Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2006
உலகமயமாதலும் பெண்களும்
- புதிய மாதவி

"இரவு சாப்பாட்டிற்கு
டி.வி. இருக்கும் வீடுகளாய்த்
தேடுகிறார்கள் குழந்தைகளை,

தொலைந்ததை
தொலைவதைப் பற்றி
யாருக்கும் அக்கறையில்லை.

ஆனாலும் அலமு
சுடிதார் போட்டுக்கொண்டு
ஆடு மேய்க்கப் போகிறாள்''

(செஞ்சி தமிழினியன் - ராக்காச்சி பொம்மை)

உலகமயமாதலைப் பற்றிய மிகச்சிறந்த கவிதை இது. உலகமயமாதல் ஆடு மேய்க்கும் அலமுவின் வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றம் வெறும் உடை மாற்றம் மட்டும்தான். அவள் அன்றும் ஆடு மேய்க்கும் அலமுதான். சுடிதார் போட்டாலும் ஆடு மேய்க்கிற அலமுவாகவேதான் இருக்கிறாள். உலகமயமாதலின் மாற்றங்கள் எவ்வளவு போலித்தனமானவை, அதன் வளர்ச்சி என்பது ஒடுக்கப்பட்ட வர்க்கத்திற்கு எவ்வித மேன்மைகளையும் கொடுக்கப்போவதில்லை. என்ன அன்று அவள் உடுத்தி இருந்தது கிழிந்த பாவாடை, ரவிக்கை. இன்று அவள் உடுத்தி இருப்பது அதே கிழிந்த பழைய சுடிதார். ஆடுகளுக்கும் சரி ஆடு மேய்ப்பவளுக்கு சரி... அறிவியல் வளர்ச்சி தந்திருக்கும் மாற்றம் இது மட்டும்தான்... வர்க்க வேறுபாடுகள் தொடர்வதை மிகச் சிறப்பாக எடுத்துரைக்கும் கவிதை வரிகள்.

உலகமயமாக்கல் என்றால் என்ன?

உலகமயமாக்கல் என்றால் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி தாராளமயமாக்கல்.

பி.வி.நரசிம்மராவ் இந்தியப் பிரதமராக இருந்தபோது தாராளமய மாக்கலுக்கான விதிமுறைகளை மேற்கொண்டதன் மூலம் 1991க்குப்பின் இந்தியநாடு தன்னுடைய எதிர்காலத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டது என்று ஒருசாரார் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

1947 ஆம் ஆண்டு இந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகள் ஏற்றுமதி இறக்குமதி சுங்கவரி கட்டுப்பாடுகளும் வணிகமும் உள்ளிட்ட ஒரு பொது ஒப்பந்தத்தை (General Agreement of Tariffs and Trade Gatt) பற்றிச் சிந்தித்தன. உலக அளவில் எட்டு மாநாடுகளில் கலந்துரையாடியதில் 1986 வரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. எனினும் 1991ல் இக்கூட்டு அமைப்பின் தலைவான திரு. ஆர்தர் டங்கல் (Managing director of GATT, Mr. Arthur Dunkel) முன்மொழிந்த "டங்கல் முன்வடிவம்' (Dunkel Draft) வளர்ந்த நாடுகளுக்குச் சாதகமாக உள்ளது என்று வளரும் நாடுகள் கருத்து தெரிவித்தன. பல விவாதங்களுக்கிடையில் ஏப்ரல் 15, 1994ல் உறுப்பினர் நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது. இந்தியா டிசம்பர் 30, 1994ல் ஒப்புதல் ஏற்பு அளித்துள்ளது. இந்நிலையில் ஜனவரி 1, 1995 முதல் GATT என்ற பெயரிலிருந்து WTO (World Trade Organisation) என்று செயல்பட விதிகள் வகுக்கப் பட்டன. இதனால் உலகவங்கி, உலகநாடுகளின் நிதியம் (International Monetary Fund) ஆகிய நிறுவனங்களை ஒத்த மதிப்புடையதாக உலகவர்த்தக் கழகம் (WTO) ஆக்கப்பட்டது.

