Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2006
தடைக்கற்களும்-படிக்கற்களும்
நா.நளினிதேவி

பெண்விடுதலைக்குத் தலையாய, வலுவான தடையாக இருப்பது கற்பு எனப்படும் தொன்மம். பெண் விடுதலைச் சிந்தனையாளரின் கற்புக் கண்ணோட்டத்தை இரண்டு வகையாகக் காணலாம். ஆண்களைப் போன்று கட்டுப்பாடற்ற கற்புரிமை பெண்ணுக்கும் வேண்டும் என்பது ஒரு வகை. ஆணுக்கும், பெண்ணுக்கும் கற்பு பொதுவாக்கப்பட வேண்டும் என்பது மற்றொருவகை. இவ்விரண்டில் எந்த வகையிலான கண்ணோட்டம் பெண் விடுதலையைச் சிறந்ததாகவும் முழுமையான தாகவும் ஆக்கும் என்று ஆராய்தல் வேண்டும்.

கற்பு என்பதற்கு அன்றைய பொருளும் இன்றைய பொருளும் வேறு என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இது உடல் சார்ந்த ஒழுக்கத்தை இன்று குறித்து நிற்கின்றது. வயிற்றுப்பசி, நீர் வேட்கை போன்ற ஒன்றே பாலியல் உணர்வும். ஆகையால் பசிக்கு உணவும் வேட்கைக்குத் தண்ணீரும் விரும்பிய இடத்தில் விரும்பியபோது தேடிக் கொள்வதுபோல் உடல் வேட்கையை தணித்துக் கொள்வதில் தவறில்லை என்ற கருத்து படைப்பாளர்கள் சிலரால் பரப்பப்பட்டு வருகின்றது. முற்றிலும் மாறுபட்ட மேலை நாட்டுப் பண்பாடு வேரூன்றிவிட்ட சூழலில் பாலியல் கட்டுப்பாடு விளைவிக்கும் எதிர்மறை விளைவுகளை எண்ணி இக்கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் கூட அறிவியல், நாகரிகம், பண்பாடு போன்றவற்றின் அடிப்படையில் இக்கட்டுப்பாடு தேவையே என்றும் வலியுறுத்தப்படுகின்றது. எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்கட்குக் கட்டுப்பாடு அற்ற ஒழுக்கம்தானே காரணம்?

பாலியல் உரிமை வேண்டும் என்போர் தொடக்ககாலத் தாய்வழிச் சமுதாய நடைமுறையை எடுத்துக் காட்டுகின்றனர். தாய்வழிச் சமுதாயத்தின் வீழ்ச்சி ஈடும், நேரும் செய்ய முடியாத பேரிழப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், முன்னர் குறிப்பிட்டுள்ளது போன்று உலகம் தலைகீழாக மாறி அறிவியலின் எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் தாய்வழிச் சமுதாயம் உருவாக முடியுமா என்பதைச் சிந்திக்க வேண்டும். தாய்வழிச் சமுதாயத்தின் பிற மாண்புகள் மீண்டும் மலர வேண்டும் என்ற குரல் எங்கேனும் ஒலிக்கின்றதா? பாலியல் உரிமையை மட்டும் வேண்டுவது ஏனோ? இது வால் இழந்த நரியின் கதையை நினைவூட்டுகின்றது. பெண்ணுக்கும் கட்டுப்பாடு இல்லை என்றாகி விட்டால் மனச்சான்றின் உறுத்தல் எதுவும் இல்லாமல் இருக்கலாம் என்பதாகக் கூடக்கொள்ளலாம் அல்லவா?

உடல் சார்ந்த ஒழுக்கம்தான் கற்பு என்றால் ஆணுடல் வேறு பெண்ணுடல் வேறா? கற்பு மீறும் ஒரே தவறைச் செய்யும்போது ஆண் எந்த இழப்பும் இன்றி உலா வரும்போது பெண் மட்டும் சமுதாய இழிவைப் பெறுவதோடு இயற்கையும் சட்டமும் எதிராக இருக்கின்றன. உளவியல் உடலியல் வாழ்வியல் என்னும் அனைத்துக் கோணங்களிலும் இன்னலும் இழப்பும் இழிவும் அடையும் நிலையில் அக்கற்புக் கோட்பாட்டைத் தகர்க்க வேண்டும் என்ற உளவியல் தாக்கமே பெண்கள் கற்பு மீறுவதற்கான காரணமாகும். பேணுமொரு காதலினாலன்றோ பெண்மக்கள் கற்புநிலை தவறுகின்றார் என்ற பாரதியின் பாடலைப் பெண்ணியச் சிந்தனையாளர் ராஜம் கிருஷ்ணன் எடுத்துக்காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

