Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2006
சிறுகதை

தீர்மானம்
- கலையரசி

ஒரு வழியாக பொறியியல் கல்லூரியில் படிப்பு முடிந்து வேலையில் சேர இன்னும் இரண்டு மாதங்களே பாக்கி என்பதை நினைத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. சாப்ட்வேர் கம்பெனியொன்றில் பெங்களூரில் வேலையில் சேர்வதற்கான உத்தரவும் தயாராக இருந்தது. அம்மாவை வேலையை ராஜினாமா செய்யச் சொல்லிவிட்டு கூடவே அழைத்துச் சென்றுவிட வேண்டும். சொச்ச வாழ்க்கையையாவது மகிழ்ச்சியாக அம்மா என்னுடன் கழிக்க வேண்டும் என்றும் முடிவு செய்திருந்தேன்.

எனக்கு நினைவு தெரிந்த நாள்முதல் அம்மாவைச் சிரித்த முகத்துடன் பார்த்த நாட்கள் மிகவும் குறைவு. அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும்போது ‘உம்'மென்று இருப்பது கண்டு அவரின் சோகத்துக்கான காரணத்தைக் கேட்டால், ‘நீ சின்னப்பொண்ணு, உனக்குச் சொன்னாலும் புரியாது' என்பார்.

அம்மாவின் கூட அப்பா இல்லாததுதான் அம்மாவின் பிரச்சினைகளுக்குக் காரணம் என்பது மட்டும் எனக்கப்போது லேசாக புரிந்தது.

‘அவர் மட்டும் என்கூட இருந்திருந்தால் கண்டவனும் இதுபோல் என்கிட்ட நடந்துக்குவானா? கேட்கக்கூடாத கேள்வியையெல்லாம் எங்கிட்ட கேட்பானா? என்று அம்மா பாட்டியிடம் சொல்லியழுவதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன்.

நன்றாக வளர்ந்து பெரியவளானபிறகு ஒருநாள், அம்மாவும் அப்பாவும் பிரிந்திருப்பதற்கான காரணம் எனக்குத் தெரிந்தே ஆகவேண்டும் என்று பாட்டியிடம் பிடிவாதம் செய்தேன்.

"என்னோட மாப்பிள்ளை நல்லவர்தாம்மா; அவரோட அம்மாதான் என் பொண்ணை அவரோட சேர்ந்து வாழ விட மாட்டேங்கிறா'' என்ற புலம்பலுடன் சொல்லத் துவங்கினார் பாட்டி.

"மாப்பிள்ளை வீடு பார்க்கப் போனப்ப வரதட்சிணையா என்னென்ன கொடுக்கணும்னு ஒரு பட்டியலே அந்தப் பொம்பிளை கொடுத்தா. அவ சொன்னபடிதான் எல்லாம் கொடுத்தேன். ஆனா ஒரு வருஷம் கூட என் பொண்ணு அங்கேயிருந்து வாழல. என் பொண்ணோட வயித்தெரிச்சல் அவளைச் சும்மா விடாது'' என்று சொல்லிக் கண்களைத் துடைத்துக்கொண்டார்.

"உன் அம்மாவுக்குத் திருமணம் முடிஞ்ச கொஞ்ச நாள்லேயே மாமியாரோட உண்மை சொரூபம் புலப்பட ஆரம்பிச்சிட்டுது. அம்மாவும் அப்பாவும் சினிமா, நாடகம்னு வெளியே கிளம்பினா போதும். ஏதாவது சண்டை வளர்த்து அவங்களைப் போகவிடாம செஞ்சிடுவாளாம். இல்லேன்னா, திடீர்னு உடம்பு சரியில்லேன்னு இழுத்துப் போர்த்திக்கிட்டு படுத்துடுவாளாம்''

சிறிதுநேரம் ஒன்றும் பேசாமலிருந்த பாட்டி தொடர்ந்தார்.

