Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puratchi Periyar Muzhakkam
ஏப்ரல் 2007

தமிழ்ப் புத்தாண்டு சித்திரைக்கு மாறியது எப்படி?
விடுதலை இராசேந்திரன்

(தை மாதம் முதல் நாளைத் தான் தமிழர்களுக்கான புத்தாண்டு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று ஏன் கூறுகிறோம் - என்பதற்கான காரணங்களை எடுத்துரைக்கிறது, இக்கட்டுரை)

“முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள். உண்ணுவதிலும் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியை பொங்குவார்கள். புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்வார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டு பிறப்பாக பொங்கல் கொண்டாடுகிறார்கள்.”

... தை முதல் நாள் தான் தமிழர்களுக்கு புத்தாண்டாக இருந்தது என்பதை நடைமுறை உதாரணங்களோடு இப்படி விளக்கிக் காட்டியுள்ளவர் டாக்டர் மு. வரதராசனார்.

பழந்தமிழர்கள் தங்களது அறிவுக்கு உகந்தவாறு காலங்களைக் கணித்தார்கள். மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை இவை மாறி மாறிப் பருவ காலங்களில் இயற்கை மனிதனை ஆண்டு வந்ததால் தமிழர்கள் ஒரு வருடத்தை ‘ஆண்டு’ என்று குறிப்பிட்டனர். அவ்வாறே தன்னை ஆள்பவனையும், வணங்கும் கடவுளையும் ஆண்டவன் என்று குறிப்பிட்டனர். ஒரு ஆண்டை தமிழன் ஆறு பருவ காலமாகப் பிரித்தான். இளவேனில் (தை மாசி), முதுவேனில் (பங்குனி, சித்திரை), கார் (வைகாசி, ஆனி), கூதிர் (ஆடி, ஆவணி), முன்பனி (புரட்டாசி, அய்ப்பசி), பின் பனி (கார்த்திகை மார்கழி). தமிழன் தன் வாழ்வை இளவேனிற் காலத்தில் தொடங்கினான். இதையே ஆண்டின் துவக்கமாகக் கொண்டான். எனவே தை மாத முதல் நாளே ஆண்டின் துவக்கமாகக் கொண்டான். இவை தை முதல் நாளே தமிழர்களுக்கான புத்தாண்டு என்பதற்கான வாழ்வியல் காரணங்கள்.

தமிழர்களின் காலக் கணக்கீட்டைக் கொண்டும், இந்தக் கருத்தை நியாயப்படுத்த முடியும். காலக் கணக்கீட்டிற்கு அடிப்படையாக இருப்பது சூரியன்தான். பகல், இரவு, நாள், கிழமை, பருவம், ஆண்டு எல்லாமே சூரியன் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகின்றன. சூரியனைச் சுற்றி பூமியும், மற்ற கோள்களும் சுற்றினாலும், பூமியில் உள்ளவர்கள் பார்வையில் சூரியன் காலையில் எழுகிறது. மாலையில் மறைகிறது. சந்திரன் தேய்கிறது, வளர்கிறது. நட்சத்திரங்களின் இருப்பிடங்கள், கோள்களின் நிலைகள்... மனிதர்களின் பார்வையில் மாறுகின்றன. இந்தப் பார்வையில் தெற்கே சென்ற சூரியன், வடக்கு நோக்கித் திரும்புகிற நாள் தை முதல் நாளாக, புத்தாண்டின் துவக்கமாகத் தமிழர்களால் ஏந்தப்பட்டது. சூரியன் வடக்கு நோக்கித் திரும்புவது தான் தமிழர்கள் வாழும் பகுதியில் நிகழ்வதால் தமிழர்கள், தங்களின் வானியல் கணிதப்படி அதுவும் தை மாதத்தில் நிகழ்வதால் தமிழ் மக்கள் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.

தமிழர்கள் வகுத்துக் கொண்ட வானியல் கணிப்பின்படி, தை முதல் நாளே தமிழ் புத்தாண்டாக இருந்திருக்கிறது. ஆனால் அறிவியல் கண்ணோட்டத்தில் சூரியன் உதயமாவதும் இல்லை, மறைவதும் இல்லை. அது என்றும் ஒளிர்கிறது. பூமி, தற்சுழற்சியாக சூரியனை சுற்றி வரும்போது 24 மணி நேரத்தில் சூரிய ஒளிபடுகிற இடமெல்லாம் பகலாகவும், மறுபகுதி இரவாகவும் அமைகிறது.