கற்பு என்ற சொல்லுக்கும் பொருளுக்கும் உரிய வரலாற்றை ஆராய்ந்தால் கற்புக்கோட்டையின் அடிக்கல் வெறும் கற்பனை என்பது புலனாகும். தமிழகத்தின் தொன்மை இலக்கணமாகிய தொல்காப்பியம் திருமண வாழ்க்கையைக் களவு, கற்பு எனப்பிரித்து ஊரும் உறவும் அறியாத காதல் வாழ்க்கை களவு என்றும், வெளிப்படையான திருமணம் கற்பு என்றும் கூறுகின்றது. களவு வாழ்க்கையில் பொய்யும் வழுவும் புகுந்தமையால் சாட்சியும் அடையாளமும் கொண்டதாகக் கற்பு வாழ்க்கை அமைந்தது. பின்னர் தோன்றிய இலக்கண நூல்களும் இவ்வாறே கூறுகின்றன.

சங்க இலக்கியத்துள் ஒன்றான கலித்தொகை கற்பெனப்படுவது சொல் திறம்பாமை என்று பாடுகின்றது. சொன்ன சொல் மீறாதிருப்பதே கற்பு என்பது இதன் பொருளாகும். வேற்றுமொழியும் அதன் பண்பாடும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய பின்புதான் கற்பு என்ற சொல்லின் பொருள் மாறியுள்ளது. பதிவிரதை படிதாண்டா பத்தினி, கற்புக்கரசி என்ற வாய்ப்பந்தல் போடப்பட்டது. பெண்களின் ஆற்றலையும் அறிவையும் ஒடுக்கும் வகையில் அவர்களை அடிமைகளாக்கி ஆதிக்கம் செலுத்தவே கற்புச் செங்கோல் உருவாக்கப்பட்டது. பொதுவாக ஆள்பவருக்குச் செங்கோல் என்றால் இங்கு அடிமைகளுக்குச் செங்கோல். தவறினால் மழை பெய்யாது வானம் இடிந்து விழுந்து பூமியே தரைமட்டமாகிவிடும் என்றெல்லாம் மூளைச்சலவை செய்யப்பட்டது. பெண், தன் தனித்தன்மை இழந்து ஆணின் உடைமைப்பொருள் ஆவதற்கு ஆக்குவதற்குக் கண்டு பிடிக்கப்பட்ட நரித்தந்திரம் அல்லது கடவுள் மந்திரமே கற்பு எனலாம்.

இவ்வாறு பெண்ணுக்கு இலக்கணமாகவும் வாழ்க்கையாகவும் கற்பிக்கப்பட்ட கற்பு, பெண்களில் ஒரு சாராருக்குத் தேவையில்லை என்று, தானே விதி செய்து அதற்குக் கடவுள் மற்றும் சமுதாய அறிந்தேற்புப் பெற்றுத் தேவதாசி என்ற சிறப்பு(?) அளித்துக் கடவுளையும் பெண்களையும் இழிவுபடுத்தித் தானும் மலிவில் உயர்வு கண்டது ஆணாதிக்கம். இது ஒன்றே கற்பு என்ற கற்பனைக்குச் சான்றாகும். இன்னும் தலையாய கற்பு, இடையாய கற்பு, கடையாய கற்பு என வகை செய்த பித்தலாட்டம் கற்பின் கற்பனையைத் தகர்த்தெறிகின்றது.
கற்பில் தலை, இடை, கடை என்று இருக்க முடியுமோ? அரைக்கிணறு, கால்கிணறு தாண்டிய வீரமும், பெருமையும்தான் இது!

நன்கு திட்டமிட்டு வகுத்த கற்பின் வரையறையை வள்ளுவராலும் தாண்ட முடியவில்லை என்பதுதான் வருத்தம் தரும் உண்மை. அதனால்தான் திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பதற்கு முன்பு அதில் இடம் பெற்றுள்ள வாழ்க்கைத் துணைநலம், பெண்வழிச்சேறல், வரைவின் மகளிர் போன்ற அதிகாரங்களை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டது. தாய்க்கடவுள் வழிபாடு திட்டமிட்டு நீக்கப்பட்டு ஆண்கடவுள் வழிபாடு கொண்டுவரப்பட்ட நிலையில் தமிழ்க்கடவுளர்களான சிவம் ருத்திரனாகவும் முருகன் ஆறுமுகமாகவும் மாறினர் என்பது பற்றி பெண் சமுதாயம் கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. தமக்கு மட்டும் இல்லாது ஓருருவம் ஒரு பெயர் இல்லாதவன் என்று போற்றிக் கொண்டே இறைவனையும் தம் நிலைக்குத் தாழ்த்தி அவனுக்கும் இரண்டு மனைவியர் உருவாக்கினர்! எந்தப் பெண் கடவுளுக்கும் இம்மாதிரியான கற்பனை ஏன் இல்லை?