"உங்கப்பா அவங்கம்மாவுக்கு ரொம்ப பயந்தவரு. அம்மாவை எதிர்த்து எதுவுமே பேச மாட்டாராம். நீதான் ‘அட்ஜஸ்ட்' பண்ணி நடந்துக்கணும்னு உன் அம்மாகிட்ட அடிக்கடி சொல்வாராம். இதுக்கிடையிலே தான் உங்கம்மா முழுகாம இருந்தா. நீ உண்டானதும் உங்கப்பா கொஞ்சம் அதிகமாவே பொண்டாட்டிகிட்ட ஆசையா பாசமா நடந்துக்க ஆரம்பிச்சிருக்காரு. அதைக் கவனிச்ச அம்மாக்காரிக்கு, எங்கே பையன் பெண்டாட்டி பக்கம் சேர்ந்துட்டு நம்மளைக் கவனிக்காம விட்டுடு வானோன்னு பயந்துகிட்டு ஒரேயடியா சேரவிடாம பண்ணிட்டா. வளைகாப்பு போட்டுட்டு பிரசவத்துக்குக் கூப்பிட்டுட்டு வந்தேனே... அதோடு சரி. அதுக்கப்புறம் உன் அம்மாவும் அவங்க வீட்டுக்குப் போகல. அவங்களும் வந்து உங்களைக் கூப்பிட்டுட்டுப் போகலே''

"நான் பொறந்த பிறகு நீங்க அவங்களுக்குச் சேதி சொல்லி அனுப்பினீங்களா பாட்டி?''

"பின்னே அனுப்பாம? எத்தனையோ தடவை யார் யார் கிட்டயோ சொல்லியனுப்பினோம். அப்புறம் நானும் உன் தாத்தாவும் நேரிலேயே போனோம்''

"அப்ப, அப்பா என்ன சொன்னார்?''

"எங்கம்மா என்ன சொல்றாங்களோ அதுபடிதான் நான் நடப்பேன்''னு சொன்னார்.

அந்தம்மா என்ன சொன்னா தெரியுமா? அதைக் கேட்டவுடனே எனக்கு ரத்தமே கொதிச்சுப் போயிடுச்சு. தாத்தா பேசாம எழுந்து வந்துட்டாரு''.

"அப்படி என்னதான் சொன்னாங்க பாட்டி?''

"உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு வந்து வாழணும்னா, "நான் தற்கொலை செய்து கொள்கிறேன், என் சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை''ன்னு எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கணும்னு சொன்னா''

"அய்யய்யோ... இப்படியுமா ஒரு பொம்பளை இருப்பா? சரியான கொலைகாரியா இருப்பா போலிருக்கே!''

"ஆமாம். அதுக்கப்புறம் உன் அப்பா வேலை செய்ற பாங்குக்குப் போய் தாத்தா எவ்வளவோ கேட்டுப் பார்த்தாரு. அவரோ கிளிப்பிள்ளை மாதிரி, "எங்கம்மாவை மீறி என்னாலே எதுவும் செய்ய முடியாது. அவங்க சொன்னமாதிரி கடிதத்தோட உங்க பொண்ணைக் கொண்டுவந்து விடுங்க. நான் பார்த்துக்கறேன்'னு சொன்னாராம்.''

பாட்டி பெருமூச்செறிந்தார்.

"அப்பத்தான் நானும் உன் தாத்தாவும் முடிவு பண்ணினோம். பொண்ணோட வாழ்க்கை போனாலும் பரவாயில்லை. அவளோட உயிரே போயிட்டா என்ன பண்றது? நாம இருக்கிற வரைக்கும் நம்ம பொண்ணை வெச்சுப் பராமரிப்போம். அதுக்குமேலே ஆண்டவன் விட்ட வழின்னு கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டோம். தாத்தா தீர்மானமா இப்படிச் செய்தாரே தவிர அடிக்கடி உங்கம்மாவை நினைச்சு எங்கிட்ட சொல்லியழுவாரு. பையன் குடும்பத்தைப் பத்தி சரியா விசாரிக்காம கட்டிக்கொடுத்து பொண்ணு வாழ்க்கையைச் சீரழிச்சிட்டோம்ங்கிற கவலை அவரைக் கொஞ்சங் கொஞ்சமா அரிக்க ஆரம்பிச்சிட்டுது. அதுவே அவருக்கு எமனாவும் ஆயிடுச்சு.''

