Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
ஒலிம்பிக் போட்டிகள்

உலக நாடுகளும், தமிழகமும் பொன்.மாயவன்


நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக மக்களின் விளையாட்டுத் திருவிழாவாக கோடிக்கணக்கான மக்களால் கண்டு மகிழப்படும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இந்த ஆண்டு ஆகஸ்டு 8 தொடங்கி 24 முடிய 16 நாட்கள் சீனாவில் கோலாகலமாக நடந்தேறியுள்ளது. இதில் 205 நாடுகளிலிருந்து 10,500 பேர் தங்கக் கனவுகளுடன் கலந்து கொண்டிருக்கின்றனர். விளையாட்டாளர்கள் அன்றி வேடிக்கைப் பிரியர்களையும் வசீகரித்து கட்டிப் போட்ட இந்த ஒலிம்பிக்கில் 302 போட்டிகள் நடந்துள்ளன. இப்போட்டிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த அமெரிக்காவை இரண்டாம் இடத்தில் தள்ளி, முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்திய மக்கள் சீனம். இவ்வாறே உலக நாடுகள் பலவும் அதனதன் தகுதி திறமைக்கேற்ப பல பதக்கங்களை வென்றுள்ளன.

இந்தியாவை விட மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளான உக்ரைன் 27 பதக்கங்களும், ஸ்பெயின் 19 பதக்கங்களும், நெதர்லாந்து 16 பதக்கங்களும் பெற்று தர வரிசைப்பட்டியலில் முதல் 15 நாடுகளில் இடம் பிடித்துள்ளன. மேற்கிந்திய தீவுகளில் ஒரு சிறு பகுதியான ஜமைக்காவில் மக்கள் தொகை மிகவும் குறைவு. அந்த ஜமைக்கா 6 தங்கமும், 3 வெள்ளியும், 2 வெண்கலமும் ஆக 11 பதக்கங்களை வென்றுள்ளது. இத்தனைக்கும் இந்தக் குட்டித் தீவு, நவீன வளர்ச்சியின் எந்தவித முன்னேற்றமும் இல்லாத பின்தங்கிய நாடாகும்.

இப்படியெல்லாம் இருக்க, மக்கள் தொகையில் 115 கோடி தாண்டியுள்ள இந்தியாவிலிருந்து 55 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இது நாடுகள் - மக்கள் தொகை விகிதத்தில் பார்த்தால் மிகக் குறைவே ஆகும். இவர்களும் வில் வித்தை, தடகளம், பாட்மின்டன், குத்துச்சண்டை, படகு வலித்தல், துப்பாக்கி சுடுதல், நீச்சல், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், நவீன பாய்மரப் படகு போன்ற சில குறிப்பிட்ட போட்டிகளில் மட்டுமே பங்கேற்றவர்கள்.

இப்படி பங்கேற்றவர்களும் மூன்றே மூன்று பதக்கங்கள் மட்டுமே வெல்ல முடிந்தது. துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். மல்யுத்தத்தில் சுனில் குமார், குத்து சண்டையில் விஜேந்தர் ஆகிய இருவரும் வெண்கலம் வென்றனர். இதன்மூலம் இந்தியா உலகத்தர வரிசை பட்டியலில் 50-வது இடத்துக்கு வந்துள்ளது.

ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை இந்தியா ஹாக்கி விளையாட்டு மூலம் தான் பதக்கம் பெற்றுள்ளது. கடைசியாக அப்படி பெற்ற பட்டமும் 28 ஆண்டுகளுக்கு முன் 1980 ரஷிய ஒலிம்பிக்கில்தான். இந்த சீன ஒலிம்பிக்கில் ஹாக்கியில் தகுதிச் சுற்றிலேயே வெளியேறி விட்டது. அதற்குப் பிறகு அந்த விளையாட்டிலும் சோபிக்காத இந்தியா, இதுவரை எந்த தனிநபர் போட்டிகளிலும் தங்கம் வென்றதில்லை. அப்படி பெற்ற தங்கப் பதக்கமும் இதுவே முதல் முறையாகும். எனவே, இது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

