Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2008
நாத்திகத்திற்கு பெண்ணியத்தின் பதிலுரை
-லலிதா

புதிய பெண்ணியம் பிப்ரவரி இதழில் வெளிவந்த "ஆதிக்க அரசியலும் அழுத்தமான அடையாளங்களும்' என்ற நமது கட்டுரைக்கு, மதிப்பிற்குரிய அய்யா நாத்திகம் ராமசாமி அவர்கள் தனது வார இதழில் எதிர்வினை புரிந்து, அதில் இரு படிகளை நமக்கு அனுப்பி வைத்திருந்தார். மார்ச் மாத இறுதியில் அது நம்மிடம் வந்து சேர்ந்தது என்கிற வகையில், அவருக்குக் கடிதம் வாயிலாகவே ஒரு பதிலை அளித்திருக்கலாம் என்றபோதும், சூழ்நிலைகளின் கெடுபிடிகள் காரணமாக இவ்விதழ் தாமதமானது போலவே அதுவும் இயலாமல் போனது. இத்தகைய சூழல் உருவானதில் நமக்கும் மிகவும் வருத்தமே.

எனவேதான் இவ்விதழில் நாத்திகத்தில் வெளிவந்த அக்கட்டுரையினை அப்படியே வெளியிட்டு அதற்குத் தகுந்ததொரு பதிலைச் சொல்லவும் அணியமானோம். "கையளவு தெரிந்து கொண்டு கடலளவு எழுதி இருக்கிறார்கள்' என்ற முன்னுரையோடு அவர் தனது கட்டுரையை ஆரம்பித்தது கூட நமக்குச் சாதகமான ஓர் அம்சமாகவே தென்படுகிறது. கையளவில் இருப்பதைக் கடலளவாகக் காட்டுவதற்குக்கூட "ஆற்றல்' என்ற ஒன்று பெருமளவில் தேவைப்படும்தானே?

"பெரியாரியலாளர்களுக்கு பெண்ணியம் என்று தனியாக எதுவும் கிடையாது. பெரியாரியத்துள் பெண்ணியமும் அடக்கம்' எனும் நாத்திகம் ஆசிரியர், பார்ப்பன-இந்துத்துவ-சூத்திர அடிமைச் சமுதாயத்தை எதிர்த்துப் போராடி விடுதலை பெற்றாலே சமூக மற்றும் பாலின சமத்துவம் வந்துவிடும் என்றும் நம்பிக்கை கொள்கிறார். எனவே பெரியாரியப் போராட்டத்தைக் கைவிட்டு பெண்ணியப் போராட்டத்தைக் கைக்கொள்வது என்பது அறியாமைப் போராட்டமேயன்றி வேறல்ல என்ற கருத்தையும் ஆணித்தரமாக முன்வைக்கிறார்.

பார்ப்பனிய இந்துத்துவ சமூக அமைப்பைத் தகர்த்து எறியப் போராட வேண்டும் என்பதில் நமக்கு எப்போதுமே மாற்றுக்கருத்து இருந்ததில்லை. ஆனால் பெண்ணிய வாதங்களை விதண்டா வாதங்கள் என்று கருதிக்கொண்டு, அதற்கென இவர் கூறும் உதாரணம்தான் நம்மால் ஏற்றுக் கொள்ள இயலாததாக இருக்கிறது. கோழிக்கு ஒரு வாசல் - குஞ்சுக்கு ஒரு வாசல் என்கிற அறியாமைப் போராட்டமல்ல நாம் முன்னெடுத்துக் கொண்டிருப்பது. நிலவுகின்ற அடிமைச் சமூக அமைப்பின் தோற்றுவாயே "கோழிக்கு ஒரு வாசல் - சேவலுக்கு ஒரு வாசல்' என "ஆதிக்கவாதிகள்' சமூக அமைப்பைக் கட்டமைத்துக் கொண்டதில்தான் முழுமையாக அடங்கி இருக்கிறது என்பதாலேயே, பெரியாரியப் போராட்டத்தை விடவும் பெண்ணியப் போராட்டத்தைக் கைக்கொள்வது என்பது மிகுந்த அவசியமாகவும் உடனடித் தேவையாகவும் இருக்கிறது.

