Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
தமிழ்த்தேசக் கதாநாயகர்களும் தமிழ்த்தேச வில்லன்களும்
சேயோன்


தமிழ்த் தேசக் கதாநாயகர்களை யும் வில்லன்களையும் பற்றி அறிந்து கொள்வதற்முன் பொதுவாக ‘கதாநாயகன்’ ‘வில்லன்’ என்கிற சொல்லாடல்களின் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். இச்சொல்லாடல்கள் பற்றிய இயல்பான பொதுக்கருத்து கதாநாயகன் என்பவன் நல்லவன், உத்தமபுத் திரன், வில்லன் இதற்கு எதிரானவன், அடாத செயல்களில் ஈடுபடுபவன், கிராதகன் என்பதுதான். இது பெருமளவு சரிதான் என் றாலும் இதற்கு மாற்றான நிலமைகளும் உண்டு. அதாவது கதாநாயகன் என நம்பப்படுபவன் அடாத செயல் களில் ஈடுபடுவதும் வில்லன் எனப்படு பவன் அவற்றைத் தடுக்க முனைவதும் அதாவது கதாநாயகனே வில்லனாக ஆகி விடுவதும், வில்லன்கள் கதாநாயகனாக ஆகிவிடுவதுமான சந்தர்ப்பங்களும் உண்டு.

கதாநாயகன், நாயகி, வில்லன், வில்லி ஆகிய சொல்லாடல்கள் பெருமளவும் புனைவிலக்கியம், திரைப்படம் சார்ந்தே அதிகம் கையாளப்படுவதால் அவற்றிலிருந்தே இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளை அறியலாம். தொடக்க காலத் தமிழ்த் திரைப்படங்களில் 1960இல் வெளிவந்த ‘அந்த நாள்’. இதில் சிவாஜி கணேசன் கதாநாயகன். ஆனால் செய்ததெல்லாம் வில்லன்தனமான காரியங்கள். சமீபத்தில் வெளிவந்த ‘வெள்ளித்திரை’ திரைப்படம். இதில் பிரகாஷ்ராஜ் கதாநாயகன். செய்வதெல்லாம் வில்லன் தனமான காரியங்கள்.

இப்படி கதாநாயகர்கள் வில்லன் தனமான காரியங்களில் ஈடுபடுவதும், இதேபோல வில்லன்கள் எனப்படுவோர் இடை இடையேயோ அல்லது இறுதியிலோ பல நற்செயல்கள் செய்ததான சம்பவங்களும் நிறைய உண்டு. ஆக, கதாநாயகர்கள் என்பவர்கள் முற்றிலும் உத்தம புத்திரர்களோ, அல் லது வில்லன்கள் எனப்பட்டவர்கள் முற்றிலும் மோசமானவர்களோ அல்ல. அதாவது மனிதர்கள் எனப்படுபவர்களில் எப்படி நூற்றுக்கு நூறு நல்லவர்களும் இல்லை. நூற்றுக்கு நூறு தீயவர்களும் இல்லை. இரண்டும் கலந்தவர்களாகவே இருக்கிறார்களோ, அதேபோல, இவ்விரு பண்புகளிலும் எது மிகையாக இருக்கிறதோ அதை வைத்தே மனிதர்கள் மதிப்பிடப்படு கிறார்களோ அதே போலவேதான் கதாநாயகன், வில்லன் ஆகிய சொல்லாடல்களிலும். இந்த அடிப்படையிலேயேதான் பெருமளவும் நற்செயல்கள் செய்பவர்கள் கதாநாயகர்கள் எனவும், பெருமளவும் தீச்செயல்கள் செய்பவர்கள் வில்லன்கள் எனவும் கருதப்படு கிறார்கள்.

இதில் இன்னொரு கோணமும் உண்டு. அதாவது இந்த நற்செயல்கள் தீச்செயல்கள் என்பதை வரையறுப்பது யார்? பொதுவான கருத்து நோக்கில் நற்செயல், தீச்செயல் என சில வரை யறைகள் இருந்தாலும் நடைமுறையில் அவை யாருக்குப் பயனுள்ளனவாய் அல்லது எதிராக இருக்கின்றன என்பதை வைத்தும் இவை மதிப்பிடப்படுகின்றன. இதனால் ஒரு பிரிவினர்க்கு கதாநாயகராகத் தோன்றும் ஒருவர் இன்னொரு பிரிவுக்கு வில்லனாகத் தெரியலாம். அதேபோல ஒரு பிரிவினர்க்கு வில்லனாகத் தோன்றும் ஒருவர் இன்னொரு பிரிவினர்க்கு கதாநாயகனாகத் தெரியலாம். அதாவது சந்தன வீரப்பன் கதையை நாம் எடுக்கும் போது வீரப்பன் கதாநாயகன். விசய குமார் வில்லன். இதே கதையை அரசு எடுத்தால் விசயகுமார் கதாநாயகன். வீரப்பன் வில்லன். இப்படியே பலதும்.

