Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
ஈழச்சிக்கல் தீர ஒரேவழி!
இராசோ


சமீப சில நாள்களாக ஈழத்திலிருந்து வரும் செய்திகள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளன. சிங்கள ராணுவம் புலிகளின் தலைமை அமைப்புள்ள கிளி நொச்சியை நெருங்கி முற்றுகையிட்டிருப்பதாகவும், புலிகள் தரப்பில் பல போராளிகள் கொல்லப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.என்னதான் இது ஆதிக்க இன வெறி ஆட்சியாளர்களின் புனைவு, பொய் சுருட்டு என்று வர்ணிப்ப தானாலும் இச்செய்திகளை முற்றாகப் புறந்தள்ளி விட முடியவில்லை.

உலகின் வேறு எந்த விடுதலைப் போராட்டமும் சந்தித் திராத எண்ணற்ற கொடுமைகளை, கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாகப் புலிகள் சந்தித்து வரு கின்றனர். அனைத்தையும் தாக்குப் பிடித்து, தீரமுடனும் உறுதியுடனும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். என்றாலும் வேறு எந்தப் பின்புலனும் இல்லாமல் தன்னந்தனியனாக நின்று எவ்வளவு நாளைக்குத்தான் இதைச் சமாளிக்க முடியும் என்பதும் கேள்விக்குரியதாக இருக்கிறது.

ஈழ மண்ணில் பிழைப்புக்காக்ப் புலம் பெயர்ந்து அயல் நாடு சென்றவர்கள், வாழ வழியின்றி இங்கு அகதியாக வந்தவர்கள் போக, எஞ்சி நின்று தாய் மண்ணுக்காக, தாய்நாட்டு விடுதலைக்காகப் போராடுபவர்கள் புலிகள். என்றாலும் போதுமான மனித சக்தி இல்லாமல் இன்னும் எவ்வளவு நாள் தான் அவர்களால் இதைத் தாக்குப் பிடிக்க முடியும் என்பது கலக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இப்படிச் சொல்வதால் புலிகளின் ஆற்றலையோ, நெஞ்சுறுதியையோ குறைத்து மதிப்பிடுவதாகப் பொருள் கொண்டு விடக்கூடாது. நிலைமையை உரியவாறு நாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு, உரிய உதவியை உரிய நேரத்தில் நாம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இது. புலிகளிடம் போதுமான அளவு போராயுதங்கள் இருக்கின்றன. ஆனால் போராளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் முதிர் அகவை எட்டாத இளம் சிறார்களைப் பிடித்து கட்டாயப்படுத்தி வலுவந்தமாக அவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் சிங்கள அரசின் பொய்ப் பிரச்சாரம் என்று சொன்னாலும் முற்றாகவே இதில் உண்மை இல்லை என்று புறக்கணித்து விடமுடியுமா என்பதும் கேள்வியாக இருக்கிறது.

முப்பது ஆண்டுகாலப் போரில் எண்ணற்ற போராளிகளை இழந்த ஒரு இயக்கம் தாய் மண்ணின் விடுதலைக்கு வேறு என்னதான் செய்ய முடியும். சொல்லுங்கள். வெளிநாட்டிலிருந்தா போராளிகளை இறக்குமதி செய்து கொண்டு வர முடியும். சொந்த மண்ணின் மைந்தர்களைக் கொண்டுதானே போராட முடியும். இது உலகம் முழுவதும் உள்ள போராளி இயக்கங்கள் நெருக்கடியைச் சந்திக்கும்போது, கைக் கொள்ள வேண்டி நேரும் இயல்பான நடைமுறைதான்.

இந்த நிலைமை புலிகள் இயக்கத்திற்கு நேர்ந்ததற்குக் காரணம் இந்திய அரசு. அதற்குத் துணை போகும் தமிழக நாற்காலித் தலைவர்கள். நாமும் முப்பது ஆண்டுகளாக ஈழ விடுதலை ஆதரவுப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் என்று நடத்திக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் தில்லி அரசு எதையும் சட்டை செய்வதாக இல்லை. அதுபாட்டுக்கு சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகள் செய்து கொண்டுதான் இருக்கிறது. போர்ப்பயிற்சி அளித்துக் கொண்டுதான் இருக்கிறது. யார் இதை தடுத்து நிறுத்துவது?

