Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2006
ஆதிக்க நோக்கும் - மாறிவந்த தீர்ப்பும் ; கட்டுரைக்கு மறுப்பு
- நிர்மலா, டெக்சாஸ்

இராசேந்திர சோழன் அவர்களின் "ஆதிக்க நோக்கும் மாறி வந்த தீர்ப்பும்...'' என்ற கட்டுரையை படித்தபோது பல கேள்விகள் மனதில் எழுந்தது. அதைப் பெண்ணிய நோக்கோடு பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்பதாலேயே இந்த எதிர்வினையை எழுத நேர்ந்தது.

அருந்தகங்களில் மகளிர் நடனமாடுவதைத் தடைசெய்து கடந்த ஆண்டு மகாராட்டிர அரசு உத்தரவிட அரசின் அந்த உத்தரவை ரத்து செய்தது மும்பை உயர்நீதிமன்றம். இந்தத்தீர்ப்பானது தொன்று தொட்ட ஆணாதிக்க கருத்தியலுக்கு சவுக்கடியாகவும், தாங்கள் செய்யும் தொழிலால் களங்கப் படுத்தப்படாமல் கண்ணியமாக வாழ விரும்பும் பெண்களுக்கு ஒரு பாதுகாப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது என கட்டுரை துவங்குகிறது.

அருந்தகங்களில் உள்ள நடனமகளிர் தொழிலை இவ்வாறு உயர்த்திப்பிடிப்பது எந்த ஒரு பெண்ணுமே இந்தத்தொழிலை தயக்கமின்றி ஏற்றுச் செய்யலாம் என்பதை உரத்துச் சொல்வதே ஆகும். அந்தத்தீர்ப்பு எந்த ஆணாதிக்க கருத்தியலுக்கு பதிலடி என்கிறாரோ, அத்தகைய கருத்தியலே கட்டுரையின் பல இடங்களிலும் மேலோங்கியிருப்பதைக் காண முடிகிறது.

நாட்டில் பல பிரச்சனைகள் இருக்க, பெண்கள் சொந்தக்காலில் நின்று நேர்மையான வழியில் பொருளீட்டும் இந்தத் தொழிலுக்கு எதற்கு தடை என வினவும் ஆசிரியர், அருந்தக உரிமங்களின் கெடு முடிவடைய இருப்பதால், அதை நீடிக்க அரசு அதிகாரிகள் கோரிய 12 கோடி ரூபாய் தர இயலாததால்தான் இத்தடை என அருந்தக உரிமையாளர்கள் வெளிப்படுத்தியதையும் குறிப்பிடுகிறார். பல பெண்கள் சொந்தக்காலில் நின்று நேர்மையாக பொருளீட்டுவதாகச் சொல்லப்படும் இத்துறையில் அரசுக்கு லஞ்சமாக மட்டும் 12 கோடி ரூபாய் தர வேண்டியதாக இருக்கிறது என்றால்... அங்கு என்ன நடக்கிறது? எப்படி வந்தது இத்தகையதொரு பணப்புழக்கம்?

மேலும் பாலியல் தொழிலுக்கும் நடன மகளிருக்குமான தொடர்புகள், வாய்ப்புகள் சற்று கூடுதல் என்று கூறலாமே தவிர பல நடன மகளிர் கண்ணியம் மிக்க, மதிப்பு மிக்க வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். அதேவேளையில் நடன மகளிராய் அல்லாத சிலரும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகச் சொல்கிறார். ‘கண்ணியம்' என்ற சொல்லுக்கு அர்த்தம் தான் என்ன? குடித்தவனுக்கு ‘தாய்க்கும் தாரத்துக்குமே வேறுபாடு தெரியாது' என்ற அனுபவமொழி இருக்க, குடிகார ஆண்கள் மத்தியில் அவர்களை மகிழ்விக்க அரைகுறை ஆடைகளோடோ அல்லது மேலாடைகளைத் துறந்தோ நடனமாடும் பெண்கள் எப்படி கண்ணியமாக இருக்க இயலும்? அப்படியனால் தன் உடலழகைக்காட்டி பெண்கள் போட்டியிடும் ‘அழகிப் போட்டியையும்' கட்டுரை ஆசிரியர் ஆதரிக்கிறாரா?

