Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
ஜனவரி 2007
தோள்சீலைக் கலகம்
ஏபி. வள்ளிநாயகம்

5. இந்துத்துவமே திருவிதாங்கூரை தீர்மானித்தது.

மானுடம் பற்றிய பார்ப்பனிய பயங்கர வாதத்தின் அடக்குமுறை இந்தியத் துணைக்கண்டத்தின் ஏனைய பகுதிகளைவிட, திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இன்னும் தீவிரமானதாகவும் பெரும் சீரழிவாகவும் இருந்தது. பார்ப்பனிய மனம், பார்ப்பனிய அறிவு(?), பார்ப்பனிய பிரம்மம் என்பதான பயங்கரம் பொதுமக்களுக்கு முழுவகையில் மனிதத்தின் முக்கியத்துவத்தை சூறையாடுவதற்கே பயன்பட்டு வந்தன.

மனித அவமதிப்பு மய்யச் சிந்தனைகளும் மனித வாழ்வியல் மறுப்பு செயல்களும் இணையாக இங்கு ஒருங்கிணைந்தபடி இயங்கிவந்தன. பார்ப்பனிய கருத்துலகங்களால் - காரியங்களால் மனிதம் மறுக்கப்படுவது பார்ப்பனர்-சத்திரியர்-சூத்திரர் (நாயர்) ஆதிக்கமாக சமூகவியல், பொருளியல், அரசியல், கலாச்சாரத் தளத்தில் இருந்து கொண்டிருந்தது.

மானுட அழகியல், மானுட அறவியல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் புறம் தள்ளப்பட்டு பிறவிப்பேத கோட்பாட்டிற்கு உள்ளடங்கிய ஆண்களும் பெண்களும் இங்கு உருவாக்கப் பட்டார்கள். பவுத்தத்தை வீழ்த்திய பார்ப்பனியத்தின் வெற்றியைத் தொடர்ந்து பார்ப்பனர் வேதமத இறையியல் பார்ப்பனியத்தை தகவமைப்பதற்கான ஆணாதிக்கத்திற்கான சமூகக்களம் சாதியச் சமூக யுக்தி, மனுநீதி அரசியல் இவற்றை இயக்கும் பரப்பாகவே திருவிதாங்கூர் ஆனது.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பார்ப்பனியச் சமூக அமைப்பின் வீரியத்தின் விளைவாக மனிதர்களுக்கிடையிலான ஒடுக்குதலின் வகைமைகள் மிக வன்மையாகப் பெருகியிருந்தது. உடல் ஏற்பு, உடல்மறுப்பு, உயிர் நசிவு, மனநசிவு என்பது பார்ப்பன ஆன்மீகத்தின் மய்யமாக இருந்தது. ஆதிக்கக் கோட்பாடுகள் பார்ப்பனியச் சமூக அடையாளங்கள் சார்ந்து மனிதர்கள் ஏற்கப்படுவதும், ஒதுக்கப்படுவதும் - ஒடுக்கப்படுவமான பாசிச இயங்கியல் சார்ந்தே நடந்து கொண்டிருந்தது.

பார்ப்பனர் கருத்தியலை, ஏற்றத்தாழ்வு நம்பிக்கைகளை, பார்ப்பனர்களுக்கு அடங்கிய அரசை, நிர்வாகத்தை, மாறாத சமூகவிதிகளை, சாதிய-ஆணாதிக்க-வர்க்க வரம்புகளைக் காக்கவே இங்கு குறிப்பாகப் பெண்களும், ஆண்களும் பலியிடப்பட்டு வந்தார்கள். மனிதர்கள் சமூகவயப்படுத்தப் படாமல் சமூக விலக்கத்திற்கும் ஒடுக்குதலுக்கும் தீட்டுப்படுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டதுதான் அவலமாகத் தொடர்ந்தது.

திருவிதாங்கூர் சமஸ்தான நடப்பில் மிகையதிகார எதிர்மறை மனிதர்கள் (பார்ப்பனர்கள்), முன்னுரிமை பெற்ற எதிர்மறை மனிதர்கள் (சத்திரியர்கள்-ஆட்சியாளர்கள்), தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் சூத்திரர்களாக்கப்பட்ட நாயர்கள் தவிர பிறமனிதர்கள் எவரும் பெண்களும் எந்த நேரத்திலும் கழித்துக் கூட்டப்பட்டவர்களாக ஆகியிருந்தார்கள். எத்தனையோ வகையான மனித அவமதிப்பு கருத்து நுட்பங்கள், தந்திர காரியங்கள், மனிதர்களைக் கட்டுப்படுத்தவும், அடைக்கவும், விரட்டவும், விற்கவும்-வாங்கவுமான ஆதிக்கத் தொழில்முறை வியூகங்கள் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் மானுட இருப்பினை பொசுக்குவதாகவே அமைந்தது. ஒட்டுமொத்த பெண்களின் அலைக்கழிப்பும் அடிமைச் சாதிகளின், ஊழியச்சாதிகளின் துயரமும் கொஞ்சநஞ்சமல்ல. எதையும்விட மலிவாக எதையும்விட கீழாக சமூகத்திற்கான அடிப்படை மக்கள் ஆளாகியிருந்தனர். இந்த மானுடக்கீழ்மை இம்மண்ணின் மைந்தர்களை பார்ப்பனர்களும் பார்ப்பனியர்களும் ஆக்ரமித்ததால் ஏற்பட்டது.

