Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
பகுத்தறிவின் மூடநம்பிக்கைகள் - தொடர்ச்சி -4
இறை நம்பிக்கை, சடங்குகள், மதம்
சாங்கியன்


இறை நம்பிக்கை : இது முழுக்க முழுக்க ஒரு மனிதனின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்த, உரிமை சார்ந்த ஒரு சேதி. அடுத்த மனிதனுக்கு, சமூகத்துக்கு எந்த வகையிலும் இடையூறு இல்லாத வகையில் இந்த விருப்பு, உரிமை துய்க்கப்படும் வரை இந்த இறை நம்பிக்கையால் யாருக்கும் கேடு ஏதும் இல்லை. ஆகவே பகுத்தறிவு என்பதன் பேரால் இந்த நம்பிக்கையை எதிர்த்து மல்லுக் கட்டிக் கொண்டிருக்கத் தேவையுமில்லை.
காரணம் இந்த நம்பிக்கைகள் வலுவான புறநிலைகளைக் கொண்டவை. மனித வாழ்வோடு சம்பந்தப்பட்டவை.

காடுகளிலும், குகைகளிலும் வாழ்ந்த தொல்கால மனிதன் தொடக்கத்தில் இயற்கையையே வழிபட்டு வாழ்ந்தான். இதற்கு முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று அந்த இயற்கை இயல்பான இயக்கத்தில் அவனது வாழ்வுக்குப் பேருதவி புரிந்தது. அதனால் அவன் பலன் அடைந்தான். மற்றொன்று அதே இயற்கை, இயல்பு மீறும் போது பேருருவாகச் சீறி அவனுக்குப் பேரிடர்களை ஏற்படுத்தியது. அனால் அவன் அந்த இயற்கையைக் கண்டு அஞ்சினான். பஞ்ச பூதங்கள் எனப்படும் நிலம், நீர், விசும்பு, காற்று, தீ என எல்லாவற்றுள்ளும் இப்பண்பினைக் காணலாம்.
இந்நிலையில், தன்னால் கட்டுப்படுத்த இயலாத இயற்கையை, தன் வாழ்வுக்குத் தேவையானவற்றை அருளவும், அவ்வாறே பேரழிவுகளிலிருந்து தன்னைக் காக்கவும் ஆன கோரிக்கை, வேண்டுதல்களிலிருந்து பிறந்ததே இறை நம்பிக்கை, அது சார்ந்த வழி பாடுமுறைகள்.

இன்றைய நவீன அறிவியல் முன்னேற்றத்திலும் மனிதன் இயற்கையை பெருமளவு வெற்றி கொண்டு தன் வாழ்க்கைக்கிசைய அதை மாற்றியமைத்துக் கொண்டதாக கருதுகிற நிலையிலும் இயற்கை வெல்ல முடியாததாக இருக்கிறது என்பதே உண்மை. இன்றைக்கும் நிகழ்கிற ஆழிப் பேரலை, நிலநடுக்கம், சூறாவளிப் புயல், வெள்ளப்பெருக்கு, எரிமலை வெடிப்புகள், நெருப்புப் பிழம்புகள் முதலானவற்றை நோக்க இவற்றை உணரலாம். ஆக, மனிதன் எவ்வளவுதான் அறிவியலில் முன்னேறிய போதிலும், தன் வாழ்வுக்கேற்ப அதை மாற்றியமைத்துக் கொண்ட போதிலும் இயற்கை வெல்ல முடியாததாகவே, அது சார்ந்த அச்சம் மனிதனிடம் நீடித்து நிற்பதாகவே இருக்கும், இருக்கிறது என்பது கண்கூடு.
அதாவது மனிதனுக்கு அப்பால், மனித சக்தியை மீறிய ஏதோவொரு சக்தி - இதை வெறும் மூட நம்பிக்கை என்று வரட்டுத் தனமாய் அல்லாமல் அது அறிவியல் நோக்குடையவருக்கு இயற்கை சக்தியாகவும், ஆன்மீக நோக் குடையவருக்கு இறை சக்தியாகவும் நிலவுகிறது என்பதே யதார்த்தம்.

