Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2006
கேரளப் பெண் படைப்பாளி சரஸ்வதி அம்மா(1919-1975)

மூலம் : “Feminism in indian Context :
The Contemporary Relevance of
K. Saraswathi Amma”
INDIAN LITERATURE - No. 205 Sept - Oct - 2001

"இந்தியச் சூழலில் பெண்ணியம் :
கே.சரஸ்வதி அம்மாவின் சமகாலப் பொருத்தப்பாடு''

ஆங்கிலத்தில் : கே.நிர்மலா / தமிழில் : வே.கமலாலயன்

பெண்ணிய விமர்சனப்போக்கின் ஒரு மிகத் தீவிரமான முயற்சி என்பது கடந்த காலத்தில் ஒதுக்கித் தள்ளப்பட்ட இலக்கியப் பிரதிகளின் மறுமதிப்பீடு மற்றும் ஆற்றல் மிக்க மறுவிளக்கமாகும். இது கேரளாவின் பெண் எழுத்துக்குச் சிறப்பாகப் பொருந்தி வரக்கூடிய ஒன்று. கேரளாவின் பெண் எழுத்து வரலாற்றுச் சூழலில் சமகாலத்திய மாபெரும் ஆண் எழுத்தாளர்களாலும் - விமர்சகர்களாலும் நுண்ணுணர்வற்ற - குரூரமான ஒதுக்கலுக்கு ஆளான ஓர் எழுத்தாளர் இருக்கிறார். ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கிய உலகிலிருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்டு தொடர்ச்சியான எதிர்ப்புக்கு ஆளாகியவர் அவர்.

இவற்றை எல்லாம் எதிர் கொண்டு நீண்டகாலம் தாக்குப்பிடித்து தனது தளத்தில் உயிர்ப்புடன் வாழ்ந்திருந்த ஒரே பெண் எழுத்தாளர் சரஸ்வதி அம்மா என்பது ஓர் ஆச்சரியம்தான்.
1940-களிலேயே மலையாள மொழியில் சில சிறுகதைத் தொகுதிகள், ஒரு நாவல், ஒரு நாடகம், சில விமர்சனக் கட்டுரைகள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு அவரால் முடிந்தது. அவருடைய மிகப் பெரும்பாலான புனைகதை மற்றும் புனைகதையல்லாத படைப்புக்கள், இந்தியச் சூழலில், இன்னும் குறிப்பாகக் கேரளப் பின்னணியில் பெண் விடுதலை சார்ந்த பிரச்சினைகளைப் பேசுவனவாக அமைந்துள்ளன.

1940-1950களில் சரஸ்வதி அம்மா மிக அதிக அளவில் எழுதிக் குவித்திருக்கிறார். பெண்களுக்கு எதிராகத் தனது சமூதாயத்தில் நிலவி வந்த அநீதிகளையும், ஆஷாடபூதித் தனங்களையும் தீவிரமாக அம்பலப்படுத்தும் வகையில் தனது பேனாவைப் பயன்படுத்தியிருக்கிறார். விமர்சகரான பேராசிரியர். எம். அச்சுதன் இதைச் சரியாகவே அவதானித்திருக்கிறார் :

"பல யுகங்களாக நாம் அன்புடனும், மதிப்புடனும் எவற்றையெல்லாம் முடிவே இல்லாத மதிப்புக்குரியனவாக விக்கிரகங்களாக்கி ஆராதித்து வந்தோமோ அவற்றையெல்லாம் ஈவிரக்கமின்றித் துண்டுகளாக உடைத்தெறிந்ததும், ஆஷாடபூதித் தனத்தின் மூடுதிரைகளைக் கிழித்தெறிந்ததும் - இதுதான் சரஸ்வதி அம்மாவின் பிரதானக் குறிக்கோள். பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டவை என்பதற்காகவே எந்த நம்பிக்கைகளையும் கைக்கொண்டொழுகுவதற்கு அவர் தயாராக இல்லை.''