நடனம் என்பது வாழ்வின் பிரிக்க இயலாத அம்சம் பொது இடங்கள் கோயில்களில், அரசவைகளில் நடனம் ஆடுவது என்பது மரபு, அது செல்வந்தர்கள், அரசர்களை மகிழ்விக்கவும், பொதுமக்களின் கேளிக்கைக்குமான ஒரு பண்பாட்டு நிகழ்வு என்கிறார். அத்தகைய மரபு, நிகழ்வு ஏன் பெண்களுக்கு மட்டுமே உரித்தாகியுள்ளது? இன்னும் எத்தனை காலத்துக்கு பெண்கள் ஆண்களை மகிழ்விக்கும் போகப்பொருளாகவே இருக்கப் போகிறார்கள்? அத்தகைய மரபு மருவி இப்போது நடனமகளிராய் ஆகியிருப்பதாக இதனை நியாயப்படுத்தும் இரா.சோ. எவ்வளவு எதிர்ப்பு களுக்கு மத்தியில் ‘தேவதாசி' முறையை பெரியார் ஒழித்தார் என்பதை மறந்துவிட்டாரா என்ன?

அடுத்ததாக, இத்தொழிலில் தவறு நேர்கிறது என்றால் அதனைத்தான் சரிசெய்ய வேண்டுமேயன்றி அத்தொழிலையே தடை செய்யக்கூடாது என்கிறார். அதற்கு உதாரணமாக மாடலிங் துறை, கலைத்துறை, தொழிற்சாலை, பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் உள்ளதால் ஏற்படும் தவறுகளை ஒப்பிடுகிறார். இவர் உதாரணமாக சொல்லும் பெண்களுக்கும், நடன மகளிருக்குமான ஒற்றுமைதான் என்ன? மற்ற பெண்கள் தங்கள் இடத்தில் ஒரு சில பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கும், இத்தகைய நடனமகளிர் பிரச்சனைகளே வாழ்க்கையாகி மரத்துப் போயிருப்பதற்கும் வேறுபாடு இல்லையா?

அருந்தகங்களில் நடனமகளிர் நடனமாடத் தடை என்பது கொடுமையான பெண்ணடிமைத் தனம் எனக் குறிப்பிடும் ஆசிரியர், எத்தகைய கொடுமையான வாழ்க்கைச்சூழல் இருந்தால் அவர்கள் இத்தகைய கீழ்த்தரமான வேலைக்கு வந்திருப்பார்கள் என்பதை ஓரிடத்தில் கூட சுட்டிக்காட்ட மறுக்கிறார். மேலும் இத்தடையைக் கொண்டு வந்த மகாராட்டிர அரசு, இந்தப் பெண்களின் மறுவாழ்வுக்கு என்ன செய்திருக்கிறது என்ற நியாயமான கேள்வியை ஒருவரிச் செய்தியாக்கி விட்டும், அதனை வளர்த்தெடுக்காமலும் அத்தொழிலை நியாயப்படுத்தும் நேரெதிரான இடத்துக்கு சென்று விடுகிறார்.

கட்டுரையில் இன்னல் படுவதைச் சொல்லும் இரு நடனமகளிர், நடனத்தடையால் உணவுக்கும், மருந்துக்குமே அல்லல்படுவது என்பது அவர்கள் எத்தகைய அடிமட்ட வாழ்க்கைச் சூழலில் இருந்து வருகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. நடனமாடத் தடைவிதித்ததாலேயே அவர்கள் கீழ்மட்ட வாழ்க்கைச் சூழலுக்கு சென்றுவிட முடியுமா என்ன? அத்தகைய சூழலில் இருந்துதானே அவர்கள் நடன மகளிராகவே ஆகியிருக்க வேண்டும்.
இப்படிப்பட்ட சூழலில் இருந்து நடனமகளிர் தொழிலுக்கு வரும் இவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்பதை மறுக்க முடியுமா?

