Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2008
எதிர்வினை
- காதம்பரி

புதிய பெண்ணியம் சிறுகதைப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மூன்று சிறுகதைகளையும் படித்துவிட்டு கையோடு தங்களின் விமர்சனங்களை எழுதிய அத்துணை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. எதிர்வினைக்கும் என்னுடைய வாக்குமூலத்திற்கு முதல்பரிசே கிடைத்திருக்க வேண்டும் என்று வாதாடிய மருத்துவர் அ.காசி பிச்சை அவர்களுக்கும் பதில் வினையாக அந்தக் கதை அதற்குத் தகுதியானதல்ல என்று எடுத்துக் கூறிய ஆசிரியர் அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தர்க்கரீதியான எல்லா கேள்விகளுக்கும் பதில் இருப்பதாகவே நான் என் வாக்குமூலத்தை நினைக்கிறேன். மேலும் ஆசிரியர் எழுப்பியிருக்கும் நான்கு கேள்விகளும் இன்னும் ஆழமாக இருந்திருந்தால் பெண்ணியத்தைப் பற்றி இன்னும் விரிவாக பேசியிருக்கலாமே என்ற சிறு ஆதங்கமும் எனக்குள் இருக்கிறது. ஒரு பெண்ணியப் போராளியை உருவாக்க இன்னொரு பெண்ணிற்கு தகுதி வேண்டுமா என்ன? வழியில் குழி இருக்கிறது பார்த்து போ என்று சொல்ல எதிரில் வருபவர்க்கு என்ன தகுதி வேண்டும்? இப்படி சொல்லும் ஒருவர் அதில் ஏன் விழுந்து எழுந்தார் என்று நாம் கேள்வி எழுப்பலாமா? முழுமதியின் முதல் கேள்வியை வைத்து ஆராய்ந்தால் குண்டுவெடிப்பில் அகால மரணமடைந்த அண்ணல் காந்தியும் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தியும் ராஜிவ் காந்தியும் இறந்ததன் மூலம் அவர்களுக்கு இந்த நாட்டைக் காக்கும் தகுதியில்லை என்று முடிவுக்கு வந்துவிட முடியுமா? உண்மையில் வரதட்சணைக் கொடுமையில் தீயில் எரிந்து கருகும் பெண்கள் அத்தனை பேரும் போராளிகள்தான். ஆனால் இந்தக் கொடுமைகளுக்கு உடன்படுகிறவர்கள், பணிந்து போகிறவர்கள் கேட்பதை தாய் வீட்டிலிருந்து வாங்கிக் கொடுக்கிற பெண்கள் தீயில் எரிய வேண்டிய அவசிய மில்லையே!

2. செவிலியர் ராதிகா வரதட்சணைக்காக மாத சம்பளத்தை முழுவதும் அப்படியே சேர்த்து வைப்பவளாக இருந்ததால்தான் "போராட்ட அறிவுரை' சொல்ல பெண் கிடைத்தாள் என்று ஆசிரியர் எழுதியிருப்பது எனக்கு நகைப்புக்கு இடமாகி யிருந்தது. ஒரு கதையின் படைப்பாளி சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பார்த்து அதற்கு தீர்வு சொல்வதற்காக படைக்கும் படைப்பில் அதற்கேற்றவாறு பாத்திரங்களை அமைப்பார்கள் என்று அவர்களுக்குத் தெரியாதா? இன்று இருக்கும் சுமங்கலித் திட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன? இன்றும் பல இல்லங்களில் இந்த கொடுமைகள் இருப்பதால் படித்துவிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு இன்னும் வரதட்சணையைப் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லையே என்ற ஆதங்கத்தில் திருமணமாகாத பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு கதையில், திருமணமாகாத செவிலிக்கு பதில் நான் ஏன் திருமணமான ஒரு பெண்ணை செவிலியாக படைக்கப் போகிறேன்?

3. அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து காந்தியடிகள் மனந்திருந்தியதாக வரலாறு கூறுகிறது. என் வாக்குமூலத்தில் "வாழ்க்கை என்றால் என்ன? அதை வரதட்சணைக்காக நாம் எப்படி சிக்கலாக்கிக் கொண்டிருக்கிறோம்' என்று கதையின் நாயகியை தோலுரித்துக் காட்டியிருக்கிறேன். உண்மையில் கதையைப் படித்த வாசகர்கள் மூக்கில் விரல் வைத்தார்களோ இல்லையோ அந்த அறைக்குச் சென்றால் நிச்சயம் மூக்கில் விரல் வைத்துவிடுவோம். வாழ்க்கையை வாசனையாய் வாழவேண்டிய ஒரு பெண் உயிருக்காக அருவருப்பூட்டும் வாடையில் போராடும் சூழல் போதும் அங்கே ராதிகா திருந்துவதற்கு!

4. தேன்மொழி தன் கணவரை காட்டிக் கொடுக்காததுதான் இன்றைய சூழ் நிலையில் கதையின் எதார்த்தம். எங்கேயும் தனக்காக ஓடிப் போராட முடியாமல் கட்டிலில் மரணத்துடன் போராடும் பொழுது ஏற்படுகின்ற மனநிலை பெரும்பாலும் வஞ்சம் தீர்க்கும் மனநிலையாக இருக்காது. திரும்பவும் உயிர் பிழைத்துவிடமாட்டோமா என்ற எதிர்பார்ப்பிலேயே கவனம் இருக்கும். மேலும் பெண்களுக்கான சட்டம் இன்னும் செழுமையுறாத, முழுவதும் அரங்கேறாத நாட்டில் வாழ்கிறோம். இது சட்டத்தால் மட்டும் திருத்தமுடியாது. பெண்களுக்கு அதுவும் படித்த பெண்களுக்கு வரும் விழிப்புணர்வால் மட்டுமே இதை திருத்தமுடியும் என்று கதையின் நாயகி எடுத்த முடிவே கதையின் முடிவு. அந்தக் குழந்தைகளை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நான் வாசகர்கள் முன் நிறுத்தியிருக்கிறேன். இது எதிர்கால பெண்களின் நிலை தேன்மொழியின் அறிவுரையில் இன்றைய ராதிகாக்களும் சமுதாயமும் திருந்தாவிட்டால் அந்தக் குழந்தைகளின் எதிர்காலம் உண்மையில் கேள்விக்குறிதான். அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய தேவை நல்ல தகப்பனோ நல்ல பாட்டியோ அல்ல, நல்ல விழிப்புணர்வடைந்த பெண் சமுதாயம்.

இந்தக் கதையை சட்டத்தால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும் என்று பார்க்காமல் பெண்கள் திருந்துவதால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்று நான் உணர்ந்ததாலே கதையின் மூலம் வாசகர்களுக்கு உணர்த்தியிருக்கிறேன். களஅதிர்வுகளைப் பார்க்கும் பொழுது அதை வாசகர்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் என்று உணர்ந்தேன். அவர்களுக்கும் எதிர்வினையையும் கள அதிர்வில் அத்தனை விமர்சனங்களையும் அழகாக வெளியிட்ட ஆசிரியர்க்கும் மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com