"அம்மாவாவது தனியாப்போயி அப்பாவைச் சந்திச்சு இருக்கலாமில்லே...''

"ஆமா, அதுவும் நடந்தது. நீ சின்னப்பொண்ணா இருந்தப்ப உன்னையும் கூட்டிட்டு பாங்குக்குப்போய் அவரைப் பார்த்தா. அப்பவும் அம்மாவை எதிர்த்துக்கிட்டு என்னால ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு கையை விரிச்சுட்டாராம்.''

"அந்தம்மா சீக்கிரம் மண்டையைப் போட்டாலாவது என் பொண்ணுக்கு விடிவுகாலம் பொறக்கும்னு நெனச்சேன். நாம நெனக்கிறமாதிரி எது நடக்குது? ஆச்சு. இருபது வருஷம் ஓடிப்போச்சு.''

எனக்கு அப்பா என்ற அந்தக் கையாலாகாத ஆள்மீது கோபம் கோபமாய் வந்தது. அம்மாவை மீறி எதுவும் செய்ய முடியாதவர் எதற்குத் திருமணம் செய்துகொள்ள வேண்டும்? பாட்டி என்கிற அந்த ராட்சசக் கிழவியைப் பார்த்து நறுக்கென்று நாலு வார்த்தை கேட்க வேண்டும் போலிருந்தது.

அன்றிரவு முழுவதும் எனக்கு உறக்கம் வரவில்லை. கணவன் துணையில்லாமலிருந்த அம்மாவிடம் ஆண்கள் எத்தனைபேர் வாலாட்டியிருப்பார்கள்? அம்மா பாட்டியிடம் அடிக்கடி அழுததன் காரணம் இப்போது நன்றாகவே விளங்கியது. இந்த மனச்சுமையோடு மாதங்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன.

கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டு அன்று மாலை தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தேன். என் நெருங்கிய தோழிகள் அனைவருக்குமே ஒவ்வொரு நிறுவனத்தில் வேலை கிடைத்திருந்தது. இன்னும் இரு மாதங்களில் படிப்பு முடிந்து ஆளுக்கொரு திசையில் பணியில் அமரவிருக்கும் எங்களுக்கு இது கடைசி கல்லூரி விழா என்பதால் அன்றைய பொழுதை மகிழ்ச்சியாகக் கழித்தோம். அதே உற்சாகத்துடன் வீட்டுக்கு வந்தால், என்ன ஆச்சரியம்...? அம்மா முகத்தில் என்றுமில்லாத மலர்ச்சி. சிரித்த முகத்துடன் உற்சாகம் பொங்க என்னை எதிர்நோக்கிக் காத்திருந்தார். பாட்டியின் முகத்திலும் புன்னகை ததும்பி இருந்தது.

வீட்டுக்குள் நுழைந்த பிறகுதான் அவர்களது மகிழ்ச்சியின் காரணம் புரிந்தது. ஐம்பது வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் ஹாலில், சோபாவில் அமர்ந்து இருந்தார்.

‘வாம்மா' என்றார் என்னைப் பார்த்து. "ரம்யா, உனக்கு நெனைவு தெரிஞ்சபிறகு இப்பதான் அப்பா மொதல் மொதல்ல நம்ம வீட்டுக்கு வந்திருக்கார். ‘வாங்க'ன்னு கூப்பிடு'' என்றார் பாட்டி.

எனது அனுமதியின்றியே உள்ளுணர்வு வேலை செய்திருக்க வேண்டும். சட்டென்று நான் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்.

"உன் கோபம் எனக்குப் புரியுது. உன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டுட்டேன். அவளும் என்ன மன்னிச்சிட்டா. வேணும்னா உங்கிட்டயும் நான் மன்னிப்பு கேட்கத் தயாராயிருக்கிறேன்'' என்றார் அவர்.