எனவே, இந்த யதார்த்தம் நிலைக்கும் வரை அது சார்ந்த நம்பிக்கைகளும் நிலைக்கும். அதாவது மனித குலம் உள்ளவரை, இந்த நம்பிக்கையும் இருக்கும். நீடிக்கும் என்பதே உண்மை. சடங்குகள்: இந்த நம்பிக்கையின் அடிப்படையில் மனிதன் ஏதோ ஒன்றை, முதலில் இயற்கையை, அடுத்து மூதாதையர் நினைவை, பிறகு மனித குலத்தின் புனைவிலிருந்து உருவாக்கப்பட்ட ஓவியம், சிற்பம் முதலான இறையுருக்களை - வழிபடத் தொடங்கியதிலிருந்தே, அதையொட் டிய சடங்குகளும் தோன்றுகின்றன. இச்சடங்குகள் முதலில் ஒவ்வொரு கணத்துக்கும், பின்குலத்துக்கும் வெவ்வேறானதாக இருந்து, காலப்போக்கில் இவற்றின் ஒருங்கிணைப்பில் பொதுமைப்பட்டதாக மாற அதையொட்டியே ஒவ்வொரு இறையுருவுக்கும் ஒவ்வொரு விதமான தனித்தன்மை வாய்ந்த வழிபாட்டு முறைகள் தோற்றம் பெற்றன.

இப்படிப்பட்ட பொதுமைப்படுத்தப்பட்ட சடங்குகளே காலத்துக்குக் காலம் ஏற்பட்டு வரும் மாற்றங்களையொட்டி அவ்வக்காலச் சூழலுக்கும் பொருத்தமான வகையில் பின்பற்றப்பட்டும் வருகின்றன. இச்சடங்குகள் பெரும்பாலும் கட்டுத் திட்டமானவை. ஒழுங்கமைக்கப்பட்டவை. குலக்குறி வழிபாடு தொடங்கி, சிறு தெய்வ வழிபாடு, பெருந்தெய்வ வழிபாடு என இது வளர்ச்சி பெற்றதன் ஊடே இச்சடங்கு முறைகளும் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. இறுக்கத்திற்கும் கட்டுத்திட்டத்திற்கும் உள்ளாகியிருக்கின்றன.

முருகன் கோயில், அம்மன் கோயில், சிவன் கோயில், விஷ்ணு கோயில் முதலான பல்வேறு கோயில்களில் நடைபெறும் திருவிழாக்கள், அங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் விதிமுறைகள் அதற்கான சடங்கு, வழிபாட்டு முறைகள் முதலானவற்றை நோக்க இவற்றைப் புரிந்து கொள்ளலாம்.
இதோடு மட்டுமின்றி, இவ்வழிபாட்டு, சடங்கு முறைகளை ஒட்டியே பல்வேறு கலைகள், கூத்து, இசை, நாட்டியம், ஓவியம், சிற்பம் முதலான நாட்டுப்புற மற்றும் செவ்வியல் கலைகளும் தோற்றம் பெற்றன என்பதும் கவனத்திற்குரியது.

மனித குலத்தில் எந்த இறை வழிபாட்டோடும் தொடர்பற்ற தொல்காலக் கலைகள் என ஏதேனும் உண்டா என்று யோசிக்க இது புரியும். அதாவது இக்கலைகள் நவீன கால சமூகத்தில் வேண்டுமானால், இறை வழிபாட்டிலிருந்து தனிப் பிரிந்து ஒரு கலையாக நிலவலாமேயன்றி, இதன் தொடக்கம், ஊற்று இறை வழிபாடே அன்றி வேறல்ல என்பதையும், இவ்விறை வழிபாடு மட்டும் இல்லையென்றால் இன்றுள்ள பல தொல்கலைகள் என்றோ அழிந்து போயிருக்கும் என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