அடுத்ததாக இவற்றையெல்லாம் சரி, தவறு என்று யார் தீர்மானிப்பது என்கிறார் உண்மைதான். எந்த ஒரு நிகழ்வையும் எவரும் அப்படி அறுதியிட்டு கூற இயலாது. எனினும், சம்பந்தப்பட்ட நிகழ்வில் உள்ளவருக்கு அதற்கான மனநிறைவு இருக்கும். பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மனசாட்சியின்படி செயல்படுவதாய் திருப்தி கொள்வர். எதிர்ப்புகளை வென்ற சாதனையாளர்கள் நிலை அதுவாகத்தான் இருக்கும். ஆனால், நடன மகளிராய் உள்ள பெண்களில் எத்தனை பேர், இந்தத்தொழில் மனதுக்கு நிறைவான, கௌரவமான தொழில் என்பார்கள். மனசாட்சிக்கு ஏற்பவே இதில் ஈடுபடுவதாய் எத்தனை பேர் ஒப்புக்கொள்வார்கள்?

மும்பை நீதிமன்றம் தனது தீர்ப்பில், நடன மகளிராய் இருப்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று. பெண்களில் சிலர் வரவேற்பாளராக, உதவியாளராக, (விமான) பணிப்பெண்ணாக இருக்கும்போது ஏன் அருந்தகங்களில் மட்டும் நடன மகளிராய் இருக்கக்கூடாது எனக்கூறி அரசின் உத்தரவுக்கு தடைவிதித்து இருக்கிறது. நீதிமன்றம் குறிப்பிடும் இந்த 3 உதாரணங்களுமே பெண்கள் தங்களை அழகுப்பதுமைகளாக ஆக்கிக்கொண்டு ஆண்களுக்கு காட்சிப்பொருளாகவும் வரவேற்கவும் பணிவிடை செய்யவுமான தொழில்களே அவர்களோடு இத்தொழிலையும் சேர்ப்பது சரியானதே. ஆனால் இவை அனைத்துமே பெண் உரிமைக்கும் - பெண் விடுதலைக்கும் எதிரான தொழில்களே. ஆணாதிக்கத்திற்கு அடிபணியும் கொத்தடிமைத் தொழிலே என்பதில் மாற்றுக் கருத்தேது?

அடுத்தாக, பெண்கள் பல துறைகளிலும் நுழைந்து சாதனை படைக்கிறார்கள். பெண்கள் இதுவரை புகாத துறைகளான தானி, பேருந்து, விமானம் ஓட்டுவது போன்றவற்றில் ஈடுபடுவதைக் காண பூரிப்பாக இருக்கிறது. இதுவே பெண் விடுதலைக்கான பாதைகளில் ஒன்று. இப்படி இருக்க பெண்கள் காலம், காலமாக ஈடுபட்டு வந்த துறையை, பணிவாய்ப்பையும் வாழ்க்கை உத்திரவாதத்தையம் தந்த தொழிலை தடைசெய்வது என்ன நியாயம் என்கிறார். முன்கூறிய மூன்று செயல்களுமே வாழ்க்கையின் தடைகளை வென்று சாதனை புரிந்த பெண்கள் பற்றியது. ஆனால் பின்கூறிய நடன மகளிரோ வாழ்க்கைப்புயலில் சிக்கி போகப் பொருளாக மாறியவர்கள். சாதனையாளர்களையும் சோதனைகளால் இழிநிலைக்குள்ளானவர்களையும் எப்படி ஒரே நேர்கோட்டில் நிறுத்த முடியும்?

இறுதியாக நடன மகளிர் குறித்த தவறான மதிப்பீடுகளில் இருந்து நாமும் விடுபட்டு மற்றவரையும் விடுவிக்க வேண்டும் எனக் கோருகிறார் கட்டுரை ஆசிரியர். காலம் காலமாகக் கல்வி கூட மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டுக் கிடந்த பெண்களுக்கு ஒரே ஒரு (சமையல் தவிர்த்து) அனுமதிக்கப்பட்ட தொழில் நடனம் மட்டும்தான். அது எப்படி கண்ணியமானதாக இருக்கும் என்கிற சிறு சிந்தனையை சீர்தூக்கிப் பார்த்தாலே நடன மகளிரின் "தொழில் அவலம்'' பளிச்செனப் புலப்பட்டு விடும். இந்த நோக்கில் சிந்தனை பயணிப்பதே பெண் விடுதலைக்கான பாதைகளில் ஒன்றாகவும் இருக்கும்!



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com