பெண்கள் மனதால் வேறு ஆணை நினைத்தால் கூட அது கணவனின் மூன்றாவது கண்ணால் அறியப்பட்டுச் "சாபம்'' பெற்றனர். கணவன் தொழுநோயாளியான போதும், அவன் விரும்பிய வேறு பெண்ணிடம் தூக்கிச் சென்ற மனைவி "மாதிரிப்பெண்'' ஆக்கப்பட்டாள். இதுபோல் கடவுளின் பெயரால் அருவெறுப்பான கதைகள் பெண்களுக்கு வழிகாட்டியாகவும் அறிவுரையாகவும் புனையப்பட்டுப் பெண்களின் சிந்திக்கும் திறன் மழுங்கடிக்கப்பட்டது. மனைவி இருக்க ஆயிரம் காரணங்கள் சொல்லியோ, சொல்லாமலோ கணவன் வேறு பெண்ணை மணக்கும்போது அந்தப் பெண்களிடையே பகையுணர்வு தோன்றி இணைய முடியாத துருவங்களாகின்றனர். ‘சக்களத்தி சண்டை' என இழிவான ஒரு நிலை இன்னும் தொடர்வதற்கு ஆணுக்குரிய கற்புரிமைதான் காரணம். இதே காரணங்களுக்காக மனைவி வேறு ஆணை விரும்பினால் மட்டும் கற்பின் தூய்மை எப்படிக் கெடும்? ஆண் கற்பு, பெண் கற்பு வெவ்வேறா?

இந்த மணித்துளி வரை எய்ட்ஸ் நோய் வராமலிருக்கவும், தொடராமலிருக்கவும் ஆண்களுக்குத் தடை ‘கவசம்' அறிவுறுத்தப்பட்டு, உலகெங்கும் கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகின்றது. எய்ட்சுக்குக் காரணம் பெண்கள் தான் என்ற மாயையும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற நியாயமான, அறிவார்ந்த, பண்பாட்டு முதிர்ச்சியான வழி ஒன்று இருக்கும்போது அதை வலியுறுத்தாமல், கருத்துப் பரப்பல் செய்யாமல் கவசத்தை வலியுறுத்துவது ஆணாதிக்கம் இன்றி வேறேன்னவாக இருக்க முடியும்? அரசியல் முதல் அனைத்தும் அவர்கள் கையில் அல்லவா?

கற்பை வலியுறுத்தும் சமயங்கள், சமயநூல்கள் அனைத்தும் ஆண்களால் எழுதப்பட்டவை. குறிப்பாக இந்து சமயமும், கிறித்துவமும், இசுலாமும் தத்தம் சமயநூல்கள் வலியுறுத்தும் மரபுகள் எவற்றையும் மீறவே இல்லையா? காலத்துக்குப் பொருந்தாதவற்றை உதறித்தள்ள வில்லையா? கற்பு என்ற ஒன்றை மட்டும் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு கதறுவது ஏன்? இந்து சமயத்தின் காவலர்கள் என அறியப்படும் அந்தணர்கள் கடல் கடந்து செல்லக்கூடாது என்று அவர்களின் சமயநூல் விதித்துள்ளது. ஆனால் இன்று கடல் கடந்த நாடுகளில் பெரும் எண்ணிக்கையில் பணியாற்றுபவர்கள் அவர்களே. வட்டி வாங்குதல் பாவம் என்று முகமதியரின் சமயநூல் கூறுகின்றது. ஆனால் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலில் அவர்கள் ஈடுபடவில்லையா? பாவியரையும் மன்னிக்க வேண்டும் என்று கிறித்துவம் கூறுகிறது. பாவியரை மன்னிக்காவிடினும் பாவங்கள் செய்யாமல் உள்ளனரா? கற்பழிப்பு, பணமோசடி, கடுமையான பாவங்களை அச்சமயத் தலைவர்களாக இருப்பவரே செய்வதை நாளிதழ்களில் காண்கின்றோமே! எல்லாம் மாறியபின்பு, தேவைக்கேற்றவாறு மாற்றிக்கொண்ட பின்பு பெண்ணின் கற்பு நிலை மட்டும் மாறக் கூடாது என்றால் அது எத்தனை பெரிய அநியாயம். இந்த ஒரு வகையில் மட்டும் அனைத்துச் சமயங்களும் ஒன்றுபட்டு நிற்கின்றன! கற்பு மோசடியில் விதிவிலக்கு என்று எந்தச்சமயமும் இல்லை.

கற்பு நிலவுகின்ற சமுதாயத்தைக் கட்டியமைத்த காரணிகளாக மேற்கூறியவை அனைத்தும்தான் இருக்கின்றன.
(அடுத்த இதழில்)




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com