மதம் : நிறுவனமயமாக்கப்பட்ட இறை நம்பிக்கையே மதமாக நிலவுகிறது. செயல்படுகிறது. குலக்குழு வாழ்வில் நிலவி வந்த நம்பிக்கைகள் சடங்கு முறைகளை ஏற்றோ, நிராகரித்தோ, உள்வாங்கியோ, காலத்திற்குத்தக அதைப் பயன்படுத்தியோ மதங்கள் உருப் பெறுகின்றன. இவை பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளாக வரையறுக்கப்பட்டு, அதைக் கடைப்பிடித்து ஒழுகுவதே அம்மதத்தைப் பின்பற்றுவதாகவும், அல்லாது இருப்பது அம்மதத்தில் இல்லாதிருப்பது அல்லது அதற்கு விரோதமானது என்பதாகவுமே ஆக்கப்பட்டிருக்கின்றன. இதனால் ஒவ்வொரு மதமும் அதைத் தோற்றுவித்தவர் மற்றும் அவரது போதனைகளை மையப்படுத்தியே இயங்குகிறது.

இவை பெரும்பாலும் எழுத்து வடிவில் மதப் புனித நூலாக ஆக்கப்பட்டு, அவை கறாராகக் கடைப்பிடிக்கப்பட வற்புறுத்தப்படுகின்றன. கூடவே மதத்தின் தோற்றகார்த்தா முன்மொழிந்த மதத்தத்து வங்கள், கோட்பாடுகள் முறையாகப் பின்பற்றப்பட்டு வருகின்றனவா என கண்காணிக்கவும், ஒழுங்கமைக்கவும் மதத்தலைவர்களும் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்த மதத் தலைவர் அல்லது தலைவர்களின் கருத்துக்கும் வழிகாட்டுதலுக்கும் உட்பட்டும் கட்டுப்பட்டுமே அந்தந்த மதத்திலும் எவரும் இருக்க முடியும். அல்லாமல் இந்த மதங்களில் நிலைக்கவோ நீடிக்கவோ முடியாது என்பது தெளிவு.

இதில் இந்து மதத்திற்கும், பிற மதங்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு, பிற எல்லா மதங்களுக்கும் தோற்றகர்த்தா என்று உண்டு. இந்து மதத்திற்கு அப்படி ஒருவர் கிடையாது. அதேபோல பிற மதங்களுக்கு எல்லாம், அம்மதங்களின் போதனைகளை உள்ளடக்கிய புனித நூல் ஒன்று உண்டு. அதுவே அம்மதத்தவர் அனைவரையும் கட்டுப்படுத்தும். ஆனால் இந்து மதத்திற்கு அப்படி ஒரு நூல் கிடையாது. பகவத்கீதையையும், மனுவையும் சிலர் குறிப்பிடுவார்கள். இது மற்றவர்களாக சாற்றியதுதானே தவிர, மற்றபடி கீதையையோ, மனுவையோ எல்லா இந்துக்களும் ஏற்றுக் கொண்டது கிடையாது. பைபிள் போல, குரான் போல வாரந்தோறுமோ அன்றாடமோ வழிபாட்டுக்குத் தொழுகைக்கு அதைப் பயன்படுத்துவதோ ஓதுவதோவும் கிடையாது. சொல்லப் போனால் அதில் என்ன இருக்கிறது என்றே பெரும்பாலான இந்துக்களுக்குத் தெரியாது.
இப்படி இந்து மதத்திற்கும் பிற மதங்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. அதை பிரிதொரு சந்தர்ப்பத்தில் விரிவாகக் காணலாம். இப்போதைக்கு மதம் என்பது நிறுவனமயமாக்கப்பட்ட ஒன்று. அது இறுக்கமானது. அம்மதம் சார்ந்த அனைவரையும் கட்டுப்படுத்துவது என்கிற அளவில் மட்டும் புரிந்து கொண்டு மேலே செல்லலாம்.