ஆண்-பெண் பேதமற்ற சமத்துவ வாழ்வு வாழ்ந்த தமிழர் சமுதாயத்தில் ஆரியர் புகுந்த பின்னரே பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு சூத்திரனுக்கு ஒப்பான இழிபிறவிகள் ஆனார்கள் என்ற நா.ஆசிரியரின் வாதத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் சூத்திரனுக்கும் ஒப்பான இழிபிறவி பெண் என்பதை விடவும், அச்சூத்திரர்களுக்கும் பணிவிடை புரியும் - ஒடுக்கப்படுவோரிலும், கடுமையாக ஒடுக்கப்படும் இனமே பெண்ணினம் என்பதே உண்மை நிலையாக உள்ளது. அதோடு சமத்துவ வாழ்வு வாழ்ந்த தமிழர் சமூகத்தில் ஆரியர் வருகைக்குப் பின்தான் பெண்ணடிமைத்தனம் ஏற்பட்டது எனில் நால்வர்ண பேதமற்ற மேலைநாடுகளில் அவலம் சூழ்ந்த பெண்ணடிமைத்தனத்திற்கு எது காரணம்? நா.ஆசிரியர் இதுபற்றி விரிவாக விளக்கினால் நல்லது.

அதோடு தனது கட்டுரைத் தலைப்புக்குத் தொடர்பில்லாத தாக, பார்ப்பன எதிர்ப்பின் தீவிரத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக, புதிய பெண்ணியம் இதழில் தொடர்ந்து கவிதைகள் படைத்து வரும் சி.விநாயகமூர்த்தி அவர்களின் படைப்புச் சுதந்திரத்திற்கும் தடைபோட எண்ணுகிறார். (ஒரு படைப்பை விமர்சிப்பது என்பது வேறு; அந்தப் படைப்பே கூடாது என்பது வேறு. முந்தையது சனநாயகம் எனில் பிந்தையது சர்வாதிகாரம் என்றே அறியப்படும்.)

புதிய பெண்ணியம் ஆசிரியர் குழுவினர் பெரியாரிய வாதிகளாகவோ அல்லது மார்க்சியவாதிகளாகவோ இருப்பது என்பது ஒரு நிலைப்பாடு. அதற்காக அவ்விதழில் எழுதுபவரும் அவ்வாறே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், கட்டாயப்படுத்துவதும், படைப்புச் சுதந்திரத்திற்கும், இதழியல் நேர்மைக்கும் எதிரானது மட்டுமல்ல-இதழின் வளர்ச்சிக்கும் சனநாயக உணர்விற்கும் முரணானது ஆகும்.

அதுவுமின்றி நாத்திகம் ஆசிரியர் சாடுகின்ற "பெண்ணியப் பெண்மணிகளுக்கும்' மகாகவி பாரதி, ஒன்றும் பகையாளியோ எதிராளியோ அல்ல. "தமிழரின் கவிஞர்' என்று தமிழுலகு மதிக்கின்ற புதுவை புரட்சிக் கவிஞரே ஒரு காலகட்டத்தில் தம்மை அவருக்குத் தாசனாக அறிவித்துக் கொண்டவர் என்கிற வரலாற்றுப் பதிவுகளையெல்லாம் நாம் ஒருபோதும் மறப்பதில்லை-மறுப்பதும் இல்லை.

ஐந்து ஆண்கள் கூட்டணி அமைத்து, ஆளுக்கு ஒரு வாரம் எனப் பாஞ்சாலியை மனைவியாக்கிக் கொண்டதை பார்ப்பனரான பாரதி உயர்த்திப் பிடித்து "பாஞ்சாலி சபதம்' பாடினார் என்பதற்காகவே பாரதியின் ஆழமான பெண்விடுதலைக் கவிதைகளை ஓரம் கட்டி விட்டு, பொத்தாம்பொதுவில் அவற்றைக் கீழே தள்ளி மிதிக்கும் அதிமேதாவித்தனம், ஒற்றைக் கோணப் பார்வையெல்லாம் பெண்ணியப் பெண்களுக்கு' எந்நாளும் இருந்ததில்லை. பெண்ணியம் "முழுமையான மனிதர்கள்' என்கிற கருத்தாக்கத்தை எப்போதுமே மறுதலிக்கிறது - இயக்கவியலுக்கு எதிரானதாகப் பார்க்கிறது.