பெண்களின் உணர்வுகள் குறித்துக் கவலையே அற்ற ஆண்களின் தீவிர இனப்பாகுபாட்டு அணுகுமுறைகளை - ஆண் மேலாதிக்கத்தைத் தனது புனைவுகளில் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அதே சமயம் தமக்கு மற்றவர்கள் இழைக்கும் கொடுமைகள் அனைத்தையும் எவ்வித எதிர்ப்புமின்றிச் சகித்துக் கொண்டு ‘எல்லாத் துயரங்' களுக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிற முதுகெலும்பற்ற பெண்களையும் விட்டு வைக்கவில்லை. ஆண்களின் பலவீனங்களைப் பற்றிய அவரது வெளிப்படையான கருத்துக்கள் அவருக்கு ‘ஆண் வெறுப்பாளர்' என்ற பெயரை ஈட்டித் தந்தன. தன்னம்பிக்கை மிக்க வலுவான கருத்துக்களைக் கொண்ட ஒரு பெண்ணின் இத்தகைய நேர்மையான அச்சமற்ற, அறிவு ஜீவிதம் நிரம்பிய, எதிராளிகளைத் துளைத்தெடுத்து விடக்கூடிய படைப்பு வெளிப்பாடுகளோடு ஆண்களால் ஒத்திசைந்து போயிருக்க இயலாது.

ஒரு பெண் வழக்கமாக மிகையான அன்பு, துயரம் மற்றும் பழைய ‘மலரும் நினைவுகளோடு' மட்டுமே தொடர்புடைய உணர்ச்சிமயமான எழுத்தோடுதான் தொடர்பு படுத்தப்படுகிறார். சரஸ்வதி அம்மா தனித்துவம் மிக்க வலுவான குறிக்கோளுடன் விரைந்து முன்னேறும் பெண்களை முன்னிலைப் படுத்தியதன் மூலம் மரபார்ந்த பெண் பாத்திரத்தை "இலட்சிய நாயகி''யைப் பாதுகாத்து வரும் கூடுகளை உடைத்தெறிந்தார். தனது சமுதாயத்தில் ஆண்-பெண் உறவில் தீங்கிழைக்கும் போக்குகளை மாற்றியமைக்க வேண்டும் என்கிற தீவிர விருப்பத்துடனும் துளைத்தெடுத்துக் காயப்படுத்தும் கூர்மையான எள்ளல் ஆயுதத்தைக் கொண்டு இதைச் சாதித்தார்.

இவரது சில புனைகதைகளை ஆராய்ந்தால் சமுதாயத்தில் பெண்கள் குறித்து ஆண்களுக்கு இருக்கும் யதார்த்தமற்ற. சாத்தியமற்ற எதிர் பார்ப்புக்களை ஒதுக்கித் தள்ளுகிற அவரது அணுகுமுறை அவற்றில் வெளிப்படுவதை உணரலாம். உதாரணத்திற்கு, அவரது சிறுகதையான "எல்லாந் தெகஞ்செ பாரியா'' (ஒரு பரிபூரணமான மனைவி)-வை எடுத்துக் கொள்ளலாம். திவாகரன் நாயர் என்ற இளம் பிரம்மச்சாரி தனது தகுதிக்கு ஏற்ற இலட்சியத் துணைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை சரஸ்வதி அம்மா எப்படிக் காட்சிப் படுத்துகிறார் என்பதைப் பாருங்கள். "...ஓர் அழகான இளம் பெண் அவள்... 14 வயது முழங்காலைத் தொடுமளவு நீண்ட, சுருள் சுருளான பொன்னிறக் கூந்தலையுடையவள் தரைநோக்கிய விழிகள், வெட்கப்படுகிற போது கூட அழகு பொலிகிற முகம், 5 அடிக்கும் குறைவான உயரம், மெலிந்த உடல்...'' - இந்தத் தனது ‘கனவு மனைவி'யைத் தேடிக் கண்டடைய டஜன் கணக்கான பெண்களைப் பார்க்கிறார்.

