Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2006
தடைக்கற்களும் - படிக்கற்களும்
நா.நளினிதேவி

ஆண் பெண் சமன்மைச் சமுதாயம் என்பது பெண்ணியத்தின் குறிக்கோள் மட்டுமல்லாது அறிவு நாகரிகம் மற்றும் பண்பாட்டின் எல்லையுமாகும். பொருளியல், சமுதாயவியல் சமன்மையை அடைவதற்கும் இதுவே அடிப்படையுமாகும். மக்களில் சரிபாதி எண்ணிக்கை கொண்ட பெண்கள் சமநிலை பெறாதபோது பிற கூறுகளில் சமன்மை தோன்றுவது அரிதாகும். மேலும் அறிவியலின் வளர்ச்சி விழுக்காட்டிற்கு ஏற்ற வகையில் சமுதாய வளர்ச்சி இல்லை. காரணம் அறிவியல் முன்னேற்றம் அனைத்தும் பெண்ணுலகைப் பின்நோக்கியும், தவறான பாதையிலும் இழுத்துச் சென்று கொண்டுள்ளமையே !

சமன்மைச் சமுதாயத்துக்கு அடிப்படையான பெண் விடுதலை பெண்கள் தொடர்பானது மட்டுமே என்ற தவறான கருத்தும் நிலவுகின்றது. பெண் விடுதலை சமுதாய நோக்கில் அணுகப்பட வேண்டிய ஒன்றாகும். ஆனால் இன்று வரை அரசோ, அரசியல் கட்சிகளோ, சாதி சமுதாய அமைப்புகளோ பெண் விடுதலையை இந்நோக்கில் அணுகவில்லை. எனினும் காலத்தின் கட்டாயத்தால் அவ்வப்போது பெண்விடுதலை மேடைகளில் முழங்கப் படுவதோடு ஆணிவேரைக் களையாது மேலோட்டமான முயற்சிகளே எடுக்கப்படுகின்றன. சாதி சமயத்திலே பின்னிப் பிணைந்துள்ள பெண் விடுதலையை இவ்வமைப்புகளின் உள்ளார்ந்த முயற்சி இன்றிப் பெற இயலாது. இவ்வாறான அரசியல் சமுதாயப் பின்னணியில் கண்ணொளி இழந்த அன்பர்கள் யானையைத் தொட்டுணர்ந்து இதுதான் யானை என்று கண்ட கதையாய்ப் பெண் விடுதலையும் ஒவ்வொருவர் நோக்கிலும் கோணத்திலும் விளக்கம் கொள்ளப்பட்டுள்ளது.

பெண் விடுதலைச் சிந்தனைக்கு வித்திட்டவர்களுள் உலக அளவில் மார்க்சும், தமிழகத்தில் பெரியாரும் முதலிடம் பெறுபவர்கள். ஆனாலும் இவர்கள் அவரவர் கட்சி சார்பிலேயே அடையாளம் காணப்பட்டதால். இவர்களின் பெண் விடுதலைக் கருத்தை ஏற்றுக் கொள்வது, அவர்களின் கட்சிக் கொள்கைகளையும் ஏற்றுக் கொண்டதாகி விடும் என்ற நினைவாலும் பெண்விடுதலைக்கு ஒருங்கிணைந்த முயற்சி இல்லாமல் உள்ளது. எனவே இவ்வாறான பல காரணங்களால் பெண்விடுதலை என்பது குறித்துத் திட்டவட்டமான தெளிவான அறிவுசார்ந்த நடுநிலையுடன் கூடிய பொதுவான வரையறை தேவைப்படுகின்றது. இதனை அனைத்துப்பிரிவினரும் ஏற்றுக் கொண்டு, அதனை நோக்காகக் கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிதான் பெண் விடுதலையை எளிதாக்கும். ஆகையால் இதே நிலைப்பாடு உருவாக ஆவன செய்தல் வேண்டும். நோக்கம் ஒன்றாக இல்லாதபோது தனித்தனி முயற்சிகள் பயன் தரா.

