Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
சிறையாளிகள் விடுதலை : சனநாயகத்தின் கோரிக்கையும் சர்வாதிகாரத்தின் வன்முறையும்
சாங்கியன்


தமிழ் இன அமைப்பு சார்ந்தவர்கள், உணர்வாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மனிதநேயப் பற்றாளர்கள் பலரும், இந்த ஆண்டு செப். 15, அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டையொட்டி, ராஜீவ் மறைவு வழக்கில் சம்பந்தபட்டதாக குற்றவாளியாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் எனக் கோரிக்கை வைத்து, கூட்டங்களில் பேசியும், இதழ்களில் எழுதியும் அதை ஆவலோடு எதிர்பார்த்துமிருந்தார்கள்.

ஆனால் இந்த எதிர்பார்ப்பு அனைத்துக்கும் பட்டைநாமம் சாற்றி இந்த நாளையும் வழக்கமான தன் தன்னலவாத அரசியலுக்குச் சாதகமாய், தன் கட்சி நலனுக்குப் பொருத்தமாய் பயன்படுத்திக் கொண்டுள்ளார் தமிழக முதல்வர் கருணாநிதி. இந்த நாளையொட்டி தமிழகம் தழுவி விடுவிக்கப்பட்டுள்ள 1045 பேரில் மதுரை மாமன்ற சி.பி.எம். உறுப்பினராயிருந்த லீலாவதியைப் படுகொலை செய்து, குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்பட்டு, மதுரை சிறையில் அடைபட்டிருந்த மருது, மீனாட்சி சுந்தரம், சோங்கு முருகன் என்கிற 3 குற்றவாளிகளும் அடக்கம்.

குற்றச்செயல் மெய்பிக்கப்பட்டு சிறைப்பட்டிருக்கும் எவரையும் இந்திய குற்றவியல் சட்ட மற்றும் நீதிமன்ற வழி காட்டுதல்களுக்கிணங்க விடுதலை செய்வதை யாரும் வேண்டாமென்று சொல்லவில்லை. அப்படிப்பட்ட கருணை சிறையாளிகளுக்குத் தேவை என்பதே மனித நேயப் பற்றாளர்
மற்றும் மனித உரிமை ஆர்வலர்களது கோரிக்கை. ஆனால் இப்படி விடுதலை செய்யப்படுவது யார் என்பதுதான் கேள்வி. ராஜீவ் மறைவு வழக்கில் ஒட்டு மொத்தமாக மரணதண்டனை விதிக்கப்பட்ட 26 பேரில் மேல் முறையீட்டில் முற்றாக விடுதலை செய்யப்பட்டவர்கள் 19 பேர். மீதமுள்ள 7 பேரில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் நால்வர். நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன். வாழ்நாள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மூவர் ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார்,

மேற்குறித்த நால்வரில் நளினிக்கு மரண தண்டனை தேவையில்லை என சோனியா காந்தியே கூறிவிட்ட பிறகு அவரது தண்டனை வாழ்நாளாக மாற்றப்பட்டு, சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார் அவர். பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலிருக்கிறார். ஆகவே, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கருணாநிதி அதை மறுத்து விட்டார். மரண தண்டனையையே முற்றாக ஒழித்து, எஞ்சியுள்ள மூவரது மரண தண்டனையும் வாழ்நாள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் மனுவையும் கருணாநிதி புறக்கணித்தார்.

வாழ்நாள் தண்டனை பெற்றுள்ள மூவரும், இவர்களும் பதினாறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைப்பட்டிருப்பவர்கள். எனவே இவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அதுவும் நிராகரிக்கப்பட்டு விட்டது. ஆக, இதில் எந்தக் கோரிக்கையையும் ஏற்காமல் சந்தடி சாக்கில் தன் கட்சிக்கு வேண்டியவர்களாகப் பார்த்து, விடுதலை செய்யப்பட்ட 1045 பேரோடு சேர்த்து, லீலாவதி கொலை வழக்கில் சிறைப்பட்டிருந்தவர்களையும் விடுதலை செய்திருக்கிறார் கருணாநிதி.

இதற்கு இவர் சொல்லும் காரணம் வழக்கமான வாய்வீராப்பு சப்பைக்கட்டுதான். சட்டத்திற்கும் பொருந்தாத இயற்கை நீதிக்கும் ஏற்காத சொத்தை வாதம்தான். என்றாலும் அதையெல்லாம் விரிவாக விளக்க இங்கே இடம் போதாது. சுருக்கமாக, 7 ஆண்டு சிறைவாசம் முடித்த வேண்டப்பட்டவர்களெல்லாம் வெளியே விட்டிருக்கிறார்கள். ஆனால் 14 ஆண்டுக்கும் மேலே சிறைவாசம் செய்து வரும் பலர் வேண்டப்படாதவர்களாக உள்ளே இருக்கிறார்கள். இதுதான் தமிழினத் தலைவர் கருணாநிதி தமிழினத்திற்கு மனித நேயத்துக்கு ஆற்றும் தொண்டு.
ஆக இதிலிருந்து தமிழக மக்கள் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். தமிழக முதல்வர் கருணாநிதி தமிழினத் தலைவர் என்பதெல்லாம் சும்மா அலங்கார வார்த்தைகள். ஏமாந்த சோணகிரிகள் வெளிப்படுத்தும் இளித்த வாய்த்தனங்கள். இவரால் தமிழர்களுக்கு தமிழக மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்பது மட்டுமல்ல மாறாக பெரும் இழப்புதான் என்பதையாவது புரிந்து கொள்ள வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com