Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
Manmozhi WrapperManmozhi Logo
செப்டம்பர் - அக்டோபர் 2008
முதலாளிய சனநாயகமும் பாட்டாளிய சர்வாதிகாரமும்
கணியன்


“கம்யூனிஸ்டுகள் தமது கருத்துகளையும் நோக்கங்களையும் மூடி மறைக்க மனம் ஒப்பாதவர்கள். இன் றுள்ள சமுதாயத்தின் நிலைமைகள் யாவற்றையும் பலவந்தமாய் வீழ்த்த வேண்டும். அப்போதுதான் தமது இலட்சியங்கள் நிறைவேறும் என்று கம்யூனிஸ்டுகள் ஒளிவு மறைவின்றி பறைசாற்றுகிறார்கள். கம்யூனிசப் புரட்சி வருகிறதென்று அஞ்சி நடுங்கட்டும் ஆளும் வர்க்கங்கள். பாட்டாளிகள் தங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர இழப்பதற்கு எதுவும் இல்லாதவர்கள். அவர்கள் வெற்றி பெறுவதற்கு அனைத்து உலகும் இருக்கிறது. உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்”.

ஆதிக்க சக்திகளால் பூதம் என அஞ்சப்பட்ட ‘கம்யூனிசம்’ என்னும் மனிதகுல விடுதலைக்கான மாபெரும் தத்துவத்தை முதன்முதலாக உலக அளவில் பிரகடனப்படுத்தி 1848 இல் வெளிவந்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் இறுதி வரிகள் இவை. இந்த அறிக்கை வெளிவந்து இன்றைக்கு 160 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த அறிக்கையை உருவாக்கியவர்கள் எதிர்பார்த்த நாடுகளில் இன்று வரை புரட்சி வெடிக்காவிட்டாலும், இவர்கள் எதிர்பாராத நாடுகளில் இத்தத்துவத்தை அடியொற்றி புரட்சி வெடித்தது.

1917 அக்டோபரில் மாபெரும் ரஷ்யப் புரட்சி வெடித்தது. ஜார் ஆட்சியை வீழ்த்தி சோவியத் ஒன்றியம் உருவாகியது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல கம்யூனிசத்துக்கு மாறின. 1949 இல் மாபெரும் மக்கள் சீனம் மலர்ந்தது. 1959இல் கியூபா கம்யூனிச நாடாகியது. ஆனால், இத்திசையில் உலகில் மேலும் பல நாடுகள் கம்யூனிசப் பாதைக்கு ஈர்க்கப்பட்டு, கம்யூனிச முகாம் மேலும் விரிவடைவதற்கு மாறாக அது பின்னடைவுகளுக்கு உள்ளாகியது.

எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிசப் பதாகையை உயர்த்திப் பிடித்த சோவியத் ஒன்றியம் 1991இல் தகர்ந்தது. 1992இல் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பல முதலாளியப் பாதைக்குத் திரும்பின. எஞ்சி கம்யூனிசத்தைக் கட்டிக் காத்த, காக்கும் நாடுகளும் தங்கள் நாடுகளில் முதலாளியத்துக்கு வழி விட்டன. இதில் 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட மாபெரும் மக்கள் சீனமும் அடக்கம். கம்யூனிசம் என்பது படைப்பாக்கத் திறனுள்ள அறிவியல் பூர்வமான, மனிதகுல விடுதலைக்கான தத்துவம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. என்றாலும் மேலும் வளர்ச்சி பெறவேண்டிய, பல்வேறு நாடுகளிலும் பரவ வேண்டிய ஒரு தத்துவம் இப்படிப்பட்ட பின்னடைவுகளைச் சந்திக்க நேர்ந்தது ஏன் என்பதே இங்கு நமது சிந்தனைக்குரிய கேள்வி.