எனவே "பாரதி பாடலைப் பறைசாற்றுங்கள்' என்ற விநாயகமூர்த்தியின் கவிதை வரியினையும் சேர்த்தே வெளியிட்டிருப்பது தமிழர்களை முட்டாள்கள் ஆக்குவதற்கு அல்ல என்பதை நாத்திகம் புரிந்து கொள்ள வேண்டும். அதோடு வரலாறு என்னும் நீண்டு கிடக்கும் சங்கிலித் தொடரில் தன்னிச்சையாக - தான்தோன்றித் தனமாக ஒன்றிரண்டு பின்னல்களைப் பிடுங்கி எறிவதுதான் "மிகப்பெரிய அறியாமை' என்பதையும் தெரிந்து கொள்வது நல்லது.

இதனால்தான் மரபுவழிப் பார்வை கொண்டோர் கண்ணகியை கற்புக்கரசி என்ற கருத்தியலோடு அணுகும்போதும், பெண்ணியம் கண்ணகியை போர்க்குணம் மிக்க ஒரு போராளியாகப் பார்க்கிறது; மதித்துப் போற்றுகிறது. பாஞ்சாலி கதையும் அவ்வாறே; மணியம்மையாரின் போராட்ட வாழ்வும் அத்தகையதே! அவ்வக்கால வரலாற்றுப் பிண்னணியோடு அந்தந்த நிகழ்வுகளை உள்வாங்குவதென்பது சமூக மாற்றம் விரும்புவோரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும் என்றே பெண்ணியம் கருதி வந்திருக்கிறது - இக்கருத்தியலைக் கொண்டு மட்டுமே வளர்ந்துமிருக்கிறது.

நாத்திகம் ஆசிரியர் போற்றுகின்ற தந்தை பெரியாரின் பிறப்பிற்கு பத்தாண்டுகளுக்கு பின் பிறந்து - பெரியாரின் மறைவுக்கு, ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக மறைந்துவிட்ட பாரதியார், பார்ப்பனராக இருந்தும் மிகுந்த தொலை நோக்கோடு சிந்தித்தார் என்பதில் நமக்கு அணுவளவும் ஐயமில்லை. பெண்ணியத்தைப் பொறுத்தவரை இந்திய அளவிலோ அல்லது உலகளவிலோ பெண்விடுதலைக் கருத்துக்களைப் பதிவுசெய்த முதல் கவிஞர் அவரென்றே போற்றுகிறது. தொண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்த பெரியாரைப் போன்று முப்பதாண்டுகளே வாழ்ந்த பாரதியும் கவிஉலகின் ஒரு சகாப்தம் என்றே எண்ணுகிறது.

பெண்களுக்குச் சொத்துரிமை என்று வந்ததனால், தகப்பன் சொத்தில் மகளுக்குப் பங்குண்டு. அந்தப் பங்கை நகை, ரொக்கமாகக் கொடுக்கிறார்கள் என்று வரதட்சணைக்கு ""அதி அற்புதமான'' விளக்கத்தைத் தரும் நா.ஆசிரியர் அடுத்ததாக பெண்ணியம் இதழில் வெளிவந்த "ஒன்பது ரூபாய் நோட்டு' திரைப்பட விமர்சனத்திற்கு வருகிறார். இதற்கும் அவரது கட்டுரைத் தலைப்புக்கும் என்ன தொடர்பு என்பது அவருக்கே வெளிச்சம்.

நாம் எந்தப் பெரியாரிய அமைப்பிலும் சேர்ந்து பெரியாரியத்தைக் கற்றுத் தெளிந்தவர்கள் இல்லை என்பதால் நாமறிந்த பெரியாரியக் கருத்துக்களில் குறை ஏற்படின் அது இயல்பான ஒன்றே. அது திருத்திக்கொள்ளக் கூடியதும்தான். ஆனால் நமது பெரியாரியக் கருத்துக்களில் வலுவான குறை காணமுடியாத நிலையில் பெரியாரின் தாய்மொழியினை தெலுங்கு எனக் கூறியதில் பெருங்குறை கண்டதை "நாத்திகத்தின்' இயலாமையாகவே காணவேண்டி இருக்கிறது என்றாலும் அத்தவறு நேர்ந்ததற்கான காரணத்தைச் சொல்லி அதற்கு ஆவன செய்யுமாறு நா.ஆசிரியரைக் கேட்டுக் கொள்வது இத்தருணத்தில் முறையானதே என எண்ணுகிறோம்.

