Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஜூலை 2006

‘காலச்சுவடு’ பார்ப்பனக் கும்பலுக்கு எச்சரிக்கை
விடுதலை ராஜேந்திரன்

கருத்து மாறுபாடுகள் தொடர்பான ஆரோக்கியமான விவாதங்களை அறிவுத் தளத்தில் சந்திப்பதற்கு பெரியார் திராவிடர் கழகம் எப்போதும் தயாராக இருக்கிறது. தோழமை அமைப்புகளோடு இத்தகைய விவாதங்களையும், தேவைப்படும் போது ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ நிகழ்த்தியே வருகிறது. ஆனால் மக்கள் தொண்டுக்கு, ஒரு குண்டூசி அளவுக்கும் முன்வராமல் ‘முற்போக்கு முகமூடி’ போட்டுக் கொண்டு, பத்திரிகையில் எழுதி பிழைப்பு நடத்தி வரும் ஒரு பார்ப்பனக் கும்பல் தரம் தாழ்ந்து, பெரியார் திராவிடர் கழகத்தை அவமதிக்கும் வார்த்தைகளால் ‘அர்ச்சனை’ செய்யும் போது அவர்கள் மொழியிலேயே பெரியார் திராவிடர் கழகம் அதைச் சந்திக்கும்.

Kalachuvadu இந்தக் கும்பல் நடத்தும் ‘காலச்சுவடு’ இதழில் அதன் ஆசிரியராக இருக்கும் பார்ப்பனக் கண்ணன் ‘பெரியார் திராவிடர் கழகத்தை’ மிக மோசமான வார்த்தைகளால் இழிவு படுத்தியிருக்கிறார். பெரியார் திராவிடர் கழகம் இழைத்த “குற்றம்” என்ன தெரியுமா? நிர்வாணமாக மேட்டூரில் ஊர்வலம் வந்த சமண சாமியார்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தது தான்!

‘இந்த உடம்புகூட நமக்கு சொந்தமல்ல என்ற தத்துவத்தின் அடிப்படையில் நிர்வாணமாக - உலக அமைதிக்காக பயணம் வந்தார்களாம். அவர்களை எதிர்த்தது தவறாம்! சமணர்கள் சிறுபான்மையினராம். அவர்களிடம் ஓட்டு வலிமை இல்லாததால் பெரியார் தி.க. எதிர்ப்பை, தமிழக அரசு தடுக்கவில்லையாம்! அவர்கள் உலக அமைதிக்காக நிர்வாணமாக வந்தவர்களாம்; இப்படி எல்லாம் எழுதுகிறது, அந்த ஏடு!

பார்ப்பனக் கண்ணனைக் கேட்கிறோம் -

‘உடம்பு கூட நமக்கு சொந்தமல்ல’ என்பதை ஆடையின்றி நிர்வாணமாகத் திரிந்துதான் உணர்த்த வேண்டுமா?

‘உடம்பு கூட நமக்குச் சொந்தமல்ல’ என்று கூறிக் கொண்டு, உடம்பை பாதுகாக்க மூக்கு முட்ட சாப்பிடலாமா? முழு பட்டினி அல்லவா கிடக்க வேண்டும்?

மேட்டூரில் இவர்கள் நிர்வாண ஊர்வலம் போனால் உலகத்துக்கே அமைதி வந்துவிடும் என்று கண்ணன் நம்புகிறாரா?

“தீர்த்தங்கரர்”களான பார்சுவ நாதரும், வர்த்தமான மகாவீரரும், உருவாக்கிய சமணம் - இன்று அதே தத்துவத்தோடு தான் இருக்கிறதா?

சமணத்தை உருவாக்கியவர்களாகக் கூறப்படும் தீர்த்தங்கரர்களான - விருஷபதேவர் 84 லட்சம் ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், அஜித நாதர் 71 லட்சம் ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார் என்றும் சமணர்களின் “ஸ்ரீ புராணம்” கூறுவதை ‘காலச் சுவடு’ கண்ணன் கூட்டம் ஏற்றுக் கொள்கிறதா?

சமணமானாலும், சைவமானாலும், பவுத்த மானாலும் - அனைத்தையும் பார்ப்பனியம் விழுங்கி செரிமானம் செய்து, இந்துப் பார்ப்பனியமாக்கி விட்டப் பிறகு, ‘சமணம்’ அதன் தனித்துவத்தோடு இயங்குகிறதா? சமணத்தைச் சார்ந்த நாமிநாதரும், நேமிநாதரும் நடத்திய வேத மறுப்பு இயக்கத்தை, சமணம் இன்று நடத்துகிறதா?

சமணம் என்பது - ஒரு சில திகம்பர சாமியார்களின் ‘நிர்வாண உலா’ என்பதைத் தவிர, அதன் தத்துவம் மறைந்து, பார்ப்பனியமாகிவிட்டதா, இல்லையா? சமணத்தை ஏற்றுள்ள மார்வாடிகள் தானே ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணியின் காவலர்கள்; கண்ணன்கள் இதை மறுக்கிறார்களா? பார்ப்பனியத்தை வெளிப்படையாகப் பேசினால், அம்பலப்பட்டு விடுவோமே என்று கருதி, ‘சமணத்தை’ முன் வைத்து, பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்கள் மீது சேறு வாரி இறைக்கக் கிளம்பியிருக்கிறது காலச்சுவடு பார்ப்பனக் கும்பல். இதுதான் ‘இவாளின்’ தந்திரம்!

