ஈழத்தமிழர் பிரச்சினை
வைகை
நீரோவின் கதை உண்மையோ இல்லையோ இலங்கை இனவெறித் தாக்குதலில் பற்றி எரிந்து கொண்டிருக்கும் கொடுமையிலும், சிங்கள கோயில்களில் பயிற்சிக்கு என இங்கிருந்து சிலர் செல்வது பற்றிய செய்தியைக் கூறிவிட்டு பற்றி எரியும் வயிற்றுடன் இப்பொழுதுதான் கனிவிழி இல்லம் திரும்ப, உன் மடல், கையில் கிடைத்தது. தமிழர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற நிலையிலான, மனிதநேயமறியாத இவர்களின் வரலாறு. ஆங்காங்கே சற்றே தொய்யினும் மாறாமல் தொடர்கின்றது. ஆனால் தமிழர் பற்றிக் கவலையே படாத தமிழர்களை என்னென்று சொல்வது? நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் இல்லாமல் இனப்பற்று என்று கூட வேண்டாம், மனிதருக்கு மனிதர் என்ற வகையில் கூட இல்லாத நிலைக்கு என்ன காரணம் கூறிப் புழுங்கும் நெஞ்சத்தை அமைதிப்படுத்துவது?
பிரித்தாளும் சூழ்ச்சியால் விழுந்தோம் என்று நோகும் நாம் இப்போது ஒன்றுபட என்ன தடை? தமிழர் என்று கூடப் பார்க்கவேண்டாம், விலை மதிப்பற்ற மனித உயிர்கள் என்ற எண்ணம்கூட இல்லாமல்போனது ஏன்? சிறு துரும்பையும் பற்றிக் கொள்ள வேண்டிய தலைக்கு மேல் வெள்ளம் சூழ்ந்திருக்கும் நெருக்கடியில், உண்மை எது, பொலி எது என இனம் பிரித்துக் காணும் முனைப்பு இன்றி அனைவரின் பேச்சுக்களையும் நம்பி ஆறுதல் கொள்ள வேண்டியுள்ளது. சிறகுகள் முறிக்கப்பட்ட நிலையில் பறந்து சென்று, துன்புற்றோர் கை, பிடித்துத் துணை நிற்பது எங்ஙனம்? நம் கண்ணீரும், கவலையும், அவர்களின் கண்ணீரையும், கவலையையும் போக்குமோ?
உணவுக்கும், நீருக்கும், உடைக்கும், உறைவிடத்துக்கும் தவித்துக் கொண்டிருக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளை மறந்து, இங்கு நாம் வகை வகையான சிற்றுண்டிகள், வண்ண வண்ண உடைகள் என எப்போதும்போல், திருவிழாக்கள்! திருமணங்கள்! இல்லச் சிறப்பு நிகழ்ச்சிகள்! தொலைக்காட்சிக் கூத்துக்கள்! தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும். தசை மரத்துப் போய்விட்டதா? தலைப்பாகை உரிமைக்கு உடனே தலையிட்ட நம் தலைமை அமைச்சர், தலைகள் போகும் கொடுமை கண்டும், உள்நாட்டுப் போர் என ஒதுங்குவது தமிழருக்குத் தரும் மதிப்பா? வங்கத்துக்கு ஒரு நீதி, இலங்கைக்கு ஒரு நீதி என்பது ஏன்? தமிழர் மனிதர் இல்லையா? தமிழரின் உயிர் உயிர் இல்லையா?
அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இங்கு அரசியல் காழ்ப்புணர்வின் வெளிப்பாடுகள்! இவை தமிழரைக் காப்பாற்றுமா? தமிழரைக் காக்கும் மைய அரசின் முயற்சியை விரைவுபடுத்தி வலுப்படுத்தும் நெருக்கடியை உருவாக்குமா? உலகம் நம்மைப் பார்த்து நகைக்காதா? தமிழக அரசு பதவி விலகினால், ஈழத் தமிழருக்குச் சம உரிமை தருவதாக அந்நாட்டு அரசு நிபந்தனை ஏதும் விதித்துள்ளதா? அடுத்து வரும் ஆட்சியாளரிடம் உறுதி அளித்துள்ளதா? என்றுதானே நாட்டின் பெரும் விற்பனையிலும், நூற்றாண்டுத் தொடர்ச்சியிலும் நிலைத்து நிற்கும் செய்தி இதழ்கள், பருவ இதழ்கள் தலையங்கம் எழுத வேண்டும். தலையங்கம் எனத் தலையில்லாத குறை உடலை நடுநிலை என்ற பெயரில் நாற்றமெடுக்கச் செய்கின்றன? அரசுக்கு ஒத்துழைப்பு நல்கினாலே இலங்கையும், இலங்கையை விட அப்பாலிருக்கின்ற தில்லியும் பணியும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய்ப் படிப்பறிவு இல்லாதோரும் உணரும் உண்மை! இதனை அரசியல் கட்சிகள் கண்டு கொள்ளாமை தமிழுக்கும், தமிழருக்கும் செய்யும் பெருங்கேடல்லவா?
இத்தகைய வினாக்களுடன், பிற இயக்கங்கள் போராடாதபோதும், பெண்கள் இவற்றை முன்னிறுத்திப் போராடாத நிலை ஏன் என வினாவியுள்ளாய். இதற்கான விளக்கங்கள் நீ அறியாதவை இல்லை. எனினும் உன் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளாய் என்று அறிவேன். இங்குள்ள பல பெண்கள் அமைப்புக்களில் உள்ளவர்களின் வீட்டு ஆண்கள் ஏதேனும் ஓர் அரசியல் கட்சியைப் சார்ந்தவராகவும், பற்றாளராகவும் உள்ளனர். கட்சி சாராத பெண் அமைப்புக்கள் பெரும்பாலும் பெண்விடுதலை ஒன்றே தமது நோக்கம் என்று கருதுகின்றன. இவ்வாறான நிலையில் இவர்கள் தத்தம் எல்லைகளை விட்டு வர இயலாத சூழல்! நாம் நடக்க நடக்க நம் வழியும் நீண்டு கொண்டே போகின்றது!
குடும்ப பொறுப்புக்கள் என எவையும் இல்லாமையாலும், அவ்வாறு இருப்பினும் அவை நம்முடைய சமுதாய உணர்வுக்கு அடுத்தே இடம் பெறும் என்பதாலும், ஈழத்தமிழரின் அல்லல்களும் அவலங்களும் நீர் வேட்கைக்குத் தண்ணீர் குடிக்கும்போதும், பசிக்குச் மேறுண்ணும்போதும், உறங்கும்போதும் நெஞ்சில் நீங்காது நிறைந்திருப்பதால் கருத்துக்களின் தொடர்ச்சியில் உள்ள இடைவெளியை நீ புரிந்துகொள்வாய் என நம்புகின்றேன் ஏனெனில் நீயும் அங்கு இதே நிலையில்தானே உலவுகின்றாய்.
பிற பின்னர்
அன்புடன்
வைகை
|