இதுவரை, இறை நம்பிக்கை, சடங்குகள், மதம் ஆகியவை பற்றி சுருக்கமாகப் பார்த்தோம். இங்கு நமக்குக் கேள்வி, பகுத்தறிவாளர்கள், மூட நம்பிக்கை எதிர்ப்பாளர்கள் என்பவர்கள் இவற்றில் எதை எதிர்க்கிறார்கள்? மூன்றையும்தான். காரணம் மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பு டையது, ஒன்றில்லாமல் ஒன்று இல்லை. ஆகவே மூன்றும் எதிர்க்கப்படவேண்டியதுதான் என்று பதில் சொல்லலாம். நியாயம். ஒரு வாதத்துக்கு இப் போதைக்கு இதை ஏற்றுக் கொள்வோம். என்றாலும் இம்மூன்றால் சமூகத்திற்கு என்ன கேடு? ஏன் இவற்றை எதிர்க்க வேண்டும் என்று கேட்டால் ஒன்று மதத்தினால் பகைமைகள், பூசல்கள், வெட்டுக்குத்துகள் நிகழ்கின்றன. அவை மனிதனை வேறுபடுத்துகின்றன. ஆகவே அதை எதிர்க்க வேண்டும் எனலாம். சரி.

சடங்குகள், மனிதனை பல்வேறு மூட நம்பிக்கைகளில் ஆழ்த்துகின்றன. பாலாபிஷேகம், தயிராபிஷேகம், யாகம் என்பதன் பேரால் பெருமளவில் பொருளிழப்பை ஏற்படுத்துவதுடன், சடல் போட்டுக் கொள்ளுதல், வேல் குத்திக் கொள்ளுதல், நெருப்பு மிதித்தல், பக்தர்கள் மண்டையில் தேங்காய் உடைத்தல், குழந்தைகளைக் குழியில் போட்டு எடுத்தல் முதலான சடங்குகள் மூலம் மனித வதையைச் செய்கின்றன. அதை நியாயப்படுத்துகின்றன எனலாம். ஆகவே அதையும் எதிர்க்க வேண்டும். சரி.

இறை நம்பிக்கை. இதுதான் எல்லாவற்றுக்கும் ஊற்றே. இந்த இறை நம்பிக்கையிலிருந்துதான் எல்லா சடங்குகளும் தோன்றுகின்றன. இந்த சடங்குகளை முறைப்படுத்தவும் ஒழுங்கமைக்கவும், கண்காணிக்கவும் தான் மத நிறுவனங்களே இருக்கின்றன. ஆகவே இந்த மூன்றையும் ஒழிக்க முதலில் இறை நம்பிக்கையை ஒழிப்பது தான் எங்கள் முக்கிய வேலையே. அதற்குத்தான் இந்தப் பகுத்தறிவுப் பிரச்சாரமே எனலாம். சரி, இங்கு ஒரு கேள்வி. இறைநம்பிக்கை உள்ள அனைவருமே சடங்காசாரங்கள், மத நிறுவனங்களில் நம்பிக்கை உள்ளவர்கள்தாமா, அதில் முழுமையாக ஈடுபடுபவர்கள்தாமா என்றால் நிச்சயம் இல்லை. காரணம் சடங்காசாரங்கள் செய்யாத மத நம்பிக்கையற்ற ஏராளமான இறை நம்பிக்கையாளர்கள் பலர் உண்டு. இதில் பிற மதங்களை விடுத்து, பகுத்தறிவுவாதிகளால் அதிகமாக சர்ச்சைக்குள்ளாக்கப்படுகின்ற இந்து மதத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