பெண்ணியம் வலியுறுத்தும் பெண் சமுதாய மாற்றத்தை இரண்டு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம். இது பெண்விடுதலையை வரையறை செய்வதற்கு ஏதுவாக இருக்கும். ஒன்று பெண் மேம்பாடு ; மற்றொன்று பெண் சமன்மை எனக் கொள்ளலாம். பெண் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளியல் விடுதலை முதலானவை பெண் மேம்பாட்டு நிலைக்குள் அடங்கும். எல்லா வகையிலும் எல்லா நிலையிலும் பெண், ஆணைப்போன்று உரிமை பெற்றுக் குடும்ப அளவிலும் தனி அலகாகக் (unit) கருதப்பெற்றுச் சமுதாய அச்சம், சமுதாய அவதூறுகளிலிருந்து விடுபட்டும் பாலியல் வேறுபாட்டுச் சின்னம், நுகர்பொருள், விளம்பரப்பொருள் என்பவற்றுக்கு அப்பாற்பட்டு அறிவு, திறமையின் அடிப்படையில் மட்டும் மதிக்கப்படுதலே பெண் விடுதலை என்னும் சமன்மை நிலையாகும்.

இவ்வாறான சமன்மை நிலை பெறும் விடுதலைக்கு வலுவான தடைகளாகக் கற்பு, திருமணம், குடும்பம் எனும் ஒரு சாரான மரபுகள் பெண்களின்மீது திட்டமிட்டுத் திணிக்கப் பட்டுள்ளன. உரிக்க உரிக்கத் தோலாய் உள்ளே ஒன்றுமில்லாத வெங்காயம் போன்று உள்ளீடற்ற மரபுகள் இவை! பொய்மையும், கயமையும், வஞ்சனையும் கொண்டு கட்டுக் கதைகளாலும், சமய நம்பிக்கையாலும் வலுவாக்கப்பட்டுக் கற்புக்கரசி, வாழ்வரசி, இல்லத்தரசி, குடும்பவிளக்கு என்றெல்லாம் நாவும், நெஞ்சும் கூசாத பொருளற்ற புகழுரைகளால் புனையப்பட்டுள்ளன. இந்த உண்மையை ஒவ்வொரு பெண்ணும் உணரும் நிலையே பெண் விடுதலை பெறும் எல்லையாகும்!

நாட்டின் விடுதலையை நோக்கமாகக் கொண்டு போராடிய தலைவர்கள் விடுதலைக்குப் பின்பு நாட்டை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்று திட்டமிடவில்லை. இதனால்தான் விடுதலை பெற்று அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் விடுதலைக்கு முன்னர் நிலவிய சமுதாய அவலங்கள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து கொண்டுள்ளன. இதே நிலை பெண்விடுதலைக்கும் பொருந்தும். ஆகையால், பழைய மரபுகளை மாற்றுவதோடு அவற்றுக்கு மேலான புதிய மரபுகளையும் கண்டறிய வேண்டிய இரட்டைச் சுமை பெண் விடுதலைப் போராட்டத்துக்கு உள்ளது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். இக்கருத்தையே பெண்ணியச் சிந்தனையாளரும், முதுபெரும் படைப்பாளருமாகிய ராஜம்கிருஷ்ணன் தம் புதினங்களில் வலியுறுத்தி வருகின்றார்.

இன்றுவரை தொடரும் மெக்காலே காலத்து எழுத்தர் பணிக் கல்வி முறையில் சமுதாய மாற்றச் சிந்தனைக்கு இடமில்லை. இளந்தலைமுறையினர் தமக்குரிய பாடத்திட்டப் பகுதிகளை மட்டும் மனப்பாடம் செய்து மதிப்பெண் பெறும்
இயந்திரங்களாகியுள்ளனர். இதை விடுத்துத் தொழில்நுட்பவியல், கணினியியல் போன்றவற்றில் கரை கண்டிருந்தாலும் திருமணவலையால் பின்னப்பட்ட குடும்பக் கூட்டுக்குள் கற்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை அறியாதவராய்த் தம் கல்விக்கும் திறமைக்கும் தொடர்பற்ற சிறுமைகள் சூழ்ந்த வாழ்க்கையைச் சிந்தனைத் திறமின்றி வாழ்ந்து கொண்டுள்ளனர்.

