Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2008
பதில்வினை
- முழுமதி

புதிய பெண்ணியம் நடத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசினைப் பெற்ற "வாக்குமூலம்' என்ற சிறுகதை தர்க்கரீதியாக எழுப்பப்படும் எந்த வினாவிற்கும் சரியானதொரு பதிலைத் தரவில்லை. எனவே வரதட்சணை எதிர்ப்பு என்ற அளவில் அதனை மூன்றாவது பரிசுக்கென தேர்வு செய்ய வேண்டியதாயிற்று என்று பிப்ரவரி இதழில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு அக்கதையின் ஆசிரியர் காதம்பரி அளித்திருக்கும் பதிலை எதிர்வினை பகுதியில் முழுமையாக வெளியிட்டிருக்கிறோம்.

பெண்ணியப் போராளிகளை உருவாக்குவதற்கு ஒரு பெண்ணுக்கு எவ்விதத் தகுதியும் தேவையில்லை என வாதாடும் காதம்பரி, வரதட்சணைக் கொடுமையினால் எரிந்து சாம்பலாகும் அனைத்து பெண்களுமே போராளிகள்தான் என்கிற முன்னுக்குப் பின் முரணான கருத்தொன்றையும் முன்வைக்கிறார்.

குழியில் விழுந்து எழுந்த ஒருவன் எதிரில் வருபவரிடம் "வழியில் குழி இருக்கிறது. பார்த்துப் போ' என்று சொல்வதற்குக் கூட விழுந்தவனுக்கு ஒரு தகுதி கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்தத் தகுதியின் பெயர்தான் மனிதாபிமானம் என்றும், மனிதநேயம் என்றும் கூறப்படுவது. அந்த குணம் மட்டும் இல்லையெனில் எதிரில் வருபவரைக் கண்டிப்பாக அவன் எச்சரிக்கப் போவதில்லை. (இன்றைய பெரும்பான்மை மனிதர்க்கு இக்குணம் அறவே இல்லை என்பதே நடைமுறை உண்மை.)

வழியில் குழி இருப்பதை அறியாமல் ஒருவன் குழிக்குள் விழுகிறான் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்க வேண்டும். அவனுக்கு அது புதிய வழியாக இருக்கலாம் என்பது ஒன்று. அல்லது அந்தக் குழி புதிதாகத் தோண்டப்பட்டிருக்கும் என்பது மற்றொன்று. ஆக புதிய குழி அல்லது புதிய வழி - இவையிரண்டில் ஏதேனும் ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஆனால் வரதட்சணை எனும் பெயரில் கொடுமைகளும்-கொலைகளும்- தற்கொலைகளும் தினந்தோறும் நிகழும் சமூகம் ஒன்றில் வாழ்ந்து கொண்டிருக்கும், கூடவே அந்தக் கொடுமைக்கு ஆட்பட்டிருக்கும் கதையின் நாயகி தேன்மொழிக்கு இது ஒரு புதிய கொடுமையாகவோ அல்லது புதியதொரு சமூகமாகவோ தோன்ற வாய்ப்பில்லை. எனவே குழியில் விழுந்த மனிதனை தேன்மொழிக்கு உவமை ஆக்கத் தேவையில்லை. அது தவறான ஓர் ஒப்பீடு, என்றாலும் கூட குழியில் விழுந்தவன் மற்றவரை எச்சரிக்க மனிதாபிமானம் தேவைப்படுவதுபோல பெண்களுக்கு அறிவுரை சொல்ல முனையும் பெண்ணுக்கு "போர்க்குணம் என்னும் போராட்ட குணம் மிகவும் இன்றியமையாததாகவும் இருக்கிறது.