பெண்கள், அடிமைச் சாதியினர், ஊழியச் சாதியினர் ஆதிக்கப் புரியினர் பார்வைக்கு வெறும் எண்ணிக்கைக்குரியவர்களாகவே இருந்தனர். பெண்கள், அடிமைமக்கள், ஊழியம் புரியும் மக்கள் தன்னுணர்வு அழிந்த ஆதிக்கச் சமூக மனக்களமாக ஆக்கப்பட்டனர். பெண்கள், அடிமைச்சாதி, ஊழியச்சாதி மனித உடல்கள் பார்ப்பனிய மதம் ஊடுருவப்பட்ட வெளிக்கோட்டு உருவங்களாக்கப் பட்டது. பிறமனிதரை மதிக்கும் நெறியை பார்ப்பனியக் கலாச்சாரம் பயிற்றுவிப்பதோ, பயிற்சி செய்வதோ மிகை அதிகாரம் பெற்ற பார்ப்பனர் களின், ஆட்சி அதிகாரம் பெற்ற சத்திரியர்களின், முன்னுரிமை பெற்ற சூத்திரர்களின் இருத்தலுக்கும் வளர்ச்சிக்கும் கேள்விக்குறியாக இருந்தது. சில சமயங்களில் உயர்த்தப்பட்ட சாதிப்பெண்களும், பல சமயங்களில் அடிமைச்சாதி, ஊழியச்சாதி ஆண்களும் -பெண்களும் தேவையற்றவர்களாவும், அபத்தமானவர்களாகவும் இன்னும் அருவருப்பூட்டுபவர்களாகவே பாவிக்கப்பட்டனர்.

எந்தக் கணத்திலும் இழிவுப்படுத்தப் படவோ, அவமானப்படுத்தப்படவோ, கொடுமைப்படுத்தப்படவோ, சிறைப்படுத்தப்படவோ, நரபலி கொடுக்கப்படவோ, படுகொலை செய்யப்படவோ, தோதாகத்தான் அடிமைச் சாதி, ஊழியச் சாதி மனிதர்கள் ஆக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் இந்த அடிமை மனிதர்கள்தான், ஊழிய மனிதர்கள்தான் திருவிதாங்கூர் மக்கள் திரளில் அழகானவர்கள், அபூர்வமானவர்கள், அதிசயமானவர்கள், அற்புதமானவர்கள். பிரபஞ்சத்தின் இயக்கத்தில் பிரமாண்டமானவர்கள் இந்த பெண்களும் ஆண்களும்தான் உண்மையிலும் உண்மையான உழைப்பு மனிதர்கள்.

ஆதிக்கச்சாதியினரும், சனாதனிகளும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அடைபட்ட இந்த வெகுமக்களின் வாழ்வு நசிவதைப் பற்றியோ, அழிவதைப் பற்றியோ எந்தக்கவலையும் படாதவர்களாகயிருந்தார்கள். ஏனெனில் அவர்களைத்தவிர மற்ற அனைவரும் துயரமடையவும் இழிவடையவும் பிறந்திருக்கிறார்கள் என்பதை முடிவு செய்தவர்களாக இருந்தார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானம் இந்து சாம்ராச்சிய மாகவே இருந்தது. இந்துமத மனுதர்மமே திருவிதாங்கூர் சமஸ்தான சமூக-பொருளாதார - அரசியல் வடிவங்களின் வழிகாட்டும் விதிகளைக் கொண்டிருந்தது. பெண்-ஆண் சம உரிமையும், சமவாய்ப்பும், சாதிக்கலப்பும், வெகுமக்களின் பொது இடப்புழக்கமும் இந்து முடியரசுக்கு வெறுப்பையே தோற்று வித்தது. எல்லா பெண்களும் ஆண்களுக்கு அடிமைகள் என்றாலும், உயர்த்தப்பட்ட சாதி சவர்ணர்களின் ஆண்மய்ய வாத கலாச்சாரத்தின் உச்ச கட்டமாக ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெண்களின் நிலை கீழாக்கமாக இருந்தது.