இதற்குக் காரணங்கள் பலவாக இருந்தாலும், அதாவது உலக வரலாற்று நிலைமைகள், புறச்சூழல், ஏகாதிபத்திய சாகச நடவடிக்கைகள், சதிவேலைகள் எனப் பலவாக இருந்தாலும், இவற்றுக்கு அப்பால் மிக முக்கியமான காரணங்களாக இரண்டைச் சொல்ல வேண்டியிருக்கிறது.
ஒன்று கம்யூனிசத் தத்துவம் உன்னதமாக விளங்குவது போல் அதை நிறைவேற்ற வேண்டிய கம்யூனிஸ்டுகள் உன்னதமானவர்களாக இல்லை. நடைமுறையில் அவர்கள் கம்யூனிசம் சொல்லாததைச் செய்தும், சொன்னதைச் செய்யாமலும் நடந்து கொண்டார்கள்.

இரண்டாவது, கருத்து சுதந்திரத்தை முற்றாக மறுத்து தாங்கள் சொல்வதொன்றே, அதாவது கட்சி சொல்வது, கட்சி ஆட்சி சொல்வதொன்றே சரி, அதுவே சரியான நிலைப்பாடு, இதற்கு அப்பால் மாற்றுக் கருத்து, மாற்று நிலைபாடுகள் என்றெல்லாம் எதுவும் இல்லை. இருக்கக் கூடாது. இருந்தாலும் எல்லாம் தவறு என்றதுடன் அக்கருத்து நிலைபாடுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் முற்றாக மறுத்தார்கள். ஆக இந்த பின்னடைவிற்கு இவை இரண்டுமே முக்கியமான காரணங்களாக அமைந்தன. இதில் முதலாவது சொன்ன கருத்து - அதாவது கம்யூனிசத் தத்துவம் போல் கம்யூனிஸ்டுகளும், கம்யூனிஸ்ட் கட்சியும் உன்னதமாக இல்லை என்கிற குறையை எங்கிருந்து தொடங்குவது? லெனினிடமிருந்தே தொடங்குவதா, ஸ்டாலினிடமிருந்து தொடங்குவதா, போல்ஷேவிக் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து தொடங்குவதா என்பதெல்லாம் நிறைய வரலாற்றுச் சான்றுகளுடனும் ஆவணங்களுடனும் ஆராயப்பட வேண்டிய மிக ஆழமான கேள்விகள். அதுபற்றி ஆராய இப்போதைக்கு இங்கு இடமில்லை.

ஆகவே அந்தப் பணியை பிற மார்க்சிய ஆய்வாளர்களுக்கு விட்டு, சனநாயக நோக்கில் “கருத்து சுதந்திரம்” என்பது பற்றி மட்டும் ஒரு சில சிந்தனைகளை இங்கு முன் வைக்கலாம் என்று தோன்றுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பேராளர்களைக் கொண்டு ஆட்சி நடத்தப்படும் பாராளுமன்ற சனநாயக அமைப்பு, முதலாளிய சனநாயகம் எனப்படுகிறது. அதாவது இது முதலாளிய நலன்களை உள்ளடக்கிய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்டு நடத்தப்படும் ஆட்சி என்பதால் முதலாளிய எனவும், அதேவேளை இது இரு கட்சி அல்லது பல கட்சி ஆட்சி முறையைக் கொண்டுள்ளதால் சனநாயக எனவும், ஆக இரண்டும் சேர்த்து முதலாளிய சனநாயக ஆட்சி முறை எனப்படுகிறது.

இப்படிப்பட்ட முதலாளிய அரசுக்கு மாற்றாக அமைந்திருக்க வேண்டிய பாட்டாளிய அரசு, பாட்டாளி வர்க்க நலனை உள்ளடக்கிய அரசமைப்பை உருவாக்கி, இரு கட்சி அல்லது பல கட்சி ஆட்சி முறையைக் கொண்டு வந்து, முதலாளியம் போலவே மக்களால் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டிய மக்கள் பேராளர்கள் அரசை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். இப்படிச் செய்திருந்தால் அது பாட்டாளிய நலன்களைப் பாதுகாக்கும் சனநாயக அரசாக ‘பாட்டாளிய சனநாயக அரசு’ என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது முதலாளிய சனநாயகத்துக்கு மாற்றாக பாட்டாளிய சனநாயகம் என்கிற வடிவம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் கெடுவாய்ப்பான முறையில் அப்படி அமையாமல், ஒரு கட்சி ஆட்சி முறையைக் கொண்ட ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ என்னும் அரசு அமைக்கப் பெற்றது.