தந்தை பெரியார் கன்னட மொழி பேசும் நாயக்கர் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதையும் சிறு வயது முதற் கொண்டே கேள்விப் பட்டிருக்கிறோம் என்ற முறையில் நமது பதிலில் (மதி - இடம் கேளுங்கள் பகுதி) கன்னடமொழி என்றே குறிப்பிட்டிருந்தோம். இதழ் அச்சிலேறும் தருணத்தில் இணையதளம் ஒன்றில், பெரியார் பற்றிய பதிவில் அவரது தாய்மொழி தெலுங்கு என்றிருப்பதைக் கண்ட ஒரு தோழர் தெலுங்குதான் என்று வலியுறுத்த கன்னடம் என்பது தெலுங்கு என்றாயிற்று. (பார்க்க: ஜ்ஜ்ஜ்.ஜ்ண்ந்ண்ல்ங்க்ண்ஹ.ர்ழ்ஞ்*)

அடுத்து நாத்திகம் ஆசிரியர் கி.பி.2006ம் ஆண்டு அச்சிட்ட தனது மகனின் திருமண அழைப்பிதழில் சாதிப்பெயரைக் குறிப்பிட்டிருந்ததைப் பற்றி சாதித் திமிர்; மமதை; பெருமை என்றெல்லாம் நாம் எண்ணவில்லை - அதற்கான தேவையுமில்லை. அரைநூற்றாண்டு காலமாக "நாத்திகம்' எனும் இதழை நடத்திவரும் ராமசாமி அவர்களின் தந்தைதான் பிச்சைக்கனி என்பதை விடவும், பிச்சைக்கனி நாடாரின் மகன்தான் நாத்திகம் ராமசாமி என்கிற அடையாளக் குறியீடே முதன்மையானது என்று அவர் சொல்வதுதான் எந்தளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்றே எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. மற்றபடி நாத்திகம் ஆசிரியரை நாம் சாதியச் சிந்தனை உள்ளவர் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஏனெனில் நமக்கும் சாதிகளைப் பற்றிய ஆழ்ந்த பார்வை கிடையாது. காரணம் மூன்று தலைமுறைகளாக இல்லத்தில் நடந்து முடிந்த திருமணங்கள் அனைத்துமே வெவ்வேறு சாதிகள்; வேறு வேறு மதங்கள் என்றாகிப் போயின.

பெரியார் திரைப்படத்தை விமர்சனம் செய்து எழுதப்பட்ட ருத்ரன் அவர்களின் நூலை விமர்சனம் செய்ததற்காக நம்மீது நா. ஆசிரியர் மிகவும் கோபம் கொள்கிறார். பொய் எழுதும் குற்றத்தைச் செய்தாகவும் தீர்மானம் செய்து கொள்கிறார். ஆனால் பெண்ணியத்தின் திறனாய்வு வேண்டி நம்மிடம் வரும் நூல்களை ஆய்வு செய்வது பெண்ணியம் இதழின் கடமை என்பதை மறந்துவிட்டார். கூடவே ஈ.வெ.ராவுக்கு பெரியார் பட்டம் கொடுக்கப்பட்டதைக் காட்சிப்படுத்த மறந்திருக்கும் பெரியார் படத்தையே எதிர்த்துப் பதறி எழுந்து போராடி இருக்க வேண்டும் என்றும் நம்மிடம் அறிவுறுத்துகிறார். எவற்றிற்காகவெல்லாம் போராட வேண்டும் என்கிற நோக்கும், தெளிவும் பெண்ணியத்திற்கு நிறையவே இருக்கிறது என்பதைப் பணிவுடன், அவரிடம் உறுதி படக் கூறவே விரும்புகிறோம்.

