Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2006
நூல் மதிப்புரை

தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்
- அ.ஞா.பேரறிவாளன்

மரண தண்டனை மனிதத்திற்கு மட்டும் எதிரானது அல்ல; அது மனித உரிமைக்கும் எதிரானதே என்கிற முழக்கங்கள் உலகெங்கும் பரவலாக உரக்கக் கேட்டுக் கொண்டிருக்கும் காலம் இது.

ஏற்கெனவே நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மரணதண்டனைக்கு தங்கள் நாட்டுச் சட்டப் புத்தகத்தில் இடமில்லை என்பதை உறுதியாகத் தீர்மானித்து விட்டநிலையில், உலகின் வேறுபல நாடுகளும் இச்சட்டத்தை ஆய்வுப் பொருளாக்கி, இல்லாமற் செய்வதற்கான வேலைகளிலும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.

தூக்குதண்டனையை உள்ளடக்கிய இந்திய தண்டனைச்சட்டம் கூட இந்தியர்களால் எழுதப்பட்டது அல்ல. வெள்ளையர்களால் 1860-ல் இந்தியர்களுக்கு எதிராக அவர்களை ஒடுக்குவதற்கு என வடிவமைக்கப்பட்ட சட்டம் அது. வெள்ளையர்களை விரட்டிய பின்னும் அவர்கள் விட்டுச்சென்ற சட்டம் மட்டும் வலுவாக நிற்கிறது. ஆனால் வெள்ளையர்கள் நாடான இங்கிலாந்தில் கொலைக் குற்றத்திற்கு மரணதண்டனை கிடையாது என்பது குறிப்பிடப்பட வேண்டிய செய்தி.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விசாரணைக் கைதியாக ஏழு ஆண்டுகளும், தூக்குதண்டனைக் கைதியாக எட்டாண்டுகளும் என்று பதினைந்து ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் கிடக்கும் பேரறிவாளன் மரண தண்டனைக்கு எதிராக மடல் வடிவில் விடுத்த கோரிக்கைகளின் முறையீடே நூலாக வடிவெடுத்துள்ளது.

பத்தொன்பது வயதில் புத்திளம் வாலிபனாக சிறைசென்று, கடந்து சென்ற பதினைந்து ஆண்டுகால மனஉளைச்சலுக்கு ஒரு வடிகாலாகவும், நீதியைத் தளைப்படுத்தவல்ல ‘தடா' என்கிற கொடிய சட்டத்தின் மூலமாகவே இத்தகையதொரு அதிகப்படியான தண்டனைக்கு ஆளாக நேர்ந்ததையும் முறையீட்டு மடலில் தெளிவாக முன்வைக்கிறார்.

தனக்குண்டான மரணதண்டனைக்கு எதிரான தகவல்களை மட்டும் சொல்லிச் செல்லாது இத்தண்டனைக்கு எதிரான சிந்தனைகளை படிப்பவர் மனதில் வலுவாக உருவாக்குவது இந்நூலின் சிறப்பு. தனது தரப்பு நியாயங்களைக் கூட முழுக்க முழுக்க நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே வெளியிடுகிறார் என்பதும் மிகுந்த கவனத்திற்குரியது.

தடா என்கிற கொடூரச்சட்டம் நீதிமன்ற முறையீட்டு வாய்ப்பைப் பறித்ததும் இத்தண்டனைக்கான காரணம் என்பதை அவரது மடல் நம்மிடம் முறையிடும்போது நமக்கும் தவிப்பு மேலிடவே செய்கிறது.

‘மரண தண்டனையே மனிதத்துக்கு எதிரானது' என்கின்ற மாந்த நேயர்களிடம் ‘குற்றமற்ற மனிதனைத் தூக்கிலிடும் கொடுமையிலிருந்து தடுததாட்கொள்ள முன்வாருங்கள்' என்று மனமுருகக் கேட்கிறார் பேரறிவாளன்.

மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் துணைவியாரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி அவர்களே தூக்குதண்டனையை நிறுத்தும்படி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதி இருக்கிறார். மனிதாபிமானத்தின் உச்சத்தை அவர் தகுந்தமுறையில் வெளிப்படுத்தி விட்டார்.
நாம் என்ன செய்யப்போகிறோம்...?
- முழுமதி

வெளியீடு : விலை: ரூ.20/-
மோ.ஸ்டாலின் நினைவு நூலகம்,
87, கீழை அலங்கம், தஞ்சாவூர் 613 001.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com