Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2006
மாங்காய்த் தொக்கும், கொஞ்சம் மார்க்சியமும்
- மஹிந்த்தீஷ்

கடலூர் சன்னதி தெரு, பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி எதிரில் அமைந்திருக்கும் ஒரு ‘பாய்' கடை (‘பாய்' - ஏழு வயது இளைய தோழன்) சமயம் வாய்க்கும்போதெல்லாம் ‘பாய்' உடன் கதைத்துக் கொண்டிருப்பது வாடிக்கை. ஒரு மதிய நேரத்தில் இருவரும் ஒரே தட்டில் தயிர்சாதமும், மாங்காய்த் தொக்குமாய் அமர்ந்தோம். தெருவில் நகராட்சி தேர்தல் கோஷம். நிமிர்ந்தால், என்னுடன் தினசரி வர்த்தக (பங்கு சந்தை) அலுவலகத்தில் அருகே அமர்ந்து வணிகம் புரியும் தோழர்... உள்ளாட்சி தேர்தலையொட்டி கூட்டணிக்கட்சி கொடிபிடித்தபடி வந்து கொண்டிருந்தார். எழுந்து வெளியில் சென்றேன்.

"வணக்கம் தோழர்! என்ன இது கலாட்டா?''

"தோழர்னாலே கலாட்டா தானா? தேர்தல் பணிங்க தோழர்!

"அது சரி ‘கை' வேற நிறத்திலிருக்கே?''

"கிண்டல் பண்ணாதீங்க தோழர் சூழ்நிலை தானே...?''

"நீங்களுமா..?''

"வேற வழியில்லை தோழர்! இப்ப தானே கொஞ்சமாவது மரியாதை கிடைக்குது!

"நிஜமாவா'' என்று மௌனமாக சிரித்ததில் அவர் மனம் புண்பட்டிருக்க வேண்டும். சிறிது நேரம், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட ‘வார்டில்' சிக்கிக் கொண்டதற்கான வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"என்ன இருந்தாலும் வருஷக்கணக்கா கட்சிக்கு உழைச்ச ஆளுங்களையெல்லாம் நட்டாத்துல விடறதுன்னா... மனசுக்கு கஷ்டமா இருக்கு தோழர்! அங்கங்கே அவனவன் பெஞ்சாதியை நிக்க வைக்கிறான், என்னை மாதிரி கட்சிக்காகவே கல்யாணத்தக் கூட மறந்து நிக்கறவன் கதி..?'' (இல்லற பந்தத்தை கட்சிக்காகவும், கொள்கைக்காகவும் துறந்த தோழர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது)

பின் அவரே ப்ச்... யாரை குத்தஞ்சொல்ல?'' என்று தேற்றிக் கொண்டார். பேச்சு மீண்டும் விடுபட்ட இடத்திலேயே தொடங்கியது.

"மரியாதை கிடைக்குதுன்னா ஒரு மாதிரி சிரிக்கிறீங்களே..?''

"சேச்சே! அப்படியில்ல தோழர்.. என் வாயே அப்படித்தான்.''
இருந்தாலும் அவர் விளக்கிக் கூற ஆரம்பித்தார்.

"அது அப்படியில்லீங்க தோழர்! மார்க்சியம் வேற, கட்சிப் பணின்றது வேற! மார்க்சியம் தெரிஞ்சவனெல்லாம் கட்சிப் பணியாற்ற ஓடி வறான்னு சொல்ல முடியாது. கட்சிப் பணியாற்ற வர்றவனுக்கெல்லாம் மார்க்சிய சிந்தனை இருக்கணும்னு அவசியமில்லை..''

"ஒரு விஷயம் புரியலையே தோழர்!''

"எது?''

"இன்றைய திராவிட இயக்கங்களுக்கும், மார்க்சியத்துக்கும் உண்மையிலேயே ஏதாவது ஒட்டுறவு இருக்கா?... இருங்க இருங்க 'இடது', ‘வலது', ‘மத்தி'ன்னு சமாளிக்காம சொல்லுங்க..'' முயன்று வெகுவாய் பேச்சை திசை திருப்பினேன்.

"வெளிப்படையாவே பேசுவோமே...'' என்றவர் முன்னே நின்ற கூட்டத்திடம் முன்னாலே போங்க' என்றவாறு சைகை செய்து விட்டு என்னிடம் திரும்பி "இன்றைக்கு விஜயகாந்த்துக்கு வர்ற கூட்டம் ஜீவாவே உயிர்த்து வந்தாலும் வருமா?''