என்றாலும், இனியாவது இதில் அக்கறை பிறக்குமா என்றால், அதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. இந்த வெற்றி இதோடு சரி என்பதுபோலவே தோன்றுகிறது. காரணம், இதேபோல திறமைகளை வளர்த்து அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனி முத்திரைப் பதிக்க வேண்டுமே என்ற துடிப்போ, ஆர்வமோ ஆட்சியாளர்களிடம் இருக்காது. விளையாட்டுக்கான உட்கட்டமைப்பு பற்றியோ திட்டமோ அதை ஒட்டியச் சிந்தனையோ அறவே கிடையாது. அதனால் நிதி ஒதுக்கீடும் கிடையாது. விளையாட்டில் ஆர்வமாய் வரும் இளைஞர்களிடம் அக்கறைக் காட்ட மாட்டார்கள். அனுசரணையாக நடந்து கொள்ள மாட்டார்கள். இந்த மோமான நடைமுறைதான் இவர்கள் விளையாட்டிற்குத் தரும் மதிப்பு.

தணியாத ஆர்வம் கொண்ட இளைஞர்கள் எப்படியோ முட்டி மோதி விளையாட்டில் சாதித்து இப்படி பதக்கம் வென்று வந்தால், அந்த வீரர்களை தோளில் தூக்கி கூத்தாடுவார்கள். மைய, மாநில அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு பாராட்டுகளையும், பரிசுகளையும் வாரி வழங்கும். போதாக் குறைக்கு பல நிறுவனங்களும் விளையாட்டு ஆர்வலர்களும் பரிசுகளை வழங்கி, தங்கள் பெயர்களை இதில் நிலை நிறுத்திக் கொள்வார்கள்.

வெற்றி பெற்ற வீரர்களை இப்படி பாராட்டுவதையும், பரிசுகள் வழங்குவதையும் நாம் மறுக்கவில்லை. ஆனால் இந்த விளையாட்டு வீரர்கள் யார், இவர்களது பின்னணி என்ன, இவர்கள் எப்படி அரும்பாடுபட்டு இப்படி முன்னணிக்கு வந்தார்கள் என்பது பற்றியெல்லாம் இவர்கள் அக்கறைப்பட மாட்டார்கள். இந்த மூவரில் தங்கம் வென்ற அபினவ் பிந்த்ரா மட்டுமே வசதியானவர். இவரின் தந்தை இமயமலை அடிவாரத்தில் 5 நட்சத்திர உணவகம் கட்டி பரிசாகத் தரப்போகிறார். அந்த அளவுக்குப் பணக்காரர். மற்ற இருவரும் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியவர்கள். வெண்கலம் வென்ற சுனில்குமார் மற்றும் விஜேந்தர் ஆகியோரின் தந்தை இருவருமே பேருந்து ஓட்டுநர்கள். ஏழ்மையான குடும்பங்கள் என்ன சிக்கல்கள், கஷ்டங்களை சந்திக்க நேருமோ அத்தனையும் சந்தித்துள்ளனர்.

சுனில்குமார் தந்தை கிராமத்தில் ஒரு எருமைமாடு வளர்த்து, தினமும் பால் கொண்டு சென்று விற்று தன் மகனை பராமரித்து வந்துள்ளார். விஜேந்தர் வீட்டில் ஒரே ஒரு மிதிவண்டி மட்டுமே இருந்துள்ளது. இதனை ஓட்ட தன் குடும்ப உறுப்பினர்களிடையே கடுமையான போட்டி இருக்கும் என தன் கடந்தக்கால வறிய சூழலைப் பகிர்ந்து கொள்கிறார். இப்படிப்பட்ட சூழலில் தனிப்பட்ட முறையில் போராடி பல்வேறு இன்னல்கள் மத்தியில் உழன்றே இவர்கள் பதக்கம் வென்றுள்ளனர்.

ஆனால் அரசு இப்படி இவர்களை அனாதையாய் விடாமல், மைய, மாநில அரசுகள், தனிப்பட்ட ஆர்வத்தில் விளையாட்டு பயிற்சி எடுக்கும் வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களும் விளையாட்டு வீரர்களின் இடர்களைப் போக்கி, ஊக்கமளிக்க வேண்டும். இப்படிப்பட்ட சீரிய நடவடிக்கை மற்றும் தனிப்பட்ட கவனம் இருந்தால் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்த முடியும்.

இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் மொழி, உணவு, பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் நிலவுவது போல், ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் பாரம்பரிய சிறப்பு விளையாட்டுகளும் உண்டு. இப்படிப்பட்ட விளையாட்டுகளை கண்டறிந்து, அந்தத்த தேசிய இனத்திலும் உள்ள திறமையாளர்களைத் தெரிவு செய்து, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளோடு, அவற்றுக்குள்ள தொடர்பைப் புரிந்து, அவற்றில் அவர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட வழிமுறைகளை கையாள்வதின் மூலமாக ஒரு தேசிய இனம், இயற்கையாகவே தன் இனத்தின் விளையாட்டு வீரர்களின் தனித் திறன்களை வெளிப்படுத்த முடியும். அவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்களாகத் திகழ முடியும். இப்படிப் படிப்படியாக தேறி வருபவர்களை வளர்த்து இந்திய அளவில், பின்பு, உலக அளவில் விளையாட்டுப் போட்டிக்குத் தகுதியுடையவர்களாக உயர்த்த வேண்டும்.

இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் முதல் இடத்தைப் பிடித்த சீனம், பிஜிங்கில் நடத்திய ஒலிம்பிக் விழா தொடக்க விழாவிலும், நிறைவு விழாவிலும் தன் 5000 ஆண்டு முன்பிருந்த பண்டைய சீனத்தில் ஆரம்பித்து எதிர்கால நவீன சீனாவின் கனவுகள் வரை காட்சிகளை விரித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. சீனா தொழில் நுட்பத்தில் எவ்வளவோ முன்னேறியிருந்தாலும், தன் பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத் தது, உலகில் உள்ள ஒவ்வொரு தேசிய இனத்தின் வரலாற்றையும், பண்பாட்டையும் நினைவுப்படுத்துவதாக அமைந்தது. இந்தப் பாரம்பரியப் பெருமிதமே அந்தந்த நாட்டின் பாரம்பரிய விளையாட்டின் பெருமையையும் அதன் மீதான திறமையையும் வெளிப்படுத்த ஊக்கமளிக்கும்.

ஆனால், இந்தியாவில் அப்படிப்பட்ட நிலை இல்லை. சொந்த மண்ணின் விளையாட்டை மறந்து அந்நிய மண்ணின் ஆட்டங்களை நேசித்து, மட்டை பந்து விளையாட்டை, இந்தியாவின் “தேசிய விளையாட்டைப் போல்” முக்கியத்துவம் கொடுத்து, அரசும் தொழில் வணிக நிறுவனங்களும் ஊடகங்களும் விளம்பரப்படுத்தி மக்களின் கவனத்தை ஈர்த்து, போட்டி, பந்தயம், சூதாட்டம் என இளைஞர்களை சீரழித்து வருகின்றன.

இதுபோன்ற மேற்கத்திய விளையாட்டு மோகத்திலிருந்து இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டும். இந்தியாவில் உள்ள தேசிய இனங்களில் அந்தந்த மாநில அரசுகளும் அந்தந்த தேசிய இனத்தின் பாரம்பரியத் திறமைகளை அடையாளம் கண்டு, திறன் மிக்கப் பயிற்சியாளர்களை நியமித்து, ஆர்வமும், துடிப்பும் தகுதியு முள்ள இளைஞர்களுக்கு பயிற்சிக் கொடுத்து விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளையும் உருவாக்க வேண்டும்.

நடந்து முடிந்த ஒலிம்பிக்கில் தமிழ் நாட்டின் பங்கு என்ன? இரண்டே இரண்டு வீரர்கள் மட்டுமே பங் கேற்றனர். இவ்வளவுதான் தமிழ்நாட்டின் தகுதியா? தமிழ்நாட்டில் 6 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் உலக விளையாட்டில் பங்கேற்க இலாயக்கு தகுதி படைந்த விளையாட்டாளர்களே இல்லையா? இவர்கள் அதற்கு அருகதை அற்றவர்களா? இதன் பொருள் என்ன? தமிழகம் இந்தியாவின் ஓர் அங்கமாக இந்திய தேசியத்தால் மறைக்கப்பட்டு, அடையாளம் இழந்து கிடக்கிறது என்பதுதானே.

இதில் தமிழக அரசு, தமிழக அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஆர்வமும், திறமையும் உள்ள விளையாட்டாளர்களை அடையாளம் கண்டு, தகுந்த பயிற்சியாளர்கள் மூலம் அவர்களை வளர்த்தெடுத்து, அடுத்து ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டும். தமிழக வீரர்களும் ஒலிம்பிக்கில் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும். உலக விளையாட்டு அரங்கில் தமிழன் அடையாளம் நிறுவப் பட வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com