இதன்படி பாட்டாளிய நலன் காக்கும் அரசமைப்புச் சட்டம், அதை நிறைவேற்ற ஒரு கட்சி, அந்தக் கட்சிக்குள் மக்களால் தெரிவு செய்யப்படும் பேராளர்களைக் கொண்ட ஆட்சி. அந்த கட்சிக்கு அப்பால், அதன் கருத்துக்கு அப்பால் மாற்றுக் கருத்து, மாற்றுக் கட்சி என எதுவும் இருக்கக் கூடாது என அதற்குள்ளேயே அனைத்தும் நடை பெறுவதற்கான ஆட்சி முறை கொண்டு வரப்பெற்றது. இந்த ஆட்சி முறையைக் கொண்டு வந்தவர்கள் இதற்கு சொன்ன காரணம், உலகம் முழுவதும் ஏகாதிபத்தியம் ஆதிக்க நோக்கில் செயல்படுகிறது, முதலாளியம் மீண்டும் அதிகாரத்துக்கு வர முயல்கிற, எதிர்ப் புரட்சி சக்திகளைக் கொண்டு பாட்டாளிய அரசைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற முயல்கிற பின்னணியில் இந்த அரசைக் காப்பாற்ற இந்த சர்வாதிகாரம் தேவைப்படுகிறது. பெயரளவில் சர்வாதிகாரமாக இருந்தாலும், இது முதலாளிய, ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளுக்கு எதிரான பாட்டாளிய நலன்களைப் பாதுகாக்கும் நோக்கிலான சர்வாதிகாரம் தானே தவிர, உழைக்கும் மக்களுக்கு எதிரான சர்வாதிகாரம் அல்ல எனச் சொல்லி நியாயப்படுத்தப்பட்டது.

இப்படிப் பாட்டாளி வர்க்க நலன் காக்கும் அதிகாரம் என்பதன் பேரால் அமைக்கப்பெற்ற பாட்டாளிய சர்வாதிகார அரசு, பாட்டாளிய நலன் காப்பு, எதிர்ப்புரட்சிச் சக்திகள் ஒழிப்பு என்பதன் பேரால் நடத்திய கொடுங் கோன்மைகள், நிகழ்த்திய மனித வேட்டைகள் வரலாற்றில் ரத்தக்கறை படிந்த பக்கங்களாகத் தொடர்ந்து கொண்டிருப்பதை மனித நேய ஆர்வலர்கள் பலரும் அறிவர். அந்தப் பட்டியல் பற்றி விளக்குவது இங்கு நமது நோக்கம் அல்ல. இங்கு அது சாத்தியமும் அல்ல. நமக்கு நோக்கமெல்லாம் பாட்டாளிய அரசு கருத்து சுதந்திரத்தை மறுத்தது என்பது மட்டுமே. இதுவே அனைத்துக் கோளாறுகளுக்கும் அடிப்படையாய் அமைந்தது என்பது மட்டுமே.

கருத்து சுதந்திரம் என்பது குறிப்பிட்ட ஒரு நிகழ்வு குறித்து பிரச்சினை குறித்து, தான் என்ன கருதுகிறோம் என்பதை வெளிப்படுத்தும் சுதந்திரம் மட்டும் அல்ல. மாறாக அது தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை அறியும் உரிமையையும் உள்ளடக்கியது ஆகும். தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்பதை ஒரு மனிதன் அறிந்தால்தான் அதுபற்றி தன் கருத்து என்ன என்பதை அவனால் சொல்ல முடியும். தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறது என்கிற உண்மையையே அவனால் அறிய முடியவில்லை என்றால், அவனால் எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது. ஆகவே கருத்து சுதந்திரத்தில் கருத்து வெளியிடும் உரிமையைவிட தகவல் அறியும் உரிமை மிகமிக முக்கியம். இதனால் தான் முதலாளிய அரசுகள்கூட தாங்கள் வகிக்கும் சனநாயகத்தில் தகவல் அறியும் உரிமையை ஒரு வரம்புக்குட்பட்டேனும் சட்டமாக ஆக்கியிருக்கிறார்கள்.

