Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2006
பல அனுபவம்... சில புரிதல்... - ஒரு பார்வை
- கோவை ஞானி

பெரியாரியத்தில் வலதுசாரிப் பெரியாரியம், இடதுசாரிப் பெரியாரியம் என்றும் வேறு படுத்தினோம். மார்க்சியத்தினுள்ளும் வலதுசாரி மார்க்சியம் என்றும், இடதுசாரி மார்க்சியம் என்றும் வேறுபடுத்தினோம். இப்படி வேறுபடுத்திப் பார்த்ததன் மூலம் எது அசலான பெரியாரியம், எது அசலான மார்க்சியம் என்றும் புரிந்துகொள்ள முயன்றோம். இதே நெறியில் பெண்ணியத்தையும் வலதுசாரிப் பெண்ணியம் என்றும், இடதுசாரிப் பெண்ணியம் என்றும் வேறுபடுத்திப் பார்க்கலாம் என்றும் தோன்றுகிறது. மேற்கிலிருந்து எத்தனையோ வகைப்பட்ட பெண்ணியம் வந்திருப்பதை நம் படிப்பாளிகள் பட்டியலிட்டு விளக்கியுள்ளனர்.

இந்தியாவிலும் பெண்ணியம் பற்றிப் பேசுவதற்கு இடமுண்டா? என்றும், மேற்கத்திய பெண்ணியத்தில் நமக்குத் தேவையான பெண்ணியம் எது என்றும் இவர்கள் ஆராய்கின்றனர். இந்த வகைப்பாடுகள் குறித்து இப்பொழுது நம் கவனம் செல்ல வேண்டியதில்லை. சற்று சிந்தித்கும்போது இந்தப் பெண்ணிய வகைப்பாடுகளை வலதுசாரி, இடதுசாரி என்ற பாகுபாட்டிற்குள் உட்படுத்த முடியும் என்று தோன்றுகிறது.

வலதுசாரிப் பெண்ணியம் என்பது முதலாளியத்தை ஒப்புக்கொள்ளுகிற பெண்ணியம். இடதுசாரிப் பெண்ணியம் முதலாளியத்தை மறுக்கிற - அதேசமயம் சோசலிச உணர்வை தனக்குள் குறைந்த அளவுக்கேனும் ஏற்றுக்கொள்கிற பெண்ணியம் என்றும் சொல்லத் தோன்றுகிறது.

பெண்ணுக்குக் கல்வி வேண்டும். தொழில் செய்ய உரிமை வேண்டும். அரசு பதவியில் அமர முடியும் நிர்வாகம் செய்ய முடியும். அதிகாரமும் செய்யலாம். பெண்ணுக்கு சொத்துரிமை உண்டு சொத்து சேர்த்துக் கொள்ளலாம். இவை எல்லாம் பெண் உரிமைகள் என்ற பட்டியலில் இடம் பெறுகின்றன. ஏற்கனவே நாம் விளக்கியபடி இங்கு தரப்படும் கல்வி யார் தேவையை நிறைவேற்றுகிறது. இங்கு நடைபெறும் தொழில் நிறுவனங்கள் யார் தேவையை எவ்வகையில் எத்தகைய முறையில் நிறைவேற்றுகிற நிறுவனங்கள்? நிர்வாகம் செய்வது என்றால் என்ன? சொத்துரிமை என்பது என்ன? இவையெல்லாம் முதலாளியத்தை, அரசு அதிகாரத்தை வலுப்படுத்தக் கூடியவை. இவற்றின் தேவை குறித்து முதலாளிமார்களைப் போலவோ அவர்களுக்காகப் பேசும் படிப்பாளிகளைப் போலவோ நாம் பேசுவதற்கு இல்லை நெடுங்காலமாக நம் சமூகச் சூழலில் பெண்கள் எத்தனையோ வகைகளில் குடும்பத்துக்குள்ளும் வெளியிலும் பிறப்பு முதல் இறப்புவரை எத்தனையோ கொடுமைகளுக்கும் இழிவுகளுக்கும் உள்ளாகி வந்திருப்பதை நினைத்துப் பார்க்கும்பொழுது பெண்களுக்கு நம் காலத்தில் கிடைத்துள்ள கல்வி முதலியவை எத்தனை அளவுக்கு ஆக்க ரீதியானவை என்பதை நாம் மறுக்கமுடியாது.