உலகமயமாதல் என்பது நம் நாட்டில் புது உலகைப் படைக்கும் என்று ஒவ்வொரு ஒப்பந்தங்களிலும் ஒப்புதல் தெரிவிக்கும் கைகுலுக்கல்களில் புன்னகைக்கிறார்கள் நம் தேசத் தலைவர்கள். இக்கொள்கை விசயத்தில் மட்டும் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் முகங்கள் மட்டும்தான் மாறுகிறதே தவிர அவர்கள் நிற்கும் மேடைகளில் மாற்றமில்லை.

விவசாய நாடு இந்தியா என்றும் மக்களில் 60%மேல் கிராமப்புறங்களில் விவசாயத்தையும் அது சார்ந்த உபதொழில்களையும் நம்பி வாழ்பவர்கள் என்றும் அறிந்தே தான் உலகமயமாக்கலில் விதிகள் விவசாயப் பெருமக்களின் வாழ்க்கையில் விளையாடியது. இயற்கைப் பேரழிவுகளைக் காட்டிலும் கொடிய பேரழிவை கடந்த சில ஆண்டுகளாக நம் மக்கள் மீது ஏவி வருகிறது.

விவசாயத்தை அழித்து நம்முடைய கிராமப்புற மக்களை நகரங்களின் சாலை ஓரங்களில் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கியது இந்தக் கொள்கைதான். பொதுத்துறை ஆலைகளையும், சாலைகளையும், சுரங்கங்களையும், துறைமுகங்களையும், மின் நிலையங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலை பேசுகிறது - பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டின் விவசாயத்தையும், சிறுதொழில்களையும் அழிக்கவும் விழுங்கவும் வழி செய்கிறது உலகமயம். பட்டினிச்சாவுகள் பெருகுவதற்கும் விவசாயிகளின் தற்கொலைகள் ஆயிரக்கணக்கில் அதிகரிப்பதற்கும் கைத்தறி - விசைத்தறி முதலான எண்ணற்ற உள்நாட்டு தொழில்கள் அழிவதற்கும் காரணம் இந்த உலகமயமாக்கல் கொள்கைதான். மராத்திய மண்ணில் என்ரானைத் திணித்து நாசப்படுத்தியதும் இந்தக் கொள்கைதான். (என்ரானின் நிர்வாக இயக்குநர் அண்மையில் நிர்வாக மோசடிக்கென ஆயுள் தண்டனையும் 21 கோடி ரூபாய் அபராதமும் அடைந்ததை நினைவில்கொள்க)

பசுமைப்புரட்சி தோல்வி அடைந்துவிட்டதால் மரபீனி மாற்றுத் தொழில்நுட்பத்தின் மூலம் இன்று பன்னாட்டு நிறுவனங்கள் உலகம் முழுவதிலும் வேளாண்மையைத் தம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிக்கின்றன. இரண்டாவது பசுமைப்புரட்சி என்ற பெயரில் நம்மீது திணிக்கப்படும் கொடுமை இது. இந்திய வேளாண்மையை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விட்ட போதே இந்திய அரசு வேளாண் உற்பத்தி துறைகளில் தனக்கிருந்த பங்களிப்பை முற்றிலுமாக விலக்கிக் கொண்டது. தேசிய வங்கிகள் சிறு விவசாயிகளுக்கு கடன் கொடுப்பதை நிறுத்திக் கொண்டன. கடந்த நான்கு ஆண்டுகளில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளும் பட்டினிச்சாவுகளும் அதிகரித்து இருப்பதற்கு இவை எல்லாம்தான் காரணம்.

