Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஆகஸ்ட் 2006

இலங்கை இரண்டாவது தூதரகம் பரப்பும் பொய்

சென்னையில் மட்டும் இலங்கை அரசுக்கு இரண்டு தூதரகங்கள் இருக்கின்றன. ஒன்று இலங்கை அரசு அதிகாரிகளைக் கொண்டது. மற்றொன்று அண்ணாசாலையில் உள்ள ‘இந்து’ பத்திரிகை அலுவலகம். இது பார்ப்பனர்களைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு சிங்கள அரசின் பிரதநிதியாக - ஒவ்வொரு நாளும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை இந்த நிறுவனம் செய்து கொண்டு வருகிறது.

கடந்த 22 ஆம் தேதி ‘இந்து’ நாளேட்டில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பாளையில் ‘ஈழ முரசு’ நாளேட்டின் நிறுவனர் சின்னத்தம்பி சிவமகராஜா சிங்கள உளவுப்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். ‘ஈழ முரசு’ நாளேடு தமிழ் ஈழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வெளிவந்த ஏடு. சுட்டுக் கொல்லப்பட்ட சிவ மகாராஜா எழுபது வயதைக் கடந்தவர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் நாட்டுப் பற்றாளர் விருதைப் பெற்றார். விடுதலைப் புலிகளின் தமிழ்த் தேசியத் தொலைக்காட்சி, இந்தப் படுகொலையை தலைப்புச் செய்தியாக்கி, தனது இரங்கலைத் தெரிவித்தது. அண்மையில் சிங்கள உளவுப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட நாடக ஆசிரியர் பொன். கணேச மூர்த்திக்கு, தனது தலைமையில் இரங்கல் கூட்டம் நடத்தி - சிங்கள உளவுத் துறையைக் கடுமையாக சாடியவர் சிவ மகாராஜா. அந்த ஆத்திரத்தில்தான் இவரை சிங்கள உளவுப் படை சுட்டுக் கொன்றது. ஆனால் ‘சிங்கள பார்ப்பன’ ஊது குழலான ‘இந்து’ ஏடு விடுதலைப் புலிகள், இவரை சுட்டுக் கொன்றதாக ஒரு பொய்ச் செய்தியை வெளியிடுகிறது.

அதே நாளில் - இலங்கைக்கான நார்வேயின் சிறப்பு தூதராக இருக்கும் ஜான் ஹன்சன் பவர் - ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டிருக்கிறார். அய்ரோப்பிய ஒன்றிய நாடுகள் - விடுதலைப்புலிகள் மீது தடை விதித்தது மிகப் பெரும் தவறு. அதனால் தான் போர் நிறுத்த ஒப்பந்தம், முடிவுக்கு வந்து, மீண்டும் போர் துவங்கியுள்ள தோடு, மீண்டும் பேச்சு வார்த்தையைத் தொடர முடியாத நிலையை உருவாக்கி விட்டது” என்று கூறியுள்ளார். இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் இதற்காக நார்வே துதரைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். இந்த மிக முக்கியமான செய்தியை ‘இந்து’ ஏடு, இருட்டடிப்பு செய்து விட்டது.

ராஜ பக்சே, விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்துவதில் ராஜ தந்திரமாக செயல்படவில்லை என்றும், எனவே, சர்வதேச நாடுகளின் கோபத்துக்கு இலங்கை அரசு உள்ளாகி வருகிறது என்றும், ராஜபக்சேயை எச்சரித்து, அதன் கொழும்பு செய்தியாளர் முரளிதர்ரெட்டி எழுதிய கட்டுரை ஒன்றை, ‘இந்து’ ஏடு வெளியிட்டிருக்கிறது. அதில், கீழ்க்கண்ட கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய ராஜபக்சே, மோதல்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சியான யு.என்.பி.யை தன் பக்கம் சமதானமாக வைத்துக் கொள்ளாமல், அக்கட்சியிலிருந்து ஆறு அதிருப்தியாளர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டு, அவர்களுக்கு அரசு பதவிகளை வழங்கியுள்ளார். இதனால் யு.என்.பி.யோடு பகையை வளர்த்துக் கொண்டார்.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுடனும் மோதல் போக்கைத் தொடங்கிவிட்டார். ஜூலை 26க்குப் பிறகு - அரசுக்கும், கண்காணிப்புக் குழுவுக்குமிடையே மூன்று முறை, மோதல்கள் வெடித்தன. மாவிலாறு அணையை புலிகள் திறக்க வைப்பதற்காக, திரிகோண மலையில் ராணுவம் குண்டு வீச்சு நடத்தியதை, போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு கண்டித்தது. இது சரியான அணுகு முறையல்ல என்று கூறியது. போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர், யுத்தப் பகுதியில் இருக்கும் போதே, இரண்டு முறை இலங்கை ராணுவ விமானம் குண்டுகளைப் போட்டது.

ஆனாலும், ராணுவத்தின் குண்டு வீச்சு நடவடிக்கைகளால், மாவிலாறு அணையைத் திறக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. அது தோல்வியிலேயே முடிந்தது. அதைத் தொடர்ந்து, முல்லைத் தீவில் குழந்தைகள் காப்பகத்தின் மீது குண்டு போட்டு 61 மாணவிகளைக் கொன்று, 150 மாணவிகளைக் காயப்படுத்திவிட்டு, ராணுவ முகாம் மீது தான் குண்டு வீசியதாக, இலங்கை அரசு சாதித்தது. போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவும், ‘யுனிசெப்’ நிறுவனமும், சம்பவ இடத்தை நேரில் பார்த்து, குண்டு போட்டது, குழந்தைகள் காப்பகம்தான் என்பதை உறுதிப்படுத்தி, இலங்கை அரசின் கருத்தை மறுத்தனர். இதே போல் இலங்கைக்கு நிதி உதவி தரும் நாடுகள் - ஜப்பான், அய்ரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் அதிருப்திக்கும் இலங்கை அரசு உள்ளாகியுள்ளது. இரு தரப்பினரும் போரை நிறுத்த வேண்டும் என்று, இந்த நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், ராஜபக்சே, இலங்கை அரசையும், விடுதலைப் புலிகளையும் சமப்படுத்திப் பேசக் கூடாது. புலிகள் பயங்கரவாதிகள் என்று கூறி வருகிறார். இதை நியாயப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கலாம் என்றாலும் இத்தகைய கூற்றுகளால், சர்வதேச சமூகத்தின் ஆதரவைப் பெற முடியாது என்பதை ராஜபக்சே உணர வேண்டும். ராணுவத்தால் பிரச்சினை தீராது என்று, சர்வதேச நாடுகள் ஒருமித்துக் கூறும் கருத்தை ராஜபக்சே ஏற்றுக் கொள்ள வேண்டும். ராஜ பக்சேயின் நலன் விரும்பிகளாகவும், ஆதரவாளர்களாகவும் உள்ள சர்வதேச சமூகத்தை மதித்து, போரை நிறுத்துவதே நல்லது” என்று, ராஜபக்சேவுக்கு ‘புத்திமதி’ கூறுகிறது ‘இந்து’ ஏடு. விடுதலைப்புலிகள் பக்கம் நியாயம் இருப்பதை சர்வதேச சமூகம் உணரத் துவங்கிவிட்டதால், பதறிப் போன ‘இந்து’ ஏடு இப்படி எல்லாம் எழுதுகிறது. எப்படியோ, ராஜபக்சேவுக்கு புத்தி கூறப் போய் உண்மைகளை கக்கி விட்டது அந்த பார்ப்பன - சிங்கள ஏடு!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com