"என்னங்க நீங்க! சின்னப்பொண்ணுகிட்ட போய் மன்னிப்பு கின்னிப்புன்னு பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு'' அம்மா அவரைச் செல்லமாக கடிந்து கொண்டார்.

" என்ன இப்ப திடீர்னு ஞானோதயம் எங்களைப் பார்க்கணும்னு தோணியிருக்குது?'' முகத்தைப் பார்க்கப் பிடிக்காமல் சுவரைப் பார்த்தபடியே கேட்டேன்.

"உன் பாட்டி பத்துநாள் முன்னாடி திடீர்னு தவறிட்டாங்களாம். சீக்குன்னு வந்து ஒருநாள் படுக்கலையாம். கெடக்காம கொள்ளாமப் போயிட்டாங்க. நல்ல சாக்காடு! புண்ணியம் பண்ணின மகராசி! கருமாதி பத்திரிக்கையை வைச்சுட்டு கையோடு உங்களையும் அழைச்சிட்டுப் போகத்தான் இப்ப அப்பா வந்திருக்கார்.''

என் கேள்விக்குப் பாட்டியிடமிருந்து பதில் வந்தது.

‘என்னோட வயித்தெரிச்சல் அவளைச் சும்மா விடாது. படுத்துக் கெடந்து புழுபுழுத்துத்தான் சாவாள்' என்று பாட்டி அடிக்கடி கொடுக்கும் சாபம் சட்டென நினைவுக்கு வந்தது.
முகம் மலர்ந்திருந்த அம்மாவைப் பார்த்துக் கேட்டேன்.

"அதெப்படிம்மா?... இத்தனை வருஷம் உயிரோடு இருக்கோமா, செத்தோமான்னு திரும்பிக்கூட பார்க்காத இவரு வந்து ஒரு வார்த்தை ‘மன்னிச்சிடு'ன்னு சொன்னதும் எல்லாத்தையும் மறந்து மன்னிச்சிட்டு இவருகூடக் கிளம்பத் தயாராயிட்டீங்க'' கோபத்தில் குரல்கூட சூடேறி இருந்தது.

அம்மா மெல்லிய குரலில் பரிதாபமாய்ச் சொன்னார்.

"ரம்யா... என் வாழ்க்கை முடிஞ்சிட்டுது. நான் என்னைப் பத்திக் கவலைப்படலை. நீ வாழ வேண்டிய சின்னப்பொண்ணு. உனக்கு ஒரு நல்ல இடத்துல கல்யாணம் நடக்கணும்னா, அப்பா இல்லாம முடியாது. அதுக்காகத்தான் இந்த முடிவு எடுத்திருக்கேன். நல்லா யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.''

"இல்லம்மா... என்னாலே முடியாது... என்னை மன்னிச்சிடுங்க. இந்த ஆளை அப்பான்னு காட்டினாத்தான் எனக்கு நல்ல வாழ்க்கை அமையும்னா அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்குத் தேவையேயில்லை.''

பாட்டியும் தன் பங்கிற்குச் சொன்னார்.

"வேண்டாம் ரம்யா... நீ சின்னப்பொண்ணு. உனக்கு நல்லது கெட்டது தெரியாது... பெரியவங்க சொல்றதைக் கேக்கறதுதான் நல்லது...''

"என்ன பாட்டி சொல்றீங்க... வயசிலே மட்டும் பெரியவங்களா இருந்தாப் போதாது பாட்டி... செய்யற காரியத்திலும் பெரியவங்களா இருக்கணும்... இவரு... இந்த இருபது வருஷமாப் பண்ணினதை பெரிய காரியம்னு நெனக்கறீங்களா...''

அம்மாவும் பாட்டியும் மவுனமாகிப் போனார்கள். முதல்முறையாக மிகுந்த தீவிரத்தோடு மெத்தனமாக அமர்ந்திருந்தவரை உற்றுப் பார்த்தேன்.

என் பார்வையின் பொருள் புரிந்துவிட்டது போலிருக்கிறது. மெல்ல எழுந்தவர் வாசலை நோக்கி நடந்தார்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com