ஆனால் இந்த உரிமையைத்தான் முழுமையாக மறுத்து கருத்து சுதந் திரத்திற்கு வாய்ப்பூட்டு போட்டதுடன் அதன் ஊற்றையே முற்றாக அடைத்தன பாட்டாளிய அரசுகள். இதற்கு தாங்கள் விரும்பும் அனுமதிக்கும் செய்திகள் தவிர, அதையும் தாங்கள் எவ்வாறு கருதுகிறார்களோ, அவ்வாறு மட்டுமே அன்றி எந்த செய்திகளும் வேறு எந்த வகையிலும் எந்த விதமாகவும் வெளி வராமல் பார்த்துக் கெள்ள பத்திரிகைத் தணிக்கை முறையைக் கொண்டு வந்தன பாட்டாளிய அரசுகள். அதாவது சனநாயகத்தின் நான்காவது தூண் என அழைக்கப்பட்ட பத்திரிகைகளை சுதந்திரமாகச் செயல்பட விடாமல் அதை அரசு கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து மக்களை உண்மையறிய விடாமலும், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அரசு அறிய முயலாமலும் கட்டுப்பாடுகள் விதித்து தன்னைத்தானே மக்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டது பாட்டாளிய அரசு. இதனால் மக்களுக்கும் அரசுக்குமான உறவில் இடைவெளி அதிகரித்துக் கொண்டே போக, அரசு மக்களிடமிருந்து தனிமைப்பட்டது. மக்கள் தங்களைச் சுற்றியுள்ள உலகில் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாமல் இருளில் வைக்கப்பட்டனர். எல்லாவற்றிலும் எது பற்றியும் அரசு கூற்று ஒன்றை மட்டுமே மக்கள் அறிய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.

காட்டாக, இந்தியாவில் 1975இல் பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையையும் அதன் கொடுமைகளையும் சோவியத் மக்கள் அறிய முடியாமல், இந்திராகாந்தியும் அவரது நடவடிக்கைகளும் முற்போக்கு என்பதாகச் சித்திரிக்கப்பட்டன. இந்தோ - சோவியத் நட்புறவு என்பதன் பேரால் எல்லா கொடுமைகளும் மூடி மறைக்கப்பட்டு, இந்திரா காந்தி கொண்டு வந்த இருபது அம்சத் திட்டம் சிலாகிக்கப்பட்டது. அப்போது இந்தியாவுக்கு வருகை புரிந்த சோவியத் அதிபர் பிரஸ்நேவ் ‘இந்திரா காந்தியே சோஷலிசப் பாதையில் செல்லும்போது இங்கு எதிர்க் கட்சிக்களுக்கான தேவை என்ன’ என்று விமான நிலையத்தில் இந்திய அரசியல் தலைவர்களைப் பார்த்து கேட்டுமளவிற்கு இந்திய - இந்திரா அரசின் புகழ் பாடப்பட்டது. இந்தக் கொடுங்கோல் அரசை அப்போது மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து நின்றதை எவரும் மறந்துவிட முடியாது.

இப்படிக் கருத்துரிமை மறுக்கப்பட்டதன் விளைவாக 1991 இல் சோவியத் மக்கள் அரசுக்கு எதிராகக் கொந்தளித்து எழ, சோவியத் ஒன்றியம் சிதறித் தனித் தனி நாடுகளாகியது மட்டுமல்ல, கம்யூனிசத்துக்கும் பின்னடைவுகள் ஏற்பட்டன. சோவியத் ஒன்றியத்தின் கதை இப்படி என்றால் மக்கள் சீனத்தின் கதை வேறு மாதிரி. இது ஒன்றியமாக இல்லாமல் ஒரே நாடாக இருந்ததில் கருத்துரிமையை மறுக்கவும், சிறுபான்மைத் தேசிய இனங்களை ஒடுக் கவும், மிகவும வசதியாய்ப் போயிற்று. மக்கள் சீனத்திலிருந்து விடுபட்டு தனி நாடாக அமைய திபெத் மக்கள் நடத்தி வரும் போராட்டங்களும், அதை சீன ராணுவம் ஈவிரக்கமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருவதும், சமீபத்தில் நடந்த போராட்டத்தில் எவ்வளவு பேர்தான் இறந்தார்கள் என்கிற தகவல் கூட வெளி வரமுடியாமல் இருப்பதும் பலரும் அறிந்த செய்தி.