தமிழர் கொண்டாடியதை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித்தன் என்று மாற்றிக் கொண்டு - தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் - சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. எனவே வானியல் சிந்தனையாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரமசகம்’ எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது. ‘விக்கிரம சகம்’ 60 ஆண்டுகளை வரையறுத்தது. ‘பிரபவ’ ஆண்டில் தொடங்கி ‘அட்சய’ ஆண்டில் முடியும். இவைகளில் ஒரு பெயர்கூட தமிழ் இல்லை. 60 ஆண்டுகளுக்கும் வடமொழிப் பெயர்கள்தான். ஆனால், தமிழர்கள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை - வேதனை.

இந்த 60 ஆண்டுகளையும் கடவுளோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் உருவாக்கி விட்டார்கள். நாரதரும், கிருஷ்ணனும் உறவு கொண்டு (இருவரும் ஆண்கள்) பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்கு புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61வது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவத்திலிருந்து தான் தொடங்க வேண்டும்’ நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாத குழப்பங்களும், மூடநம்பிக்கைகளும் இதில் அடங்கிக் கிடக்கின்றன.

இந்த நிலையில் தான் - தமிழ் அறிஞர்கள் 1921-ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தார்கள். மூன்று முக்கிய முடிவுகளை அவர்கள் அப்போது எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டாகப் பின்பற்றுவது.
2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு)

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை என்று முடிவெடுத்தார்கள். இப்படி முடிவெடுத்தவர்கள் தமிழகத்தின் மூத்த தமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவ நாதம் ஆகியோர் ஆவர்.

அதன் பிறகு 1939 ஆம் ஆண்டு திருச்சியில் ‘அகில இந்திய தமிழர் மாநாடு’ சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில் தந்தை பெரியார், கரந்தை தமிழ்ச்சங்கத் தலைவர் உமா மகேசுவரனார், பேராசிரியர் கா. சுப்பிரமணியம், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., மறைமலையடிகளார், பி.டி.இராஜன், ஆற்காடு இராமசாமி முதலியார், புரட்சி கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் பறைசாற்றியது.

1971-ல் அன்றைய கலைஞர் ஆட்சி, திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. இம்முறையையோ 1971 முதல் அரசு நாட்குறிப்பிலும், 1972 முதல் அரசிதழிலும், 1981 முதல் அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது. 1969-ம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொங்கல் திருநாளுக்கு அடுத்த நாளை திருவள்ளுவர் நாள் என்று ஏற்று அரசு விடுமுறை அளித்து ஆணை பிறப்பித்தது. எனவே தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு ஆகும். இடையில் வந்து புகுந்த சித்திரை - தமிழர் மீது புகுத்தப்பட்ட பண்பாட்டுத் திணிப்பாகும்.


சித்திரை திருநாள் தமிழ்ப் புத்தாண்டாய் மாறிய விநோதம்
- மகிழ்மாறன்


கடந்த ஏப்ரல் 14 அன்று பத்திரிகைகளில் பக்கம் பக்கமாய் விளம்பரங்கள், தள்ளுபடி அறிவிப்பு மற்றும் விலைக்குறைப்பு அறிவிப்புகள், நள்ளிரவில் கோவில் நடைதிறப்பு பற்றிய அறிவிப்புகள், பஞ்சாங்கப் புளுகர்களின் எதிர்காலப் பலன்கள் மற்றும் பலன்கள் கிடைக்கச் செய்ய வேண்டிய பரிகாரங்கள், வார இதழ்களின் பக்கங்கள் அதிகரிப்பு எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் தலைவர்களின் வாழ்த்துக்கள்.

