கள் 59 பேர் தான் இடம் பிடிக்க முடிந்தது.
14 தாழ்த்தப்பட்ட சமுதாய மாணவர்கள் உட்பட 374 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்டோர் இந்த திறந்த போட்டியில் இடம் பிடித்துவிட்டனர். இதில் முதல் 14 இடங்களைப் பிடித்தவர்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்டவர்கள் தான். ஒரு பார்ப்பனர் கூட இல்லை. இது தமிழ்நாட்டில் தொடர்ந்து இடஒதுக்கீடு தீவிரமாக அமுல் படுத்தப்பட்டதால் உருவான சமூகப் புரட்சி! எனவே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட் டோருக்கு இட ஒதுக்கீடு செய்தால் - ‘தகுதி-திறமை’ போய்விடும் என்ற வாதம் சாரமில்லாததது.

காண்டலிசாரை

அமெரிக்காவில் செல்வாக்கு மிக்க பதவியான வெளியுறவுத்துறை செயலாளர் பதவியில் ஒரு கறுப்பினப் பெண் இருக்கிறார். அமெரிக்காவில் இப்பதவியில் இருப்பவர்கள் ஆய்வு வெளியுறவு அமைச்சராகவே கருதப்படுகிறார். அந்தப் பதவியில் இருக்கும் காண்டலிசாரை என்ற பெண் - அமெரிக்காவின் கறுப்பர் இனத்தைச் சார்ந்தவர். அமெரிக்காவின் புகழ் பெற்ற டான்போர்டு பல்கலைக் கழகத்தில் அவர் படித்தவர். அந்தப் பல்கலைக்கழகம் - கறுப்பர்களுக்கு தனி ஒதுக்கீடு செய்ததால் தான், இந்த நிலைக்கு தன்னால் உயர முடிந்தது என்று பெருமையுடன் கூறுகிறார், சாண்டலிசா. ‘அவுட்லுக்’ ஏடு வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை, இத் தகவலைத் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் -
ஹார்வார்டு பல்கலைக் கழகம்
பிரின்சிடோ பல்கலைக் கழகம்
ஏல் பல்கலைக் கழகம்
மிச்சிகன் பல்கலைக்கழகம்
கொலம்பியா பல்கலைக்கழகம்
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம்
ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகம்
கார்னெல் பல்கலைக்கழகம்
பென்செல்வேனியா பல்கலைக்கழகம்

- ஆகிய பல்கலைக் கழகங்களில் மைனாரிட்டி இனத் தவர்களான கருப்பர்கள், ஹிபானிக், செவ்விந்தியர்கள் (பூர்வகுடிகள்) மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஒதுக்கீடு சட்டரீதியாக கட்டாயப் படுத்தப்படாமலே, பல்கலைக் கழகங்கள் தாமாக முன் வந்து வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். கறுப்பர்கள் தங்களுக்கென உரிமை கோரி போராடியதைத் தொடர்ந்து 1964ல் அமெரிக்க குடிமை உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இன வேற்றுமைகளுக்கு இந்த சட்டம் முற்றுப் புள்ளி வைத்தது.

அமெரிக்காவில் 19 மாநிலங்களில், கறுப்பர்களுக்கும், வெள்ளையர்களுக்கும் தனித் தனியாக கல்லூரிகள் நடத்தப்பட்டு வந்தன. இந்தச் சட்டம் வேறுபாட்டை ஒழித்ததோடு ஒரே பல்கலைக் கழகத்தில் அனைத்து இனப் பிரிவினரும் ஒன்றாக இணைந்து படிப்பதைக் கட்டாயமாக்கியது. இந்த வேறுபாடு காட்டாத இதர மாநிலங்களில் கறுப்பர்களுக்கும், மைனாரிட்டிகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது, சட்டப்படி கட்டாயமில்லை. ஆனால், தாங்களாகவே முன் வந்து, இந்த இட ஒதுக்கீடுகளை அமுல்படுத்தி வருகிறார்கள்.

அருணன் கேட்கிறார்!

எழுத்தாளரும், சமூக சிந்தனையாளருமான பேராசிரியர் அருணன் சேலத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசுகையில் - ‘தரம்’ பற்றிப் பேசும் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களிடம் முதலில் ‘தரம்’ இருக்கிறதா? அப்படி அவர்களிடம் ‘தரம்’ இருந்திருக்குமானால், நோயாளிகளுக்கு சிகிச்சை செய்ய மறுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்களா? என்ற சரியான கேள்வியைக் கேட்டுள்ளார். பரம்பரை பரம்பரையாக படித்தவர்களிடம் அறிவாற்றல் அதிகமிருக்கும் என்று கூறுகிறவர்கள், பரம்பரை பரம்பரையாக மருத்துவத் தொழில் செய்து வந்த நாவிதர்களுக்கு அல்லவா டாக்டர் படிப்புக்கான இடங்களை வழங்கியிருக்க வேண்டும்? ஏன் வழங்கவில்லை? என்றும் கேட்டுள்ளார்.