மேலும் யாருக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்று கருதி நாத்திகம் ஆசிரியர் அக்கட்டுரையை எழுதினாரோ, அவரே-பெரியார் படத்தை திறனாய்வு செய்து நூல் எழுதிய தோழர் ருத்ரனே, அந்நூலில் பெண்ணியத்தின் விமர்சனத்தைப் பெரிதும் பாராட்டி இருக்கிறார். ""காந்தியின் அகிம்சாவாதத்தை வெளி நாட்டுக்காரர் ஒருவர் மிகுந்த வீரியத்துடன் படமாக்கியதால் தான் அப்படம் ஆஸ்கார் விருது பெற்றது. ஆனால் போர்க் குணத்தின் முழு வடிவமான தந்தை பெரியாரின் வீராவேசத்தை இப்படத்தில் நம்மால் உணர முடியவில்லை என்கிற புதிய பெண்ணியத்தின் பெரியார் பட விமர்சனமே அப்படத்தின் மீதான தீர்ப்பாகவும் அமைகிறது'' என்கிறார் ருத்ரன். (பார்க்க: பெரியார் திரைப்படம்-ஒரு பெரியாரியப் பார்வை, பக்கம் 41) இது நமது நடுநிலைக்கு அழுத்தமான ஒரு சான்று. ஆனால் நாத்திகம் இதழோ இதனைக் கண்டுகொள்ளவும் இல்லை. கருத்தில் கொண்டதாகவும் தெரியவில்லை.

கருத்தில் கொள்ள வேண்டியதைத் தவறவிட்டு, தவறான ஒன்றைத் தன் கருத்தாக நாத்திகம் வெளியிட்டிருக்கிறது - ஆட்சியாளர்களைத் தொழுது நிற்கும் பெண்ணியவாதிகள் காரண காரியத்தோடு தான் நிற்கிறார்கள் என்று. ஆனால் அவ்வப்போது ஆட்சியிலிருந்தவர்களை ஆதரித்து "ஆதாயம் அடைந்தவர்களையும் பின் சகட்டுமேனிக்குச் சாடுபவர் களையும்' தமிழ்ச்சமூகம் அறிந்தே இருக்கிறது. ஆனால் 97/55,என்.எஸ்.கிருஷ்ணன் சாலை, நாத்திகம் கட்டடத்திலிருந்து வெளிவரும் நாத்திகம் இதழ் இதை அறியாமல் போனது வியப்பாகவே இருக்கிறது.

இப்போதுதான் மெல்ல நா. ஆசிரியர் தனது கட்டுரைத் தலைப்புக்கு அருகில் வருகிறார். ""தன்னை விடவும் 42 ஆண்டுகள் பெரியவரான ஒரு முதியவரைக் கொள்கை வேகத்தில் கைப்பிடித்த ஓர் இளம்பெண், காலம் முழுவதும் ஆண் வாடையே படாமல் இருந்திருக்க வேண்டுமா'' என்கிற பெண்ணியத்தினது கேள்வியின் நியாயத்தை நாத்திகமும் ஓரளவு ஆமோதிக்கிறது. ஆனால் கூடவே ""அந்த ஆண்வாடைக்காக காவிரி போல் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிய ஒரு மாபெரும் இயக்கத்தை மணியம்மை தேங்கிய குட்டை போலாக்கி விட்டதாலேயேதான் இத்தனை ஆவேசப்படுகிறோமே தவிர அவரது ஒழுக்கத்திற்காகவோ, தனிவாழ்வுக்காகவோ அல்ல'' என்ற பதிலையும் தெளிவாகத் தந்து விடுகிறார் அய்யா நாத்திகம் ராமசாமி அவர்கள்.

அவ்வாறெனில்... நமக்குள் எழும் ஒரு கேள்வி... பின் எதற்காக நாத்திகம் இதழில் வெளிவந்த அவரது கட்டுரைக்கு அப்படி ஒரு தலைப்பு...? "மணியம்மையின் ஒழுக்கம்... பெண்ணியம் ஏடு பாராட்டு' என்று. இதனை அறியாமை என்பதா... அதிமேதாவித்தனம் என்பதா... எதுவாக இருந்தாலும் பெண்ணியம் இதழ் அதனைக் கடுமையாகக் கண்டிக்கிறது. பல்லாயிரமாண்டு காலமாக, இவ்வாதிக்கச் சமூகம் பெண்ணின்மீது தொடுக்கும் வழக்கமான தாக்குதலையே நாத்திகமும் கையிலெடுத்திருக்கிறது.

