Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
நவம்பர் 2006
பொன்விழா ஆண்டு நிறைவு
- இனியன்

நவம்பர் மாதம் முதல் நாள் மொழிவழி மாகாணங்கள் உருவான தினம். சென்னை ராஜதானி என்ற பெயரில் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது தமிழ் மாநிலம். 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட போது சென்னை மாகாணம் என்ற பெயரோடு பிரிந்தது.

மொழிவாரி மாகாணங்கள் உருவானபோது எவ்விதச் சிக்கலுமின்றி அது நிகழ்ந்தேறவில்லை. எத்தனையோ தமிழரின் உயிர்கள் இந்நிகழ்வின் போதும் பலியாயின. சென்னை ராஜதானியில் இடம் பெற்றிருந்த நமது நிலப்பகுதிகள் பலவற்றை அண்டை மாநிலங்களுக்குத் தாரை வார்த்திருக்கிறோம். சிலவற்றைக் கடுமையான போராட்டத் திற்குப்பின் சேர்த்திருக்கிறோம். அண்டை மாநிலங்களின் எல்லைகளாக இருக்கும் அத்தமிழர் பகுதிகள் இன்றைய நிலையிலும் ஏராளமான பிரச்சனைகளைத் தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்பதே உண்மை நிலை.

கேரள எல்லையில் கண்ணகி கோவில் உள்ள கண்ணகி கோட்டம் கைவிட்டுப் போனதோடு தேவிகுளம், பீர்மேடு போன்ற பகுதிகள் கேரளத்திற்குச் சொந்தமாயின. கர்நாடகத்தைப் பொறுத்தவரை கோலார், கொள்ளேகால் பகுதிகள் அதற்குச் சொந்தமாகின. அங்கிருக்கும் தமிழர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவே முடியாததாக உருவெடுத்துள்ளது. ஆந்திரத்துக்கு திருப்பதி சென்றது போலவே திருத்தணியும் கைமாறி இருக்கும். ஆனால் சிலம்புச் செல்வரும், தமிழரசு கழகத் தலைவருமான ம.பொசி. அவர்களின் இடையறாத போராட்டத்தின் காரணமாக திருத்தணி தமிழர் பகுதி ஆனது.

இதே போல கன்னியாகுமரி, செங்கோட்டை பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைவதற்குப் பெரும் முயற்சி எடுத்தவர் எல்லை போராட்டத்தியாகி பி.எஸ்.மணி அவர்கள். இதற்காக இவர் சிறை சென்றதோடு அப்போதைய குமரி மாவட்டத்தில் நடந்த போராட்டதின்போது தமிழர்கள் பதினாறு பேரின் இன்னுயிரும் பறிபோனது. காவல் துறையினரின் துப்பாக்கி குண்டுக்கு இரையாயினர் - அவ்வெல்லைப் போராட்டத் தியாகிகள். இத்தியாகத்தின் பயனாகவே தற்போது கன்னியாகுமரியும், செங்கோட்டையும் தமிழ்நாட்டு வரைபடத்தில் இடம்பெற்றுள்ளன.

இத்தகைய இன்னல்களோடு பிரிந்த சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் பெற்றது- அறிஞர் அண்ணாவின் ஆட்சியில்தான் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் கோரி 75 நாட்கள் உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரைப் போற்றும் விதமாக அவரது சிலை தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நிறுவப்பட வேண்டும். எல்லைப் போராட்டத் தியாகிகள் அனைவரின் நினைவும் இப்பொன்விழா ஆண்டு நிறைவிலாவது புத்துயிர்ப்புப் பெற வேண்டும்.

தமிழகத்தை விடவும் மொழிவாரி மாநிலங்கள் அமையப்பெற்ற இந்நாளை அண்டை மாநிலங்களே வெகுசிறப்பாகக் கொண்டாடுகின்றன. ஆனால், இந்த மாநிலங்களை விடவும் தமிழகத்தில் தான் எல்லைப் போராட்டத் தியாகிகளின் எண்ணிக்கை அதிகம். இந்த எல்லைப் போராட்டத்திற்கென பத்தாண்டு கால வரலாறும் இருக்கிறது.

பெரிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எல்லையைக் காக்க முன்முயற்சி எடுக்காத நிலையில் தமிழக மக்களை மட்டுமே நம்பி களமிறங்கிய ம.பொ.சியின் முயற்சியினாலேயே தமிழ்நாட்டுத் தலைநகரம் சென்னை காக்கப்பட்டது என்று கூறுவதும், தமிழகத்தின் வடபகுதி, தென்பகுதி என இரண்டிலும் எல்லைகளைக் காக்க தனது போராட்டச் சுவடுகளைப் பதித்தவர் ம.பொ.சி. என்பதும் மிகையான கூற்று அல்ல. தமிழ்நாடு என்னும் பெயரை உலக வரைபடத்தில் உண்டாக்குவதற்கு நிகழ்ந்த தியாகங்களை நினைவுகூரும் வண்ணம் ஆண்டுதோறும் நவம்பர் முதல் நாளைத் தமிழகப் பெருவிழாவாகக் கொண்டாடும் பொறுப்பும் தமிழக அரசுக்கு இருக்கிறது. இவ்விழா நாளடைவில் மாவட்டந்தோறும் நடைபெறும் நிலை உண்டாக வேண்டும். அப்போதுதான் தமிழகத்தின் இளைய தலைமுறை புத்துணர்வு பெறவும், எழுச்சி கொள்ளவுமான புதியதொரு சூழல் உருவாகும் !



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com