வரதட்சணைக் கொடுமையினால் தீயில் எரிந்து சாம்பலானவர்கள் அத்தனை பேரும் ""போராளிகள்''தான் என்றால், வரதட்சணைக் கொடுமையினை எதிர்த்துப் போராடி, வீட்டைவிட்டு வெளியேறி குழந்தைகளை வளர்த்து வாலிபமாக்கி வெற்றிநடை போடும் பெண்களுக்கு என்ன பெயர்? ஒருவேளை காதம்பரியின் பார்வையில்-அவரது புரிதலில் அந்தப் பெண்கள் ""ஆகாவளி''களாகத் தென்படுகிறார்களோ என்னவோ.

செவிலியர் ராதிகா பாத்திரப் படைப்பு தன்னால் வலிந்து திணிக்கப்பட்ட கதாபாத்திரமே அன்றி வேறல்ல என்று அழுத்தந்திருத்தமாக வாக்குமூலமே அளித்துவிட்டார் காதம்பரி. ஆனால் ஒரு சிறுகதையின் கதாபாத்திரங்கள் இயல்புப் போக்கில் அமையும் போது தான் தர்க்கரீதியாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு அப்பாத்திரங்களின் வாயிலாகவே சட்டென பதிலைச் சொல்ல முடியும் என்பது யதார்த்தமான உண்மை. நல்லதொரு படைப்பின் உயர்வுக்கும், வெற்றிக்கும் அதுவே தான் அடிப்படை என்பதும் நமது நிலைப்பாடு.

தேன்மொழி தனது கணவனைக் காட்டிக் கொடுக்காதது தான் இன்றைய நிலையின் யதார்த்தம் எனும் காதம்பரி, எங்கேயும் தனக்காக ஓடிப்போய் போராட முடியாமல் கட்டிலில் மரணத்துடன் போராடும் பொழுது ஏற்படுகின்ற உண்மையான மனநிலை தான் அது என்றும் கூறுகிறார். கையும், காலும், மனமும், உடலும் நல்ல நிலையில் இருந்த போதே வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகப் போராடத் துணியாத தேன்மொழி மரணப்படுக்கையிலா போராட்டச் சிந்தனையை முன்னெடுக்க முடியும் என்பது நாம் அறியாத செய்தி அல்ல. எனவேதான் தேன்மொழி பாத்திரப் படைப்பில் போராளிக்குரிய போராட்ட குணம் என்பது அணுவளவும் காணப்படவில்லை என்று அன்றே அறிவித்தோம்.

அதே போன்று தேன் மொழியின் குழந்தைகளையும் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் வாசகர்கள் முன் நிறுத்துவதாக காதம்பரி கூறுவதையும் நம்மால் ஏற்க இயலவில்லை. ஏனெனில் நல்லதொரு படைப்பு என்பது அப்படைப்பை வாசிப்போரின் மனதில் நம்பிக்கை உணர்வை விதைப்பதாக இருக்க வேண்டும். கதை நாயகியின் படைப்பு போர்க் குணத்தோடு அமையப் பெறவில்லை என்பதாலேயே, அவளைப் போலவே அவளது இரு பெண் குழந்தைகளின் நிலையும், மனித நேயமற்ற தகப்பனையும், பாட்டியையும் சார்ந்து, அண்டிப் பிழைப்பதாக ஆகிவிட்டது. (முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல)

பரிதாபத்திற்குரியவளான தேன்மொழியின் அறிவுரையில் ராதிகாவும், சமுதாயமும் திருந்திவிடும் என்று கதாசிரியர் எதிர்பார்ப்பதும்-ஏங்குவதும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நீண்ட நெடிய போராட்ட வரலாறுகளையும், போராளிகளின் வாழ்க்கை முறையினையும் அவர் கவனத்தில் கொள்ளவில்லை என்பதையே தெளிவாக எடுத்தியம்புகிறது.

என்ற போதும் இளம் படைப்பாளி காதம்பரி தனது படைப்புப் பயணத்தில் புதிதான வழித்தடங்களைக் கண்டறிவார் என்னும் நம்பிக்கையினை இந்த எதிர்வினையைச் செய்ததன் வாயிலாக நமக்களித்திருக்கிறார். அவருக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறோம்!
-முழுமதி


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com