Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
டிசம்பர் 2006
சமையலறைகளை ஒழிப்போம்
பூ.மணிமாறன்

மாந்த வாழ்வில் உணவு என்பது இன்றியமையாத அம்சமாக உள்ளது. மாந்த வாழ்வில் மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அடிப்படையான தேவையே. மனிதர்கள் வாழ்வில் உணவுத் தயாரிப்பானது முக்கிய அங்கம் வகிக்கிறது. தமிழர் வாழ்வில் விருந்தோம்பல் என்றொரு அங்கம் உண்டு. இது உணவு தயாரிப்பிற்குத் தொடர்புடைய ஒரு செயல்பாடாக உள்ளது. அத்தகைய விருந்தோம்பல் என்பது ஒரு குடும்பம் சார்ந்த உறவு நிலைப் பாலமாகவும் விளங்குகிறது.

குடும்பம் என்று கூறும்போது அது ஆண், பெண் இணைந்த ஓர் அமைப்பாகும். அத்தகைய அமைப்பில் விருந்தோம்பல் மற்றும் அதன் மூலமான நட்பு பேணல் ஆகிய செயல்கள் நடைபெறுகிறது. இதில் ‘பெண்' என்பவள் வகிக்கும் பாத்திரம் யாது? ஆண் என்பவன் வகிக்கும் பாத்திரம் யாது? என ஆராய வேண்டியுள்ளது.

நமது வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் மேன்மை மிகுந்த பணியில் விருந்தினர்களுக்கான உணவு தயாரிப்பில் பெண் மட்டுமே தனித்து ஈடுபடும் சூழலே காணப்படுகிறது. இதற்கான காரணத்தைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள இயலாது. இதற்கு வரலாற்று ரீதியிலான பின்னணி உள்ளது. மனிதகுல வரலாற்றை எடுத்துக் கொண்டோமானால், அது நமக்குப் பல வியப்புகளையும், திகைப்புகளையும், ஏற்படுத்துவதாகக் காணப்படுகிறது. ஆதிகால ஆண், பெண் இணைந்த வாழ்க்கை முறையானது, பெண் மட்டுமே தலைமைப் பண்பு மிக்கவளாகவும், குடும்ப அமைப்பை வழி நடத்துபவளாகவும், தம் மக்களின் உணவுத்தேவையை நிறைவு செய்யக் கூடியவளாகவும், பொருளீட்டக் கூடியவளாகவும் காணப்படுகிறாள்.

இத்தகைய உயர்வான ஒரு பாத்திரத்தை வகித்தவள் பெண். ஆனால் இடையில் வந்த மதமானது பல்வேறு விதமான ஆதிக்கக் கருத்தாக்கங்களை உள்ளடக்கிய செயல்பாடுகளைத் திணிக்கிறது. அதன் விளைவாக குடும்பம் என்ற அமைப்பிலும், சமூகத்தின் மதக்கோட்பாடுகளின் அடிப்படையிலும் பெண் என்பவள் வீட்டைப் பராமரிக்கக் கூடியவள், உணவு தயாரிப்பவள், கணவனுக்குப் பணிவிடை செய்து மகிழ்விப்பவள், பிறரையும் மகிழ்வித்து அதன்மூலம் தானும் மகிழ்பவள், இத்தகைய பெண் மட்டுமே "கற்பு'டையவள் ஒழுக்கமுள்ளவள் என்று பலவாறான ஒடுக்குமுறைகளை பெண்ணுக்கான தகுதிகள் என்று மதம் நிர்ணயித்துள்ளது. ஆண் என்பவன், பொருளீட்டக் கூடியவன், குடும்பப் பணிகளுக்கு அப்பாற்பட்டவன். ஆனால் குடும்ப உறவுகளை நிர்ணயிக்க அதிகாரம் படைத்தவன். குறிப்பாக சமையலறைப் பக்கம் சிறிது ஓய்வு மாற்றத்திற்காகக் கூட ஒதுங்காதவன். அவனே நல்ல ஆண்மகன். இவை போன்று ஒரு சார்புடைய கருத்தாக்கங்களின் அடிப்படையில் மனித இனத்தில் குடும்பவாழ்வு கட்டமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய குடும்ப வாழ்வில் வீட்டில் சமையலறை ஒரு முக்கிய இடம் வகிக்கறது. சமையல் கூடமானது நமது வீடுகளில் ஒரு கவனிக்கப்படாத இடமாகவே உள்ளது. ஒரு வீட்டில் இரண்டு அறைகள் எவ்வித கவனிப்புமின்றி அலட்சியமாக விடப்படும் அறைகளாக உள்ளன. அவை 1. கழிவறை. 2. சமையலறை. கழிவறை என்பது மறைமுக உறுப்புகளை சுத்தம் செய்யும் இடமாக உள்ளது. முக்கியமான இடத்தில் போதிய வெளிச்சம் தரக்கூடிய விளக்குகள்கூடப் பொருத்தப்படுவதில்லை. சாதாரண குறைந்த மின்னழுத்தம் உள்ள விளக்குகளே பொருத்தப்பட்டிருக்கும். அது போலவே சமையலறையும் காணப்படும். சுத்தமற்று கறைகள் படிந்ததாக இருக்கும். தற்போது நகர்புறங்களில் வசிக்கும் பெண்கள் பலவிதமான நாகரீக வடிவங்களில் ‘தமது' சமையலறைகளை மாற்றிக் கொண்டாலும் சமையல் செய்யும்போது ஏற்படும் ‘உழைப்பு' என்பது உறிஞ்சப் படுவதாகவே உள்ளது.