பெண்ணை அடக்கவும், மிரட்டவும், ஒடுக்கவும், தண்டிக்கவும் ஆணாதிக்க அமைப்பு பயன்படுத்தும் அதே சொல்லாடலைப் பயன்படுத்தி இருக்கிறது. இந்த ஆதிக்க அமைப்பு பெண்ணை சக உயிரியாகப் பார்க்காமல், வெறும் உடலாக மட்டுமே பார்த்து, அவளின் உடல்சார்ந்த ஒழுக்கமே கற்பு என்கிறது. அக்கற்பின் வடிவமே பெண் என்கிறது. அவலம் நிறைந்த மற்றும் வசவு சார்ந்த வார்த்தைகள் (விதவை மற்றும் விபச்சாரி) அனைத்தையுமே பெண்ணின் உடல் சார்ந்து உருவாக்கி அதனைப் பண்பாடு என்று சொல்லிக் கட்டிக் காக்கிறது. இப்பண்பாட்டுத் தளத்தின் ஊடாகவே தந்தைவழிச் சமூக அமைப்பான இந்தத் தனிஉடமைச் சமூக அமைப்பைக் கண்ணும் கருத்துமாக காப்பாற்றி வருகிறது. அப்பண்பாட்டுத் தளத்தினை வலிமையானதாக்குவதற்காகவே பல்லாயிர ஆண்டுகாலமாய் பெண்ணினத்திற்கு கல்வியறிவை மறுத்து நான்கு சுவர்களுக்குள் வைத்துப் பூட்டியது.

இதற்கொரு அண்மைக்கால வலுவான சான்று:- தினமணி நாளிதழ் 23-6-2008 அன்று வெளியிட்டிருந்த ஒரு கட்டுரை. "தென் தமிழின் சரிவும் திராவிடச் சுயம்புகளும்' என்ற தலைப்பில் பழ.கருப்பையா என்பவர் எழுதி இருந்தார். தமிழை அழிக்க முயன்றதாக தந்தை பெரியாரையும், வெள்ளையன் மெக்காலேவையும் ஒரு தட்டில் நிறுத்தி அவர்களை வசைபாடி, அதற்கு நேரெதிராக அண்ணல் காந்தியையும், ராஜாஜியையும் வானளாவ உயர்த்திப் பிடித்திருந்தார். பிடித்துவிட்டுப் போகட்டும்... நாம் சொல்ல வந்தது வேறு. கட்டுரையாளர் பெண்கள் பற்றிய கருத்தை ஓரிரு வரிகளில் வெளிப்படுத்தி இருந்தார். மணமுறிவு வழக்குகளின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகி வருகிறது என்ற செய்தியினால் அவரின் மனம் பேதலித்தது போலும். ""நான்கைந்துமுறை கணவனை மாற்றிக் கொண்டவள் அரிஸ்டாட்டிலின் தர்க்க விதிகளைப் பயன்படுத்தி அளப்பரிய வகையில் ஆணாதிக்கம் பற்றி அலசி எடுக்கிறாள்'' என்று நொந்து கொள்கிறார். மணமுறிவுக்குக் காரணம் பெண்கள். அதுவும் ஒழுக்கம் கெட்ட பெண்கள். இவர்கள்தான் நான்கைந்துமுறை கணவனை மாற்றும் பெண்கள்' என்பது அதன் பொருள்.

ஓர் ஆணுக்கு கையில் நான்கு காசு சேர்ந்தவுடன் நான்கு மனைவியரைச் சேர்த்துக் கொள்ளலாம் எனும் சலுகைகள் நிறைந்த ஒரு சமூக அமைப்பில் இருந்துகொண்டு பெண்ணுக்கு எதிராக வீசப்பட்ட சொல்லாடல் இது. அடங்கி வாழ்ந்த பெண்ணினத்திற்கு மணமுறிவு என்ற சுதந்திரத்தைக் கொடுத்த சமூக அறிவியலின் வளர்ச்சியினை - காலத்தின் மாற்றத்தினைக் கருவறுக்க நினைக்கும் கண்ணியமற்ற சொல்லாடல் அல்லவா இது? இதன் பின்னணியில் நிற்பது காலம் காலமாகப் பேசப்படும் பெண்ணின் உடலும் உடல்சார்ந்த ஒழுக்கமும்தானே? பெண்ணினத்தைக் கொச்சைப்படுத்தி பெரியாரைத் தூற்றுபவர்கள் கையிலெடுக்கும் அதே ஆயுதத்தை பெரியாரைப் போற்றுபவர்களும் கையிலெடுப்பது என்பது பெண்கள் பற்றிய பார்வையில் ஆண்களனைவருமே ஒரே அணிதான் என்பதைத்தானே பறைசாற்றுகிறது?