இதற்கு சிலகாலம் முன்பு அரசின் சர்வாதிகார நடவடிக்கைகளை எதிர்த்து 1989இல் தியானன்மென் சதுக்கத்தில் சனநாயகத்துக்காக போராடிய மாணவர்களை கொடூரமாக அடக்கி ஒடுக்கியது சீன அரசு. அதற்கு முன்பும், பின்பும், இன்றுவரையும் கூட மக்கள் சீனத்தில் அரசின் அடக்குமுறை தொடர்கிறது. இன்று உலகிலேயே அதிகம் மனித உரிமைகள் மீறப்படும் நாடு சீனாவே எனப்படுகிறது. இப்படிப்பட்ட அடக்கு முறைகளுடன் அங்கு பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்களும் பெருகியுள்ளன. இக்குற்றச் செயல்களுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. எனினும் பத்திரிகைத் தணிக்கை என்பதன் பேரால் இவை வெளியுலகு அறிய முடியாமல் தடுக்கப்படுகின்றன. தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதையொட்டி பத்திரிகைத் தணிக்கை முறையைச் சற்றுத் தளர்த்தி தற்காலிகச் சுதந்திரத்தை வழங்கப் போவதாக சீன அரசு அறிவித்துள்ளது. இந்த சுதந்திரம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது நடைமுறையிலேயே தெரியும். கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் நாடுகளில்தான் இப்படிப்பட்ட அடக்கு முறை என்றால் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மாநிலங்களிலும் இதே நிலைதான்.

மேற்கு வங்க நந்திகிராமம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. நந்தி கிராமத்தில் என்ன நடந்தது என்பதை நாடறியும். இந்திய முதலாளிய சனநாயகம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் அடிப்படையில் தான் நந்தி கிராமத்தில் என்ன நடந்தது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறதே தவிர, மேற்குவங்கம் இந்தியாவில் ஒரு மாநிலமாக அல்லாமல் தனியொரு கம்யூனிச நாடாக இருந்திருந்தால் அங்கு என்ன நடந்தது என்கிற உண்மைகள் வெளிவந்திருக்க முடியுமா. அவற்றை நாம் அறிந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. முதலாளியக் கட்டமைப்பு, லஞ்ச லாவண்யம், ஊழல், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், வேண்டப்ப ட்டவர்க்கு சலுகை செய்தல், கொலை, கொள்ளை, வன்முறைகள் மலிந்தது தான் என்றாலும், நிர்வாகத்திடம் நீதி கேட்டு அதைப் பெறமுடியாத ஒரு குடிமகன் நீதிமன்றம் செல்ல, அதற்கான இலவச சட்ட உதவியைப் பெற, அடிப்படைச் சனநாயக உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள இதில் வாய்ப்பிருக்கிறது. இது முற்றாக நூற்றுக்கு நூறு வாய்க்குமா என்பது கேள்வி யானாலும், ஒரு 80 விழுக்காடு 90 விழுக்காடு வாய்ப்பு உண்டு. முதலாளிய சனநாயகம் வழங்கும் இந்த உரிமைகளை, பாட்டாளிய சர்வாதிகாரம் வழங்குமா?

முதலாளிய சனநாயகத்தில், ஊழல் அதிகாரிகள் மீது, அமைச்சர்கள் மீது மக்கள் நடவடிக்கை கோரலாம். வழக்குத் தொடுக்கலாம். அவர்களைச் சிறையிலடைக்கச் செய்யலாம். பதவிக் காலப் பிரதமரோ, பதவி முடிந்த பிரதமரோ எவரானாலும் அவரது கொலையில் சம்மந்தப்பட்டுள்ளதாக கருதப்படுபவர்கள் நீதிமன்றம் செல்லலாம். கீழமை நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். விடுதலை பெறலாம். உயிர்ப் பறிப்பு தண்டணையிலிருந்து விடுவிப்பு கோரி கருணை மனு தரலாம். இப்படிப்பட்ட உரிமைகள் எல்லாம் பாட்டாளிய சர்வாதிகாரத்தில் கிட்டுமா என்றால் நிச்சயம் கிட்டாது. எந்த நடவடிக்கையும் அரசாகப் பார்த்து எடுப்பதோடு சரி. மக்களாக ஆட்சியாளர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எடுத்தாலோ, எடுக்க முயன்றாலோ கடும் விளைவுகளும் கொடும் தண்டனையும்தான் பரிசாகக் கிடைக்கும்.