ஏதோ இவர்கள் பெரியார் கொள்கைகளை எல்லாம் ஆதரிப்பது போல - பெரியார் அய்ரோப்பியப் பயணத்தின் போது நிர்வாணச் சங்கங்களுக்குப் போய் நிர்வாணமாகப் படம் எடுக்கவில்லையா என்று கேட்கிறார், ‘சமண விசுவாசி’யாக அவதாரம் எடுத்துள்ள ‘காலச்சுவடு’ ‘கலியுக’க் கண்ணன்.

அய்ரோப்பாவில் - பூர்ஷ்வா நிர்வாண சங்கம் மற்றும் பூர்ஷ்வா அல்லாத நிர்வாண சங்களுக்கும் நாத்திகர் சங்கங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் என்று பல இடங்களுக்குப் போய் நேரில் பார்த்தார் பெரியார். புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த நாட்டின் ‘நிர்வாண சங்கங்கள்’ மக்களை ஏமாற்றும் மதத் தத்துவங்களோடு தொடர்புடையவை அல்ல. சூரியக் குளியல், உடல் பயிற்சி என்று உடலைப் பாதுகாக்கும் கண்ணோட்டத் தோடு உருவாக்கப்பட்டவை. அவை அரசின் அனுமதியோடு செயல்பட்ட அமைப்புகள், பொது ஒழுங்குக்கு எதிராக - வீதிகளில் கண்டபடி நிர்வாணமாக திரிகிறவர்கள் அல்ல. நிர்வாண சங்கத்தைப் போய் பார்த்ததாலே தமிழ்நாட்டில் எல்லோரும் நிர்வாணமாகத் திரியலாம். அதுவே ஆன்மீக விடுதலை என்று பெரியார் பிரச்சாரம் செய்யவில்லை. மாறாக ‘மானமும் அறிவும் மனிதருக்கு வேண்டும்’ என்ற லட்சியத்துக்காகப் போராடியவர். ‘பெரியார் காசிக்குப் போய் சாமியாராக வாழ்ந்தார். அதனால், மக்கள் எல்லோரும் சாமியாராக மாற வேண்டும் என்பதே பெரியார் கொள்கை. எனவே பெரியாரிஸ்டுகள் சாமியாரை எதிர்க்கலாமா’ என்று இவர்கள் கேட்டாலும் கேட்பார்கள்!

இந்தக் கண்ணன்கள் பெரியார் திராவிடர் கழகத்தின் மீது பொழிந்துள்ள ‘வசைமாரி’களைப் பாருங்கள்.

“பெரியார் திராவிடர் கழகத்தினர், வீரத் தமிழர்கள். சமீபகாலமாக கையில் எடுத்திருக்கும் செருப்பு, துடைப்பத்தோடு போராட்டத்தில் இறங்கினர்.”

“ஜெயலலிதா ஆட்சியில் ‘தொட்டிலில் உறங்கும் புரட்சியாளர்கள் - கலைஞர் ஆட்சிக்கு வந்ததும், துயில் எழுந்து ஆட்டம் போடத் துவங்கி விடுகிறார்கள்.”

“வீரப்பனின் ஆதரவாளராகப் பரவலாக அறியப்படும் கொளத்தூர் மணி.”

“இராமாயண சீதையின் பாவாடையைத் தூக்கிப் பார்ப்பவர்கள்.”

- இப்படி எல்லாம் ‘தடித்த’ - வார்த்தைகளை பெரியார் திராவிடர் கழகத்தின் மீதும், பெரியா ரிஸ்டுகள் மீதும் அக்கட்டுரையில் வீசப்பட்டுள்ளது.

ஆடு மாடு, மிருகங்களைத் தவிர மனிதர்கள் எவராக இருந்தாலும், ‘எந்தத் தத்துவத்தையும்’ கூறிக் கொண்டு வீதிகளில் நிர்வாணமாகத் திரிவது சட்டத் துக்கு எதிரானது; தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.

இதைத் தண்டிப்பதற்கு சட்டங்களே இருக்கின்றன; ஆனால், பார்ப்பன கண்ணன்கள் மதத்தின் பேரால் இதற்கு அனுமதி கோருகிறார்கள்.

மனநோய் பிடித்தவன் நிர்வாணமாகத் திரிந்தால் கூட அவனுக்கு இடுப்பில் ஒரு துண்டைக் கட்டி விடுவதுதான் மனிதப் பண்பு. சராசரி மனிதன் கூட இதைத்தான் செய்வான். ஆனால், காலச்சுவடு போன்ற “கலை இலக்கியப் புரட்சி”யாளர்கள் “மனநோய் பிடிப்பது, ஊழ்வினையால் வந்தது. எனவே அப்படியே நடமாட விடுங்கள்” என்று ‘தத்துவம்’ பேசுவார்கள்.

மேட்டூரிலே மேடை போட்டு மக்கள் மன்றத்திலே இவர்களால் இப்படி எல்லாம் கூற முடியுமா? கூறத் தயாரா?

மக்கள் மன்றத்தோடு கிஞ்சித்தும் தொடர்பு இல்லாமல், அறைக்குள்ளே உட்கார்ந்து கொண்டு, பெரியார் கொள்கைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு களப்பணியாற்றும் ஒரு இயக்கத்தைப் பார்த்து, இப்படி எல்லாம் பார்ப்பனத் திமிரோடு எழுதுகிறார்கள்.

எல்லை மீறும் ‘காலச்சுவடு’ பார்ப்பனக் கும்பலை எச்சரிக்கிறோம். அறிவோடு விவாதத்துக்கு வா, சந்திப்போம்.

சாக்கடை நடையில் தரம் தாழ்ந்து எழுதினால், அதை எந்த எல்லைக்கும் சென்று சந்திக்கத் தயாராக இருக்கிறது, பெரியார் திராவிடர் கழகம்! எச்சரிக்கை!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com