ஆக, ஈழத்துக்கு அண்டையிலிருக்கும் இந்திய அரசு ஈழத்துக்கு உதவாது. மாறாக ஈழ மக்களைக் கொன்று குவிக்கும். சிங்கள அரசுக்கு ராணுவ உதவிகள் செய்யும். போர்ப் பயிற்சிகள் அளிக்கும். சரி, இந்தியாதான் அப்படி என்றால் தமிழகமாவது ஈழத்துக்கு உதவலாமா என்றால் அதற்கும் வழி கிடையாது. ஈழப் போராளிகள் தமிழகம் வர முடியாது. தங்க முடியாது. மருத்துவ வசதி பெற முடியாது. இவை, எல்லாவற்றுக்கும் தடை என்பதோடு மட்டுமல்ல, தமிழகத்தில் எங்காவது கொலை, கொள்ளை என்று ஏதாவது சம்பவங்கள் நேர்ந்தால்கூட இதில் புலிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக பூச்சாண்டி காட்டி பரபரப்பு ஏற்படுத்தும் ஊடகங்கள் ஒரு புறம்.

போராளிகள் நிலை இது என்றால், ஈழ மக்களும் இங்கு அகதிகளாய் வந்து கண்ணியமாய் வாழ முடியாது என்கிற நிலை. உலக நாடுகளிலெல்லாம் புலம் பெயர்ந்து வாழும் ஈழ மக்களுக்கு தன் மரியாதையோடு வாழும் வாய்ப்புள்ளபோது சகோதர மண்ணில் தமிழகத்தில் மட்டும் அந்த உரிமை மறுக்கப்படும் நிலை. இத்துடன் இம்மக்களுக்காக அனுதாபம் தெரிவிக்கவோ, கண்ணீர் சிந்தவோ குரல் கொடுக்கவோவும் தமிழக மக்களுக்கு உரிமை மறுக்கப்படும் அவலம்.

அதாவது, தமிழீழத்தைச் சுற்றியும் கடல் பரப்பிலும், தரைப்பரப்பிலும் ஆதிக்க வெறி பிடித்த ராணுவம், கப்பற்படை தமிழீழத்திற்கு எந்தப் பொருளும், ஆயுதம் மட்டுமல்ல, உணவு மற்றும் பிற அவசியப் பொருள்களும் கூட கொண்டு செல்லப்பட முடியாத நிலை. இப்படி சுற்றிலும் முற்றுகை போல நெருக்கடிக்குள்ளாகி ஆதரவற்று தனித்து விடப்பட்ட நிலையில்தான் புலிகள் வாழ்வா சாவா எனப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட கொடுகைகள் நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் இதே காலச் சூழலில் தான் இக்கொடுமைகள் நெருக்கடிகள்பால் ஆழ கவனம் செலுத்தாமல், அதுபற்றிய சீரிய சிந்தனைக்கும் சிக்கலின் தீர்வுக்கும் வழி காண முயற்சிக்காமலும் நாம் மிக மேலோட்டமாக அவ்வப்போது மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் நடத்தி அதிலேயே நிறைவடைந்துக் கொண்டிருக்கிறோம்.

எதுவுமே இல்லாத நிலையில் ஈழ மக்களுக்கு ஆதரவாக இப்படிப்பட்ட மாநாடுகள், ஆர்ப்பாட்டங்களாவது நடைபெறுகிறதே என்பது ஓரளவு மகிழ்ச்சியளிப்பதுதான் என்றாலும், இவை எந்தப் பயனையும் விளைவிக்காமல் ஏதோ நம் மனவிழைவை நிறைவு செய்கிற மட்டத்திலேயே நின்று போகிறதே என்பது ஒருபுறம் இருக்க, இம்மாநாடுகள் ஈழ மக்களின் உண்மையான நிலையை தமிழக மக்களுக்கு உணர்த்தி அவர்களின் ஆதரவையும், சிங்கள இனவெறி அரசுக்கும், அதற்குத் துணை போதும் தில்லி அரசுக்கும் எதிராக கோபாவேசத்தையும் தூண்டுவதற்குப் பதிலாக, பிரபாகரன் பெயரைச் சொல்லியும், புலிகள் வென்றே தீர்வார்கள் என்றும் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்றும் சொல்லியும் மகிழ்ந்து கைதட்டி பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மாவீரன் என்பதிலோ, புலிகள் அமைப்பு ஆற்றலும், நெஞ்சுரமும் அர்ப்பணிப்பும் மிக்க அமைப்பு என்பதிலோ, போர் உத்திகளில் மட்டு மல்ல அரசியல் உத்திகளிலும் புலிகள் தேர்ச்சியும் நிதானமும் மிக்கவர்கள் என்பதிலோ நிகழ்ச்சி வந்திருப்பவர்களில் யாருக்குத்தான் மாற்றுக் கருத்து இருக்க முடியும்?