இந்த அடிப்படையில் தமிழ்த் தேசியத்துக்காகப் போராடுபவர்கள் நமக்குத் கதாநாயகர்கள். ஆட்சியாளர் நோக்கில் வில்லன்கள். அதேபோல தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் நமக்கு வில்லன்கள். ஆட்சியாளர் நோக்கில் இவர்கள்தான் அவர்களுக்குக் கதாநாயகர்கள். ஆனால் இப்படி இவ்வளவு எளிதாக வரையறுத்து விடுவது போல் தமிழ்த் தேசக் கதாநாயர்களோ வில்லன் களோ நமக்குப் புலப்பட்டு விடுவதில்லை. காரணம் தமிழ்த் தேசியக் கதாநாயகர்களது செயல்கள் அனைத்தும் தமிழ்த் தேசியத்துக்கு உகந்ததாகி விடுவதில்லை. ஒரு சில எதிராகப் போவதும் உண்டு. அதேபோல தமிழ்த் தேசிய வில்லன்களது நடவடிக்கைள் அனைத்தும் தமிழ்த் தேசியத்திற்கு முற்றிலும் எதிரானதாகி விடுவதுமில்லை. ஒன்றிரண்டு தமிழ்த் தேசியத்திற்குச் சாதகமான மாற்று விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.

ஆகவே, தமிழ்த் தேசிய கதா நாயகர்கள் எனப்படுபவர்களோ, வில் லன்கள் எனப்படுபவர்களோ அவர்களது பேச்சை, செயலை மட்டும் வைத்து அல்ல, அதன் விளைவுகளையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறார்கள், தீர்மானிக்கப்படவும் வேண்டும் என்பது தெளிவு. இதில் ஒரு காலத்தில் தமிழ்த் தேசிய முகாமில் இருந்து, எதிர் முகாமுக்கு மாற்று முகாமுக்கு போய் விட்டவர்களைப் பற்றி அடையாளம் காண்பதில் ஒன்றும் பிரச்சனையில்லை. அவர்கள் நேரடி கவே எதிர்முகாமில் உள்ளதால் இயல்பாகவே அவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்கள் வில்லன்கள் ஆகிவிடுகிறார்கள்.

ஆனாலும் இவர்களில் சிலர், இப்படி எதிர் முகாமுக்கு வந்ததால் தங்கள் பெயர் கெட்டு விடக் கூடாது என்பதற்காகவோ அல்லது தாங்கள் இருக்கும் முகாமின் போலித் தமிழின அரிதார முகத்திற்கு வண்ணம் சேர்க்கவோ, தமிழின மற்றும் தமிழீழக் கோரிக்கைகளை வைத்துப் போராடுவதாக மக்களுக்கு பயாஸ்கோப் காட்டித் தங்கள் தமிழ்த் தேசக் கதாநாயகப் பாத்திரத்தை, அடையாளத்தைப் பாதுகாக்கவோ தக்க வைத்துக் கொள்ளவோ முயலலாம். இப்படிப்பட்டவர்கள் யார், எவர் என்பதை உண்மையான தமிழ் இன உணர்வாளர்கள் நன்கு அறிவார்கள். உண்மையறியாத அப்பாவிகளும் போலித் தமிழ் இன உணர்வாளர்களும் வேண்டுமானால் இவர்களுடைய நாடகத்தில் மயங் கலாம்.
எனவே, இவர்கள் பற்றியும் பிரச்சனை இல்லை. ஆக பிரச்சனை தமிழ்த் தேசிய முகாமில் இருந்து கொண்டே தமிழ்த் தேசக் கதாநாயகப் பாத்திரம் வகித்து பவனி வந்து கொண்டே தமிழ்த் தேச வில்லன் வேலையைச் செய்து கொண்டிருப்பவர்கள்தான். ஆகவே, இவர்கள் பற்றியே நாம் மிகுந்த எச்சரிக்கையும் கவலையும் கொள்ள வேண்டியிருக்கிறது.

