Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruMedicalGeneral
பொது

குடல் அழற்சி - காரணமும் தீர்வும்

அனுமார் வால் தெரியும். குரங்கு வால் தெரியும். குறும்புசெய்யும் குழந்தைகளை சரியான வாலுப்பயல் என்று நாமே பல நேரம் குறிப்பிடுவோம். குரங்கிலிருந்து, மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்த பொழுது, வால் மறைந்து விட்டது. ஆனால் அது இருந்ததற்கான ஆதாரமாக முதுகெலும்பின், அடி எலும்பாக, ஒரு சிறு எலும்பாக வால்பகுதி நீட்டிக் கொண்டிருப்பதை இன்றும் காணலாம். இது போன்று வால்களைப் பற்றியும், வால் எலும்புகளைப் பற்றியும் நமக்கு பலச் செய்திகள் தெரியும்.

இது என்னடா குடல் வால் என்று நினைக்கிறீர்களா? வால் இருக்கிறதோ, இல்லையோ, குடல் வால் இருப்பது உண்மை. மனிதனின் உடலில் பயனற்ற ஒரு உறுப்பாகவும், பல நேரங்களில் தொல்லை கொடுக்கும் ஒரு உறுப்பாகவும் குடல் வால் (Appendix) உள்ளது. அந்த உறுப்பில் உண்டாகும் அழற்சியும், அதன் விளைவுகளும் பற்றி நோக்குவோம். அறிமுகம் : நம் உடலில் குடல் பகுதி, சிறுகுடல், பெருங்குடல் என இரண்டு பகுதிகளாக பிரிந்துள்ளன. சிறுகுடல் நாம் உண்ணும் உணவில் உள்ள அனைத்துச் சத்துப் பொருள்களையும், உறிஞ்சும் தன்மை உடையது. சத்துக்கள் உறிஞ்சப்பட்ட உணவின் மிச்சங்கள் சக்கையாக்கப்பட்டு மலமாக மாறி பெருங்குடலில் சேர்ந்து வெளியேற்றப்படுகின்றன. இந்த சிறுகுடல், பெருங்குடலோடு இணையும் பகுதியில், வால் போன்று ஒரு உறுப்பு (சற்றேழறத்தாழ நம் சுண்டு விரல் அளவில்) இருக்கும். இதையே, குடல் வால் (Appendix) என்கிறோம். அப்பெண்டிக்ஸ் என்ற சொல்லுக்கு இணைப்பு என்று பொருள். குடலோடு இணைந்த இந்த உறுப்புக்கும் அப்பெண்டிக்ஸ் என்றே பெயர். இனி அதில் ஏற்படும் அழற்சி பற்றி காண்போம். குடல் வால் அழற்சி (Appendicitis) குடல்வால் அழற்சி, திடீர் குடல்வால் அழற்சி (Acute Appendicitis) என்றும், நாள்பட்ட குடல்வால் அழற்சி (Chronic Appendicits) என்றும் இரண்டு வகைப்படும்.

திடீர் குடல் வால் அழற்சி: (Acute Appendicitis)

நோய்க் காரணியம்: (Aetiology) இந்நோய் இருபாலருக்கும் வரும். பொதுவாக எந்த வயதில் வேண்டுமானாலும் வரக்கூடியதாக இருப்பினும், பெரும்பாலும் இளைஞர்களுக்கும், சிறு வயதுக்காரர்களுக்குமே அதிக அளவு வருகிறது. இந்நோய் எதனால் உண்டாகிறது என உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், மலம் கெட்டிப்பட்டு குடல்வால் உள் புகுந்து, அதை அடைத்துக் கொள்வதால், அந்த இடத்தில் நோய்த் தொற்றும் (Infection) அழற்சியும் (Inflammationி) உண்டாகலாம். அல்லது சில வகை வைரஸ்களால் இந்நோய் வரலாம்.

நோயின் அறிகுறிகள்: நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திடீரென்று வயிற்றில் வலி தோன்றும். இந்த வலி மிகவும் கடுதையாக இருக்கும், அடி வயிற்றின் (Iliac Regeion) வலது புறத்தில் கடுமையாக இருந்தாலும், தொப்புளைச் சுற்றியும், வயிற்றின் மற்ற பகுதிகளிலும் வலியை உணர முடியும். குமட்டலும், வாந்தியும் உண்டாகும். லேசாக காய்ச்சலோ அல்லது கடுமையான காய்ச்சலோ ஏற்படும். உடனடியாக நோயைக் கண்டுப்பிடிக்காமல் விடும் நிலையில், நோய் குடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும். இந்நிலையில் கடுமையான வயிற்று வலி மேலும் கடுமையாகும். அடிவயிறுப் பகுதி மட்டுமல்லாது வலி முழுமையாக வயிறு முழுவதும் தெரியும். மருத்துவம் செய்யாமல் இந்த நிலையிலும் இருந்தால் நோய்த் தொற்று பரவி, வயிற்றுப் பை அழற்சி (Peritionitis)யை ஏற்படுத்தும். இந்த நிலையிலும் மருத்துவம் செய்யாமல் விட்டால், நோயின் கடுமை அதிகமாகி, குடல் வால் வெடித்து, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும்.