கூடவே இன்னொன்றையும் நாம் சிந்திக்கத் தவறக்கூடாது. முதலாளியச் சூழலில் நமக்குக் கிடைக்கிற கல்வி முதலிய உரிமைகள் நாம் நமக்கான ஆளுமையைப் பெறுவதற்கு எந்த அளவுக்குப் பயன்படுகின்றன என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். முதலாளியம் என்பதனுள் அடங்கியுள்ள ஆதிக்க உணர்வுக்கு நாமும் இடம் கொடுக்க, தவிர்க்க இயலாமல் நேரும் பொழுது நாம் என்ன ஆகிறோம். அதிகாரத்துக்கு அடங்கி ஒடுங்கி இருப்பது மட்டுமல்லாமல் அதிகாரம் செய்வதன் மூலம் நாம் என்னவாகிறோம்? நம்மோடு, நமக்குக் கீழ்உள்ளவர்கள் என்ன ஆகிறார்கள் என்றும் சிந்திக்க வேண்டும். முதலாளியச் சமூகம் நமக்கு என்றைக்கும் தேவைதானா என்றும் சிந்திக்க வேண்டும். வேறு வழியில்லாமல் மாட்டிக் கொண்டோம். கடந்து செல்வதற்கு வழியுண்டா என்றும் சிந்திக்க வேண்டும்.

நெடுங்காலமாக இந்திய சமூகச் சூழலில் பெண்ணுக்கு என்ன இடம் தரப்பட்டது. இதனால் பெண்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றி நாம் மிகுந்த வேதனையோடு சிந்திக்கிறோம். குடும்பத்திற்குள் கணவனுக்கு மனைவி எல்லா வகையிலும் சேவை செய்யவேண்டும். கணவன் விருப்பத்திற்கு ஒத்த முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும். கணவனே கண் கண்ட தெய்வம் இப்படித் தொடங்கி குடும்பச் சூழலிலும் வெளியிலும் பெண்படும் வேதனை குறித்து நம் அனைவருக்கும் தெரியும். இவற்றை விளக்க வேண்டியதில்லை இன்றைய சூழலில் சில சிந்தனை மாற்றங்கள் வந்திருக்கின்றன. பெண்ணுக்குத் தன் உடம்பு மீது உரிமையுண்டு. அவள் விரும்பினால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். கணவனோடு முரண்பாடு அதிகரிக்கும் போது மணவிலக்கு பெற்றுக்கொள்ளலாம். தனித்து வாழலாம்.

தன் உடலியல் தேûவைகளைத் தன் விருப்பம் போல நிறைவேற்றிக் கொள்ளலாம். இப்படி பெண்ணுக்குரிய சில உரிமைகள் பேசப்படுகின்றன. இந்தப் பேச்சு இன்னும் தீவிரப்பட்ட நிலையில் குழந்தை பெற்றுத்தான் இந்த மனித இனத்தை, வரலாற்றை காப்பாற்றியாக வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை, நன்மை தீமை பற்றி எங்களுக்கு அக்கறை தேவையில்லை. திருமணம் செய்து கொள்ளாமல் ஆணோடு உறவு வைத்துக் கொள்ள முடியும். இவையும் முதலாளிய உரிமைகள் தான். தனி மனிதனுக்கு முதன்மையும் முக்கியத்துவமும் தருகிற முதலாளியச் சமூகச் சூழல் இப்படிச் சிலருக்குள் பிரகடனத்தை வெளியிடச் செய்கின்றன. நெடுங்காலமாக ஒடுக்கப்படும் குடும்பம் மற்றும் சமூகச் சூழலில் இத்தகைய வெடிப்புகள் நிகழ்வதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