இதன் விளைவுகள் அனைத்தும் பெண்களின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். சம்மந்தப்பட்ட பெண்களின் மீது முழுக்குடும்பச் சுமையுயம் விழுகிறது. உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த அப்பெண்கள் நகர்ப்புறத்தில் கூலியாக, சிங்கையிலிருந்து துபாய்வரை வீட்டு வேலைகள் செய்யும் பெண்ணாக தள்ளப்படும் நிலைமை. கிராமப்புறத்தின் எல்லைகளைத் தாண்டாத பெண்கள் கூலிகளாகவும் நிரந்தரமில்லாத வேலைகளிலும் (Contract jobs) தங்கள் வாழ்க்கையைத் தேடும் சூழ்நிலை. இவர்களுக்கென்று எவ்வித மனித உரிமைகளும் கிடையாது. மருத்துவ பராமரிப்புகள் இல்லை. இன்னும் ஒரு சில இடங்களில் பாலியல் தொழிலுக்கு இவர்கள் தள்ளப்படுவதையும் மறுப்பதற்கில்லை. வேளாண் துறையின் நவீன அறிவியல் பெண்களின் உடல்நலனைப் பெரிதும் பாதிக்கிறது. கேரளா, தமிழ்நாடு, வங்காள மாநிலங்களில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்கள் பெரும்பாதிப்புக்குள்ளாகி இருப்பதைப் பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன.

உடல்நலம் சார்ந்த துறைகளில் (மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள், மருத்துவமனைகள்) தனியார் மயமாதல் கொள்கையால் மேலை நாடுகளுடன் போட்டி போடும் அளவுக்கு மருத்துவ வசதிகள் பெருகிவிட்டன. ஆனால் இந்த வசதிகள் எல்லாம் யாருக்காக? இதில் வசூலிக்கப்படும் கட்டணங்களைச் செலுத்தும் வசதி படைத்த ஒரு கூட்டத்திற்காக மட்டுமே. காலம் காலமாய் ஊதியமின்றி உழைக்கும் பெண்களுக்கு மருத்துவ வசதிகளும் கிட்டாத நிலைமை. நவீன வேளாண்மையின் மரபீனி தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படும் பெண்களின் உடல்நலம் கவனிப்பாரின்றி போவதுடன் வாரிசுகளை உருவாக்கும் அப்பெண்களின் உடல்நலக்கேட்டால் ஒரு தலைமுறை பெயரிடமுடியாத புதிய புதிய நோய்களுடன் புறப்பட்டு நம் எதிர்காலத்தை இருட்டாக்கிவிடும்.

உலக அரங்கில் ஏறக்குறைய 850 முதல் 1000 ஏற்றுமதி மண்டலங்கள் உள்ளன. இதில் 27 மில்லியன் தொழிலாளர்கள் வேலைச் செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் பெண்கள். ஒப்பந்த அடிப்படையில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தங்கள் வேலையைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமே பிரதானமாகி விட்டதால் மற்ற அனைத்து நலங்களும் இரண்டாவது நிலைக்குத் தள்ளப்படுகிறன. இவர்களைப் பற்றியும் அரசுக்கும் எவ்வித அக்கறையுமிருப்பதில்லை. அரசின் நோக்க மெல்லாம் பன்னாட்டு நிறுவனங்களைத் தங்கள் மண்ணில் தக்க வைத்துக் கொள்வதில் மட்டுமே.

சிறப்புப் பொருளியல் மண்டலக்கொள்கை 2000ல் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் மாநில அரசும் இந்திய அரசும் பொருளியல் கொள்கையில் தங்களுக்கிருந்த அதிகாரத்தை முற்றிலும் இழந்து விட்டன. இச்சிறப்பு பொருளியல் மண்டலங்கள் கட்டுவதற்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப் படுகின்றன. ஒருபக்கம் வேளாண் தொழிலை நம்பி இருந்தவர்களுக்குப் பாதிப்பு. மறுபக்கம் அந்த நிலங்களில் கட்டப்பட்டு எழுந்து நிற்கும் மண்டலங்களில் அமையும் பெரும்பாôன (BPO) அலுவலகங்களில் சுரண்டப்படும் உழைப்பு. பெண்களை அதிகமாக பொருளியல் மண்டலங்கள் வேலைக்கு அமர்த்துவதும் இதனால்தான். சுரண்டுவது, அடக்கி ஆள்வதும் எளிது என்பதால் தான்.