ஆனால் இவர்களில் ஒவ்வொரு பெண்ணையும் தனது இலட்சிய அளவுகோலுக்கு ஏற்றவராக இல்லை என்று நிராகரித்துக் கொண்டே இருக்கிறார். ஒரு வழியாக ஒரு பெண்ணைத் தீர்மானமாக ஏற்றுக்கொள்ள அனேகமாக அவர் சம்மதிக்கப் போன தருணத்தில் கடைசியாக அந்தப் பெண் தனது முகத்தை நேருக்கு நேராகப் பார்த்த காரணத்திற்காக நிராகரித்து விடுகிறார். இது அந்தப் பெண்ணின் அடக்கமின்மையைக் காட்டுகிறது என்கிறார் நாயர். இப்படியே வருடங்கள் ஓடி மறைகின்றன. நாயர் நடுத்தர வயதுக்காரராகி விடுகிறார். அவரது தலைமுடி சாம்பல் நிறத்தை அடைந்து விடுகிறது. அவர் விரக்தியடைந்து விடுகிறார். அவருக்கான ‘பெட் காப்பி'யை அவரே தயாரித்துக் கொள்வதில் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. ஒரு மனைவியின் பிரதான கடமை அது என்று அவர் தீர்மானித்து வைத்திருந்தார்.

தான் இன்னமும் கண்டறியாமலே இருக்கிற, தனக்கு வரப்போகிற அந்த எதிர்கால மனைவிக்காக நாகரீக அணி-மணிகள், நகைகள் ஆகியவற்றில் கடமையுணர்வுடன் ஆர்வம் கொண்டிருந்தவர் அவர். இப்படி முன்பொரு சமயம் இவரால் நிராகரிக்கப்பட்ட பெண்களின் பட்டியலில் ஒருவராயிருந்து இவரின் தூரத்து உறவுக்காரப் பெண் ஒருவர் இப்போது தனக்குத் தெரிந்த பெண் இருப்பதாக நாயரை அணுகித் தெரிவித்தார். குண்டாகவும், கறுப்பாகவும், இருந்ததால் நாயரால் நிராகரிக்கப்பட்டவர் இந்த உறவுக்காரப் பெண். தனக்குத் தெரிந்தவளான அந்த ‘மணப்பெண்'ணைப் ‘பார்ப்பதற்கு' நாயரை அழைத்துச் சென்றார் அவர். நாயருக்குத் தனது கண்களையே நம்ப முடியவில்லை. அவர் இதுநாள் வரை கனவு கண்டு கொண்டிருந்த அத்தனை அம்சங்களுக்கும் பரிசுத்தமான ஓர் எடுத்துக்காட்டாக இந்தப்பெண் தென்பட்டாள். வழக்கப்படி டீ முதலியவற்றைக் கொடுத்து நாயரை உபசரிக்க அருகில் வந்ததும் அந்தப் பெண்ணின் தாயார் இவரை அடையாளம் கண்டு கொண்டதும் பொங்கியெழுந்த ஆத்திரத்துடன் வெடித்துச் சிதறினார்.

"அடக்கடவுளே! நீ இன்னும் இப்படியேதான் டீ குடித்துக் கொண்டு பெண்களைப் பார்த்துவிட்டுத் திருமணம் செய்து கொள்ளாமலே திரிகிறாயா? தங்க மழையே பொழிவதாக இருந்தாலும் எங்களுக்கு இந்த உறவு வேண்டவே வேண்டாம்! அக்கிரமமாய் இருக்கிறதே! தாயாரைப் பெண் பார்ப்பதற்கு வந்து அவளை நிராகரித்து விட்டுப் போன அதே மனுஷன் இப்போது அவளது மகளையும் ‘பெண் பார்க்க' வந்திருக்கிறான். இந்த மாதிரி ஒரு வெறுக்கத்தக்க கண்டிக்கப்பட வேண்டிய ஆளுக்கு தங்களின் பெண்ணைக் கொடுப்பதற்கு யாராவது எந்தக் காலத்திலாவது சம்மதிப்பார்களா? இவனுக்கு இதுவேதான் தொழில் என்று தெரிந்தபிறகும் இந்தத் திருமணப்பேச்சுக்கு நான் வருவேனா? என் மகளைத் தர ஒருக்காலும் நான் சம்மதிக்கவே மாட்டேன்..''

பண்புக் குறைவாக நேர்ப்பார்வை பார்த்ததாகக் கூறி நீண்ட காலத்திற்கு முன்பு தான் நிராகரித்துப் போன அதே பெண்தான் இப்போது தான் பார்ப்பதற்கு வந்துள்ள பெண்ணின் தாயார் என்பதை அதிர்ச்சியுடன் அறிந்து கொண்டார் நாயர். ஆவேசமும், குத்திக் கிழிக்கும் கூர்மையுமிக்க இந்த பதிலடி அவரை நிலைகுலைய வைத்தது. அவமானப்படுத்தப்பட்ட நாயர், அறிவு வரப்பெற்ற மனிதராய் அங்கிருந்து திரும்புகிறார். அடுத்த நாள் முதல், தனது தூரத்து உறவினரான அந்த விதவைப் பெண்ணுடன் புதிய உறவைத் தொடங்கத் தீர்மானிக்கிறார்.