இந்துத்துவம் உட்சாரமாக சாதியத்தையும்-பெண்ணடிமைத்தனத்தையும் கொண்டு வியாபித்து சமூகத்தை பொருளாதாரத்தை அரசியலை தீர்மானித்து திருத்தி எழுதப்பட முடியாத தீர்ப்புகளாக அமைந்தது. சமூக ஏகாதிபத்தியத்திற்குள் அடக்கப்பட்ட மக்களை வறுமைக் கோட்டிற்குள்ளேயும், வேலைப் பிரிவினை களின் மூலமாகவும் சாதிய அடையாளங்களை ஏற்படுத்தியும் ஒடுக்கியது.

இந்துத்துவம் என்கிற புனைவின் கட்டுருவாக்கம் என்பது, ஒரு மேல் அடுக்கு சிறுபான்மையினரின் கூட்டமைப்பாக அமைந்தது. அது மற்ற எல்லோரையும் மேலாண்மை செய்யும் உரிமையை கடவுளின் பேரால் மேற்கொண்டது. திருவிதாங்கூரில் சமூகத்தின் மேலடுக்கு என்பது உயர்த்தப்பட்ட சாதிகள் + அதிகார வர்க்கங்கள்+ஆண் பிரபுக்கள் என்பதாகும். பார்ப்பனர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள் உயர்த்தப்பட்ட சாதிகளாகவும் ஆட்சியதிகார வர்க்கமாகவும், ஆண்டைகளாகவும் தங்கள் பெண்கள் உள்ளிட்டு அனைத்துப் பெண்களையும் அடக்குபவர்களாக இருந்தார்கள்.

திருவிதாங்கூரில் வரலாறு நெடுகிலும் உழைப்பிலும் உற்பத்தியிலும் பங்கு பெற்று வருவோர்கள் ஒடுக்கப்பட்ட சாதி பெண்களும் ஆண்களும்தான். மற்றவர்கள் அனைவரும் உழைப்பிலிருந்து உற்பத்தியிலிருந்து அந்நிய மானவர்கள். ஆனால், அவர்களே உழைக்கும் சாதிகளை சுரண்டிக் கொழுக்கும் உல்லாசிகள்.

ஒருகாலத்தில் அடிமைச் சாதிகளாக்கப்பட்ட இம்மண்ணின் மைந்தர்கள் அவர்களுக்கே உரிய அறவியல், அறிவியல், தொழில்நுட்பம், அறிவுத் துறைகள், மானுடநம்பிக்கைகள் எல்லாமுமாக கொண்டு பெண்-ஆண் சமத்துவமுடம் வாழ்ந்தனர். ஆனால், வந்தேறிகள், வந்தேறி களுக்குகைத்தடியானவர்களின் பொதுமேலாதிக்க சமூகம் தோன்றிய பிறகே தங்கள் சுயத்தை பறி கொடுத்தனர். வன்மையான சமூகப்பிளவும் கூறுபாடுகளும் வேறுபாடுகளும் உருவான பிறகு உருக்குலையலாயினர்.

பார்ப்பனியச் சமூக ஆதிக்கம் என்பது இங்கு பார்ப்பனர் ஆதிக்க மறுதர்ம அரசாட்சிகள் பூர்வகுடிகளை கைப்பற்றிய பொழுதே தொடங்கி விட்டது. திருவிதாங்கூர் சமஸ்தான இந்துத்துவ அரசுகள் ஒவ்வொரு சமயத்திலும் பார்ப்பனியத்தை நடைமுறைப்படுத்தவே துடித்திருக்கிறது என்பதை அரசியல் வரலாறு நமக்குக் காட்டித்தருகிறது.

திருவிதாங்கூரில் அறிவு பொதுவானதாக இல்லை. கல்வி பொதுவானதாக இல்லை. கடமைகளும் உரிமைகளும் பொதுவானவையாக இல்லை. உழைப்பும் பங்கீடும் பொதுவானதாக இல்லை. சமூகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் பார்ப்பனிய பயங்கரவாதத்தால் ஆதிக்கச்சாதிகளின் பூர்வீக மர்மமாக பதுக்கப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தான சரித்திரத்தில், சட்டவிதிகளில், அரசியலில், சமூகத்தில் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் சிக்கிக்கொண்டு கிழிபடும் மனமும் உடலும் தகவமைக்கப்பட்டது. திருவிதாங்கூருக்கு அச்சாணியான பார்ப்பனியத்தினால் மனிதமறுப்பு மதிப்பீடுகளும், தீண்டாமையும், சாதிய மேலாதிக்கமும் ஆணாதிக்கமுமே மூலமாக இருந்தது.