ஆட்சியிலிருக்கும், அதிகாரத்திலிருக்கும் கட்சிகள் தான் இப்படி என்று இல்லை. தத்தனோட்டு பிசுக்கு போல இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும்கூட இதே போக்கையே கடைப்பிடித்து வருகின்றன. ஏதோ தாங்களே மக்களைக் காத்து இரட்சிக்க அனுப்பப்பட்ட தேவ தூதர்கள் போலவோ, தங்களுக்கு மட்டுமே அந்த உரிமை உள்ளது அல்லது தங்கள் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே மக்கள் நல்வாழ்வு பெறமுடியும் என்பது போலவோ இவை தங்கள் நிலைபாடுகளைத் தாண்டி, தங்கள் நடவடிக்கைகளைத் தாண்டி வேறு ஒரு நிலைப்பாடு, நடவடிக்கைகளே இருக்கக் கூடாது என்று கருதுகின்றன. இதுவே பிறகு - ஒரு கட்சி சர்வாதிகாரத்திற்கும் இட்டுச் செல்கின்றன. இவை அனைத்தும் பாட்டாளி வர்க்க நலக்காப்பு என்பதன் பேரால் நிகழ்த்தப் படுகின்றன.

அரசியல், சமயம், சார்ந்த எந்த ஒரு தத்துவமும், சித்தாந்தமும் மக்கள் நலன் காக்க, மனித நேயம் காப்பதற்காகவே, இந்த மக்களைப் புறக்கணித்த, மனித நேயத்தை புறக்கணித்த எந்த தத்து வத்தாலும் மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது. அப்படிப்பட்ட தத்துவம் மக்களுக்குத் தேவையுமில்லை. ஆனால் இந்த மக்களையும், மனித நேயத்தையும் பாதுகாக்க வேண்டிய கம்யூனிசத் தத்துவத்தைத் தான் அதன் சாரத்தைப் புறக்கணித்து, அதை வெறும் வரட்டுக் கோட்பாடு நோக்கில் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்களாக, அதற்கு மக்களைப் பலி கொடுப்பவர்களாகவே பெரும் பாலான கம்யூனிஸ்ட்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலை மாறவேண்டும். முதலாளிய சனநாயகத்துக்கு மாற்றாக அமையும் பாட்டாளிய அரசு அதைவிட கூடுதல் சனநாயகத்தை வழங்குவதாக அமைய வேண்டுமேயல்லாது இருக்கும் சனநாயக உரிமைகளையே பறிமுதல் செய்வதாக ஆகிவிடக் கூடாது. ஆகவே, பலகட்சி ஆட்சி முறையைக் கொண்ட முதலாளிய சனநாயகத்துக்கு மாற்றாக அமையும் பாட்டாளி வர்க்க அரசு பல கட்சி ஆட்சி முறையைக் கொண்ட பாட்டாளி வர்க்க சனநாயக அரசாக இருக்க வேண்டுமே யல்லாது, பாட்டாளி வர்க்க சர்வாதி காரம் என்கிற பெயரில் இருக்கிற உரிமைகளையும் இல்லாமலாக்குவதாக ஒரு கட்சி ஆட்சியாக இருந்து விடக் கூடாது.

கம்யூனிசம் என்பது ஏதோ மனி தனுக்கு மூன்று வேளை சோறு போட்டு உடுக்க உடை கொடுத்து, தங்க இடம் கொடுத்து அவனை வெறும் யந்திரமாக நோக்குகிற தத்துவமல்ல. அது மனி தனை மாபெரும் படைப்புச் சக்தியாகப் பார்த்து அம்மனிதனை அனைத்து வகையான அடக்கு முறைகளிலிருந்தும் விடுவித்து அவனது படைப்பாற்றலைக் கட்டவிழ்த்து விட்டு அதனை மனித குல முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வழிவகுக்கும் தத்துவம்.