"கார்ல் மார்க்சுக்கே வராது. எடிசனை மறந்துட்டு "எம்.ஜி.ஆர்.க்கு 'கட்-அவுட்' வைக்கிற ஜாதிங்க நாம''

"அதான்.. அங்கதான் நாங்களும் தொங்கறோம். எந்த சினிமா நடிகனையாவது, எந்த நாட்டிலயாவது முன்னிலைப்படுத்தறமோ? அடித்தட்டு மக்களுக்கு ஒண்ணுன்னா, கொளுத்தர வெய்யில்ல கொடி பிடிச்சு கோஷம் போடறது யாரு? இன்னிக்கு (இன்றைய) அரசியல்ல கூட ‘தோழர்கள்' கொள்கையில் ஏதாவது வேஷம் இருக்கா?.. சொல்லுங்க.. இன்ன பிற கட்சிகளை ஒப்பிட்டுச் சொல்லுங்க.?

"நியாயம்தான்... ஆனா(ல்) இந்த உண்டியல்..'' என்று இழுத்ததும் மனிதர் சிடுசிடுப்பாகி விட்டார்.

''என்ன தோழர் நீங்களும்? உண்டிக்காரன், வண்டிக்காரன்னுட்டு? எந்தக் கட்சி நடத்தவும் பணம் வேணுமா? இல்லையா-? நமக்கென்ன தனியார் தொலைக்காட்சி இருக்கா? இல்ல ஊழல் சொல்லித் தர்ற மேலிடம் இருக்கா? பணம் எங்கேர்ந்து வரும்!''

யார் பேசியிருந்தாலும் அந்த வார்த்தையை நான் பிரயோகித்திருக்கக் கூடாது. நான் வருத்தம் தெரிவித்துக் கொண்டேன்.

பின் இருவரும் ‘பாய்' கடையில் ‘சில்லென்று பழைய ‘பூச்சி மருந்து' வாங்கிக் குடித்தோம்.

"நியாயமா நான் இதக் கூட குடிக்கக் கூடாது'' என்று இழுத்தவரிடம் ''அட சும்மா சாப்பிடுங்க தோழர். வயித்துல இருக்கற பூச்சியெல்லாம் சாவும்'' என்றதும் நுரை தெறிக்க சிரித்தார்.

"எனக்கொரு சந்தேகம் தோழர்'' என்றதும் மீண்டும் கலவரமாகி நிமிர்ந்தார்.

"இப்போ எல்லா கட்சிகளும் கூட்டணி வச்சி, ‘கேக்' பிரிக்கர மாதிரி தொகுதி பிரிச்சிக்கிறாங்க... எந்தத் தொகுதியில் யாருக்கு 'செல்வாக்கு'ன்றது பொறுத்து வேட்பாளரை நிக்க வைக்கிறாங்க. காலங்காலமா கம்யூனிஸ்டுக்கு ஓட்டு போடர ஒருத்தன், தான் தொகுதியில் நிக்கிற, அவன் சிந்தனைக்கு அறவே ஒத்துவராத ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டே ஆகணுமா? அதாவது நீங்க கூட்டணி வச்சிக்கிட்ட பாவத்துக்கு..? அப்ப அவன் ஓட்டு, என் ஓட்டு எல்லாம் மதிப்பிற்குரியதே கிடையாதா? இது என் ஓட்டுரிமையையே பறிக்கற மாதிரி இல்லை? இதுக்காக நாம ‘தேர்தல் கமிஷன்' ஆஃபீஸ்' முன்னாடி ஒரு போராட்டம் நடத்தினா என்ன? என்ன சொல்றீங்க?''

"அதுதான் முன்னாடியே சொன்னேனே தோழர்..? சரி தோழர்.. மன்னிச்சுக்குங்க! எனக்கு நேரமாச்சு, வாக்கு சேகரிக்கணும். அப்புறம் பார்க்கலாம்'' என்று விரைந்து விட்டார். அவருக்கு விடைகொடுத்து விட்டு ‘பாய்' கடைக்குள் நுழைந்தேன். ‘பாய்' ஒவ்வொரு விரலாய் சூப்பிக் கொண்டே கேட்டான். "ஏண்ணே, இந்த வெட்டிப் பேச்செல்லாம் உங்களுக்கு? உதைதான் வாங்கப் போறீங்க'' என்றான்.

நான் குனிந்து தட்டைப் பார்த்தேன். வழித்தெடுக்கப்பட்ட மாங்காய்த் தொக்கின் சிவப்பு வண்ணம் என் பங்கு தயிர் சாதத்தோடு சரி பாதியாய்க் கலக்க முயன்று கொண்டிருந்தது.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com