என்றாலும், நாம் அதை மட்டுமே பேசுவது, உண்மை நிலையை தமிழக மக்கள் உணராமலும், ஈழப் போராட்டத்தில் தாங்கள் ஆற்ற வேண்டிய பங்கை உணர்த்தாமலும், போராட்டத்தின் நெருக்கடியைப் பற்றி அவர்களைச் சிந்திக்க விடாமல் ஈழப் போராட்டம் ஏதோ கிரிக்கெட் விளையாட்டு போல அவர்களை எண்ணச் செய்து எப்படியும் ஈழ அணி வெல்லும் என்பது போல அவர்களை ஆக்கி வைத்து விட்டிருக்கிறது. இதனால் அவர்கள் மாநாடுகள் தோறும், மறக் காமல் தங்கள் கைகளோடு சென்று, கை தட்டும் சந்தர்ப்பங்களுக்காகக் காத் திருந்து அவ்வப்போது தட்டி முடித்து? அத்துடன் தங்கள் கடமை முடிந்தது என்பது போல சென்று கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே போனால் தமிழீழத் தின் கதி, நாளைய அதன் எதிர்காலம் என்ன ஆகும், இதுதான் தற்போது நம் அனைவரது கவலைக்கும், கவனத்திற்கும் உரிய செய்தியாக இருக்கிறது. ஆகவே, இந்நிலையில் நமக்குத் தோன்றுவது, ஈழச் சிக்கலுக்கு ஒரே தீர்வு, ஈழ மக்களுக்கு ஆதரவாக தமிழகமே கொந்தளித்து எழுந்து போராடினால்தான் ஈழ மக்களது விடுதலைப் போராட்டத்துடன் அவர்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் போராட்ட மாகவும், உலக நாடுகளின் கவனத்தைக் கவரும். உலக நாடுகள் பலவும் ஈழத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும். ஈழப் போராட்டத்திற்கு அந்நாடுகள் தரும் ஆதரவில் இந்திய ஆட்சியாளர்கள் அதிர்வார்கள். சிங்கள அரசு நடுங்கும். அப்படிப்பட்ட ஒரு நிலையை உருவாக்குவது தமிழக மக்களின் கைகளில் தான் இருக்கிறது.

சரி, அப்படிப்பட்ட ஒரு நிலை எப்படி உருவாகும்? அப்படி உருவாக நாம் என்ன செய்ய வேண்டும் ? தமிழ்த்தேச மக்களின் நலன் காக்க, தமிழக உரிமைகளை மீட்க, தமிழகக் கட்சிகள் ஒன்றுபட வேண்டியதன் அவசியம் குறித்து கடந்த 21, 22, 23 இதழ்களில் எழுதி வந்திருக்கிறோம். தற்போது அதையே ஈழ சிக்கலுக்கும் பொருத்தி இதுபற்றி சிந்தித்துப் பார்ப்போம்.

ஈழச் சிக்கலுக்குத் தமிழக மக்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்க, போராட, களமிறங்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழி தமிழக கட்சிகள் ஒன்றுபட்டு இதற்குக் குரல் கொடுக்க வேண்டும். ஒன்றுபட்டு இதற்கு அழைப்பு விடுக்க வேண்டும். காரணம், தமிழக மக்கள் என்பவர்கள் தாங்கள் விரும்பியோ, விரும்பாமலோ பெரும்பாலும் ஏதோ ஒரு அரசியல் கட்சியில் இருப்பவர்கள். அதன் உறுப்பினர் அல்லது ஆதரவாளர் அல்லது ஏதோ ஒரு வகையில் அதைச் சார்ந்தவர்கள்.