முந்தைய திருமணத்தில் குழந்தைகளை உடைய பங்கதாக்ஷிதான் இப்போது மணப்பெண். நாயர் தன் எதிர்கால மனைவிக்காகத்தான் கனவு கண்டு ஏங்கித் தவித்திருந்த ‘கல்யாண குணங்கள்' அனைத்தையும் பங்கஜாக்ஷியின் குண்டு கருப்பு உடம்பில் அர்ப்பணித்து விட்டு அவளுடைய கையால் பெட் காப்பியை வாங்கிக் கொள்ளச் சம்மதிக்கிறார். கதையின் முடிவில் சரஸ்வதி அம்மா இப்படி ஒரு முற்போக்கான திருப்பத்தை ஏற்படுத்தியதோடு, ஆண்கள் தமது மணப்பெண்கள் விஷயத்தில் சாத்தியமான, யதார்த்தமான எதிர்பார்ப்புக்களை மட்டும் கொண்டிருக்குமாறு அறிவுறுத்துகிறார்.

இந்தக் கதைக் கரு இன்றைக்கும் சமகாலப் பொருத்தம் உள்ள ஒன்று என்பதை நம்மைச் சுற்றிலும் ஊடகங்களின் வாயிலாகப் பார்க்கும்போது உணர முடியும். இன்றைக்கும் ஆண்கள், பக்குவமற்ற - ஆனால் அழகுமிகுந்த - இளம் பெண்களுக்காகத் தான் ஏங்கித் தவித்திருக்கிறார்கள். அது ருமணத்திற்காக என்றாலும் சரி, அல்லது தற்காலிக சுகத்திற்காக என்றாலும் சரி, பெண்கள் எப்போதுமே எல்லாக் காலத்திலுமே ஆண்களின் பொழுது போக்கிற்காகப் படைக்கப்பட்ட வெறும் போகப் பொருட்களாக மட்டுமே ஆண்களால் கருதப்பட்டு வந்திருக்கிறார்கள் என்ற உண்மையை இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. திவாகரன் நாயர் போன்ற ஆண்களை நிராகரிப்பதன் மூலம் இத்தகைய அணுகுமுறைகளை எதிர்க்க இதுவே சரியான தருணம் என்று எழுத்தாளர் கருதுகிறார்.

‘விலக்கப்பட்ட வழி' போன்ற கதைகள் சமூகத்தின் இரட்டை அளவுகோல்களை அம்பலப்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. இதில் ஓர் ஒதுக்கப்பட்ட / நிராகரிக்கப்பட்ட பெண் பிற்பாடு தானே சுயமாகக் கல்வி கற்று கடைசிவரை திருமணமாகாமலே இருக்க நேர்ந்த போதிலும் சுதந்திரமான பெண்ணாக வாழ முடிவதைக் காணலாம். இந்தப்பெண், தனக்கு மாலை சூட இருந்த ஆணை பிற்காலத்தில் சந்திக்க நேர்கிறபோது அவர் நோயாளி மனைவியுடன், தேய்ந்து குறைந்து கொண்டிருக்கிற வருமானத்துடன் பெரும்பாலும் பெண்களாக உள்ள நிறைய குழந்தைகளுடன் உழன்று கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறார். அனைத்துப் பெண்களின் சார்பிலும் இப்பெண் ஒரு வேண்டுகோளை அந்த ஆணிடம் முன்வைக்கிறார்: மகள்களை நன்றாகப் படிக்கவைத்து இவளைப் போன்று சுதந்திரமான தனி நபர்களாக வாழச்செய்ய வேண்டுமென்கிறார்.