இந்து இறையவர்கள் எனப்படும் சிறு தெய்வம் அல்லது பெருந்தெய்வம் ஏதோ ஒன்றை அல்லது பலதை தன் இறைநம்பிக்கை காரணமாக வழிபடும் ஒருவர் அது சார்ந்த சடங்காசாரங்கள், மதக் கோட்பாடுகளை முறையாகக் கடைப் பிடிக் கிறாரா என்றால் பெரும்பாலும் இல்லை என்பதே பதில். இதற்கு முதல் காரணம், பிற மதங்கள் போல் அவை அன்றாட நிகழ்வாக இவருக்கு இல்லை. இவர் இல்ல விசேட தினங்களில், பண்டிகை நாட்களில் மட்டுமே அது நினைவுக்கு வருகிறது. அப்படியே வந்தாலும் அச்சடங்குகளை எல்லாம் முறையாகச் செய்தீர்களா, கடைப்பிடித்தீர்களா என்று கண்காணிக்க யாரும் இல்லை. அவர்கள் செய்யலாம், செய்யாமலும் போகலாம். இப்படிப்பட்ட ஒரு நிலை இருப்பதால்தான் இந்து இறைய வர்களை வழிபடும் பலர் சடங்குகளைக் கடைப்பிடிக்காதவர்களாக மதக் கோட்பாடுகளைப் பின்பற்றாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

இந்த நிலையில் நாம் எதிர்க்க வேண்டுவது எதை என்பதைப் பற்றி யோசிப்போம். மதம் அதன் கட்டுத்திட்டங்கள் தேவையற்றவை. மனிதன் விரும்பிய இறைவனை விரும்பியவாறு வழிபட உரிமை தராதவை, சனநாயகம் மறுப்பவை, சர்வாதிகாரமானவை. இதனால் சமூகத்தில் பல சிக்கல்கள், பூசல்கள், கலவரங்கள். ஆகவே மதக்கோட்பாடுகளை அதன் சட்ட திட்டங்களை எதிர்க்க வேண்டியது அவசியமானதுதான்.
இதிலும் நாம் கவனிக்க வேண்டியது, இந்தக் கட்டுத்திட்டங்களைத் தளர்த்தி மத வழிபாட்டு முறைகளை சனநாயகப்படுத்தினாலும், அவரவர் கும்பிடும் கடவுள் சார்ந்து அதை அடையாளப்படுத்தவேனும், இந்து, இசுலாமியர், கிறித்துவர் என்னும் அடையாளங்கள் இருக்கும். இந்த அடையாளங்களை அவ்வளவு இலகுவில் அகற்ற முடியாது. எனவே எதிர்க்க வேண்டியது, அகற்றப்பட வேண்டியது மதக்கட்டுத் திட்டங்களே தவிர அடையாளங்கள் அல்ல.

அடுத்தது சடங்குகள், இந்த சடங்குகள் பலவகையிலும் மனிதனை கட்டுப்படுத்துபவை, கட்டாயப்படுத்துபவை, இம்சிப்பவை என்கிற அளவில் இதை எதிர்க்கலாம். இதிலிருந்து மீள வலியுறுத்தலாம். என்றாலும் இவை அனைத்தும்கூட மனிதன் தானாக விரும்பி ஏற்றுக் கொண்டவை. மனமுவந்து அவனாகச் செய்பவை என்பதாக அதிலிருந்து மீள நாம் வலுவந்தமாக கட்டாயப்படுத்தாமல் பக்குவமாக எடுத்துச் சொல்லி அதிலிருந்து மீள வைக்க முயலலாம். அதற்கடுத்தது, இறைநம்பிக்கை, இதிலிருந்து மனிதனை மீட்பது அவ்வளவு எளிதானதல்ல. உடனடியாக மீட்டே ஆகவேண்டும் என்கிற அளவுக்கு இது அவ்வளவு முக்கியமானதும் அல்ல. காரணம் இதில் அவ்வளவு உண்மைகள் பொதிந்துள்ளன. இவை என்ன என்பதை அடுத்து பார்ப்போம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com