இதனால் ஈழச் சிக்கல் எல்லாம் தெரிந்தும், அதற்காக தாங்கள் முழு மனதுடன் ஆதரவு தருபவர்களாக இருந்தும் தங்கள் கட்சியே இது குறித்து ஒன்றும் செய்யாதபோது, தாங்கள் மட்டும் என்ன செய்ய முடியும் என்று நினைப்பவர்கள். கட்டளையிடாமல், அழைப்பு விடுக்காமல் அதற்குப் போராட முன் வராதவர்கள். பலர் மறைமுகமாக உதவி செய்வார்களே தவிர, நேரடியாகக் களத்தில் இறங்கித் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்பாத வர்கள். எனவே, இந்நிலையில் அரசியல் கட்சிகளது ஒன்றுபட்ட அழைப்பு ஒன்றே தமிழக மக்களை ஒன்று திரட்ட முடியும் என்பது வெளிப்படை.

சரி, அப்படியானால், எந்தெந்த கட்சிகள் ஈழ விடுதலைக்கு ஆதரவாக நேரடியாக குரல் கொடுக்கும் நிலைப்பாட்டில் இருக்கின்றன. மதிமுக, தி.மு.க.வில் இருந்த நாளிலும் அதிலிருந்து பிரிந்து வந்த நாளிலும் எந்நாளும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் கட்சியாக இருக்கிறது. ஏழு ஆண்டுகள் என்ன 70 ஆண்டுகள் சிறை என்றாலும் சந்திக்கத் தயார் என்று, அன்றும் சரி, இன்றும் சரி என்றும் ஈழத்திற்காக குரல் கொடுக்க அணியமாயிருக்கும் மருத்துவர் இராமதாசு, நிறுவனரைக் கொண்ட பா.ம.க., ஈழம் பற்றி பேசுவதே குற்றம் என்று ஆட்சியாளர்கள் பூச்சாண்டி காட்டிய போதிலும் கருத்துரிமை காக்க மாநாடு நடத்தி களம் கண்ட தொல். திருமாவளவன், பொதுச் செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய மூன்று கட்சிகளும் ஈழ விடுதலைக்கு ஆதரவாக நிற்பவை. தொடர்ந்து குரல் கொடுப்பவை. இவற்றுள் எதுவுமே ஈழ விடுதலைக்கு எதிரானது இல்லை என்பதும் கண்கூடு.

இவை தவிர மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய திராவிடக் கட்சிகளும், இன்றும் பல இடதுசாரித் தமிழ்த் தேசிய அமைப்புகளும் ஈழ விடுதலைக்கு ஆதரவாக நிற்கின்றன. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் எப்போதும் இருக்கிறார்.

ஆக, இப்படி இவ்வளவு தலைவர்கள், அமைப்புகள் தமிழகத்தில் ஈழ விடுதலைக்கு ஆதரவாக இருப்பதும், தமிழகத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவான குரல் ஓங்கி ஒலிக்காததுதான் மிகப் பெரும் சோகம். இந்த சோகத்துக்கு யார் காரணம். இந்தத் தலைவர்களும், அமைப்புகளும் ஒன்றுபடத் தடையாயிருப்பது எது?

இதற்குக் காரணங்கள் பலவாக இருந்தாலும் இவை எல்லாவற்றுள்ளும் முதன்மையானதும், அடிப்படையானதுமான காரணம் தேர்தல் அரசியல், கூட்டணி அரசியல். அவ்வப்போது நிலவும் கூட்டணி சார்ந்து, அதன் உறவுகள் சார்ந்தே இக்கட்சிகள் ஈழ விடுதலை ஆதரவுக் குரலை உரத்து ஒலிக்கவோ, அடக்கி வாசிக்கவோ செய்கின்றன. இந்த நிலை ஏன்? இதற்கு இத்தலைவர்கள் சொல்லும் காரணம்.