இதில் கதாநாயகர்கள் என்பவர்களின் செயல்கள் நூற்றுக்கு நூறு சரியானவை என்றோ முற்றிலும் நியாயமானவை என்றோ கொள்ள முடியாது. இதில் சரியற்றவை, நியாயமற்றவை எனவும் பல உண்டு என்று முன்னரே குறிப்பிட்ட நிலையிலிருந்து இவற்றைப் பரிசீலிப்போம்.
தமிழ்த் தேச கதாநாயக பாத்திரம் வகிப்பவர்கள் தற்போது என்ன செய்து கெண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேச நலன் சார்ந்த கருத்துகளை மேடையிலே பேசுகிறார்கள். இதழ்களில் எழுதுகிறார்கள், தமிழர்களின், தமிழ்த் தேசத்தின் நலன்களுக்கும் உரிமைகளுக்காகவும் போராடுகிறார்கள். எல்லாம் சரிதான். எல்லாம் நியாயமானதுதான்.

ஆனால், இவர்கள் மட்டுமே பேசி இவர்கள் மட்டுமே போராடி தமிழ்த்தேச உரிமைகளை மீட்டுவிட முடியுமா, தமிழ்த்தேச நலன்களைக் காத்துவிட முடியுமா என்றால் நிச்சயம் முடியாது என்பது கண்கூடு. காரணம் தமிழ்த் தேசியம் என்பது தில்லி பெருமுதலாளிய, பார்ப்பனிய, இந்தி ஆதிக்கத்தை, பன்னாட்டு நிதி, தொழில் மூலதன ஆதிக்கத்தை இது சார்ந்த பிற பல்வேறு ஆதிக்கங்களை ஆகிய அனைத்தையும் எதிர்த்தே போராட வேண்டியுள்ளது. எனவே இவை அனைத்தையும் எதிர்த்துப் போராட வலுவான அமைப்பு தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட வலுவான ஒரு அமைப்பு இல்லாமல் தமிழ்த் தேசியம் எழுச்சி பெற முடியாது. வெற்றி பெற முடியாது.

இப்படிப்பட்ட ஒரு அமைப்பு எவ்வகையில் உருவாக்கம் பெறும். ஒன்று தமிழ்த்தேசியம் பேசும் அமைப்புகள் ஒவ்வொன்றும் தன்னை விரிவாக்கி வளர்த்து வலுப்படுத்திக் கொள்ளலாம். மற்றொன்று இவ் வெல்லா அமைப்புகளும் ஒன்று சேர்ந்து பரந்துபட்ட மக்களைத் திரட்டி ஒரு வலுவான கூட்டமைப்பு உருவாக்கிக் கொள்ளலாம். இப்படி இந்த இரண்டில் ஏதாவதொன்றையோ, அல்லது இரண்டையுமே செய்யாமல், மக்களைத் தமிழ்த்தேசியத்துக்கு ஆதரவாக அணி திரட்ட முடியாது. தமிழ்த் தேசிய உரிமைகளையும் வென்றெடுக்க முடியாது.

ஆனால் இப்போது தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகள் இந்த இரண்டிலும் போதிய, உரிய அக்கறை காட்டுகின்றனவா என்றால் நிச்சயம் இல்லை என்றே சொல்லலாம். மாறாக அதை விட்டு இவர்கள் தமிழ்த் தேசியம் தங்களுக்கு மட்டுமே உரியதென்று அதை கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு வேறு யாரும் அதை அண்ட விடாமல் சொந்தம் கொண்டாடி, உடனிருப்பவர்களையும் விரட்டி விடும் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதாவது தமிழ்த் தேசிய கதாநாயக வேடம் கட்டி ஆடிக் கொண்டே தமிழ்த் தேசிய வில்லன் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றன. இவ்வியக்கங்களின் சமீப ஒரு இருபதாண்டு கால நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு யோசித்துப் பார்க்க இது புரியும். ஒன்று இவ்வமைப்புகள் ஒவ்வொன்றும் இரண்டு மூன்று கூறாக பிளவுபட்டிருக்கும் அல்லது ஒரு அமைப்பு தன் சொந்த அமைப்பிலிருந்தே பலரைக் கழற்றி விட்டிருக்கும். இதுவே கடந்த பத்தாண்டுகளில் நடந்தேறியிருக்கிறது. இதுவன்றி, ஒரு கணிசமாக என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு, ஏதா வது வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா என் றால், அப்படி எதுவும் இல்லை என்பதே பதில்.

