Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூன் 2006

விடுதலைப் புலிகளை கொச்சைப்படுத்தும் ‘சர்ச்சை’கள்!

கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் அத்தனை நடவடிக்கைகளும் பார்ப்பனரல்லாத தமிழர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகின்றன என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. பெரியார் திராவிடர் கழகம் இந்த செயல்பாடுகளைப் பாராட்டி வரவேற்றும் இருக்கிறது. ஆனாலும், சாதனைகளுக்கிடையே களங்கமாகி நிற்கும், தி.மு.கவின் அண்மைக்கால நடவடிக்கை ஒன்று தமிழினத்தின் உணர்வுகளைக் கடுமையாகக் காயப்படுத்தியிருக்கிறது. இதை சுட்டிக்காட்ட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு - ‘வைகோ’வினால் உயிருக்கு ஆபத்து ஏற்படப் போவதாக, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளித்த மனுவைப் பற்றித்தான் குறிப்பிடுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு உண்மையானதா? பொய்யானதா? என்பது குறித்து விவாதிப்பது நமது நோக்கமல்ல.

ஆனால், அந்தப் புகார் மனுவில் ‘வைகோ’ தீவிரவாத அமைப்புகளோடு தொடர்புடையவர் என்று கூறி, அந்தத் தீவிரவாத அமைப்பின் வழியாக அமைச்சர் தயாநிதி மாறனுக்கு - வைகோ ஆபத்தை உருவாக்கலாம் என்று அந்த மனுவில் தி.மு.க. சுட்டிக் காட்டியிருக்கிறது. 1993-லும் இதேபோல் - வைகோ மீது கலைஞர் ஒரு புகார் கூறினார் - அப்போதும் விடுதலைப்புலிகளை இதற்குப் பயன்படுத்துவதாகவே சந்தேகம் எழுப்பப்பட்டது.

இப்போதும் தி.மு.க. புகார் மனுவில், ‘விடுதலைப்புலிகள்’ அமைப்பையே பயங்கரவாத அமைப்பாக சுட்டிக்காட்டுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் தன்மீது போடப்பட்ட பொய் வழக்கையே மறந்துவிட்டு, ஜெயலலிதாவோடு வைகோ சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக் கொண்டுவிட்டார். தி.மு.க.வோ, அதன் அரசியல் எதிரியான ஜெயலலிதா ஆட்சி, நீதிமன்றத்தில் வைகோவுக்கு எதிராக விடுதலைப்புலிகளோடு தொடர்புபடுத்தி முன்வைத்த வாக்குமூலத்தை தனது புகார் மனுவில் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதுதான் விந்தையிலும் விந்தை. இந்த அரசியல் மோதலில் வீணாக ஒரு விடுதலை இயக்கத்தை ஏன் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதுதான் நமது கேள்வி!

கால் நூற்றாண்டு காலமாக, ஆயுதம் தாங்கியப் போராட்டத்தை அரசு ராணுவ ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடி, 20 ஆயிரம் விடுதலைப் புலிகள், சுமார் ஒரு லட்சம் தமிழ் மக்களின் உயிரை மண்ணின் விடுதலைக்காக அர்ப்பணித்து, தமிழ் ஈழப் பிரதேசத்தில் 70 சதவீத பகுதிகளை விடுவித்து, அங்கே, ஒரு தனியாட்சியை நடத்திக் கொண்டு, தமிழன் பெருமையை உலகுக்கே பறைசாற்றிக் கொண்டிருப்பவர்கள் விடுதலைப்புலிகள்!

அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள், அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் ஊதுகுழலாகி, நடுநிலைப் பார்வையைத் தவிர்த்து, விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்துள்ள காலச் சூழலில், தமிழ்நாட்டிலிருந்தும், “ஆம், அவர்கள் பயங்கர வாதிகள்தான்” என்று ஒப்புதல் வாக்குமூலம், தமிழர்களின் பேராதரவோடு அதிகாரத்துக்கு வந்துள்ள ஒரு கட்சியின் குரலாக ஒலிக்கிறது என்றால், இது மிகப் பெரும் கொடுமையல்லவா?

இந்திய அரசிடம், இலங்கை அரசுப் பிரதிநிதிகளும், அதிபர்களும், அமைச்சர்களும் ஒரு சார்பாக தங்கள் கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், ஈழத் தமிழர்களின் நியாயங்களை இந்திய அரசிடம் எடுத்துக் கூற, அந்நாட்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தூதுக் குழுவை பிரதமர் சந்திக்க வேண்டும் என்று, தமிழின உணர்வாளர்கள் வலியுறுத்தி வரும் சூழ்நிலையில், தமிழக தி.மு.க. எம்.பி.க்கள், விடுதலைப்புலிகளை ‘பயங்கரவாதிகள்’ என்று சித்தரித்து புகார் கொடுப்பது நியாயம் தானா? இதைவிட மிகப்பெரும் கொடுமை, ஒரு விடுதலை இயக்கத்தை யாருக்காகவோ கொலை செய்யக்கூடிய கூலிப்படையாக சித்தரிப்பதுதான்!

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டித்து, இந்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தி.மு.க. அரசும் அதை அங்கீகரித்து அதற்கான அறிவிக்கையை வெளியிட்டது. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், கடற்படைத் தளபதி அட்மிரல் அருண்பிரகாசும் எடுத்துக் கூறிய பிறகும், இலங்கை அரசே விடுதலைப்புலிகளை தடை செய்யாத நிலையில், இந்தியாவில் தடை நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை. விடுதலைப்புலிகளை ‘பயங்கரவாத இயக்கம்’ என்று முத்திரைக் குத்தி தடை செய்துவிட்டு, பிறகு சமரசப் பேச்சு வார்த்தைக்குப் போக வேண்டும் என்று அவர்களுக்கு அறிவுரை கூறும் தார்மீக உரிமை நமக்கு உண்டா? இந்தத் தடை நீட்டிப்பில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், மாநில அரசு, சட்டரீதியாக செய்ய வேண்டிய ஒரு ‘சடங்கு’ என்று கருதி, அதைக்கூட நாம் புறந்தள்ளிவிடலாம். ஆனால், ‘தி.மு.க. - வைகோ’ அரசியல் மோதல் பிரச்சினையில் ஒரு விடுதலை இயக்கத்தை ‘பயங்கரவாத இயக்கமாகவும்’ அதைவிட மோசமாக “கூலிப் படையாகவும்” தி.மு.க. முத்திரை குத்துவது எப்படி சரியாகும் என்பதே நமது கேள்வி; கவலை; இதை வன்மையாக தமிழின உணர்வோடு நாம் கண்டிக்கிறோம்!

தமிழகத்தில் முதலமைச்சர்கள் மாறும் போதெல்லாம், அவர்களே கூச்சப்படக்கூடிய அளவுக்கு ஒவ்வொரு நாளும் “புகழுரைகளை” அறிக்கைகளாகப் பரப்பிவரும், தலைவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆதரிக்க வேண்டிய பிரச்சினைகளில் - மான அவமானம் பாராமல் உறுதியாக ஆதரித்தும்; சுட்டிக் காட்ட வேண்டியவற்றை தயங்காது எடுத்துக் கூறும் இயக்கமாகவே பெரியார் திராவிடர் கழகம் தனது பயணத்தைத் தொடருகிறது. அதே அணுகுமுறையில் தான், இந்தக் கண்டனத்தையும் பதிவு செய்கிறோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com