நாங்கள் கட்சி நடத்த வேண்டும். எங்களை நம்பி வந்த தொண்டர்களைப் பாதுகாக்க வேண்டும். இதற்காக இந்த அரசியல் கூட்டணி சாகசமெல்லாம் தேவைப்படுகிறது. செய்ய வேண்டியிருக்கிறது என்கிறார்கள். அதாவது அறியாமையிலோ, புரியாமையிலோ அல்லது உண்மை என்ன என்று உணராமலோ நாங்கள் யாரும் இப்படிச் செய்யவில்லை, அறிந்தே தெரிந்தேதான் இதைச் செய்கிறோம், செய்ய வேண்டியிருக்கிறது. சுற்றிலும் சந்தர்ப்பவாத நாற்காலிக் கூட்டணி அரசியல் நடக்கிற சூழலில் நாங்கள் மட்டும் தியாக அர்ப் பணிப்பு அரசியர் பேசினால் கட்சிக்காரர்கள் பலரும் மாற்று அணிக்குப் போய் விடுவார்கள். கூடாரம் காலியாகி விடும். ஆகவே தான் இந்த வித்தைகள் எல்லாம் காட்ட வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

சரி, நியாயம், இவர்கள் சொல்வதெல்லாம் யதார்த்தமே என்பதாகவே வைத்துக் கொள்வோம். சரி, மொத்தக் கட்சியும் மொத்தத் தொண்டர்களுமேவா இப்படி பிழைப்புவாதத்துக்கு ஆட்பட்டவர்களாக, பலியானவர்களாக இருப்பார்களா, இருக்கிறார்களா, என்றால் நிச்சயம் கிடையாது. இருக்க முடியாது. சிலர் இப்படி பிழைப்புவாத நோக்கில் அணி மாறினாலும் கொள்கை உறுதி கொண்ட பலர் நிச சயம் இருப்பார்கள். ஆக அந்த அடிப்படையில்தான் கீழ்க்கண்டுள்ள இந்த மாற்று ஆலோசனையை முன் வைக்கலாம் என்று தோன்றுகிறது.

முதலாவதாக, இந்தக் கட்சிகளின் தலைவர்கள் மிக முக்கியமாக பா.ம.க., மதிமுக, சிறுத்தைகளின் தலைவர்கள், முதலில் தங்களுக்குள் சந்தித்து ஈழச்சிக்கல் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முயற்சிகள், நடவடிக்கைகள் குறித்தும் மனம் விட்டுப் பேச வேண்டும்.
இதில் எந்தக் கட்சியாவது, ஈழப் பிரச்சினையில் களம் இறங்கினால், தங்கள் கூட்டணி நலன் பாதிக்கப்படும், கட்சி பலவீனப்படும் என்று கருதுவதானால், ஒவ்வொரு கட்சியும் முதலில் தங்கள் கட்சிக்குள் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தட்டும். கூட்டணி நலனுக்காக ஈழ விடுதலையைக் கை கழுவுவதா, ஈழ விடுதலைக்காக கூட்டணி நலனை இழப்பதா, அல்லது இரண்டையும் பாதுகாக்க ஏதும் மாற்று வழியுண்டா என்கிற மூன்று கேள்விகளின் அடிப்படையில் இது நடைபெறட்டும்.

சமீபத்தில் ஆனந்த விகடன் இதழ் நடத்திய கருத்துக் கணிப்பிலேயே 55.44 விழுக்காடு தமிழக மக்கள் ஈழ விடுதலைக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று வந்து விட்ட பிறகு கட்சி சார்ந்துள்ளவர்களின் பெரும்பாலோர் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவே இருப்பர் என்று எதிர்பார்க்கலாம். கட்சிக்குள் தன்னல நோக்கிலான லாப வேட்கையோடு இருக்கும் அரிதான சிலர் வேண்டுமானால் இதற்கு எதிராக இருப்பார்களே தவிர, 90 விழுக்காடு கட்சி உறுப்பினர்கள் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவே வாக்களிப்பர்.