Advani ‘இந்திய மருத்துவர்கள் கழகம்’ என்ற டாக்டர்கள் அமைப்பு, இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டத்தை, தன்னிச்சையாகத் துவக்கியது. விரல்விட்டு எண்ணக் கூடிய சில பார்ப்பன முன்னேறிய சாதி டாக்டர்கள், கழகத்தை தங்களின் நலனுக்குப் பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்தக் கழகத்தில் இடம் பெற்றிருந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வெளியேறி புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கியதோடு, மத்திய அரசின் 27 சதவித இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஜூன் 4 ஆம் தேதி டெல்லியில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர். இட ஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தை சில அரசியல் சக்திகள் திரைமறைவில் இயக்கி வருவதாக வெளியேறிய டாக்டர்களில் ஒருவரும், புதிய சங்கத்தின் அமைப்பாளருமான டாக்டர் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

அமைதி வழியில்...

புது டில்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பார்ப்பன - உயர்சாதி மருத்துவர்கள், ‘ஒத்துழையாமை போராட்டத்தை’ அறிவித்து சண்டித்தனம் செய்யும் போது, இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் பெரும்பாலான மருத்துவர்கள், அமைதியான வழியில், மருத்துவப் பணிகளை செய்து கொண்டே, இடை வேளை நேரத்தில் மட்டும், இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ‘சமவாய்ப்புளுக்கான மருத்துவர் கழகம்’ என்ற அமைப்பை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இட ஒதுக்கீட்டை அமுல்படுத்துவதில், மத்திய அரசு கண்டிப்பாக செயல்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியதோடு, தரமான கல்விக்கும், சமமான பங்களிப்புக்கும், மருத்துவர்கள் வலிமையான இயக்கம் நடத்த வேண்டும் என்றம், மருத்துவத் துறை தனியார் மயமாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஒரே குரல்

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் தற்காலிகமாக ‘ஆதரவு நாடகம்’ நடத்தி வந்த பா.ஜ.க. இப்போது தனது உண்மை முகத்தைக் காட்டிவிட்டது. இட ஒதுக்கீடு கொள்கையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அத்வானி கூறியுள்ளார். புது டில்லியில் கூடிய பா.ஜ.க.வின் தேசியக் குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் பேசுகையில், “இட ஒதுக்கீட்டின் பயன் முன்னேறிய சாதியினரில் ஏழைகளுக்குக் கட்டாயம் கிடைக்க வேண்டும்” என்று வெளிப்படையாகக் கூறி, தனது பார்ப்பனிய சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்திருப்பது, சமூக நீதியல்ல; சமூகப் பதட்டம் என்றும் அவர் பேசியிருக்கிறார்.

கட்சியின் அதிகாரபூர்வ பேச்சாளர் ரவிசங்கர் பிரசாத் என்பவர் கூறுகையில் - “பிற்படுத்தப்பட்டோரில், பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்; அதுவே பா.ஜ.க.வின் கொள்கை” என்று அறிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதே கருத்தையே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வி நிறுவனங்களில், இன்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடே, துவங்கப்படாத நிலையில், பொருளாதார அளவுகோலைப் புகுத்தத் துடிப்பது, பார்ப்பனீயத்தின் குரல்தான் என்று சமூக நீதி ஆதரவாளர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள்.

பெண்கள் அமைப்பு

‘அகில இந்திய ஜனநாயக பெண்கள் கழகம்’ இட ஒதுக்கீட்டை முழுமையாக ஆதரித்துள்ளதோடு, இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்களை வன்மையாகக் கண்டித்துள்ளது. பல நூற்றாண்டுகளாக, சாதியமைப்புத் திணித்த சமூக வேற்றுமைகளையும், சமத்துவமின்மையையும் ஓரளவு சரி செய்வதற்கான திட்டம்தான் இட ஒதுக்கீடு. இந்த வேற்றுமைக்கு பலியானவர்களில் பெண்களே அதிகம் என்றும் அது கூறியுள்ளது.

தொகுப்பு: இரா


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com