இந்திய மண்ணிலிருந்து ஒரே வருடத்தில் 1994ல் இரண்டு பேரழகிகள் உலக அரங்கில் தேர்ந்தெடுக்கப்பட்டது என்னவோ தற்செயலாக நடந்த விபத்து அல்ல. உலகமயமாதலில் 1991ல் இந்திய நுழைவுக்குப் பின்தான் இது மிகப்பெரிய திட்டத்துடன் அரங்கேறியது. அதன்பின் இந்தியா அழகியல் சாதனங்களின் விற்பனைச் சந்தையாக மாற்றப்பட்டது. அழகியல் சாதனங்களில் சுங்கவரி 120 விழுக்காடிலிருந்து 40 விழுக்காடாக சரிந்தது. பன்னாட்டு நிறுவனங்களின் சோப்பு, க்ரீம். உதட்டுச்சாயங்கள், நகப்பூச்சுகள் இப்படியாக எண்ணற்ற பன்னாட்டு முத்திரைப் பதித்த அழகியல் சாதனங்கள் வந்தன. சாலைக்கு ஓர் அழகு நிலையம் தோன்றியதும் இக்காலக் கட்டத்தில் தான்.

இந்தியப் பெண்களின் உடை, நடை, உணவு மாற்றங்களும் அழகியல் சிந்தனைகளும் இவைகளை விளம்பரப்படுத்திய ஊடகங்களும் பெண்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. உடை மாற்றங்களைத் தாண்டி சமுதாயத்தில் நேற்றுவரை மதிக்கப்பட்டிருந்த சில கருத்துருவாக்கங்கள் இவர்களால் உடைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில கருத்துகள் வரவேற்கப் பட வேண்டியவைதான் என்பதையும் மறுப்பதற்கில்லை. நகர்ப்புறத்து பெண்களுக்கு கிடைத்திருக்கும் பொருளாதர உரிமைகள் குடும்பத்தை விட்டு பணியின் நிமித்தம் பிரிந்து தனித்து வாழும் வாழ்க்கைச்சூழல் போன்ற காரணங்களால் ஆண்களின் துணையின்றி பெண்களின் வாழ்க்கை தொடர்வது முடியும் என்ற உண்மையை மக்கள் சமுதாயம் ஏற்றுக்கொண்டு விட்டது.

சென்ற நூற்றாண்டில் பெண்கள் வேலைக்குப் போவது அபூர்வம். இன்று நிலைமை மாறியுள்ளது வரவேற்கப்பட வேண்டியது தான் என்றாலும் இவை எல்லாம் பெண்விடுதலைக்கான திறவுகோலாக மாற்றம் பெறாமல் திருமணச்சந்தையில் பெண்ணின் விலையை நிர்ணயிக்கும் அளவுகோல்களாகவே உள்ளதை நினைக்கும்போது இந்த மாற்றங்களில் பெருமிதமில்லை.

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக அழகிப் போட்டியில் ‘பசிபிக் ராணி'யாக (queen of pacific) தேர்ந்தெடுக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த நிலியா சான்கோ (Nelia Sancho)வின் வலி நிறைந்த வார்த்தைகள்

"மக்கள் என்னை தங்கள் அறைகளில் அழகுக்காக அலங்காரமாக மாட்டி வைக்கப்படும் ஓர் அழகியல் சாதனமாகவே - எப்போதும் புன்னகையுடனும் அலங்காரத்துடனும் காணப்படும் பொருளாகவே கண்டனர். என்னுடன் அறிவுசார்ந்த எதைப் பற்றியும் பேச முடியும் என்று எண்ணவில்லை. பல்வேறு அழகியல் சாதனங்களை விளம்பரப்படுத்திய போது விளம்பர உலகில் பெண் ஓர் இலாபகரமான உற்பத்திச் சாதனமாகவே பயன்படுத்தப் படுகிறாள் என்பதை அறிந்து கொண்டேன். இலாபகரமாக விலை போகும் வியாபாரச் சரக்காக மாற்றப் படும் மேடைகள் தான் உலக அழகிப் போட்டிகளும் ஆடை அலங்கார போட்டிகளும்'' என்கிறார்.