ஆகவே, இப்படிப்பட்ட சனநாயக வழிப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பை தலைவர்கள் நடத்தட்டும். இப்படிக் கருத்துக் கணிப்பு நடத்தி அதில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஈழ விடுதலைக்கு ஆதரவு என்று முடிவு செய்தபிறகு, அடுத்து கட்சி செய்ய வேண்டுவதென்ன, அதற்கான கூட்டணியை உருவாக்குவது, போராட்டங்களைத் திட்டமிடுவது தானே.

நாம் மேலே குறிப்பிட்ட கட்சிகள் அனைத்தும் தங்கள் கருத்துக் கணிப்பில் ஈழ விடுதலைக்கு ஆதரவு என்று வந்து விட்ட பிறகு, இதற்கான கூட்டணி அமைப்பதில் என்ன தயக்கம்? இப்படிக் கூட்டணி அமைக்கும் போது நாம் கைக்கொள்ள வேண்டிய நடைமுறை. இந்தக் கூட்டணிக் கட்சித் தலைவர்களில் யாரும் முதன்மையானவரோ, இரண்டாம் பட்சமானவரோ அல்ல. எல்லாம் சமமானவர்களே என்கிற அடிப்படை பாதுகாக்கப்பட வேண்டும்.

எல்லோரும் மனம் விட்டு விவாதித்து ஒத்து வருகிற அனைவரும் ஏற்றுக் கொள்கிற, பொதுக் கோரிக்கை, பொது நடவடிக்கைகளின் அடிப்படையில் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இப்படித் திரண்டு குரல் கொடுக்கும் தமிழக மக்களின் சனநாயகக் கோரிக்கைக்கு தில்லி செவி சாய்க்கவில்லையானால், மறியல், முற்றுகை முதலான போராட்டங்களில் ஈடுபட்டு சிறை நிரப்ப வேண்டியது தான்.

அப்படி ஒரு சிறை நிரப்பும் போராட்டம் தமிழகமெங்கும் வெடித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறை சென்றால், தமிழக ஆட்சியாளர்களும், அதிர்வார்கள், வேறு வழியின்றி தமிழக மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பார்கள். மீறி ஒடுக்கினால் அம்பலப்பட்டுப் போவார்கள். இப்படித் தமிழகமே பொங்கி எழுந்து போராடினால்தான், தமிழகமே இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு முடங்கினால்தான், தில்லி ஆட்சியாளர்களின் அணுகுமுறை மாறும். சிங்களம் அடங்கி ஒடுங்கி பணிந்துவிடும். ஈழச் சிக்கலுக்கும் ஒரு தீர்வு கிட்டும்.

அல்லாமல் நம் மன அரிப்புக்கு அவ்வப்போது ஒரு போராட்டம், பொதுக் கூட்டம், மாநாடு என்று நடத்தி பிரபாகரன் பேரைச் சொல்லியும், புலிகளின் பேராற்றலைச் சிலாகித்தும் பேசி மனம் மகிழ்ந்து கைதட்டி ஆர வாரித்துக் கொண்டிருந்தால் அது போராடும் புலிகளுக்கு எந்த வகையிலும் உதவாது. மாறாக வரலாறு நம்மைத் தூற்றவே செய்யும்.

தமிழக மக்கள் பெரும்பான்மையும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவே இருப்பார்கள். ஆனாலும் அவர்களை ஒருங்கிணைக்க வழி நடத்த கட்சித் தலைவர்கள் இல்லை. அதனால் லட்சக்கணக்கான மக்கள் ஈழ விடுதலைக்கு ஆதரவாக இருந்தும் அவர்களால் ஈழ விடுதலைக்கு எந்த உதவிகளையும் செய்ய முடியவில்லை. இப்படி ஆதரவற்ற நிலையிலேயே, நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே போராடிக் கொண்டிருந்தார்கள். தமிழர்களுக்காக, தமிழக மக்களுக்காக இத்தனைத் தலைவர்கள் இருந்தும் ஒரு தமிழினத்தின் போராட்டத்திற்கு அவர்களால் எந்த உதவியும் இல்லாமல் போனது என்கிற வரலாற்றுக் களங்கம் நம்மீது சுமத்தப்படும். இந்தக் களங்கம் தேவையா நமக்கு? தமிழகத் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். கண் முன்னே ஒரு இனம், நம் தொப்புள் கொடியுறவு அழிவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com