ஏன் இப்படி? இதற்குக் காரணமென்ன? தமிழ்த் தேசியம் பேசுவதிலேயே இத்தனை அமைப்புகளுக்கான அவசியம் என்ன? இலக்கு ஒன்றானா லும் அதை அடைவதில் உள்ள மதிப்பீட்டில், வழி முறைகளில் வேறுபாடு இருப்பதனால்தான் ஒவ்வொன்றும் தனித்தனி அமைப்புகளாக இயங்குகின்றன எனலாம். சரி. ஆனால், இந்த அமைப்புகளுக்குள் ஒத்த கருத்துள்ள கோரிக்கைகளே இல்லையா. நிறைய இருக்கின்றன. ஆனால் ஒரு சிலவற்றுள் மட்டுமே கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. மற்றபடி ஒரே கோரிக் கையை அவரவர்களும் தனித்தனியே முழங்குவதோடு சரி. அதாவது ஒவ்வொரு கோரிக்கைக்கும் ஒவ்வொரு போராட் டம். அத்தோடு அதன் கதை சரி. அதாவது பிரச்சினை பாட்டுக்கு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது அது அதற்கும் போராட்டமும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் எதுவுமே தீராது.

அது தமிழ்வழிக் கல்வி பிரச்சினையோ, தமிழ்த்தேச உரிமை சார்ந்த காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட ஆற்று நீர்ப் பிரச்சினைகளோ, மற்ற பொருளியல் பண்பாட்டுப் பிரச்சினைகளோ, இராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சினையோ, அல்லது அண்டையில் போராடும் தமிழீழ மக்கள் பிரச்சினையோ எது வானாலும் சரி இருபது ஆண்டுகளுக்கு முன் என்ன கோரிக்கைகளை வைத்துப் போராடினோமோ அதே கோரிக்கைகளையே இன்றும் அவ்வப்போது வைத்துப் போராடிக் கொண்டிருக்கின்றோம். சரி இதனால் கண்ட பலன்தான் என்ன? இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தால் தமிழ்த் தேசியம்தான் எப்படி உருப்படும்? இதற்கு முடிவுதான் என்ன? இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுதான் எப்போது? காலத்துக்கும் இதே கோரிக்கைகளை வைத்துத் தலை முறைக்கும் போராடிக் கொண்டிருக்க வேண்டியது தானா?

ஆக இதற்கு ஒரே தீர்வு. தமிழ்த் தேச மக்கள் விழிப்படைய வேண்டும். தமிழக மக்கள் ஒன்றுபட வேண்டும். தமிழ்த் தேசிய அமைப்புகள் ஒன்றுபட வேண்டும். தமிழ்த் தேசிய அமைப்புகள் வலுப்பட வேண்டும். இவ் வமைப்புகளின் தலைவர்கள் தங்கள் அமைப்பு முன் வைக்கும் கோரிக் கைகளில் உரிய அக்கறையும் ஆர்வமும் உடையவர்களானால் இதில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் மாறாக என்ன நடக்கிறது? உருவாக்கிய கூட்டமைப்புகள் உடைகின்றன. இருக்கும் தனித்தனிக் கட்சிகளும் உடைகின்றன. இப்படி உடைந்த கட்சிகள் - வேறு எங்கும் எதிர் முகாமுக்குப் போய்விடவில்லை. அவையும் தமிழ்த் தேசியம்தான் பேசிக் கொண்டிருக்கின்றன.

இப்படியிருக்க இந்த அமைப்புகள் இப்படி உடைவதற்குக் காரணம் என்ன? என்பது பற்றி அமைப்பின் பொருப்பாளர்களும் சிந்திக்க வேண்டும்.
இப்படி சிந்திக்க நமக்குத் தோன்றுவது, இவை அனைத்துக்கும் அடிப்படை காரணம் கட்சிகளுக்குள் சனநாயகமின்மை. தலைமைகளின் சர்வாதிகாரப் போக்கு. அதாவது தான் சொல்வது, செய்வது ஒன்றே சரி, மற்றதெல்லாம் தவறு என்று எல்லாவற்றிலும் தன்னையோ, தன் கருத்தையோ மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுத்தும் போக்கு. இப்படிப்பட்ட போக்கே கூட்டமைப்புகள் உடைய, தனித்த அமைப்புகள் பிளவு படக் காரணம் ஆகிறது. இதுவன்றி இதன் ஊற்றாகவும், இதன் தொடர்ச்சியாகவும் பிறப்பெடுக்கும் வேறு சில காரணங்களும் உண்டு. ஆனால், அடிப்படைக் காரணம், சனநாயகமின்மையே. இந்த சனநாய கத்தைத் தமிழ்த் தேசிய அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகளும் பொது வில் ஏற்கும் குறைந்தபட்ச கொள்கைத் திட்டத்தின் - வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ்த் தேசிய அமைப் பில் ஒன்றுபட வேண்டும். தமிழ்த் தேசியப் போராட்டத்துக்கு மக்களை அணி திரட்ட வேண்டும்.
.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com