Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
குத்தூசி குருசாமியின் கொள்கை உறுதி

நூற்றாண்டு விழாவில் புகழாரம்

குத்தூசி குருசாமியின் கொள்கை உறுதியை சென்னையில் கழகம் நடத்திய நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசியவர்கள் பாராட்டினர்.

வழக்குரைஞர் குமாரதேவன்

குத்தூசியார் சிறந்த எழுத்தாளர் என்பதை எல்லோரும் அறிவர். அவர் ஒரு சிறந்த நடிகரும் ஆவார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதியுள்ள இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்னும் நாடகத்தில் அவர் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். 1937 ஆம் ஆண்டு பாரதிதாசன் கவிதைகள் - முதல் தொகுதி என்னும் நூலை முதன்முதலில் வெளிக்கொண்டு வந்து உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் குத்தூசி குருசாமியும், குஞ்சிதம் அம்மையாரும்தான் என்பது குறித்துக் கொள்ளப்பட வேண்டிய செய்தி.

சைவ முதலியார் என்று குறிக்கப்படும் சாதியில் பிறந்தவரான குத்தூசியார், இசை வேளாளர் எனப்படும் சாதியில் பிறந்த குஞ்சிதம் அவர்களை 1929 ஆம் ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற முதல் சாதி மறுப்புத் திருமணம் அதுதான்.

1963 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு நடை பெற்றது. அவ்விழாவிற்கு, இந்தியாவின் குடியரசுத் தலைவராக அன்று இருந்த டாக்டர் இராதாகிருட்டிணன் வருகை தருவதாக இருந்தது. அதனை அறிந்த குத்தூசியார் கொதித்துப் போனார். அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களுக்கும் பொதுவானவராகிய நீங்கள், ஒரு குறிப்பிட்ட மத விழாவில் கலந்துகொள்வது சரியில்லை என்று குடியரசுத் தலைவருக்கே கடிதமும் தந்தியும் அனுப்பினார். அத்துடன் நில்லாமல், சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் வருகையை எதிர்த்து ஒரு வழக்கும் தொடர்ந்தார். இறுதியில் குத்தூசியாரின் முயற்சிகள் வெற்றி பெற்றன. குடியரசுத் தலைவர் அவ்விழாவில் கலந்து கொள்ளஇயலாது என்று கோயில் நிர்வாகத்திற்குத் தெரிவித்து விட்டார்.

கொளத்தூர் மணி

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையில் : குத்தூசி குருசாமி, இராவண காவியம் தந்த புலவர் குழந்தை, நாகை காளியப்பன் ஆகிய மூன்று சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு இவ்வாண்டு நூற்றாண்டு தொடங்குகிறது. குத்தூசியாரும், பட்டுக்கோட்டை அழகிரியும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் ஒரு காலகட்டத்தில் இணைந்து பணியாற்றினர். எழுத்து, பேச்சு, கவிதை என மூன்று துறைகளில் முடிசூடா மன்னர்களாக விளங்கிய அவர்கள், ஒரே நேரத்தில் சுயமரியாதை இயக்க வளர்ச்சிக்காகப் பணியாற்றினர். அது ஒரு அருமையான காலம்.

தேவகோட்டையில் நடைபெற்ற கள்ளர் சமூகத்தினர் மாநாட்டில், தாழ்த்தப்பட்டோர் இடுப்புக்கு மேலேயும், முழங்காலுக்கு கீழேயும் உடை உடுத்தக் கூடாது என்றும், தாழ்த்தப்பட்ட பெண்களும் தாவணி, மாராப்பு போன்றவைகளின் மூலம் உடம்பை மறைத்துக் கொள்ளக் கூடாது என்றும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. அத்தீர்மானங்களை எதிர்த்தும், கடுமையாகக் கண்டித்தும் குத்தூசியார் எழுதிய கட்டுரைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. குத்தூசியாரின் கட்டுரையைக் கண்டித்துத் தமிழறிஞர் ந.மு.வே. நாட்டார் அவர்கள் எழுதிய மறுப்பும் இங்கு நினைவு கூரத்தக்கது.

திருவாரூர் தங்கராசு

நிறைவுரையாற்றிய திருவாரூர் தங்கராசு தனது உரையில் :

ஒருமுறை குத்தூசியார் தலைமையில் இராசாசியைக் கண்டித்து நாங்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஏறத்தாழ 150 பேர் அதில் பங்கேற்றோம். எங்களோடு கலந்து கொண்டவர்களில், நாகப்பட்டினம் இரட்டைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான தொண்டு வீராசாமியும் இருந்தார். அப்போது காவல்துறையின் பெரிய அதிகாரியாக இருந்த அருள் எங்கள் அனைவரையும் கைதுசெய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். மாலையில் மத்திய சிறைக்கு எல்லோரும் புறப்படுங்கள் என்று அருள் கூறிய போது குத்தூசியார் மறுத்துவிட்டார். அதிகாரி அருள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் குத்தூசியார் ஒத்துழைக்க வில்லை. அவர் ஒரு பிடிவாதக்காரர். ஆனால் அந்தப் பிடிவாதத்தில் எப்போதும் ஒரு நியாயம் இருக்கும். அன்றும் இருந்தது.

சிறை செல்ல குத்தூசியார் மறுத்தது ஒரு நியாயமான காரணத்தின் அடிப்படையில்தான். அதிகாரியைப் பார்த்து, எங்களோடு கைதான தொண்டு வீராசாமி எங்கே என்று கேட்டார். காவல்துறையினர் விடை சொல்ல முடியாமல் விழித்தனர். அப்போதுதான் எங்களைப் போன்றவர்களுக்கும் ஒரு செய்தி புரிந்தது. ஏதோ ஒரு காரணத்திற்காக வீராசாமியை மட்டும் அவர்கள் விடுதலை செய்து விட்டனர். என்ன காரணம் என்று எங்களுக்குத் தெரிய வேண்டும் என்றார் குத்தூசியார். வேறு வழியின்றி இறுதியில் அவர்கள் ஒரு உண்மையைக் கூறினர். வீராசாமி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பது எங்களுக்குத் தெரியாது. அது தெரியாமல் அவரையும் நாங்கள் கைது செய்து விட்டோம். அவரைக் கைது செய்வதற்கு முன்பு நாடாளுமன்ற அவைத் தலைவரிடம் அனுமதி பெறவேண்டும் என்பது விதி. அதனால்தான்... என்று காவல்துறையினர் ஏதோ சொல்லி மழுப்பினர்.

அவர்களின் சமாதானத்தைக் குத்தூசியார் ஏற்கவில்லை. ஒன்று, கைது செய்து அனைவரையும் சிறைக்கு அனுப்புங்கள், அல்லது அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என்றார். காவல்துறையினரால் இரண்டையுமே செய்ய முடியவில்லை. கடைசியில் குண்டுக்கட்டாக எங்கள் அனைவரையும் தூக்கி லாரிக்குள் எறிந்தனர். குத்தூசியாரையும் அவ்வாறே செய்தனர். எதற்கும் அவர் கலங்கவில்லை. கொண்ட கொள்கையில் உறுதியாய் நின்றார்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com