இந்திய நாட்டின் உலக அழகிகளோ வெள்ளித் திரையில்!

சிறுதொழில்கள் நசிந்து போனதால் அத்தொழில்களைத் தலைமுறை தலைமுறையாகச் செய்துவரும் பெண்கள் வேலையிழந்து வருவாயிழந்து பிறந்த குடும்பத்திற்குச் சுமையாகி விடுவதால்தான் பெண்சிசுக் கொலைகளும், பெண் குழந்தை கருக்கலைப்புகளும் அதிகரித்துள்ளன.

தராளமயமாதலும் தனியார் மயமாதலும் வர்க்கங்களுக்கு நடுவிலிருக்கும் இடைவெளியை அதிகமாக்கியுள்ளன. ஒரு பக்கம் அம்பானிகளும் மிட்டல்களும் வளர்ந்து உலகின் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற மறுபக்கம் உணவில்லாமல் எலிக்கறியைச் சாப்பிட்டு செத்துமடியும் மனிதர்களின் கதையும் தொடர்கிறது. வல்லரசுகள் தங்கள் போராயுதங்களை விற்பதற்காக எப்போதும் சண்டைக் கோழிகளைத் தயாராகவே வைத்துள்ளனர். அண்டைநாடுகளுடன் சமரச உறவுகள் எட்டாத கனியாகவே உள்ளதால் எப்போதும் ஆயுத விற்பனைச் சந்தை திறந்தே உள்ளது. தீவிரவாதம், எதிரிகளுடன் போர் என்று அதிகாரத்தைக் கைப்பற்ற நடக்கும் அனைத்து தளங்களிலும் பெண் குறிவைத்து தாக்கப்படுகிறாள். உடலளவிலும் மனதளவிலும் பெரிதும் பாதிக்கப்படுவது பெண்களாகவே உள்ளனர்.

உலகமயமாதலில் இருந்து இனி நாம் விலகிக்கொள்ள முடியுமா என்றால் அது அவ்வளவு எளிதல்ல. நாம் இந்த உலக வணிக ஒப்பந்தக் கொள்கையில் நெடுந்தூரம் பயணம் செய்து விட்டோம். "விலக விரும்புவதோ வெறுப்புக் காட்டி புறக்கணிக்க முன்வருவதோ தற்கொலைக்குச் சமமாகிவிடும். நம்மைப் பொறுத்தவரையில் தாராளமயமாக்கல் முடிவு பெற்றுவிட்ட ஓர் உறுதிமொழி'' என்கிறார். டாக்டர். கா. மீனாட்சிசுந்தரம். இந்த ஒப்பந்தங்களை விலக்கிக் கொண்டால் மியன்மார் அல்லது வடகொரியாவின் தலைவிதியை நாம் அறிந்தே நம் தலையில் ஏற்றிக் கொள்வது போலாகிவிடும்.

எனவே அரசு தன்னுடைய வலிமையான நேர்முறையான பங்களிப்பை எல்லா துறைகளிலும் செலுத்த வேண்டும். தனியார் துறையிலும் பொதுத் துறையிலும் சரியாக கணக்கு வைத்தல், அவற்றைப் பராமரித்தல், முறையாகத் தணிக்கை செய்தல், பங்குச் சந்தைகளின் மீது தன் கட்டுப்பாடுகளைத் தளர்த்தாமலிருத்தல் வேண்டும். இந்தியாவில் எப்போதும் ஏதாவது ஒரு தேர்தல் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அரசின் செயல்பாடுகள் அனைத்தும் தேர்தலைக் குறிவைத்தே அமைவதால் மக்கள் நல்வாழ்வு சட்டங்களையும் கூட கடுமையான வழிமுறைகளில் செயல்படுத்துவதில் தயக்கமே நிலவுகிறது. வெளிநாட்டுக் கொள்கைகளிலும் இப்போக்கே காணப்படுகிறது. மக்கள் விழிப்புணர்ச்சியும் மக்களுக்காக செயல்படும் அரசும் கைகோர்த்து சேர்ந்து நடந்தால் எதுவும் சாத்தியப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com