நாத்திகம் இதழின் கட்டுரைத் தலைப்பு நடுநிலையாக-நியாயமாக எப்படி இருந்திருக்க வேண்டும்? ""மணியம்மையின் விவேகமின்மை-பெண்ணியம் ஏடு பாராட்டு'' என்றோ அல்லது ""மணியம்மையின் செயல்திறமின்மை-பெண்ணியம் ஏடு பாராட்டு'' என்றோ கூட இருந்திருக்கலாம். அதனை விடுத்து ஆணாதிக்க மரபு சார்ந்து வைக்கப்படும் எந்தவொரு எழுத்தையும் சிந்தனையையும், செயலையும் பெண்ணியம் எதிர்க்கும்-வாதாடும்-இறுதிவரை போராடும்.

அத்தகைய உணர்வோடு, சமூக அக்கறையுடன் நாத்திகம் இதழ் "மணியம்மையின் விவேகமின்மை அல்லது செயல்திறமின்மை' என்று தலைப்பிட்டிருப்பின் பெண்ணியம் இதழின் பதில் என்னவாக இருந்திருக்கும்? புதிதாக ஒன்றுமில்லை.... முன்னமேயே சொன்ன அதே பதில்தான் மீண்டும் வந்திருக்கும். "முழுமையான மனிதர்கள்' என்பதும் ஒட்டுமொத்த சமூகத்திற்கே முன் மாதிரி மனிதர்கள்' என்கிற கருத்தாக்கமும் சமூக இயங்கியலுக்கு எதிரானது என்பதே அது.

மணியம்மையாரின் சமூகக் கடமை அல்லது சமூகப் பங்களிப்பு ஈ.வெ.ரா. பெரியாருடன் தன்னை இணைத்துக் கொண்டதுடன் முடிவடைகிறது. கால்நூற்றாண்டு காலம் அவரைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து அவரது ஆயுளை நீட்டிக்கச் செய்ததுடன் அவரின் சமூகக் கடமை நிறைவு பெறுகிறது. இன்னும் கூடுதலாகச் சொல்லப் போனால் தனது வாழ்முறையின் மூலம் நாத்திகநெறியே பெண்ணின் உரிமை வாழ்விற்கு அடிப்படையானது என்பதைப் பறைசாற்றிய தோடு மணியம்மையாரின் சமூகக் கடமை முழுமையடைகிறது. எனவே திராவிடர் கழகம் தேக்கமடைய அவர் காரணமில்லை என்பதும் தெளிவாகிறது.

அவ்வாறாயின் மாபெரும் அவ்வியக்கம் தேக்கம் அடைய யார் காரணம் அல்லது எது காரணம்... இயக்கம் தேக்கமடைய முதல் புள்ளியினை வைத்தது காலமே. ஆமாம்! காலம்தான் தந்தை பெரியாருக்கு முதுமையைக் கொண்டுவந்தது. முதுமையோ நம்பகத்தன்மை கொண்ட ஆதரவைத் தேடியது. அந்த ஆதரவும் நம்பகத்தன்மையும் மணியம்மையார் என்ற வடிவம் கொண்டிருந்தது. பெரியாரின் இந்த நம்பிக்கை அறிஞர் அண்ணாவிற்கு அவநம்பிக்கையாகியதால் திராவிடர் கழகம் பிளந்து திராவிட முன்னேற்றக் கழகம் வீறு கொண்டெழுந்தது. இம்மூன்றையும் வரிசையாக நிகழ்த்தி வேடிக்கை பார்த்த காலத்திற்குப் புதியதொரு வரலாற்றுப் பக்கத்தை திறக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