இவையெல்லாம் வழக்கமான ஒன்று தானே, அதை ஏன் புதிதாய் நினைவுபடுத்த வேண்டும். மேற்கண்ட நாள் தமிழ் புத்தாண்டு தொடக்கமல்லவா, “விய” வருடம் போய் “ஸர்வஜித்து” பிறந்ததால் மேற்கண்டவை நடப்பது இயல்பான ஒன்றுதானே, அதில் என்ன குற்றம் என்று நீங்கள் கேட்கக்கூடும். எல்லாம் வழக்கமான ஒன்றுதான், தலைவர்களின் வாழ்த்துகள்கூட. ஆனால் இந்த “ஸர்வஜி”த்தில் இன்னொரு விநோதம் திராவிடர் இயக்கப் பார்வையாளர்கள் கண்ணில் பட்டுத் தொலைக்கிறதே! அது தி.மு.க.வின் தலைவர் கலைஞர் அவர்களின் “தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து”. அவர் முதல்வர் எல்லோருக்கும் பொதுவானவர் ‘சாயி பாபா’ உட்பட. அதனால் வாழ்த்துச் சொல்கிறார். அதையேன் பெரிதுபடுத்த வேண்டும் என்று கேட்பவர்கள், கலைஞரவர்கள் பார்வையில் இந்த “வருஷப் பிறப்பு” பற்றி கடந்த காலங்களில் என்ன சொன்னார் என்பதை சற்றே நினைத்துப் பார்க்க வேண்டுகிறோம். ‘வீரமணி’யார் கோஷ்டியினரும் நினைத்துப் பார்க்கலாம் தப்பில்லை.

கலைஞர் பார்வையில் சா.ச.மு. என்றும், சா.ச.பி. என்றும் பிரித்துப் பார்க்க அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். சா.ச.மு. காலகட்டம் அதில் கலைஞர் 1986 ஆம் ஆண்டு சித்திரைத் திருநாள் வாழ்த்து சொல்கிறார் தன் கைப்பட முரசொலியில் கீழ்கண்டவாறு.

சித்திரைத் திருநாள் இன்று - அடிமை
நித்திரை கலைந்து தமிழன் -
பத்தரை மாற்றுப் பொன்னாம் தமிழையும்
இத்தரை மீது இனமான உணர்வினையும்
காத்திட எழுக, எழுகவே
தமிழீழம் பூத்திட எழுக; எழுகவே.

பின் வரும் காலங்களிலும் கலைஞர் தமிழ்ப் புத்தாண்டை ஏற்க மறுத்து அவர் புராணக் கதைகளில் வரும் காரணம் அபத்தமானது. அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று சொன்னார். 1989-ல் ஆட்சிக்கு மூன்றாம் முறையாக வருகிறார். சட்டமன்றத்தில் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய விவாதத்தில் கலந்து கொள்கிறார். மேற்கண்ட கருத்துக்களை வலியுறுத்துகிறார். தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கவிருப்பதாக முரசறைகிறார். அடுத்தடுத்த வருடங்களிலும் அதையே வலியுறுத்துகிறார்.

பின்பு சற்று மாற்றி தமிழனுக்கு இரண்டு ஆண்டுப் பிறப்பு என்பது சிறப்புத் தான். பரவாயில்லை. தை முதல் நாள் மற்றும் சித்திரை முதல் நாள் இவற்றை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று எழுதினார். இப்போது சா.ச.பி. காலகட்டம். 14.4.2007 ஆம் நாளிட்ட ‘முரசொலி’யில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து என்றே தமிழ் மக்களை வாழ்த்துகிறார். மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடுமாறு வாழ்த்துகிறார். பூதக் கண்ணாடி போட்டுப் பார்த்தும், “சித்திரைத் திருநாள்” என்ற வார்த்தையோ அல்லது புராணக் கதைகளின்படி இது தமிழ்ப்புத்தாண்டு அல்ல என்பதைப் பற்றிய சின்ன வார்த்தைகளோ அல்லது வாக்கியங்களோ இல்லை.
காரணம் என்ன என்று சிந்திக்கிறீர்களா?

அதுதான் மேலே சொல்லப்பட்டதே கலைஞர் பார்வை சா.ச.மு. மற்றும் சா.ச.பி. என்று. இன்னும் புரியவில்லையா, சா.ச.மு. என்றால் சாய்பாபாவை சந்திப்பதற்கு முன்பு, சா.ச.பி. என்றால் சாய்பாபாவை சந்தித்ததற்கு பின்பு.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com