நோயறிதல்:

இந்நோய் பெரும்பாலும் வலி உண்டாகும் இடம், வலியின் தன்மை வாந்தி போன்ற அறிகுறிகளாலேயே அறிப்படுகிறது. சில நேரங்களில் அறிகுறிகள் முழுமையாகத் தெரியாமல் குழப்பம் ஏற்படும். அதுபோன்ற சமயங்களில், ஒலி அலைப் பதிவி (Ultr Sonogram) மூலம் நோயறியலாம். இரத்த பரிசோதனையில், இரத்த வெள்ளணுக்கள் அதிகமாக இருக்கும் சிலருக்கு நோய் அறிகுறிகள் சரியாக தெரியாத நிலையில், குடல் நிணநீர் முடிச்சுகள் அழற்சி போன்றோ, பெண்களாக நோயாளிகள் இருப்பின் கருக்குழாய் அழற்சியாகவோ கூடத் தெரியலாம். ஆனால், ஒலி அலைப் பதிவின் மூலம் பெரும்பாலும் நோயைக் கண்டறிய முடியும்.

மருத்துவம்:

இந்நோய்க்கு பெரும்பாலும் அறுவை மருத்துவமே சிறந்தது. அடி வயிற்றின் வலதுபுறம் திறந்து, குடல் வால் முழுமையாக அகற்றப்படும். நவீன மருத்துவ யுகத்தில் லேப்ராஸ்கோப் (Laprascope) மூலம், வயிற்றில் சிறு துளையிட்டு, அதன் மூலம் குடல் வால் அகற்றம் (Appendicectomy) செய்யப்படுகிறது. நோயாளி உடனே வீட்டிற்கு திரும்பி விடலாம். சற்று மருத்துவச் செலவு அதிகமானாலும், பரவலாக இம்மருத்துவம் தற்சமயம் செய்யப்படுகிறது. சில நோயாளிகளுக்கு அறுவைச் மருத்துவம் செய்ய இயலாத நிலை ஏற்படும். அந்நோயாளிகளுக்கு நுண்ணுயிர் கொல்லிகள் (AntiBiotics) மூலம் மருத்துவம் செய்யலாம். பொதுவாக வயிற்று வலி என்றதும், வீட்டில் உள்ளோர், கை வைத்தியம் செய்கிறேன் என்று விளக்கெண்ணெய் எடுத்து அடிவயிற்றில் தடவி விடுவர். குடல் வால் அழற்சி இதனால் குணமாகாதது மட்டுமல்ல, நோயின் தீவிரம் அதிகமாகி உயிருக்கே ஆபத்து உண்டாகும். கடைசியில் விளக்கெண்ணைக்கும் கேடே ஒழிய, பிள்ளை பிழைத்த பாடில்லை என்ற நிலையே ஏற்படும்.

வேறு சிலரோ, நாமக்கட்டியை உரைத்து அடிவயிற்றில் தடவுவர். கடைசியில் கோவிந்தா, கோவிந்தா என்று கூவும் நிலையே உண்டாகும். சிலர் இது போன்று வயிற்று வலி வந்தவுடன் சூடு என்பார்கள். இது போன்ற மூடநம்பிக்கைகளையும், கை வைத்தியம் போன்றவற்றைத் தவிர்த்து, சரியான மருத்துவத்தின் மூலம் 100 சதவீதம் நோயாளியை குணப்படுத்தலாம்.

நாள்பட்ட குடல் வால் அழற்சி:

சில நேரங்களில் அறுவை மருத்துவம் உடனே செய்ய இயலாத நோயாளிகளுக்கு மருத்துவம் மருந்துகளை உட்செலுத்துவதன் மூலம் மேற்கொள்ளப்படும். அவ்வகை நோயாளிகளுக்கு நோயின் அறிகுறிகள் முழுமையாக மறைந்துவிடும். உடலின் எதிர்ப்புச் சக்தி குறைந்தாலோ அல்லது நோய் தொற்று ஏற்படும் பொழுதோ, நோயின் அறிகுறிகள் மீண்டும் தோன்றும். இந்த நிலை மீண்டும், மீண்டும் தோன்றும் பொழுது, திடீரென்று ஆபத்தான நிலைக்கு நோயாளி சென்றுவிடுவர். அதனால் வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, அறுவை மருத்துவம் மூலம் குடல் வாலை அகற்றி விடுவதே மிகவும் நல்லதாகும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

வாசகர்களின் கவனத்திற்கு...

நீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com