ஆண்கள் தாங்கள் ஓய்வாக இருக்கும் போது கூட சமையல் பணிகளில் ஈடுபடுவதில்லை. பெண்கள் வீட்டிற்கு வருகை தரும் விருந்தினர்கள் அனைவருக்கும் உணவு தயாரிப்பினை தான் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும் போது கூட பெண்ணே சமையலறையைக் கட்டிக்கொண்டு அழவேண்டிய சூழல் உள்ளது. விருந்தினர்கள், நண்பர்களோடு ஆண்கள் அரசியல் சமூக, பொருளாதார நிகழ்வுகளை, மாற்றங்களைப் பற்றி பேசி மகிழ்வார்கள்.

குழந்தைகள் ஒற்றுமையுடன் விளையாடுவார்கள். ஆனால் பெண் மட்டுமே தனித்து விடப்படுவாள் சமையலறையில். உணவைத் தயாரித்து அனைவருக்கும் படைக்கும் எந்திரமாகவே பெண்ணின் வாழ்க்கை இருக்கிறது. மேலும் உணவு தயாரிக்கும் அப்பெண்ணுக்கு உணவு இருக்கிறதா? இல்லையா? என்று கூடக் கண்டு கொள்ளாமல் உண்டு முடித்து மகிழும் ஆண்களும் உண்டு. ஆக ‘பெண்' என்பவள் சமையலுக்கும், படுக்கைக்கும், பார்த்து ரசிப்பதற்கும், உடன் பேசி மகிழ்வதற்கும் படைக்கப் பட்டவளாகிறாள். முற்போக்குக் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டதாக கூறிக்கொள்ளும் முற்போக்கான ஆண்களே கூட இத்தகைய உணவுத் தயாரிப்பு பணியில் பகிர்வு கொள்வதில்லை. குடும்ப அமைப்பில் காணப்படும் ஆணாதிக்க கருத்தியலின் ஒரு வடிவம்தான் இது.

பெண்களின் இத்தகைய ஒரு சமையலறை உழைப்புச் சுரண்டலுக்கு முடிவுதான் என்ன?

1. குடும்ப வேலைகளில் ஆண்களும், பங்கெடுப்பது. குறிப்பாக ‘சமையல் கலை' தமக்குத் தெரியாது என ஒதுங்காமல் கற்றுக் கொண்டு உதவ முன் வருதல்.

2. ஆண் குழந்தைகளை சமையல் பணிகளில் ஈடுபடுத்துதல், பழக்கத்திற்குக் கொண்டு வருதல்.

3. குடும்பத்தில் நடக்கும் சிறப்பு நிகழ்வுகளில் சமையலறையிலிருந்து, உணவுத் தயாரிப்புப் பணியில் இருந்து பெண்களை விடுவித்து ஆண்களே சமையலறைப் பணியை மேற்கொள்தல்.

4. பெண் விடுதலை பேசி, எழுதிவிட்டுப் போனால் மட்டும் போதாது. குடும்பத்திலிருந்து சமத்துவத்தைத் தொடங்க வேண்டும்.

5. சமையலறைகளை ஒழித்துவிட்டு பொது சமையல் கூடங்களை உருவாக்குவது. அதற்குரிய வழிமுறைகளைப் பரிசீலிப்பது.

குடும்பம் என்ற ஆணாதிக்க அமைப்பை ஒழித்து சமத்துவமான ‘கம்யூன்'கள் வாழ்க்கையை எதிர்கால சமூகம் மேற்கொள்ள வேண்டும் என மார்க்சும் பெரியாரும் விரும்பினர். அத்தகைய சமூக அமைப்பு நமது நீண்டகால லட்சியமாக இருந்தாலும், தற்போது குடும்பத்தை சனநாயகப் படுத்துவது என்ற அடிப்படையில் மேற்கண்ட, சில பணிகளை மனமுவந்து ஆண்கள் செய்தாலே போதும். அது மெல்ல மெல்ல உண்மையான பெண் விடுதலைக்கான பாதையின் வாயிலைத் திறந்து விடும்!



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com