தந்தை பெரியார்-மணியம்மையார் திருமணத்திற்குப் பின் துவங்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் தனது கடுமையான களப்பணிகள் மூலமாகவும் 1961-ல் தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது. பேரியக்கம் என்றழைக்கப்பட்ட காங்கிரஸ் வீழ்ந்தது. இன்றும் ஐம்பதாண்டுகள் ஆகப்போகிற நிலையிலும் அதனால் எழவே முடியவில்லை என்பது அந்தப் பத்தாண்டுகால தி.மு.க.வின் களப்பணியின் வலு மற்றும் பெரியாரியத்தின் எழுச்சி எத்தகையது என்பதையே எடுத்துக் காட்டுகிறது. அணைகின்ற தீபம் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் என்பதை போல 1957-ல் பெரியார் தலைமை ஏற்காத சட்ட எரிப்புப் போராட்டம் பெரியார் இயக்கத்தின் வல்லமையை காட்டி இந்திய அரசை வெருள வைத்ததோடு அடங்க ஆரம்பித்தது. ஆனால், பெரியாரின் சீடர் அறிஞர் அண்ணா ஐந்தே ஆண்டுகளில் 1962ல் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து தமிழக வரலாற்றின் புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்தார்.

திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலைப் பிடித்தது என்பது தவிர்க்க வியலாத வரலாற்று நிகழ்வு. சரித்திர நிகழ்வுகளைக் கோர்வைப்படுத்திப் பார்க்கும் சமூகவியல் ஆய்வாளர்களுக்கு இது தெளிவு.

இறுதியாக "இரண்டாம் நிலைத் தலைவர்களை வெளியேற்றியதால் ஏடாகூடமாய் எதுவுமே நிகழ்ந்துவிட வில்லை' என்று பெண்ணியம் இதழில் எழுதி இருந்ததை மறுக்கிறார் நா.ஆசிரியர். அவர்கள் இரண்டாம்நிலைத் தலைவர்கள் மட்டுமல்ல; அவர்கள்தான் பெரியார் கொள்கை என்ற முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொரிக்க வைத்தவர்கள். அந்த சுயமரியாதைச் சுடர்களைப் பற்றி பெண்ணியச் சகோதரிகளுக்கு எதுவுமே தெரியவும் இல்லை' என்றும் குறிப்பிகிறார்.

உண்மைதான்! அந்த சுயமரியாதைச் சுடர்களின் வாழ்க்கையினை - போராட்டங்களை ஆய்வு செய்யும் நல்வாய்ப்பினை நாம் பெறவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறோம். ஆனால் பெரியார் கொள்கை என்ற முட்டையை அடைக்காத்துப் பொரிக்க வைத்தது என்றளவில் அவர்களின் பங்களிப்பு நிறைவடைந்து விட்டது என்றே தோன்றுகிறது. காரணம் அந்தப் பெரியார் கொள்கையினையும் அது தொடர்பான ""மற்றவற்றையும்'' பாதுகாக்கும் நம்பிக்கைக்குரிய வாரிசாக பெரியாரின் பார்வையில் மணியம்மையார் தானே தென்பட்டிருக்கிறார். சுயமரியாதைச் சுடர்களான அவர்களை விடுத்து, இவ்வாறு ஒரு தேர்வினைச் செய்ததை தந்தை பெரியாரின் குற்றமாகத்தானே கொள்ள வேண்டும்? இல்லையெனில் பெரியார் எதிர்பார்த்த நம்பகத் தன்மையில் மணியம்மையார் அவர்களையெல்லாம் விஞ்சினார் என்பதுதானே உண்மையாக இருக்க வேண்டும்?

ஆக எய்தவன் இருக்க அம்பை நோவதா? என்கிற அனுபவரீதியான வாதத்திலாகட்டும் அல்லது "எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை என்று ஒன்றுண்டு' என்கிற அறிவியல் பூர்வமான வாதத்திலாகட்டும்-எவ்வித நோக்காயினும் மணியம்மையார் மகத்தானதொரு வாழ்க்கை நெறியினைத் தேர்ந்தெடுத்து வாழ்ந்து மறைந்தார் என்பதையே காலமும் வரலாறும் நமக்கு அறுதியிட்டுக் கூறிக் கொண்டிருக்கிறது. கடந்த நூற்றாண்டின் தமிழக வரலாற்றைக் கூர்ந்து நோக்கி ஆய்வு செய்து கொண்டிருக்கும் சமூகவியலாளர்க்கும் இவ்வுண்மை தெற்றென விளங்கும்-விளங்க வேண்டும்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com