இத்தகைய சூழலில்தான் ஆண்கள் எங்கள் மீது திணித்த கற்பு என்ற உணர்வை நாங்கள் மதிக்க வேண்டியதில்லை. என் விருப்பம் கேட்டு அவன் என்னைத் திருமணம் செய்து கொள்வில்லை. அவன் செய்வது கூட ஒரு வகையில் கற்பழிப்புதான் பெண்ணைப் போகப் பொருளாகக் கருதுகிற கொடுமைக்கார சமூகத்தில் தான் எங்கள் சம்மதம் இல்லாமல் வன்முறையில் எங்களை உடலுறவுக்கு ஆட்படுத்துகிறார்கள். இதில் எங்கள் பங்கு என்று என்ன இருக்கிறது. என்றெல்லாம் இன்று பெண்கள் பேசவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பெற்றோர், குடும்பப் பாதுகாப்பு என்று இல்லாத நிலையில்தான் எங்களில் ஒரு சிலர் உடம்பபை விற்றும் பிழைக்க வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் யார் காரணம்! முதலாளியச் சமூகம் பெண்ணுக்கு தருகிற மரியாதையும் இப்படித்தான் இருக்கிறது.

முதலாளியச் சமூகம் பெண்ணுக்கும் சில உரிமைகளை வழங்குவதன் மூலம் தன் ஆதிக்கத்தைத் தான் நிலைநிறுத்திக் கொள்கிறது என்கிற உண்மையை நம்மால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். சமையல் முதலிய குடும்பப் பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிட்டன. குடும்பக் கட்டுப் பாட்டுச் சாதனங்களும் பெண்களின் நோய் தீர்க்கும் மருந்துவமும் வந்துவிட்டது என்பதும் உண்மைதான். பெண் தன்னை அழகுபடுத்திக் கொள்கிற சாதனங்களும் இன்று கடைத்தெருக்களில் குவிந்து கிடக்கின்றன. அழகிப் போட்டிகளிலும் பெண்கள் பங்கு பெறலாம் திரைப்படத்துறையிலும் அழகிய பெண்களுக்கே கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கின்றன. இவையெல்லாம் பெண்களுக்கான உரிமைகள் என்று பாராட்டிக் கொள்ளத்தான் முடியுமா? குடும்பத்தில் மட்டுமல்லாமல் சமூக அளவிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் உழைப்பு கூடுதலாக இருக்கிறது. என்று ஆய்வாளர்கள் புள்ளி விபரங்களை அடுக்குகிறார்கள்.

ஐம்பது சதத்திற்கு மேல் பெண்ணின் தொகை இருந்த போதிலும் அரசியல், பொருளியல் முதலிய களங்களில் ஆண்களுக்கு நிகரான பங்கு அவர்களுக்கு இல்லை. குடும்பச் சூழலில் மட்டுமல்லாமல் சமூகச் சூழலிலும் பெண்கள் பெற்றுள்ள உரிமைகளை முதலாளிய உரிமைகள் என்று சொல்லிக்கொள்ள முடிந்தாலும் திருமணம் முதலிய எத்தனையோ வடிவங்களில் முதலாளியத்துக்கு முற்பட்ட நிலப் பிரபுத்துவ ஆதிக்கச் சூழலில்தான் பெண்கள் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறார்கள். பெண் என்பவள் இரண்டாம் தரக் குடிமக்களாகவும் கூட இல்லை. இத்தகைய சூழலுக்கு ஆண்கள்தான் காரணம் என்றும் சொல்வதைக் காட்டிலும் பெரும்பாலும். ஆண்கள் வழியிலும் சில சமயங்களில் பெண்கள் மூலமாகவும் செயல்படுகிற ஆதிக்கங்களைத்தான் சொல்ல முடியும். இந்த ஆதிக்கங்கள் இருக்கும்வரை அங்கங்கே சிற்சில இயக்கங்கள் போராட்டங்கள் என நடத்தி சில உரிமைகளை, வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் இவற்றின் மூலம் பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் கிடைப்பது விடுதலை என்று கருதிவிட முடியாது. தனியுடைமை அரசதிகாரம் முதலியவற்றோடு இன்றும் தொடர்கிற ஆதிக்கச் சூழலை கடந்து செல்ல முடியாமல் மாட்டிக்கொண்ட நிலையில்தான் நம் அனைவருக்குமான ஒரு எதிர்கால சோசலிச சமூகம் பற்றியும் உணர்வு எழுச்சி கொள்ள வேண்டியிருக்கிறது.
-தொடரும்



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com