பார்ப்பனர்கள் பூதேவர்கள். இருமுறை பிறந்தவர்கள் அவர்களால் மட்டுமே திருவிதாங்கூரின் அரசர்களை இருமுறை பிறந்தவர்களாக மாற்றி அவர்களை நாட்டையாளும் தகுதியுடையவர்களாக ஆக்கமுடியும். எனவே, நாட்டை ஆளுபவர்கள் பார்ப்பனர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது புனிதமான கடமையானது. திருவிதாங்கூர் அரசுகள் தங்களது அதிகாரத்தையும், செல்வாக்கையும், செல்வத்தையும் பார்ப்பனியத்தைப்பாதுகாக்கப் பயன்படுத்தி வந்தன. மனுதர்மம் எல்லா வகையிலும் பார்ப்பனர்களுடைய மேம்பட்ட நிலையை நிலை நாட்டியது. மற்ற எல்லா வகுப்பாரும் பார்ப்பனர்களின் சேவைக் கென்றே கடவுளால் உண்டாக்கப் பட்டவர்கள் என்ற எண்ணம் மக்கள் மனதில் விதைக்கப்பட்டிருந்தது.

கடவுளர்களின் கோபத்தைத்தணிக்க ஆதிக்கச் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களையே நரபலிக்கு ஆளாக்கினர். எப்பொழுதாவது ஒரு ஆற்றில் அல்லது குளத்தில் கடும் மழையால், புயலால் வெள்ளம் ஏற்பட்டு கரை உடைந்து விட்டால் அதற்கு கடவுளர்களுக்கு ஏற்பட்ட கோபத்தைத்தணிக்க தாழ்த்தப்பட்ட மக்களை உடைப்பில் போட்டு மண்ணைப் போட்டு மூடி பலிகொடுத்தனர்.

1746-ஆம் ஆண்டில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவிற்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்குவதற்காக பார்ப்பனர்களின் ஆலோசனையின் பேரில் தீயர் (ஈழவர்), சாணார் (நாடார்), முக்குலர்(மீனவர்) சாதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகள், புயல் வீசிக்கொண்டிருந்த ஓர் இரவில் பெற்றோர்களிடமிருந்து பிடுங்கப்பட்டு வந்து பார்ப்பனர்கள் நடத்திய பிறகு, மந்திரங்கள் எழுதப்பட்ட செப்புத் தகடுகள் குழந்தைகள் மீது பொருத்தப்பட்டு, அக்குழந்தைகள் உயிருடன் திருவிதாங்கூரின் தலை நகரான திருவனந்தபுரத்தின் நான்கு மூலைகளிலும் திசைகளிலும் புதைக்கப்பட்டனர்.

1749-இல் திருவிதாங்கூர் மன்னர் துலா "புருஷ்தானம்'' என்ற சடங்கை நடத்துமாறு பார்ப்பனர்களால் பணிக்கப்பட்டார். இந்நிகழ்ச்சியில், மன்னரின் எடைக்கு எடைதங்கம், பார்ப்பனர்களுக்கு தானமாகக் கொடுக்கப்பட்து. 1770-இல் மன்னர் மார்த்தாண்ட வர்மாதனது ராச்சியத்தை தங்களது குடும்ப தெய்வமான பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணம் செய்தார். அதன் பின்னர் திருவிதாங்கூரை ஆண்ட பார்ப்பனிய மன்னர்கள் கடவுளின் பிரதிநிதியாகப்பாவிக்கப் பட்டால், அரசுக்கு எதிராக பேசுவது, விமர்சனம் செய்வது, செயல்பட விழைவது "தெய்வ நிந்தனை'' என்றானது.

இதனால் பார்ப்பனர்கள், சத்திரியர்கள், சூத்திரர்கள் (சவர்ணர்கள்) எந்தக் கேள்விக்கும் இடமின்றி அவரவர்களின் அதிகாரத்தின் உச்சிக்கே சென்றனர். பார்ப்பனியத்தின் கொடுங்கோல் ஆட்சி முன்னைவிட திருவிதாங்கூரில் உக்கிரம் பெற்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் பிறரிடமிருந்து அன்பு, நீதி, இரக்கம், கருணை பகிர்வு கொண்ட உண்மையான மனித அரவணைப்பு இவற்றைப்பற்றி கேள்விப் படாதவர்களாக இருந்தனர். மூடநம்பிக்கைகளும் அடிமைச் சிந்தனைகளும், ஆதிக்கப் பண்பாக நிலவிய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பெண்களின், அடித்தள மக்களின் இருப்பும் கேள்விக்குரியதாகவே தொடர்ந்தது.

(கலகத்தை நோக்கி வளரும்)



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com