அவர் ஒரு பெண் மருத்துவர், தனது சொந்தத் தேர்வான இப்பணியில் மகிழ்ச்சியுடனிருப்பவர். இந்தக் கதையின் மூலம், ஆசிரியர் பெண்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த முற்படுகிறார்; பெண்ணின் இருத்தலுக்குத் திருமணம்தான் எல்லாம்; திருமணம்தான் அனைத்தின் முடிவு என்றிருப்பது அவசியமில்லை. திருமணம் தங்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி அவர்களை மதிப்புக் குறைந்தவர்களாக்கிவிடும் தருணத்தில் கட்டுண்டு உழன்று கிடப்பதைக் காட்டிலும், துணிவுடன் நடைபோடத் தயாராக முன்நடப்பார்களாயின் வேலை வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் நிறைந்த பரந்த உலகில் விலக்கப்பட்ட பாதைகளிலும் பயணம் செய்ய முடியும் என்கிறது இக்கதை.

‘சமான சக்ரம்' (சுழல்கோப்பை), ‘பெண்புத்தி' போன்ற கதைகளில், சரஸ்வதி அம்மா தனது சமகாலத்திய ஆண்கள், ‘பெண்களுக்குக் கல்வி' என்பதற்கு மிக சொற்பமான மதிப்பை அல்லது அறவே மதிப்பின்மையையே வழங்கினார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். முந்தைய கதையில், தன் கல்லூரி நாட்களில் பதக்கம் வென்றவரான ஒரு பெண், பிற்பாடு நுண்ணுணர்வற்ற கணவன் இவள் பெற்ற தங்கப்பதக்கத்தை வீட்டுச் செலவுகளுக்காக விற்கிற காட்சியைக்காண வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலைக்கு ஆளாகிறாள். பிந்தைய கதையில், திருமண வாழ்க்கையில் அடையாள மற்றுப்போன சலிப்பை - அதிருப்தியை வெளிப்படுத்துகிற ஒரு பெண், பெண்களின் உண்மையான புத்திசாலித்தனத்திற்குத் திருமணத்தில் தரப்படுகிற குறைந்தபட்ச மதிப்பீடு குறித்து வலுவான கருத்தை வெளிப்படுத்துகிறாள் :

"வீட்டைப் பார்த்துக்கொள்வது, வசீகரமாக அலங்கரித்துக் கொள்வது, வம்பு பேசுவது' - எத்தனை மூளைகள் வேண்டும் ஒரு பெண்ணுக்கு?''

- இந்த மூன்று வேலைகளும்தான் ஒரு பெண்ணுக்கு முக்கியம் என்று கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுபவை -இவையனைத்திற்கும் அநேகமாக தேவையேபடாத - அல்லது குறைந்த பட்சமாகத் தேவைப்படுகிற உண்மையான புத்திசாலித்தனம் போதும். சரஸ்வதி அம்மா, இந்த பாத்திரத்தின்மூலம், ஆண்கள், புத்திகூர்மைமிக்க பெண்களைக் காட்டிலும் ஊமைகளாய், பார்ப்பதற்கு அழகுப்பதுமைகளாய் இருக்கிற பெண்களைத்தான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்கள் என்பதைக் கடுமையான தொனியில் சாடுகிறார். பெண்களை வெறும் ஓர் அலங்கரிக்கப்பட்ட பொருளாக மட்டுமே பார்க்கிற ஆண்களின் அணுகுமுறையை இதன்வழியாக அவர் கண்டிக்கிறார்.

சரஸ்வதி அம்மா, ஆணுக்கும்-பெண்ணுக்குமிடையேயான ‘ரொமான்டிக்' காதல் என்கிற அடிப்படைக் கருத்தோட்டத்தையே வெற்றுத்திரவக் குமிழியை வெடிக்கச் செய்வதுபோல் சிதற அடிக்கிறார். இவரது பார்வையில் காதல், பெண்களை அடிமைப்படுத்தும் வலிமைமிக்க மருந்தாகத் தோற்றம் பெறுகிறது. தூய்மையான காதல் என்ற பெயரில் ஒரு பெண் அமைதியாகத் துயரப்பட நேர்கிறது. இந்தக் கருத்தமைந்த கதைகளுக்கு உதாரணமாக ‘ஸ்த்ரீஜென்மம்', ‘பாக்யவதி', ‘ஜன்மாவாகாசம்' மற்றும் பலவற்றைக் கூறலாம்.

-தொடரும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com