இதுபுரியாத கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதன் தலைவர்களும் மனித குலத்துக்கு முக்தியளிக்கும் பரமபிதாக்கள் தாங்கள்தான் என்பது போல தங்களைக் கற்பனை செய்து கொண்டு, மனிதன் மேல் கட்டுத்தளைகள் விதிக்கும் உரிமைகளைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு கட்சியின் பேரால், சித்தாந்தத்தின் பேரால், அவனைக் காயடிக்கிற, அடக்கி ஒடுக்குகிற காரியத்தைச் செய்து வருகிறார்கள். முதலாளிய சமூகத்தில் அநீதிகளும் அக்கிரமங்களும் மலிந்திருக்கின்றன என்றுதான் மனிதன் மாற்றுப் பாதைக்கு புரட்சிப் பாதைக்கு வருகிறான். அவனுக்கு இங்கும் அதேதான் பரிசு என்றால், அல்லது அறுசுவை உணவு உண்டு, சொகுசு மெத்தையில் புரண்டு சுகபோகமாய் வாழும் கொத்தடிமைகளாக இருக்கலாம் என்றால், அதற்கு தான் ஏற்கெனவே இருந்த இடத்திலேயே இருந்து விட்டுப் போகிறேன் என்று தானே நினைப்பான். சொல்வான். அதைவிட்டு வந்து தானாக இந்த அடிமைச் சங்கிலியில் மாட்டிக் கொள்ள முயல்வானா?

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளிவந்த 1848இல் தொழிலாளிகளும் முதலாளிகளும் இருந்த நிலைமை வேறு. இன்றுள்ள நிலைமை வேறு. இந்த 160 ஆண்டுகளில் முதலாளித்துவம் எவ்வளவோ பாடம் கற்றுத் தன்னை தக்கவைத்துக் கொள்ளவும், வாழ்நாளை நீட்டிக்கவும் பல்வேறு உத்திகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது. எனில் பாட்டாளி வர்க்கம், அதன் படைக்கலனாயிருக்கிற கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் புதியதாக எந்தப் படிப்பினையும் கற்றுக் கொள்ளாமல் இன்னும் பழைய பஞ்சாங்கத்தையே பாடி தன் சனாதனப் போக்கை வெளிப்படுத்தி ஆச்சார கம்யூனிஸ்ட்டாகவே இருந்து வருகிறது.

அன்று பாட்டாளி வர்க்கம் இழப்பதற்கு எதுவுமில்லாத வர்க்கமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று அப்படியில்லை. அது இழப்பதற்கு மாதம் பல ஆயிரக்கணக்கான ரூபாய் ஊதியம் இருக்கிறது. வதியான வளமான வாழ்க்கை இருக்கிறது. சொகுசு சொகுசான கேளிக்கை இருக்கிறது. இதையெல்லாம் விட்டு பாட்டாளி வர்க்கம் உடனடியாய் புரட்சிக்கு வந்து விடாது. அப்படியே வருவதானாலும், இழக்கும் இவை அனைத்திற்கும் ஈடாக, இதைவிட மேலானதாக என்ன கிடைக்கும் என்று அது யோசிக்கும். ஆகவே பொருளியல் ரீதியிலான சிந்தனையாக மட்டுமே குறுக்கி நோக்க வேண்டிய பிரச்சினையல்ல இது. மாறாக கருத்தியல் ரீதியில் மனித குல விடுதலை, தனி மனித சுதந்திரம் என்கிற நோக்கிலும் அணுக வேண்டிய பிரச்சினை இது. எனவே மனிதநேயப் பற்றாளர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். மனிதகுல விடுதலைக்கு மென்மேலும் சிறப்பாக பங்காற்றும் வகையில் மார்க்சியத்துக்கு வளம் சேர்க்க உரிய வழிவகைகளைக் காண முன்வர வேண்டும்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com