Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2006
மதியிடம் கேளுங்கள்...

மத்திய அரசு அறிமுகம் செய்த குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் முதல் குற்றவாளி தமிழ்நாட்டில் - அதுவும் அந்தச் சட்டம் அமுலுக்கு வந்த மறுநாளே கைது செய்யப்பட்டிருக்கிறார். இது சங்கடமானதா? அல்லது பெருமைக்குரியதா?
கலையரசி, நெய்வேலி.

ஆணாதிக்கப் போக்கே உலகெங்கும் நிலைபெற்று உள்ள நிலையில் ஒரு தமிழனுக்கு மட்டும் வந்த சங்கடமாக இதைப் பார்க்க தேவையில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் தமிழ்ப் பெண்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கிறார்கள் - நல்ல தருணங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் - வாய்ப்பு வந்தவுடன் அதனை உரிய முறையில் பயன்படுத்தி உரிமையைத் தக்க வைத்துக் கொள்வார்கள் - என்கிற செய்தி பெருமைக்குரியது தானே? இதுபோன்ற சட்டங்கள் வருவதற்குக் கூட பெண்கள் அமைப்புகளும், பெண்ணியவாதிகளும் கால்நூற்றாண்டுக்குமேல் போராட வேண்டி இருந்தது என்பது தனிக்கதை.

மனைவியின் பெயருக்குப்பின் கணவன் பெயரைச் சேர்த்துக்கொள்வது என்பது தனிமனித உரிமை. அதைக் கொச்சைப்படுத்தி புதிய பெண்ணியம் கட்டுரை வெளியிட்டது சரிதானா?
வள்ளிசேகர், கோவை-14.

தனிமனித உரிமையை அந்தக் கட்டுரை எவ்வாறு கொச்சைப்படுத்தியது என்பதைச் சற்று விளக்கமாக எழுதி இருக்கலாமே! மனித உரிமை என்பதே ஒரு மனிதரின் சுயமரியாதை மற்றும் சுய உரிமை சம்பந்தப்பட்டதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அந்தக் கோணத்தில் பார்த்தால் கூட ஒரு பெண் தனது திருமணத்திற்குப் பிறகு கணவன் பெயரை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவளது சுயத்தை இழப்பதுதானே? பெண்ணின் அடையாளத்தை அழித்தொழிக்க மேலைப்பண்பாடு கைக்கொண்டுள்ள அணுகுமுறை இது. அது மெல்ல மெல்ல இந்தியாவிலும் வேரூன்றி மேல்தட்டுப் பெண்கள் தங்களை அறியாமலேயே அதற்கு அடிபணிந்தும் விட்டார்கள். அதனால்தான் பெண்விடுதலை, பெண்ணுரிமை கோருவோர் கூட தங்கள் பெயருக்குப்பின் தந்தை அல்லது கணவன் பெயரை ஓர் அனிச்சைச் செயல் போல இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நடுத்தர வர்க்கப் பெண்களும் அதனைப் பின்பற்றுவது பெண்ணிய வளர்ச்சியில் மிகுந்த பின்னடைவைத் தந்துவிடும். கணவன் பெயரையோ, தந்தை பெயரையோ தனது பெயருக்குப்பின் சேர்த்துக் கொண்டவர்கள் உடனடியாக அதைக் கைவிட முயற்சி எடுப்பதே சரியான பெண்விடுதலைப் பாதையில் நடைபோடுவதற்கு வழிவகுக்கும்.

அண்மைக்காலமாக ஒரு சில ஆண்கள் தாங்கள் பெயருக்குப்பின் மனைவியின் பெயரைச் சேர்த்துக் கொள்கிறார்களே. இது முன்னேற்றம் அல்லவா?
வளவன், கோவில்பட்டி.


வேண்டாத முன்னேற்றம் இது. வரலாறு எப்போதும் முன்னோக்கி நகர வேண்டும். அதுதான் வரலாற்றுக்கும் பெருமை, பிரச்சினைக்கும் தீர்வு. இயங்கியலின் இலக்கணம் கூட அதுவாகத்தான் இருக்கும்.

பத்திரிகையாளர் ஞாநி மும்பையில் உள்ள பாலியல் தொழிலாளர்களிடம் உடலை விற்றுச் சம்பாதிப்பது ஒழுக்கமானதா? என்று கேட்க அவர்கள் பதிலுக்கு எது ஒழுக்கம்? என்று கேட்டார்களாம். கூடவே "நீங்கள் எல்லோருமே உங்கள் உடலில் உள்ள கை, கால், மூளையைப் பயன்படுத்தி சம்பளம் வாங்குகிறீர்கள். நாங்கள் உடம்பின் மறைக்கப்பட்ட பாகங்களைப் பயன்படுத்தி சம்பளம் வாங்குகிறோம். இதுவும் உடலின் பாகம்தானே? இது விபச்சாரம் என்றால் அதுவும் விபச்சாரம்தான்' என்றார்களாம். இதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு ஞாநி சொல்கிறார்: ‘சில கேள்விகளுக்கு நமது சமூகத்தில் நியாயமான பதில்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தெரிந்தாலும் சொல்ல முடிவதில்லை.' இந்த வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கதா?
-ஜீவா, மறைமலைநகர்.

கேள்விகளைச் சரியானபடி கேட்டால்தானே நியாயமான பதில்களைக் கண்டுபிடிக்க முடியும்? நியாயமான பதில்களைத் தானே எந்த இடத்திலும் துணிச்சலுடன் சொல்லவும் முடியும்? அது முடியவில்லை எனும்போது கேட்ட கேள்வியே சரியில்லை என்பதும் திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது.

இதழாளர் ஞாநியின் கேள்வி இப்படி இருந்திருக்க வேண்டும்: காதலனால், கணவனால், பொறுப்பற்ற தகப்பனால் இந்தத் தொழிலுக்கு வந்தீர்களே! அதேபோன்ற கேடுகெட்ட ஆண்களுக்காகவே ஆடையிட்டு மூடி வைத்திருக்கும் உடல் பாகத்தை திறந்து காட்டிப் பணம் பெறுவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறதா? என்று கேட்டிருக்க வேண்டும். அப்போதுதான் தங்களது "உடல்உழைப்பின்'' அவலத்தை அவர்களால் அழுது தீர்த்திருக்க முடியும்.

தப்பான கேள்வியைக் கேட்டு சரியான பதிலைப்பெற நினைப்பது அல்லது தானே பதிலைச் சொல்ல முனைவது அபத்தமானதாகத்தான் இருக்கும். அபத்தத்தைச் சொல்ல முடியாமல் இருப்பதுவும் நல்லதுதான்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com