பெண்ணை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்துவதற்குக் கையாளப்பட்ட இன்னொரு வழியாகிய அழகியல் கோட்பாட்டில் அமிழ்ந்து நகை, பட்டு, ஒப்பனை, சமையல், சமயம் சார்ந்த விழா, விரதம் எனும் மாற்றத்துக்கு இடம் கொடாத சதுரங்களுக்குள் ஓடி ஓடிக் களைத்துத் தொலைக்காட்சியின் கண்ணீர் இழுப்பித் தொடர்களில் கரைந்து இளைப்பாறுகின்றனர். புறவாழ்க்கை முற்போக்காக இருந்தபோதும் அகவாழ்க்கை பிற்போக்குச் சேற்றில் ஆழ்ந்து அடிமைச் சுகத்தில் திளைந்துக் கொண்டுள்ளது. பெண் கல்வி வேலைவாய்ப்பு பொருளியல் விடுதலை போன்றவற்றால் தற்சிந்தனை பெற்று சமையல் மற்றும் வீட்டுவேலைப் பொறுப்பிலிருந்து பெண்கள் விடுபடாத வகையில் நாளொரு புதுமையும் பொழுதொரு கருவியுமாகக் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களைச் சந்தைக்களமாக்கி விளம்பரப் பொருட்களாக்கும் இழிவை உணரவில்லை. மாறாக, அவற்றை வாங்கிக் குவிக்கும் மாயமான் வேட்டையில் தம் அளப்பரிய ஆற்றலை முடக்கிக் கொண்டுள்ளனர்.

பெண்களின் எண்ணிக்கையில் ஐந்து விழுக்காட்டிற்கும் குறைவான பெண்களே பெண்ணியல் ஆர்வலராக உள்ளனர். எஞ்சியோரை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம். தம் இழிநிலையையோ, விடுதலை உணர்வையோ கண்டு கொள்ளாமல் செக்குமாடுகள் நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஒரு வகை மேலைநாட்டு நாகரிகமும், பண்பாடும் கொண்டுள்ளதோடு ஆண் எதிர்ப்பு, ஆண் வெறுப்பு, ஆண் அடிமை, உணர்வினராய் வரையறையற்ற வாழ்க்கையே பெண் விடுதலை என்று கொண்டு நடப்பவர் இரண்டாம் வகையினர். இத்தகையோர் சிலரே ஆனாலும், இவர்களையே மையப்படுத்தி மிகையாக்கி ஊடகங்கள் அனைத்தும் செயல்படுகின்றன. பழைய மரபுத் தடைகளை விடவும் இத்தகு புதிய சிக்கல்களே மிகக்கடுமையாக உள்ளன. பெண் கல்வி போன்ற மேம்பாடுகளால் தோன்றியுள்ள இத்தகைய எதிர்விளைவுகளை ராஜம் கிருஷ்ணன் வளர்ச்சி வீக்கம் என்று பொருத்தமாகக் குறிப்பிடுகின்றார்.

வழுக்குமரம் போன்ற இந்தச் சூழலில் மெய்யான பெண்விடுதலை முயற்சிகளும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.

இம்முயற்சிகளில் ஒரு கூறாகப் பெண் விடுதலைக்கு வலுவான தடைகளாக விளங்கும் கற்பு, திருமணம், குடும்பம் என்னும் கற்பனைச் சுவர்களில் அடுக்கப்பட்டுள்ள செங்கற்களைச் சிந்தனைக் கடப்பாரை கொண்டு தகர்த்து நடுநிலைக் கற்கûளால் விடுதலைக் கோட்டையை கட்ட வேண்டும். அதற்கான வழிமுறைகளும் செயல் திட்டங்களும் என்னென்ன?

(அடுத்த இதழில்)



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com